நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 27 மே, 2012

சஹஸ்ராரம்


மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி-பாவேந பிப்ருஷே

"ஹே தேவி, நீயே, ஆஜ்ஞா சக்கரத்தில் மனமாகவும், விசுத்தியில் ஆகாசமாகவும், அநாஹதத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும் இருக்கிறாய். ஜல தத்துவமும் (மணிபூரகம்), பிருத்வி தத்துவமும் (மூலாதாரம்) ஆன நீ பிரபஞ்சமாக வடிவெடுப்பதற்காக, சிவனாரின் பத்தினி என்ற நிலையை ஏற்கிறாய்." (சௌந்தர்யலஹரி).

ஆதாரச் சக்கரங்களில், ஏழாவதாகவும், மேலானதாகவும் உள்ள சஹஸ்ராரத்தைப் பற்றி, நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சஹஸ்ரதள பத்மம், சஹஸ்ராரம், துரியம், தசஷடதள பத்மம், அதோமுக மஹாபத்மம், சஹஸ்ராரம்புஜம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சஹஸ்ராரம், நம் உச்சந்தலையில் அமைந்துள்ளது.

இது ஊதா நிறமானது. இருபது அடுக்குகளாக அடுக்கப்பட்ட ஆயிரம் தாமரை இதழ் வடிவமானது. ஒவ்வொரு அடுக்கிலும், 50 இதழ்கள் உள்ளன. மத்தியில் முழுநிலவு வடிவமும், அதனுள் கீழ்நோக்கிய முக்கோணமும், அதன் மையத்தில் பொன்னிற லிங்கமும் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் யோக நாடிகள் ஆயிரம் தாமரை இதழ்களாக உருவகப்படுத்தப்படுகிறது.

இது கபாலத்துக்கு நான்கு விரற்கடை உயரத்தில் இருப்பதாகவும் சில நூல்களில் கூறப்படுகிறது. இது பிரபஞ்ச வெளியோடு தொடர்புடையது. பிரமரந்திரம் வழியாக குண்டலினி இதை அடையும் போது, சிவசக்தி ஐக்கிய நிலை கிட்டும். 'பேரானந்தம்' என்று சித்தர்களும் முக்தர்களும் பாடிப் பரவும் நிலை இதுவே.'சமாதி நிலை' என்றும் இது வர்ணிக்கப்படுகிறது.

இந்தச் சக்கரத்தோடு தொடர்புடைய உடல் உறுப்பு மூளை, வலது கண், நரம்பு மண்டலம் முதலியன.

குண்டலினி சஹஸ்ராரத்தை அடைவதற்கு கடுமையான பிரத்தியேக‌ப் பயிற்சிகள் தேவை. யோகிகளுக்கும் ஞானிகளுக்குமே இந்த நிலை கைகூடும். இது முழுமையாகத் தூண்டப்படும்போது, பிரபஞ்சவெளியை முழுமையாக உணர முடியும். அண்டமும் பிண்டமும் (மனித உடலும்) ஒன்றே என்ற த‌த்துவம் அறிய முடியும். 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற நிலை வருவதால், இயற்கையின் நியதிகளை மீறி, மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து காலங்கடந்து வாழும் உன்னத நிலை கைகூடுகிறது.கடும் உபவாச முறைகளை மேற்கொள்ளுதல், காற்றிலிருந்து உடலுக்குத் தேவையான சக்திகளைப் பெறுதல் முதலிய நினைத்துப் பார்க்க இயலாத செயல்களைச் செய்தல் சாத்தியப்படும்.



ஆஜ்ஞாவிலிருந்து ஸஹஸ்ராரம் வரை, பன்னிரண்டு ஸ்தானங்கள் சூட்சுமமாகச் சொல்லப்படுகின்றன. இந்தப் பன்னிரண்டில் கடைசியாக இருப்பது, ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படுகிற த்வாதசாந்தம். இகலோகத்தில் த்வாதசாந்தத் தலமாகச் சொல்லப்படுவது அங்கயற்கண்ணி அரசாளும் மதுரையம்பதியாகும்.

நமது மரபில், வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நாம் அறிவோம். இதன் காரணம், த்வாதசாந்தத்தில், பரதேவதை முதிர்ந்த ஸூவாஸினியாகத் தொழப்படுகிறாள்.
ஆஜ்ஞையிலிருந்து சஹஸ்ராரம் வரை, மேலும் சில சக்கரங்கள் கூறப்படுகின்றன.

முன் நெற்றியில், மனஸ், அதன் மேல், தலையின் பின்பாகத்தில், பிந்துவிஸர்க்கம்,(இது சோமச்சக்கரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பதினாறு இதழ் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப்படுகிறது).

அதன் மேல், மஹாநாதம், (இது 'ஏர்' வடிவத்தில் உள்ளது. இதனிலிருந்து வரும் ஒலியே, சிருஷ்டிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது).

நிர்வாணம், (இது வெண்ணிறமுடையது. நூறு வெண்தாமரை இதழ்களாலானது).

குரு (இது, சஹஸ்ராரத்திற்கு சற்று கீழாக அமைந்துள்ளது. வெண்ணிற பூர்ணசந்திர வடிவத்துடன், பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. மத்தியில் ஸ்ரீகுருவின் மஹா மந்திரமும் அவரது திவ்யத் திருவடிகளும் விளங்குவதாகக் கூறப்படுகிறது.இந்தச் சக்கரத்தை அடைந்த பிறகே சஹஸ்ராரத்தை அடைய முடியும்.'குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்' எனச்சொல்லப்படுவது இதனாலேயே).

ஆகிய சக்கரங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் சஹஸ்ராரம் தொடர்பான ஸ்லோகங்கள்.

விசுத்தி, ஆஜ்ஞா சக்கர‌ங்கள், சோம (சந்திர) கண்டம் என்று அழைக்கப்படுகின்றன.இவற்றிற்கும், சஹஸ்ராரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ருத்ரக்ரந்தி அமைந்துள்ளது. இதை குண்டலினி ரூபமான அம்பிகை அறுத்துக் கொண்டு மேலேறும் போது, சம்ஹார வாசனையிலிருந்து விடுதலை கிட்டும் என்று கூறப்படுகிறது. 

ஆஜ்ஞா- சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி- விபேதினி |
ஸ்ஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி -வர்ஷிணி. ||

இதன் பொருள், ஆஜ்ஞையிலிருந்து ருத்ரக்ரந்தியை அறுத்துக் கொண்டு, குண்டலினி ரூபமாக மேலேறும் தேவி, 'ஸஹஸ்ராராம்புஜம்' எனப்படும்  சஹஸ்ராரக் கமலத்தை அடைந்து அங்கிருந்து கொண்டு உயிரினங்களைப் பேரின்ப நிலைக்கு உயர்த்தும் அருள் மழை பொழிகிறாள் என்பதாகும்.


ஸ்ரீ ஜ்வாலாமாலினி தேவி
தடில்லதா‍ -ஸமருசி: ஷட்சக்ரோபரி‍‍‍‍-ஸம்ஸ்திதா |
மஹாஸக்தி: குண்டலினீ பிஸதந்து -தனீயஸீ. ||

இதன் பொருள், மின்னல் போல் ஒளிப்பிரவாகமாக‌ ஒளிரும் தேவி, பின் ஆறு சக்கரங்களிலும் வியாபிக்கிறாள். மஹாசக்தியாய், சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாய், மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை, தாமரைத் தண்டின் உள்ளிருக்கும் நூல் போல் மென்மையாகவும், உறுதியாகவும் வியாபித்து அருளுகிறாள். 

ஸஹஸ்ரதள- பத்மஸ்தா ஸர்வ- வர்ணோப -சோ'பிதா |
ஸர்வாயுத -தரா சு'க்ல- ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ. ||

'சஹஸ்ராரத்தில், எல்லாவித வர்ணங்களின் ஒளிரூபமாக பிரகாசிக்கும் தேவி,எல்லாவித ஆயுதங்களையும் தரித்தவளாக, எல்லா திசைகளையும் நோக்கும் முகங்களை உடையவளாக, உயிரினங்களில் சுக்கில ரூபமாக உறைபவளாக இருக்கிறாள்.'

ஸர்வவெளதன- ப்ரீதசித்தா யாகின்யம்பா- ஸ்வரூபிணி |
ஸ்வாஹா ஸ்வதாsமதிர்- மேதா ச்ருதிஸ்ம்ருதி- ரனுத்தமா. ||

'எல்லாவிதமான அன்னத்தையும் விரும்பி ஏற்கும் தேவி, யாகினி என்னும் பெயருடன் கூடியவளாகவும் அக்னியில் ஆகுதியாகச் சேர்ப்பிப்பவைகளை ஏற்கும் 'ஸ்வாஹா' எனும் தேவியாகவும், உயிரினங்களின் புத்தி மற்றும் நினைவாற்றலாகவும், தனக்கு மேல் எவருமில்லாத பரம்பொருள் நிலையிலும் உறைகிறாள்.'
ஸ்ரீ வித்யா மார்க்கத்தில, 'ஷோடசி' எனும் மந்திரமே, தலையாயது. இந்த மந்திர உபதேசம் பெற்றவர்களே நவாவர்ணபூஜை செய்ய இயலும் என்று சொல்லப்படுகிறது. சஹஸ்ராரத்தில், இந்த மந்திரரூபிணியான, மஹாஷோடசியாக அம்பிகையை தியானிக்க வேண்டும்.
'கௌரி சங்கர'த் தோற்றம்
சிவயோகநெறியில், சஹஸ்ராரத்திற்குரிய தலமாகத் தொழப்படுவது, திருக்கயிலையம்பதியாகும்.

சிங்கவரை மங்கையர்க டங்களன
செங்கைநிறை கொங்குமலர் தூய்
எங்கள் வினை சங்கையவை யிங்ககல
வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிரு ணொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே

என்று திருக்கயிலையம்பதியின் பெருமையை, திருஞானசம்பந்தர் பாடிப் போற்றுகிறார்.

'மன்னும் இமயமலை' என்று புகழப்படும் இமயமலையின் வடக்குப் பகுதியில் திருக்கயிலாய மலைச் சிகரம் அமைந்துள்ளது. திருவைகுண்டம் திருமாலின் வாசஸ்தலமாகக் கருதப்படுவது போல், திருக்கயிலை மலை, சிவனாரின் வாசஸ்தலமாகக் கருதப்படுகிறது.

இந்துக்களின் மிக முக்கிய வடநாட்டு யாத்திரைத் தலங்களுள் ஒன்றான இது, அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் பாடப்பெற்ற தலமாகும்.

இந்தச்சிகரத்தின் கீழ், மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இது சக்திஸ்வரூபமாகவும், கயிலை மலை சிவ ஸ்வரூபமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஏரியின் அடியில், அம்பிகை, பொன்னாலான லிங்கத்துக்கு சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

இந்த ஏரி, பிரம்மாவால், தேவர்களின் நித்யானுஷ்டானங்களுக்காக உருவாக்கப்பட்டது. மிக விடியற்காலையில், நட்சத்திரரூபமாக தேவர்கள் வந்து போகும் காட்சி மெய்சிலிர்க்கச் செய்வதாகும்.

மானசரோவர் ஏரியும் கயிலைச் சிகரமும் இணைந்த காட்சி 'கௌரி சங்கரம்' என்றழைக்கப்படுகிறது.

தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே

எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - (சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞானஉலா).

விஷ்ணு புராணம் இது உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகிறது. சூட்சும நிலையை அடைந்த ஆத்மாக்கள் மானசரோவர் ஏரியில் ,அன்னப் பறவைகளின் உருவத்தில் உலாவுவதாக நம்பிக்கை. முக்தியடைந்த ஆன்மாக்கள் வசிக்கும் இடமாகக் கயிலையங்கிரி கருதப்படுகிறது.

பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமை கூறும், சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்துக்கு இங்கு சொடுக்கவும்.

இத்தல யாத்திரை மிகக் கடினமானதெனினும், இறையருளால் ஆண்டுதோறும் மிகப்பலர் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த மலையை வலம் வரும் 'பரிக்ரமா' எண்ணிலாப் புண்ணியங்களை அள்ளி வழங்கக் கூடியது.

இறையருளால், சஹஸ்ராரத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..