நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 23 ஜூன், 2012

வெஞ்சினம்





நான் எழுதி,உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உயர்திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி. 

இந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது?. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.


ஸ்ரீ வேத வியாசர்
1. குரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும் படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.

ஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே!!! என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.


சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.

சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).

திரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.

சினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.
மீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.

ஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.

இறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.


இருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.

துடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்

ஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.

பீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .

வெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,
வம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும்
அரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)


ஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.

மனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.

அம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.

அம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,
"சிகண்டி க்ருதகேதனாய நம:" என்னும் ஒரு நாமம் இருக்கிறது


செய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்?). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.
(பாரதப்போரில், பார்த்தனுக்குத் தேரோட்டி பகவத் கீதை உரைத்த பார்த்தசாரதி, ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து மஹாகவி பாரதி பாடிய 'கண்ணன் பிறப்பு' கவிதைக்கு இங்கு சொடுக்கவும்)


இந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.
2. பாண்டவர்களும் கௌரவர்களும் கைகட்டி, பணிந்து நின்றனர்.
எதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.



மூத்தவனான தருமன், " குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் " என்றான்.

மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.

பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், "நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்!!!" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, " நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்"என்று சத்தியம் செய்தான்.

பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)

பின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்
பாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.



காலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா? என்பது அவர் எண்ணம்.

அரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், "உங்கள் மன்னனின் நண்பன்" என்று சொல்லிவிட்டார்.

வெகுண்டான் துருபதன். "அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. " நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான்!!! " என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.

'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)

துருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, " நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.

'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).

பாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.




ஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.

எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்).


முடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.

'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
சமரில்' என்றான்; (வில்லி பாரதம்).


பாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.

சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)

இந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.



வெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.

வெற்றி பெறுவோம் !!!

சனி, 16 ஜூன், 2012

கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள்



நான் எழுதி, திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.


'ஆழி சூழ் உலகு'என்றும் 'நீரின்றி அமையாது உலகு' என்றும் போற்றப்படுகின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் தானே நாமும் வாழ்கிறோம்!!!. கடலை மையமாக வைத்து நடந்த காவியச் சம்பவங்கள், புராணங்கள் எத்தனை......எத்தனை. அகத்திய மாமுனி கடலைக் குடித்த கதை நாம் யாவரும் அறிந்ததே.

நாரம் என்றால் நீர். அயனம் என்றால் மிதப்பது. பகவான் ஸ்ரீமந் நாராயணன் பாற்கடலில் பள்ளிகொண்ட காரணத்தாலேயே அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது.

இப்படி எத்தனை......எத்தனை, சிறப்புகள்?. நாம் இக்கட்டுரையில் கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
    • மச்ச அவதாரம் --- (மீன், நீரில் வாழ்வது)
    • கூர்ம அவதாரம் --- (ஆமை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது)
    • வராக அவதாரம் --- ( பன்றி, நிலத்தில் வாழ்வது)
    • நரசிம்ம அவதாரம் --- ( மனிதனும், மிருகமும் கலந்த தோற்றம்)
    • வாமன அவதாரம் --- (குள்ள உருவமுள்ள மனிதன்)
    • பரசுராம அவதாரம் --- ( ரஜோகுணம், கோபமுள்ள மனிதன்)
    • பலராம‌ அவதாரம் --- (சாதாரண மனிதன்)
    • ஸ்ரீராம அவதாரம் --- (சத்வ குணமுள்ள தெய்வீகமான மனிதன்)
    • ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் --- ( தெய்வத்தன்மை நிறைந்த‌ பரிபூரண அவதாரம்).
திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம், பிரளய காலத்தில், கடலில் நிகழ்ந்தது.

சோமுகாசுரன் என்ற அசுரன் அக்கினி மத்தியிலே சிவனை வேண்டி தவம் செய்து வரங்கள் பல பெற்றவன். அயக்கிரீவன் என்பது இவனது மற்றொரு பெயர். ஒரு நாள் சத்தியலோகத்தில், பிரம்மதேவன் சோர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமாக வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவன், வேதங்களைத் தன் யோகசித்தியினால் கவர்ந்து கொண்டுபோய் கடலடியில் ஒளித்து வைத்தான். வேதங்கள் இல்லாமல், பிரம்மன் சிருஷ்டிகள் செய்ய இயலாது.

தேவர்கள் இதனைக் கண்டு பயந்து போய், திருமாலிடம் முறையிட்டனர். அவர், தாம் அவர்களைக் காப்பதாக, அபயம் அளித்தார்.

அப்போது பிரளய காலம். கடல்தாய் கடவுள் ஆணைப்படி, பரந்த இவ்வுலகங்களை தன் அலைக்கரத்தால் அணைக்கத் துவங்கினாள். அனைத்துலகங்களும் மூழ்கத்துவங்கின. அப்போது, திராவிட (தமிழ்) தேசத்தின் அரசனாக இருந்தவன் சத்தியவிரதன் என்னும் திருமால் பக்தன்.



இவன் ஒரு நாள் 'கிருதமாலா' என்னும் ஆற்றில் அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தான். அவன் நீரை கையில்அள்ளி அர்க்கியம் விடும் போது ஒரு மீன்குஞ்சு அவன் கையில் வந்தது. உடனே அவன், அதை நீரில் விட்டு விட்டு, திரும்பவும் நீரை முகந்தான். மீண்டும் அவன் கையில் மீன் குஞ்சு!!!!. அது மன்னனிடம் பேசியது!!!!. "மன்னா, உன் உயர்ந்த குணங்களை நான் அறிவேன். நீ என்னைத் திரும்பவும் ஆற்றில் விட்டால், பல பெரிய மீன்கள் என்னை விழுங்கிவிடும். ஆகவே என்னைத் திரும்பவும் ஆற்றில் விடாதே!!" என்றது.

அதிசயித்த மன்னன். அதைத் தன் கமண்டலத்துக்குள் விட்டுக் கொண்டு, தன் அரண்மனை வந்தான். வந்ததும் அதிர்ச்சி, அந்த மீன், அவன் கமண்டலத்தை அடைக்கும் அளவு பெரிதாகியிருந்தது. உடனே அதை ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் விட்டான். உடனே அது மேலும் பெரிதாகி, பாத்திரத்தையும் அடைத்துக்கொண்டது.உடனே அதை ஒரு பெரிய கிணற்றில் விட்டான். அது மேலும் வளர்ந்து பெரிதாகியது. பின், தன் வீரர்கள் துணையுடன் அதை ஒரு குளத்திலும் பின் ஒரு ஏரியிலும் விட்டான். அவற்றையும் அடைத்துக் கொண்டு மீன் வளர்ந்தது.

இது, 'கடவுளின் சோதனை' என்று கருதிய மன்னன், பின் அதைக் கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டான். அந்த மீன் மிகப்பெரும் உருவம் கொண்டு வளர்ந்தது.



"இது சாதாரண மீன் அல்ல" என்று உணர்ந்த அவன், மீனாக வந்தது இறைவனே என உணர்ந்து வணங்கினான்.

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே ------- எட்டாம் திருமொழி

என்று திருமங்கையாழ்வார் மச்சாவதாரம் எடுத்த திருமாலைப் பாடுகிறார்.

'இறைவனே, தாங்கள் தங்கள் தொண்டனுக்கு (எனக்கு) இடும் கட்டளை என்ன?' என்று சத்தியவிரதன் கேட்க,

திருமால்,"இப்பொழுது பிரளய காலம். பூ மண்டலத்தை நீர் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று முதல் ஏழாம் நாள், நீ வாழும் இடமும் நீரில் மூழ்கிவிடும். அதனால், நான் சொல்வதைப் போல் செய்வாயாக. உன் நாட்டில் வாழும், முனிவர்கள், குருமார்கள், பற்பல தானிய வித்துக்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள் மற்றும் உன் குலத்தோர் யாவரையும் விரைந்து ஒன்று கூட்டுவாய். உன் முன் பெரிய தோணி ஒன்று தோன்றும். அதில் அனைவரையும் ஏற்றி, அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஏறுவாயாக. அத்தோணி பிரளய வெள்ளத்திலும் மிதக்கும் தன்மை உடையது. பிரளய காலத்தில் இருள் சூழ்ந்திருக்கும். எனவே அந்தத் தோணியில் சப்த ரிஷி களும் ஒளிவடிவமாக இருந்து வழிகாட்டுவார்கள். பின், நான் மீண்டும் தோன்றுவேன். என் மூக்கில் உள்ள கொம்பில் அந்தத் தோணியைக் கட்டுவாயாக. பிரம்மனின் இரவுப்பொழுது முழுவதும் நான் தோணியுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அதன்பின் என் பெருமையை நீ அறிவாய்", என்றார்.

(சப்த ரிஷிகள்:அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் ஆவர்).

சத்தியவிரதன் அவர் சொன்னது போல் செய்துவிட்டுத் தோணிக்காக, கடற்கரையில் காத்திருந்தான்.

'ஏ ,சமுத்திரமே...... பிரளய காலத்தில் நீயா உலகத்தை மூழ்கடிக்கப் போகிறாய் ? '

நீ அதிகாலையில் அமைதியின் அழகு
அந்திமாலையில் அலையோடு அழகு
நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு (கவிஞர் தனுசு)

நீ எப்போது வெகுண்டு பொங்குவாய் என்று யார் அறிவார்? என்று நினைத்திருந்த வேளையில் அழகான பெரிய தோணி ஒன்று தோன்றியது. அதில் அனைத்தையும் ஏற்றியதும், மீண்டும் இறைவன் தங்க நிற‌த் திமிங்கலமாக‌த் தோன்றினார். அவர் உடலில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது..அவர் கூறியபடி, அந்தக் கொம்பில், தோணியைச் சேர்த்துக் கட்டியதும், கடல் பொங்கத் துவங்கியது. மீனாக இருந்த பரமன் அந்தத் தோணியோடு, வெள்ளத்தில் மிதந்தபடி, மச்சாவதாரப் புராணத்தை சத்திய விரதனுக்கு உபதேசித்தார்.

பிரம்மனின் இரவுக்காலம் கழிந்து இருள் நீங்கி, மழையும் நின்றது. கடலும் ஓய்ந்தது.

பிரம்மனின் இரவுக்காலம் பற்றி இங்கே ஒரு தகவல் :

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இவை நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். ஒரு மகாயுகம் 43,20,000 மனித வருடங்கள். ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களை உள்ளடக்கியது. 14 மன்வந்திரங்கள் ஒரு கல்பம். அதாவது, ஒரு கல்பம் என்பது ஆயிரம் சதுர்யுகம். ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். அதேபோல், ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஒரு இரவு. அவருக்கும் (அவர் கணக்கில்) 365 நாள் ஒரு வருடம். 100 வருடம் அவர் ஆயுள்.

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா: (பகவத் கீதை, எட்டாம் அத்தியாயம், அக்ஷரப்ரஹ்ம யோகம்)

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு மனுவின் ஆதிபத்தியத்தில் நடைபெறுகிறது. 

நாம் இருப்பது வைவஸ்வத மன்வந்திரத்தில் நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்ட கலியுகத்தில்.

சத்தியவிரதனே, திருமாலின் கட்டளைப்படி, வைவஸ்வத மனுவாக ஆனான்.


மச்சாவதார மூர்த்தி தோணியைக் கரை சேர்த்தார். பிரம்மன் உறக்கம் நீங்கி எழுந்து, வேதங்கள் களவு போனதை அறிந்து நாராயணனை வேண்ட, மச்சாவதார மூர்த்தியாக இருந்த மஹாவிஷ்ணு அந்த உருவிலேயே சோமுகாசுரனுடன் போர் புரிந்து வென்று, வேதங்களை மீட்டுக் கொடுத்து, பிரம்மனை மீண்டும் சிருஷ்டியைத் தொடங்கப் பணித்தார்.

சத்திய விரதன் பாண்டிய மன்னனெனவும் அவன் காலத்தில் மச்சாவதாரம் நிகழ்ந்ததாலேயே பாண்டியர்கள் கொடிச் சின்னம் மீன் ஆயிற்று எனவும் ஒரு கூற்று உண்டு.

இந்தப் புராணம் ,பைபிளில் வரும் நோவாவின் கதையை ஒத்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இறைவன் ஒருவனே. அதனால், அவரைப் பற்றிய செய்திகளும் ஒன்றுபோல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம்.


அழகிய திருமதுரை. மீனாட்சிஅம்மைக்கும், சோமசுந்தரக்கடவுளுக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீ உக்கிரபாண்டியனின் ஆட்சிக்காலம். 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிடைக்கும். மன்னன், 96 யாகங்களை முடித்திருந்தான். பதவி ஆசை அவனுக்கில்லை. ஆனாலும், இந்திரப் பதவி கிடைத்தால், மாதம் மும்மாரி பொழிய வைத்து மக்களை வாழ்விக்கலாமே என்ற நல்லெண்ணம் அவனுக்கு. இந்திரன் சினம் கொண்டான். வருணனை அழைத்து "ஏழு கடல்களையும்பொங்கச் செய்து, மதுரையை அழிக்கச் சொன்னான்.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்
(திருவிளையாடற்புராணம், கடல் சுவற வேல் விடுத்த படலம்)

ஏழு கடல்கள் (புராண காலத்தில்):

1. பாற்கடல் 2. கருப்பஞ்சாற்றுக்கடல் (இக்ஷு சமுத்திரம் ) 3. லவண(உப்பு) சமுத்திரம் 4. சுரா (கள்) சமுத்திரம் 5. சர்ப்பி (நெய்) சமுத்திரம்
6.ததி (தயிர்) சமுத்திரம் 7. சுத்தோதக (நல்ல நீர் ) சமுத்திரம்.

ஏழு கடல்கள் ( தற்காலத்தில் ):

1. ஆர்க்டிக் 2. அண்டார்டிக்(சதர்ன்) 3.வடக்கு பசிஃபிக் 4.தெற்கு பசிஃபிக் 5.வடக்கு அட்லாண்டிக் 6.தெற்கு அட்லாண்டிக் 7.இந்துமகா சமுத்திரம்.


மன்னனின் கனவில் சித்தர் உருவில் வந்த இறைவன், இந்திரன் சூழ்ச்சியை உணர்த்த, திடுக்கிட்டு எழுந்த மன்னன், அமைச்சர் மற்றும் படைகளுடன் சென்று பார்க்கும்போது, ஏழு கடல்களும் உக்கிரமாகப் பொங்கி மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தன. உடனே தன் வேலை எடுத்து எறிந்தான். அந்த வேல் முனை பட்டதும் ஏழு கடல்களும் வற்றிப் போயின்.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை
மடுத்த வேலை சுறெனவ் அறந்தும் ஆன வலி கெட
அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக்
கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே.
(திருவிளையாடற்புராணம்)

மக்கள் மகிழ்ந்து மன்னனையும் மகேசனையும் போற்றினர்.

செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியின் மலர் மாலையை துர்வாச முனிவர் தரும்போது அதை இந்திரன் மதிக்கவில்லை. மகரிஷியின் சாபத்தால் செல்வங்கள்அனைத்தையும் இழந்தான் தேவேந்திரன். காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், அரம்பையர் அனைத்தும் அவனை விட்டகன்றன. நவநிதி களும் மண்துகளாயின. அசுரர்கள் ஆதிக்கம் ஓங்கியது.

நவநிதிகள்:  
சங்கநிதி , பதுமநிதி , மஹாபதும நிதி , மகரநிதி , கச்சபநிதி, நந்த நிதி, நீல நிதி, கர்வ நிதி, மற்றும் முகுட நிதி.

பிரம்மனின் யோசனைப்படி, தேவர்களும் தேவேந்திரனும் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர் மந்திரகிரியை மத்தாகவும் அஷ்டமாநாகங்களில் தலையாயதான வாசுகியைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடையும்படி சொன்னார்.

அஷ்டமா நாகங்கள்:
ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளியன், தாகபுராணன், புஞ்சன்


மேலும் 66 கோடி அசுரர்களையும் துணையாகக் கொள்ளுமாறு சொன்னார். சாகாநிலை தரக் கூடிய அமுதம் கிடைக்கும் என்றதும் அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். தேவர்கள் வாசுகியின் வால்பக்கமும் அசுரர்கள் தலைப்பக்கமும் பிடித்துக் கொள்ள, பாற்கடல் கடையப் பெற்றது. வாசுகியின் மூச்சுக்காற்றால்,திணறிய அசுரர்கள் பலம் குன்றியதால், மந்திரகிரி ஒரு பக்கமாகச் சாயத்துவங்க, திருமால், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலின் உட்புகுந்து, கூர்மாவதாரம் எடுத்து, மந்திரகிரியைத்தன் முதுகில் தாங்கினார்.


மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

என்று திருமங்கையாழ்வார் கூர்மாவதார மஹாவிஷ்ணுவைப் பாடுகிறார். மேலும் அவர் தன் சிறிய திருமடலில்,

"ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காராய் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்" என்று போற்றுகிறார்.

பாற்கடலில் இருந்து முதலில் ஆலாகால விஷம் தோன்ற, பரம தயாளனான சிவபெருமான், தன் கருணையால்,அதைப் பருகினார். உமாதேவி, சிவன் கழுத்தில் கைவைத்து, விஷத்தை நிறுத்தியதால் அவருக்கு "நீலகண்டன்"என்ற பெயர் ஏற்பட்டது.

பின், காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், அரம்பையர், சங்கநிதி, பதுமநிதி, முதலிய அனைத்து செல்வங்களும் வெளிவந்து இந்திரனை அடைந்தன. பின்னர் சந்திர பகவான,தோன்றினார்.. அதன் பின், பேரொளியுடன் கூடிய அழகுமிக்க வடிவம் தாங்கி, உலகனைத்திற்கும் அன்னையாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றினாள். தேவர்கள் ஸ்ரீ ஸுக்தத்தால் அவளைத் துதித்தனர். "அஷ்டதிக்கஜங்கள்" புனித நீரால் அன்னையை அபிஷேகம் செய்தன.


அஷ்டதிக்கஜங்கள்:
கஜம் என்றால் யானை. எட்டுத் திசைகளிலும் இப்பூவுலகை யானைகள் தாங்குவதாக ஐதீகம். அவையாவன, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.


சமுத்திரமும், விஸ்வகர்மாவும் தாமரை மாலையையும், ஆபரணங்களையும் தேவிக்கு அளித்தனர். ஸ்ரீமஹாலக்ஷ்மி , ஸ்ரீமந் நாராயண னுக்கு மாலையிட்டு, அவர் திருமார்பில் குடிபுகுந்தாள். தேவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

(மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதிப்பாடலுக்கு இங்கு சொடுக்கவும்)

தேவேந்திரன், இழந்த செல்வமனைத்தும் திருமகள் அருளால் பெற்று, பேரானந்தமடைந்தான். நன்றிப் பெருக்கில் திருமகளை வணங்கி,

இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
எத்துனை நான் இங்கே கேட்பது?
என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ. (கவிஞர் தனுசு)


என்று ஆனந்தக் கண்ணீர் பெருக ஸ்ரீலக்ஷ்மியையும் ஸ்ரீநாராயணனையும் வணங்கினான்.

வெற்றி பெறுவோம்!!!!!