நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

SANKYA YOGA...கபிலமாமுனிவர் அருளிய 'ஸாங்கிய யோகம்'..பகுதி..1


விதூய க்லேசான் மே குருசரணயுக்மம் த்ருத ரஸம்
பவத்க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜந விதௌ
பவன்மூர்த்யா லோகே நயனம் அததே பாததுலஸீ
பரிக்ராணே க்ராணம் ச்ரவணம் அபி தே சாருசரிதே

ஹே க்ருஷ்ணா!!, என் துயரங்கள் அனைத்தையும் கருணையுடன்   போக்கி அருள்வாயாக. என் கால்கள் உன் திருக்கோயிலையே நாடும்படிக்கும், என் கரங்கள், உன் திருவடிகளையே பூஜிக்கும்படிக்கும், என் கண்கள், உன் திருமேனி எழிலை மட்டுமே காணும்படிக்கும், என் நாசி, உன் திருவடிகளில் அர்ச்சித்த துளசியையே நுகரும்படிக்கும், என் காதுகள், உன் மகிமை வாய்ந்த லீலைகள் அடங்கிய சரிதங்களையே செவிமடுக்கும்படிக்கும் அருள்வாயாக". (ஸ்ரீமந் நாராயணீயம், 3 வது தசகம்).


முந்தைய பதிவின் தொடர்ச்சி....

கபில மாமுனிவரின் தாயாகிய தேவஹூதிக்கும், கபிலருக்கும் நடந்த சம்வாதமாக, ஸ்ரீமத் பாகவதம் கூறும் சாங்கிய யோகத்தின் முதல் பகுதியை இந்தப் பதிவில் பார்க்கலாம். கபிலமாமுனிவரின் அமுத மொழிகளே, சாங்க்ய காரிகை என்னும் நூலாக உருப்பெற்றது. ஸ்ரீ க்ருஷ்ணரும், கீதையில், சாங்க்ய யோகத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். ஆனால் இது கபிலரின் சாங்க்ய யோகத்திலிருந்து   சிறிது வேறுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 'ஸங்கியை' என்றால் 'கணக்கெடுப்பது' என்று ஒரு பொருள் உண்டு. அது போல், பிரபஞ்சம் சம்பந்தமான தத்துவங்களை கணக்கெடுத்துச் சொல்வதால் 'ஸாங்கியம்' என்ற பெயர் ஏற்பட்டது. நமது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளின் போது செய்ய வேண்டிய மத ரீதியான சடங்குகளின் தொகுப்பை 'சாங்கியம்' என்று சொல்வதும் இவ்வாறு ஏற்பட்டதேயாம்.

இனி, தேவஹூதி, கபிலர் சம்வாதத்தைப் (உரையாடலை) பார்க்கலாம்.

தேவஹூதி கபிலராக திருஅவதாரம் செய்துள்ள பகவானைப் பார்த்து,

'தாங்களே ஆதிபுருஷன். ஜீவர்களுக்கு ஈஸ்வரனாக விளங்குபவர். அஞ்ஞான இருளில் பார்வையிழந்திருக்கும் உலகுக்கு பார்வையளிக்கும் சூரியன் நீரே. ஆகையால், அடியார்களின் ஸம்ஸார விருக்ஷத்திற்குக் கோடாரி போன்றவரும், ஞானமார்க்கத்தை அறிந்தவர்களின் தலைவராக விளங்குபவரும், சரணடைதற்குரியவரும் ஆன உம்மைப் ப்ரக்ருதி, புருஷ விவேகத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு நான் சரணடைகிறேன்' என்று கூறினாள்.

அதைக் கேட்ட கபிலர், பின்வருமாறு கூறலாயினார்.
  • எதை அறிந்தால், இயற்கைக் குணங்களின் கட்டிலிருந்து ஜீவனாகப் பட்டது விடுதலையடையுமோ, அந்தத் தத்துவத் தொகுதியின் லக்ஷணங்களை இப்போது நான் தனித்தனியே விளக்கிக் கூறுவேன்.
  • இவ்வுலகு முழுவதும், வியாபித்துள்ளவன் எவனோ, யார் நிர்க்குணனாக, பிரகிருதிக்கு அப்பாலுள்ளவனோ, யார் ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் உறைபவனோ,ஸ்வயம் பிரகாசனாக,(தானே பிரகாசிப்பவனாக) விளங்குபவன் எவனோ,  யாருக்கு ஆதியில்லையோ, அவனே "புருஷன்" எனப்படுபவன்.
  • (மாயையே ப்ரக்ருதி என்று குறிப்பிடப்படுகிறது. பிரபஞ்சம், ப்ரகிருதியைச் சேர்த்து 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது. காரிய காரண முதலானவற்றிற்கு, பிரகிருதியைக் காரணமாகவும், இன்ப துன்ப நுகர்ச்சிக்கு 'புருஷன்' காரணமென்றும் கூறப்படுகிறது. 24 தத்துவங்களில், ப்ரக்ருதியே முதல் தத்துவம்). 
  • பஞ்ச பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் (மெய்,வாய், கண், மூக்கு, காது ஆகியன) ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் (தொடு உணர்ச்சி, சுவை, ரூபம், வாசனை, சப்தம் அதாவது, ஞானேந்திரியங்களின் செயல்பாடுகள் சார்ந்திருப்பவை)ஐந்தும், ப்ரகிருதி, ப்ரகிருதியின் புத்தியான மஹத், அகங்காரம், ஜீவனின் மனம் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து,மொத்தம் 24 தத்துவங்கள். காலம் என்பது 25வது தத்துவம்.
  • வெளியே கால ரூபமாயிருப்பது எதுவோ அதுவே உள்ளே புருஷ ரூபமாயிருப்பதும். அந்த பகவத் தத்துவம், தன் மாயா சக்தியால், சகல உயிரினங்களின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிறது.
  • சலனத்தை அடைந்த ப்ரகிருதியிடம், பரம பருஷன், தன் சக்தியாகிய வீர்யத்தை வைக்க, அதன் காரணமாக, பொன் போலொளிரும் 'மஹத்' தத்துவம் பிறந்தது.
  • இந்த மஹத் தத்துவம் மாறுதலை அடைந்தபோது, கிரியாசக்தியைப் பிரதானமாகக் கொண்ட மூன்றுவித அகங்காரங்கள் தோன்றின. அவை
  1.  வைகாரிகம்,
  2. தைஜஸம்,
  3. .தாமஸம்  ஆகியன.
  • வைகாரிகத்திலிருந்து மனமும், தைஜஸத்திலிருந்து இந்திரியங்களும், தாமஸத்திலிருந்து, பஞ்ச பூதங்களும் உற்பத்தியாயின. இவ்விதமாய், விரிந்த அஹங்காரத் தத்துவத்தையே, ஆயிரம் தலை படைத்த அனந்தனாக,  ஸங்கர்ஷண புருஷனாகக் கூறுகின்றனர்.
  • சத்வ குணத்தால் சாந்தியும், ரஜோ குணத்தால் சாந்தியிழத்தலும், தமோ குணத்தால் அறிவின்மையும் அகங்காரத்தின் வடிவங்களாகும். வைகாரிக தத்துவம் (சாத்துவிகாஹங்காரம்) மலர்ந்ததன் காரணமாக, மனஸ் தத்துவம் தோன்றியது. அதிலிருந்து, சங்கல்ப, விகல்ப வடிவான ஆசை தோன்றியது.
  • மனஸ் தத்துவத்தையே இந்திரியங்களை ஆள்பவரான அநிருத்தன் என்றும் அவரையே மனதை அடக்குவதற்கு, நீலோத்பலம் போன்ற சியாமள வண்ணன் ரூபத்தில், யோகிகள் தியானிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
  • தைஜஸ தத்துவம்(ராஜஸாஹங்காரம்) மலர்ந்ததால், புத்தி தத்துவம் தோன்றியது. அதன் மூலம், பொருள்களைப் பற்றிய அறிவும், இந்திரியங்களால் அவற்றை உணரும் (நுகரும்) சக்தியும் உண்டாகியது.
  • தாமஸ அஹங்காரம் மலர்ந்ததால், சப்த தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ஆகாயமும், சப்தத்தை உணரும் சுரோத்திரேந்திரியமும் (செவியும்) உண்டாயின. ஆகாயத்தின் சப்த தன்மாத்திரையிலிருந்து நாளடைவில் தோன்றியது ஸ்பர்ச(தொடு உணர்ச்சி) தன்மாத்திரை. பின்னர், வாயுவும், ஸ்பர்சத்தை உணரும் த்வக் இந்திரியமும்(மெய்) தோன்றியது.
  • வாயுவின் ஸ்பர்ச தன்மாத்திரையிலிருந்து, காலத்தின் தூண்டுதலால், ரூப தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ஒளியும், ஒளியை உணரும் கண்ணும் உருவாயின.
  • அவ்வாறே, ரூப தன்மாத்திரையிலிருந்து, ரஸ(சுவை) தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து அப்புவும்(நீரும்) சுவையை உணரும் நாக்கும் தோன்றின.
  • ரஸ தன்மாத்திரையிலிருந்து, கந்த(வாசனை) தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ப்ருத்வி(பூமி)யும், வாசனையை உணரும் மூக்கும் உண்டாயின.
  • மஹத்தத்துவம், அஹங்காரம், பஞ்ச பூதம் முதலான ஏழும் ஒன்று சேராமல் ஆதியில் இருந்த போது, பரமாத்மா, காலம், கருமம் குணம் இவைகளுடன் அவற்றில் பிரவேசித்து, அவற்றுள் ஊடுருவி ஒன்று சேர்த்தார். அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட மஹதாதிகளிலிருந்து ஜடமான அண்டம்(பிரபஞ்சம்) தோன்றியது. அதிலிருந்து விராட்  புருஷனானவர் தோன்றினார்.
  • இந்த நிகழ்வு ஸ்ரீமந் நாராயணீயத்தில், கீழ்க்கண்டவாறு விவரிக்கப்படுகிறது.
    ஏதோ பூதகணா: ததேந்திரிய கணா:
    தேவாஸஜாதா: ப்ருதங்
    நோ சேகு: புவனாண்ட நிர்மிதி
    விதௌ தேவை: அமீபிஸ்ததா
    த்வம் நானாவித  ஸூக்திபி: நுதகுண:
    தத்வாதி அமூந் யாவிசன்னு
    சேஷ்டா சக்திம் உதீர்ய தானி
    கடயன்னு ஹைரண்ய மண்டம் வ்யதா:
    "ஹே குருவாயூரப்பா!!, இவ்வாறு தோன்றிய பஞ்சபூதங்கள் முதலானவைகளும் அவற்றின் தேவதைகளும் தனித்தனியே இருந்தன. அவற்றால் இவ்வித ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது அந்தத் தேவதைகள் உன்னையும் உன் கல்யாண குணங்களையும் ஸ்தோத்திரம் செய்தன. உடனே நீ மஹதாதி தத்துவங்களின் உட் புகுந்து உண்டாக்கும் சக்தியை அளித்தாய். அதன் மூலம் பொன் மயமான பிரம்மாண்டம் உருவானது." (5வது தசகம்).

இந்த அண்டமானது, அதற்கு முன்பே உருவான நீரில் ஆயிரம் வருடங்கள் இருந்தது. பரமாத்மா அதனைப் பிளந்து, பதினான்கு லோகங்களின் ரூபம் கொண்டு விராட் புருஷன் என்ற உருவம் கொண்டார்.

(பகவானின் கல்யாண குணங்களைப் போற்றும் ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஸ்லோகங்களுக்கு இங்கு சொடுக்கவும்.)

விராட் புருஷ உருவம்:

பதினான்கு லோகமாக ரூபம் கொண்ட, விராட் புருஷனின் உள்ளங்கால்கள் பாதாள லோகம் என்றும் கால்களின் மேற்புறம் ரஸாதலம் என்றும், கணுக்கால்கள் மஹாதலம் என்றும் இருக்கின்றன. இவை மூன்றும் கீழ் லோகங்கள்.

கணுக்கால்களிலிருந்து முழங்கால்கள் வரை தலாதலமாகவும், முழங்கால்கள்,  ஸூதலமாகவும், இரு தொடைகளும் விதலம், மற்றும் அதலமாகவும் இடுப்பு பூலோகமாகவும், தொப்புள் வானமாகவும், மார்பு ஸ்வர்கமாகவும் கூறப்படுகிறது. தலாதலம், ஸூதலம், விதலம், அதலம் ஆகியவையும் கீழ் லோகங்கள்.

விராட் புருஷனின் கழுத்து, மஹர் லோகம், தலை பிரம்ம லோகமாகவும் இருக்கின்றது.

விராட் புருஷனின் தலை உச்சி, வேதங்கள். தலை முடிகள் மேகங்கள். இரு புருவங்களும் ப்ரும்மாவின் வீடு. இரு கண் இமைகள் இரவும் பகலும். கண்கள் சூரியனாகும்.

இந்த உலக சிருஷ்டியானது, விராட் புருஷனின் அருட்கடாக்ஷப் பார்வையே. காதுகளோ திசைகள். நாசிகள் அஸ்வினி தேவர்கள். கீழ் உதடு என்பது லோபம். மேல் உதடு வெட்கம். பற்களோ நட்சத்திரங்கள். தெற்றுப்பல் யமதர்மராஜாவாகக் கூறப்படுகிறது.

விராட் புருஷனின் மூச்சு வாயு, நாக்கு நீர், வாக்கு பறவைகளின் கூட்டம். ஸ்வரங்கள் சித்தர்களின் கூட்டம். வாயானது அக்னி, கைகள் தேவர்கள். இரு ஸ்தனங்களும் தர்ம தேவதையாகக் கூறப்படுகிறது.

அவரது உடலின் பின்புறம் அதர்ம தேவதை, மனமோ சந்திரன், இதயமானது பிரக்ருதி, வயிறோ சமுத்திரங்கள், அணிந்துள்ள ஆடை சந்தியாகாலம், ஜனனேந்திரியம் ப்ராஜாபதி, அண்ட கோசங்கள் இரண்டும் மித்ர தேவதை. காலில் உள்ள நகங்கள், யானை குதிரை போன்றவை. அவரது கம்பீர நடையே காலம். 

அவரது தாமரை போன்ற முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்தே நான்கு வருணத்தவரும் உற்பத்தியாயினர்.

விராட் புருஷனின் செயல்களே பிறப்பு, இறப்பு என்பவை. அவரது  வீர தீரம் அசுரர்கள். அவரது எலும்புகள் மலைகள், நாடி நரம்புகள் நதிகள். அவரது ரோமங்கள் மரங்கள் ஆகும். 

இத்தகைய உருவம் கொண்ட விராட் புருஷனின் உருவத் தியானம் எத்தகைய பலனைத் தர வல்லது என்று ஸ்ரீ நாராயண பட்டத்திரி, ஸ்ரீமந் நாராயணீயத்தில் கீழ்க்கண்டவாறு அருளுகிறார்.

ஈ த்ருக் ஜகன்மய வபு: தவ கர்ம பாஜாம்
கர்மா வஸான ஸமயே ஸ்மரணீய மாஹூ:
தஸ்யந்தராத்ம வபுஷே விமலாத்மனே தே
வாதால யாதிப நமோஸ்து நிருந்த்தி ரோகான்

"அனைத்துயிரினங்களிலும், அந்தர்யாமியாகவும், எங்கும் நிறைந்து, நிர்மலமாகவும் உள்ள இறைவா!!, உன்னுடைய இந்த விராட் புருஷ உருவம், தன் கர்மங்களை சரியாக நிறைவேற்றுபவர் யாரோ அவர்களுக்கு, அந்த கர்மங்கள் நிறைவுறும் நேரத்தில்(இறுதிக்காலத்தில்) தியானிக்கத் தக்கது என்று சொல்கிறார்கள். (அதாவது, இறைவனடி சேரும் காலத்தில், யாரொருவர் இந்த‌ உருவத்தில் இறைவனைத் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் கிட்டும் என்பது உட்பொருள். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமே ஸ்ரீமந் நாராயணீயம்). இத்தகைய மகிமை வாய்ந்த  உனது திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள். எனது வியாதிகளை நீ தான் போக்கி அருள வேண்டும்.

இதன் தொடர்ச்சியை இனி வரும் பதிவில் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

KAPILA AVATHARAM, ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கபில அவதார வைபவம்.


ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ கபில ப்ரசோதயாத் (ஸ்ரீ கபில காயத்ரி)

'மறை' என்று போற்றப்படும் வேதங்களில் மறைந்துள்ள தத்துவங்களை விரிவாக, கதை வடிவில் நமக்கு உபதேசிப்பதே புராணங்கள். புராணங்கள் வெறும் கதை மட்டுமல்ல. இன்றளவும் இராமயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாச புராணங்கள் எத்தனை முறை கூறினாலும் கேட்பதற்கு அலுக்காதவை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிது போல் தோன்றும் தன்மை வாய்ந்தவை. கேட்பவருக்கு, வாழ்வியலில் தேவையான நீதிகளை ஒவ்வொரு முறையும் உபதேசித்து, வாழ்வின் தன்மையை உணர்த்த வல்லவை.

இவற்றுள் முக்கியமானதும், ஒப்புவயர்வற்றதுமான, 'ஸ்ரீமத் பாகவதம்' வேத வேதாந்தங்களில் கூறப்படும் தத்துவ ஸாரமாக விளங்குகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனின் அவதார மகிமைகளையும், பிரபாவங்களையும் விரித்துரைக்கும் இந்நூல், வேதவியாசரால் இயற்றப்பட்டது. இவர் தன் புத்திரர் ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷிக்கு இதை உபதேசிக்க, ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியும், பரீக்ஷித் மஹாராஜாவுக்கு இதை உபதேசித்தருளினார்.

 பாகவதத்தை யாரொருவர் கேட்க விரும்புகிறாரோ, அப்பொழுதே பகவான் அவர்தம் உள்ளத்தில் திருக்காட்சியருளுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தில், பகவானின் அவதார மகிமைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பகவானின் பத்து அவதாரங்களைத் தவிர, மன்னுயிர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு, எடுத்த, வேறு சில அவதாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பகவான் ஸ்ரீமந் நாராயணர், கபிலராக, தத்தாத்ரேயராக, நரநாராயணராக, ரிஷபதேவராக பற்பல அவதாரங்களை எடுத்தருளியிருக்கிறார். இந்தப் பதிவில், கபிலராக திருஅவதாரம் செய்து, 'கபில கீதை' எனப் புகழ்பெற்ற சாங்கிய யோகத்தை உபதேசித்தது வரையில் பார்க்கலாம். சாங்கிய யோகம், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்ததாகும்.

இந்து தர்மத்தின் மெய்ஞ்ஞான மரபு அநாதியானது. ஆழ்ந்த வேர்களுடையது. எதன் தாக்கத்தினாலும் உண்டானதன்று. பன்னெடுங்காலம் முன்பே, மஹாஞானிகளாக விளங்கிய  நம் மூதாதையரால் உள்ளொளியால் கண்டுணரப்பட்டது. எல்லாவிதமான கருத்துக்களுக்கும் இடமளிப்பது. 'நீர்ச்வர வாதம்' எனப்படும் நாத்திகமும் இந்து தர்மத்தின் ஓர் அங்கமே. இந்து தர்மத்தில், வேதங்கள், தத்துவங்கள் (அதாவது,பிரஸ்தானத் திரயம் எனப்படும் கீதை, உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியன) ஆறு மதங்கள் (காணபத்யம், கௌமாரம் முதலான‌  க்ஷண்மதங்கள்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம்,நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சை, உத்தர மீமாம்சை) முதலியவை அடங்கிய பெரும் தொகுப்பு நம் தர்மம். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றுவதாயினும், பல தரப்புச் சிந்தனைகளுக்கு இடமளிப்பவையாக நம் தர்மம் இருந்து வருவதை  நம் கண்முன் காட்டும் கண்ணாடிகள்.

இவற்றுள் சாங்கிய யோகம், ஸ்ரீ கபில மஹரிஷியால் அருளப்பட்டது. ஸ்ரீ கபில மஹரிஷியின் அவதார வைபவத்தை இப்போது பார்க்கலாம்.

கபிலரின் திருஅவதாரம்.

கர்த்தமப் பிரஜாபதி, சரஸ்வதி நதிக்கரையில், பத்தாயிரம் வருஷங்கள் தவமியற்றியதின் பலனாக, பகவான் ஸ்ரீமந் நாராயணர், அவருக்கு சப்த பிரம்ம வடிவினராகக் காட்சியளித்தார். 

 .
தமது தரிசனத்தினால் மகிழ்ந்திருந்த கர்த்தமரிடம், பகவான், 'கர்த்தமரே, பிரம்ம புத்திரரும், ராஜரிஷியும், தருமத்தை நன்குணர்ந்தவரும், பரந்த இப்பூமியை ஆள்பவருமான, ஸ்வாயம்புவ மனு, தன் தர்மபத்தினியான, சதரூபாவுடன், உம்மைக்காணும் பொருட்டு, நாளை மறுநாள் வருவார். உத்தம குணசாலியும், அழகியுமான தம் புத்திரியாகிய தேவஹூதியை உமக்குக் கொடுக்கப் போகிறார். நீரும் அவளை ஏற்று, க்ருஹஸ்த தர்மத்தை பரிபூர்ணமாக அனுசரித்து, எல்லாக் கர்ம பலன்களையும் என்னிடமே அர்ப்பணம் செய்து, என்னை அடையப் போகிறீர். உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள். பிறகு, பத்தாவதாக, நானும் உமது வீர்யத்தால், உமது பத்தினியாகிய தேவஹூதியிடம் எனது அம்சமாக அவதரித்து, ஸாங்கிய தத்துவ ஸம்ஹிதையைச் செய்யப் போகிறேன். நீர் எனது அவதாரம் நிகழ்ந்ததும், சந்நியாச தர்மத்தைக் கைக்கொண்டு, என்னிடத்தில் உம்முடன் உலகையும், உம்மிடத்தில் என்னையும் காணப் போகிறீர்' என்ற அமுத வார்த்தைகளை அருளினார்.

பகவான் குறிப்பிட்ட நாளில், ஸ்வாயம்புவ மனு, பொற்தேரில், தமது பத்தினியுடனும், புத்திரியுடனும் கர்த்தமரை நாடி, பிந்து ஸரஸ் வந்தடைந்தார்.  அவ்விடத்தில் தங்கியிருந்த கர்த்தமர், ஸ்வாயம்புவ மனுவை தக்க முறைகளில் வரவேற்றுச் சிறப்பித்தார். ஸ்வாயம்புவ மனுவும், தாம் வந்த காரியத்தை கர்த்தமருக்கு விவரித்து, தம் புதல்வியான தேவஹூதியை மணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கர்த்தமர், விவாகத்திற்குச் சம்மதித்தாராயினும், தாம் தேவஹூதிக்கு புத்ர சந்தானம் உண்டாகும் வரையே அவளுடன் க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருக்க இயலும் என்றும், அதற்குப் பின், பகவானின் கட்டளைப்படி சந்நியாச தர்மத்தைப் போற்றி அனுஷ்டிக்க விரும்புவதாகவும் கூறினார். 

நிபந்தனையை தேவஹூதி ஏற்றாள். கர்த்தமருக்கும் தேவஹூதிக்கும் விவாகம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்வாயம்புவ மனுவும், சதரூபாவும், மணமக்களுக்கு, விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை பரிசளித்து, தம் புதல்வியிடம் பிரியாவிடை பெற்று, தம் நகரை அடைந்தனர்.

தேவஹூதி, தனது இன்சொல்லாலும் உள்ளன்போடு கூடிய பணிவிடைகளாலும், பரம தேஜஸ்வியான தனது கணவரை சந்தோஷப்படுத்தி வந்தாள். இடைவிடாத பகவத் ஆராதனையின் பயனாக, யோக சித்திகள் கைவரப் பெற்றிருந்த கர்த்தமர், தமது யோக பலத்தால், தமது மனைவியின் ஆசைக்கு ஏற்ப உண்டாக்கப்பட்ட விமானத்தில்,  தமது மனைவியுடன் ஏறி அமர்ந்து, தேவப் பெண்கள் பணி செய்ய, வெகு ஆச்சரியமான பூமண்டலம் முழுவதையும்  தம் மனைவிக்குச் சுற்றிக் காட்டிவிட்டு,  தம் ஆசிரமம் திரும்பினார்.

நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்களுக்கு அழகிற்சிறந்த ஒன்பது பெண்குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களே, கலா, அனுசூயை, சிரத்தை, ஹவிர்பூ,கதி, க்ரியை,கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி ஆகியோர். அதற்குப் பின் பல நாட்கள் கழித்து, கட்டையில் அக்னி பிரவேசிப்பதைப் போல் பகவான், கபிலராக தேவஹூதியிடம் தோன்றினார். கபிலர் அவ்வாறு திருஅவதாரம் செய்த இடமே 'கபில வாஸ்து' என்னும் நகரம். இங்கேயே பின்னாளில் புத்தபகவானும் அவதரித்தார்.

பிறகு, ஸரஸ்வதி நதியால் சூழப்பட்ட கர்த்தமருடைய ஆசிரமத்துக்கு, பிரம்மதேவர் தம்மால் தோற்றுவிக்கப்பட்ட நவப் பிரஜாபதிகளுடன் வந்தடைந்தார். (பிருகு, அங்கிரசு, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிரது, மரீசி,அதர்வணர், வசிஷ்டர் ஆகியோரே நவப் பிரஜாபதிகள்).  பின், பிரம்மதேவரின் கட்டளையின்படி, தமது ஒன்பது குமாரிகளையும், நவப்பிரஜாபதிகளுக்கு கர்த்தமர் மணம் செய்து கொடுத்தார். கலாவை, மரீசி முனிவருக்கும், அனுசூயையை அத்ரி முனிவருக்கும் மணம் செய்து கொடுத்தார். ஹவிர்ப்பூ,புலஸ்தியருக்கும், கதி, புலஹருக்கும், கிரியை கிரதுவுக்கும் மனைவியானார்கள். பிருகு முனிவர் கியாதியையும், வசிஷ்டர் அருந்ததியையும், அதர்வணர் சாந்தியையும் ஆங்கீரசர் சிரத்தையையும் விவாகம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு, கர்த்தமர், தாம் முன்பே செய்திருந்த பிரதிக்ஞையின் படி, தமது மைந்தனாக அவதாரம் செய்திருந்த பகவானிடம் அனுமதி பெற்று, சந்நியாச தர்மத்தை மேற்கொள்ள வனம் சென்றார். மௌன விரதம் பூண்டு, ஆத்மாவையன்றி வேறு எதிலும், நாட்டமில்லாதவராய், பற்றறுத்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் பூமியில் சஞ்சாரம் செய்தார். இறுதியில் அனைத்தையும் சமமாகப் பாவிக்கும் மனமுடைய அவரால், பகவானின் பரமபதம் எய்தப்பட்டது.

தந்தை வனம் சென்ற பின், தன் தாயாருக்கு, பயங்கரமான ஸம்ஸாரத்தை தாண்டுவிக்கும் பொருட்டு அத்யாத்ம வித்தையை உபதேசிக்க எண்ணி, கபிலர் பிந்து ஸரஸ்ஸிலேயே தங்கியிருந்தார். ஓர் நாள், தேவஹூதி, தனக்குப் புதல்வனாக அவதரித்திருப்பது பகவானே என்பதைத் தன் கணவரிடமிருந்து தெரிந்து கொண்டவளானபடியால், கபிலரை நோக்கி பிரகிருதி, புருஷ விவேகத்தை தனக்கு உபதேசிக்கும்படி வேண்டிக் கொண்டு சரணடைந்தாள்.

அவள் வேண்டுகோளை ஏற்று பகவான் 'கபில கீதை' எனப் புகழப்படும் சாங்கிய யோகத்தை உபதேசித்தருளினார்.

வனம் ஏயுஷி கர்த்தமே ப்ரஸன்னே
மத ஸர்வஸ்வம் உபாதிசம் ஜனன்யை
கபிலாத்மக வாயுமந்திரேச த்வரிதம்
த்வம் பரிபாஹி மாம் கதௌகாத் (ஸ்ரீமந் நாராயணீயம், 14வது தசகம்)

"ஹே குருவாயூரப்பனே! தமது கடமைகளை முழுவதுமாக முடித்த பின், கர்த்தமருக்கு, தெளிவான மனம் அமைந்தது. அதன் பின் அவர், தவம் புரிய காட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பின், தத்துவங்கள் அனைத்தையும், உனது தாயான தேவஹூதிக்கு நீ கபிலராகத் தோற்றம் கொண்டு உபதேசம் செய்தாய். என்னை பிணிகள் அணுகாமல் நீயே காப்பாற்ற வேண்டும்." 
(வாத நோய்களிலிருந்து குணமளிக்க வல்ல மாமருந்தாகிய ஸ்ரீ வாதபுர நாதாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்).

இவ்வாறு தேவஹூதிக்கு ஆத்ம மார்க்கத்தை உபதேசம் செய்துவிட்டு, தன் தாயான அவளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பகவான் அவ்விடம் விட்டு, ஆசிரமத்தின் வட கிழக்குத் திசை நோக்கிச் சென்றார்

தனக்கு உபதேசிக்கப்பட்ட ஆத்ம மார்க்கத்தை விடாது அப்பியாசம் செய்து, தியானத்திலாழ்ந்தாள் தேவஹூதி. அவளது சரீரம் ஆசிரம வாசிகளால் பாதுகாக்கப்பட்டது. எல்லா ஜீவர்களுள்ளும் உறைபவனான ஸ்ரீ வாசுதேவனையே  தியானித்திருந்த அவள், தவமும் யோகமும் உருவெடுத்தாற்போல் விளங்கினாள். அதனால், அவள் தேகம் வாட்டமுறாமல் விளங்கியது. வெகு விரைவிலேயே, அவள் பகவானின் பரமபதத்தை அடைந்தாள். தேவஹூதி சித்தியடைந்த இடம், சித்திபதம் என்ற பெயருடைய புண்ணிய க்ஷேத்திரமாக விளங்குகிறது. அவள் ஸ்தூல தேகம், அவ்விடத்தில் ஓடும் ஒரு நதியோடு கலந்து மாத்ரி தீர்த்தம் எனும் பெயருடைய புண்ணிய நதியாகி விளங்குகிறது. இது இன்றும் குஜராத் மாநிலம் சித்தாபூர் எனும் இடத்தில் உள்ளது.

கபில மாமுனிவர், பாதாள உலகத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது, சூரிய குல மன்னனான ஸகரனின் புதல்வர்கள் அறுபதினாயிரம் பேரும் கணக்கற்ற அதர்மச் செயல்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றைத் தாங்க முடியாத தேவர்கள், கபிலரிடம் வந்து முறையிட, அவரும் சில நாட்களிலேயே அவர்கள் மடிவார்கள் என்று ஆறுதலளித்தார். ஸகர மன்னன் அஸ்வமேத யாகம் செய்த பொழுது, யாகக் குதிரையை, இந்திரன் பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று,   தவம் செய்து கொண்டிருக்கும் கபில முனிவருக்குப் பின்னால் கட்டி வைத்து விடுகிறான். குதிரையைத் தேடிய ஸகர மன்னனின் புதல்வர்கள், கபில முனிவரே, குதிரையை அபகரித்தவர் என்றெண்ணி அவரை இம்சிக்க, தவத்திலிருந்து கபிலர் கண் விழித்தார். தவத்திலிருந்து கபிலர் கண்விழிக்கும் போது அவர் பார்வையில் படுபவர் எவரும் சாம்பலாவர். ஆகவே, அவர் பார்வை பட்டு, அறுபதினாயிரம் பேரும் சாம்பலாயினர்.

அதன் பின், ஸகர மன்னனின் பௌத்திரனான அம்சுமான், இவர்களைத் தேடி வந்து, சாம்பல் குவியலைக் கண்டு மனம் வருந்த, கபிலர் அவனைத் தேற்றி, முதலில் யாகக் குதிரையைக் கொண்டு ஸகர மன்னனிடம் சேர்த்து யாகத்தைப் பூர்த்தி செய்யுமாறும், அம்சுமானின் பேரனான பகீரதன் தவத்தால், கங்கை பூமிக்கு வந்து, இந்த சாம்பல் குவியல்களின் மீது படும்போது அவர்கள் நற்கதி அடைவார்கள் என்றும் வரமளித்தார். (இவ்வாறு அம்சுமானுக்கு உரைத்தவர், சுபர்ணன் எனும் திருநாமமுடைய பக்ஷிராஜனான கருடபகவான் என்றும் கூறப்படுகிறது).

கபில மாமுனிவர், கங்கா ஸாகரம் எனும் இடத்தில் இன்றும் சித்தர், சாரணர், கந்தர்வர்கள் முதலானவர்களால் பூஜிக்கப்படுகிறவராய், சாங்கிய ஆசாரியர்களால் போற்றப்படுகிறவராய், உலக நன்மையின் பொருட்டு நிஷ்டையிலிருக்கிறார். அவர் பாதாளத்திலிருந்து வெளிப்பட்டு பூமிக்கு வந்த பிலம் (துவாரம்), நீரால் நிரம்பி, கபில தீர்த்தம் எனும் பெயரில் கீழ்த்திருப்பதியில் விளங்குகிறது. அவ்விடத்தில் உள்ள 'கபிலேஸ்வர ஸ்வாமி' எனும் திருநாமமுடைய இலிங்கம், அவரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாக ஐதீகம்.
"மரங்களில் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: | 
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: ||  
(பகவத் கீதை பத்தாவது அத்தியாயம்,விபூதி யோகம்).

ஸ்ரீகபில முனிவருக்கும் தேவஹூதிக்கும் இடையே நடந்த ஸம்வாதமாக ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்படும் 'சாங்கிய யோகத்தை'ப் பற்றி வரும் பதிவில் பார்க்கலாம். 

 .
வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

INDEPENDENCE DAY.... வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?....


மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியா ரோ?

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (மஹாகவி பாரதியார்).

இந்தப்  பதிவு நமது தாய்த்திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய, பல கோடிக்கணக்கான, முகமறியாத தியாகிகளுக்குச் சமர்ப்பணம்.

நமது தாய்த் திருநாடு சுதந்தரக் காற்றை நிம்மதியாக சுவாசித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ தியாகிகள், தமது இன்னுயிரை இழந்து, சொத்து சுகங்களைத் துறந்து, வாழ்வின்பங்களை மறந்து, நம் பாரத மாதாவின் அடிமைத் தளையை அகற்றுவதொன்றையே முப்போதும் சிந்தித்து, போராடிப் பெற்ற சுதந்திரம் இது. பெருந்தலைவர்கள் பலரை நினைவு கூரும் நாம், அவர்களின் வழிநடத்துதலின் கீழ், விடுதலைப் பெரும் போரில் பங்கெடுத்த பல லட்சணக்கான, முகம் தெரியாத தியாகிகளையும் இந்த நன்னாளில் நினைவில் வைத்து நன்றி செலுத்துவது இன்றியமையாதது.

அவ்விதம் போற்றப்பட வேண்டிய ஒரு தியாகியைப் பற்றி, இந்த நன்னாளில் உங்களுக்குச் சொல்வதில் பெருமையடைகிறேன்.

அவரே, 'அம்பி அய்யர்' என சுருக்கமாக அழைக்கப்பட்ட,  திரு. 'ச. வெ. இராமச்சந்திர அய்யர்'. சமயபுரம் இவர் வாழ்ந்த ஊர். அங்கு,'சமயபுரம் காஃபி க்ளப்' என்னும் உணவகத்தையும், 'S.V.R கதர் கடை'யையும் நடத்தி வந்த பெருமகனார். இவர். வசதிகளுக்கு குறைவில்லாத வாழ்வு. ஆயினும், பாரத நாட்டின் விடுதலைக்காக நமது தேசப்பிதா காந்திஜியின் தலைமையில் திரண்ட தொண்டர்களுள் ஒருவராக, தமது சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்தார். இவ்வாறு நாட்டுக்கு உழைப்பதை தமது கடமையென்றே எண்ணினாரன்றி அதன் காரணமாக புகழையோ, வேறு சிறப்புகளையோ அவர் எதிர்பார்த்தவரல்ல.

தமிழகத்தைச் சேர்ந்த தியாகிகளில் என்றும் போற்றப்படுபவரும், மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று தன் இன்னுயிரையும் துறந்தவருமான,  அமரர் வீர வாஞ்சி நாதன், இவருக்கு தாய்வழி உறவினர்.
 இந்தப் பகுதி முழுமையும் காண இங்கு சொடுக்கவும்.

திரு. அம்பி அய்யரைக் குறித்து, 2:10:2011 தேதியிட்ட காலைக் கதிர்  நாளிதழில் வெளிவந்த பேட்டியை மேலே கொடுத்திருக்கிறேன்.

அதில் வெளிவராத சில மேலதிகத் தகவல்கள் இதோ:

திரு. இராஜாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக யாத்திரையில்' பங்கெடுக்க பெயர் கொடுத்துவிட்டு, பெரும் ஆவலுடன் காத்திருந்தார் திரு.அம்பி அய்யர்.

 நூறு பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதில், விடுபட்டுப் போனவர்களில் திரு. அம்பி அய்யரும் ஒருவர். திரு. டி.எஸ்.எஸ். ராஜன், அவரை திரு.ராஜாஜி அவர்களின் முன்னிறுத்தி, 'பார்வைக்கு இளைஞர் என்றாலும், ஆயிரம் தொண்டர்களுக்குத் தலைவர்' என்று அறிமுகம் செய்தார். திரு. ராஜாஜி அவர்கள், திரு.அம்பி அய்யர் காபி ஓட்டல் வைத்திருப்பதை அறிந்து,  யாத்திரை செல்லும் வழியில் உணவு முதலானவற்றுக்கு உதவுமாறு சொன்னதோடு அல்லாமல், 'மிக சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்கார கலெக்டர் துரை, எங்களுக்கு யாரும் குடிக்கத் தண்ணீர் கூட உதவிடக் கூடாது!மீறினார் சிறைத்தண்டனை நிச்சயம் என தண்டோரா போட்டு கடுமையாகச் செயல்படுகிறார். ஜாக்கிரதை!' என நேரடியாக எச்சரித்தும் விட்டார்.

திரு. ராஜாஜியின் கட்டளையை, திரு.அம்பி அய்யரும் சிரமேற்கொண்டு செயல்படுத்தினார். அவரும், இன்னும் சிலரும் சேர்ந்து அதை எவ்விதம் சாமர்த்தியமாகச்  செயல்படுத்தினார்கள் என்பதை, திரு.ஆக்கூர் அனந்தாச்சாரியார்(யாத்திரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுவரில் ஒருவர்) கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.

"மாம்பழச் சாலையை அடுத்த காவிரி இடது கரை வழியாக யாத்திரை. வைக்கோல் பிரி கயிற்றில் மாவிலைத் தோரணம். செய்தித்தாள் ஒட்டிய நீண்ட தட்டியில், குருவி நீல எழுத்துக்களில் வரவேற்பு வளைவுகள், வாழை மர நுழைவாயில்கள், திட்டமிடப்பட்ட இளைப்பாறும் இடங்களில், நிழல் பந்தல், பெரிய பானைகளில் குடிநீர் என திமிலோகப்பட்டது. மரக்கிளையிலோ, மணற்படுகையிலோ, மூட்டையாக, மளிகைப் பொருட்கள், அரிசி, பருப்பு, சமையலுக்கான மண் பானைகள், சட்டிகள், விறகு உள்பட மறைவாக வைத்திருந்து, முகம் தெரியாத ஒருவர், அதை ஜாடை காட்டி விட்டு மறைந்து விடுவார்" என்கிறார் திரு.ஆக்கூரார். கீழ்நிலைக் காவலர்களுக்கு இந்த ஏற்பாடுகள் தெரியும் என்றாலும் காட்டிக் கொடுக்கவில்லை. அதனால், பெரிதாக ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாத காரணத்தால், வரலாற்றுப் பதிவில் இல்லாமல் போய்விட்டது.
அண்ணல் காந்திஜியின் சமயபுரம் வருகை:

திரு.சு. முருகானந்தம் அவர்கள் எழுதிய, 'நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி' எனும் வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த நூலில், அண்ணல் காந்தியடிகளின் தமிழக சுற்றுப் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"10:2:1934, அதிகாலை 3.50 திருச்சிராப்பள்ளி வருகை. ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர் வழியாக, சமயபுரம் அடைதல். காலை 11.00 மணி, சிந்தாமணி அரிஜனக் குடியிருப்பு ஊழியர்கள் கூட்டம்."

என்று மகாத்மாவின் சமயபுர வருகை குறித்த குறிப்பு உள்ளது. இந்தி மொழியை நன்கு அறிந்திருந்த திரு. அம்பி அய்யர், காந்திஜியின் வார்தா முகவரிக்குக் கடிதம் எழுதி, அவர் கேட்டிருந்தபடி, அரிஜன நிதிக்காக, ஆயிரத்தோரு வெள்ளி  ஒரு ரூபாய்கள் தருவதாக ஒப்புக் கொண்டு, நமது தேசப்பிதாவின் சமயபுர வருகைக்கு வழி வகுத்தார்.

அச்சமயம் அங்கு போடப்பட்டிருந்த பந்தல் குறித்த வருணனை:

சமயபுரத்தில் துறையூர் ஜமீனுக்குச் சொந்தமான பெரிய பொட்டல் வெளி உண்டு. வாய்மொழி அனுமதி பெற்று அருகில் இருந்த சிங்கார வேலு சோளக் கொல்லையும் சேர்த்து மிகப் பெரிய பந்தல், நடுவே கீற்றுக் கொட்டகை, மேடை பின்புறம் ஓய்வு எடுக்க தனியிடம் முதலியவை தயாராயின.பந்தல் முழுவதும் மணல் பரப்பப்பட்டது. தூணுக்குத் தூண் தண்ணீர் மண்பானை, மடக்கு (பானை மூடி போன்றது) தகரக் குவளைகள், வெளி முகப்பு முழுவதும் மாவிலைத் தோரணம்,வெளித்தூண்களில்நெட்டிலிங்கக் குலைகள்,முகப்புகளில் வாழை மரங்கள், மேடைப்பகுதி முழுவதும் கதர்த்துணி கொண்டு அலங்காரம் ( S.V.R கதர்க்கடை உபயம்) என காந்திஜியின் வருகை  குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுக் கூட்டத்தில், திரு. அம்பி அய்யர் மட்டுமல்லாது, புது மணப் பெண்ணான அவரது மனைவி திருமதி.லக்ஷ்மி அம்மாளும் காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று, தமது நகைகள் அனைத்தையும் மனமுவந்து நாட்டிற்காக அளித்தார்.

மேலும் சில தகவல்கள்:

மேற்குறிப்பிட்ட நூலில், தடையை மீறி, துறையூரில் கள்ளுக்கடைகளை ஏலத்தில் எடுப்பதைத் தடுக்க பிரசாரம் செய்ததால் கைது செய்யப்பட்டோர் பட்டியலில், திரு.அம்பி அய்யரின் பெயரும் ('ராமச்சந்திர அய்யர் என்று) இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டோரின் மேல் அடக்கு முறை எவ்வாறு பாய்ந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவ்வாறு பல துன்பங்களை, நம் நாட்டு விடுதலைக்காக, மகிழ்வுடன் ஏற்ற பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தாலேயே, நாம் இன்று சுதந்திர நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம்.

என் வேண்டுகோளை ஏற்று, சகோதரர் திரு தனுசு அவர்கள் எழுதிய 'சுதந்திர கீதம்' கவிதைக்கு இங்கு சொடுக்கவும்.

நமது முன்னாள் பாரதப் பிரதமர் திரு. பண்டித ஜவஹர்லால் நேருவின் வருகை:

காந்திஜி, சமயபுரம் வந்து சென்ற பிறகு அடுத்த ஆண்டே, லால்குடி தாலுகா, காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி, திரு.அம்பி அய்யரைத் தேடி வந்தது. 1936ல் (15.10.1936) தாலுகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில், திரு.அம்பி அய்யர், கொள்ளிடம் டோல்கேட் பகுதியில், ஸ்ரீயுத பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு, வரவேற்பு மடல் வாசித்து அளித்தார். (படச்செய்தியில், வரவேற்பிதழைக் காண்க) நேருஜியின் பயன்பாட்டிற்காக, டி.வி.எஸ். கம்பெனி மூலம் லண்டனிலிருந்து, பேபி ஆஸ்டின் டூரர் வகை காரை இறக்குமதி செய்து பயன்படுத்தினார். அந்தக் காரை, பின் 1952,வரை திரு. அம்பி அய்யர் பாதுகாத்து வைத்திருந்தார்.

நமது தேசப்பிதா, 'உனது உணவகத்தில் தீண்டாமை பார்க்கக் கூடாது' என்று தம்மிடம் சொன்னதற்காக, அவர் கட்டளைப்படியே நடந்தார். அதன் காரணமாக, 'ஜாதிப் பிரஷ்டம்' உள்ளிட்ட சொல்லொணாத் துன்பங்களைத் தாங்கினார். தமது செல்வம் முழுவதையும்  நம் தாய்த் திருநாட்டின் விடுதலை வேள்விக்காகவே செலவழித்தார். இறுதியில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானபோதும் அவர் வருந்தவில்லை.

மேற்கூறிய தகவல்கள் யாவும், அன்னாரது மூத்த மகனும், எனது மாமனாருமான, திரு. ச. இரா. சத்தியவாகீசுவரன் அவர்களால் எனக்குச் சொல்லப்பட்டது. தமது தந்தையாரின் தியாக வாழ்வு குறித்து இன்றளவும் பெருமிதமே கொள்ளும் இவர், தமது தந்தையாரைக் குறித்த வரலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்துவதில் மிக ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.

நமது தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் வாழ்க்கைச் சரித்திரம், நமக்கு அவர்கள் செய்த‌ தியாகத்தின் மேன்மையையும் சுதந்திரத்தின் மாண்பையும் உணர்த்தும். இதை நமது சந்ததிகளுக்குச் சொல்வது நமது கடமை. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் மிக மிக உயர்ந்தது , சொல்லொணாத மதிப்புடையது என்பதை நமது சந்ததிகளுக்கு உணர்த்துவது நாம் நமது தாய்த்திருநாட்டிற்குச் செய்யும் மிக உயர்ந்த தொண்டாகும். வருங்காலத்தில், அவர்கள், தேசபக்தி மிக்கவர்களாக வளர்ந்து, உயர்ந்து, நம் தாய்திருநாட்டின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றுவார்கள் என்பது திண்ணம்.

தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

என்ற மஹாகவி பாரதியின் கவலையை இல்லாமல் செய்வது நமது முழுமுதல்  கடமையாகும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு

வந்தே மாதரம்!!!!

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

கௌமாரம் (ஆடிக்கிருத்திகை, AADI KRITHIGAI, 10:08:2012)


நான் எழுதி,உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் 'கௌமாரம்' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரையை ஆடிக்கிருத்திகை தின சிறப்புப் பதிவாக  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உயர்திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி. 

முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

செந்தூர்ப்பதிகொண்டோன், செந்திலாண்டவன் , பக்தர் சிந்தைக் குடிகொண்டான் கந்தக் கடவுள் , வந்தனை செய்வாரையும் சொற்றமிழால் தன்னை வைதாரையும், அத்தமிழின்பத்துக்காக, வாழ்வாங்கு வாழவைக்கும் எந்தை, எம்பெருமான் முருகக் கடவுளைப் பரம்பொருளாகப் போற்றும் ,'கௌமாரம்', பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

"ஸ்வாமி' என்ற பெயர், வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான், அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் சுப்பிரமணியர்தான், அவர் குழந்தையாக இருக்கிற கடவுள், குமாரஸ்வாமி" என்று காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர் அருளியிருக்கிறார்.

சுப்பிரமணியர் என்ற திருநாமமே, சு+பிரம்மண்யம் என்று சிரேஷ்டமான் பிரம்மம் என்ற பொருளில் விளங்குவதாக இருக்கிறது. 'கௌ' என்றால் மயில் என்றும் பொருள். ஆகவே, மயில் வாகனனான முருகப்பெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடும், இந்த மார்க்கத்திற்கு, கௌமாரம் என்று பெயர்.

முருகப்பெருமான், 'தமிழ்க்கடவுள்'என்றே போற்றப்படுகிறார். திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், முருகபக்தியை, சென்ற இடமெங்கும் கோவில்கள் கட்டி, வெளிப்படுத்தினர்.

'முருகு' என்றால் அழகு என்று பொருள். கந்தன், பெயரழகன்,வடிவழகன், அருளழகன், பக்தருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கும் கொடையழகன்.

சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகன். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர்) என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை. எனவே மாயைக்கு 'குக மாயை' என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான படைப்புகளுக்கு காரணம் மாயையே.

மயிலானது மாயைக்கு உவமையாகக் கூறப்படுகிறது. அதுதன் தோகையை விரிப்பது போலும் ஒடுக்குவது போலும் சிருஷ்டியும் சம்ஹாரமும் நடைபெறுகிறது. அந்த அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட ஞான சக்தி எம்பிரான்.

சிவபெருமானின், சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம், அதோமுகம் என்னும் ஆறு முகங்களின் அம்சமான ஆறு நெருப்புப் பிழம்புகள்,சிவனாரின் நெற்றிக் கண்ணின் வழியே வெளிப்பட்டு,   பரம்பொருளாகிய‌ முருகப் பெருமான் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.   (ஸ்ரீ கந்தபுராணம்)

பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்ததால், 'முருகன் மட்டுமே ஆண்பிள்ளை' என்பார் வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)
ஸ்ரீ ருத்ரத்தில் வரும் 'நமோ ஹிரண்யபாகவே ஸேநாந்யே' என்ற வரிகள், தேவசேனாபதியாகிய முருகனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஓம் எனும் ஓங்கார ஒலியே வேதங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். ஓம் எனும் பிரணவம் மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவம்

 அ' காரோ விஷ்ணு ருத்ரிஷ்ட
 'உ' காராஸ்து மகேச்வர:
 'ம' காராஸ்து ஸ்ம்ருதோ பிரும்மா
 பிரணவஸ்தி த்ரியாத்மக:

பிரணவ ஸ்வரூபமாக, அதன் உட்பொருளாக விளங்கும் பரம்பொருளே முருகன்.

'ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய் '

என்கிறார் ஸ்ரீ குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில்.

சுந்தரனே சுகந்தனே சுப்ரமணியனே சூரசம்காரனே!
அந்தமாதியில்லா பரமே அருவ உருவ பெம்மானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

நிர்க்குணப்பரம்பொருளாகவும், சகுண நிலையில், படைப்பிற்குக் காரணமாகவும் உள்ளவ‌ன் முருகப் பெருமான்.

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு.

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய். (கந்தர் கலிவெண்பா).

என்று குமரகுருபரர், ஐந்தொழிலுக்கும் அப்பாற்பட்ட, குறியும், குணமும், வடிவுமற்று எங்கும் நிறை பரப்பிரம்மமாய் முருகன் அருளுவதைப் புகழ்கிறார்.

திருமுருகப் பெருமானின், ஆறுமுகங்களின் அழகையும் அவை செய்யும் அருட்செயல்களையும் நக்கீரப் பெருமான் தமது 'திருமுருகாற்றுப் படை'யில்,

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் 
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்
உலகம் கொண்ட இருள் (அஞ்ஞான இருள்) நீங்கப் பொலியும் சூரியனாய் ஒரு முகம். பக்தருக்கு வரம் கொடுக்கும் ஒரு முகம், வேத விதி வழுவாது வேள்வி செய்வோர் வேள்விப் பயனைத் தந்தருளும் ஒரு முகம். வேதத்தில் உள்ள மறை பொருளை, யாவரும் மகிழும் வண்ணம், பூரண சந்திரன் போல் விளக்கி நின்றதொரு முகம். பகைவரை மாய்த்து, இனி பகைவருண்டோ என்று போர்க்களத்தை விரும்பி நின்றதொருமுகம். வள்ளியம்மையிடத்து முறுவல் செய்து மகிழும் ஒரு முகம் என்று இனிது விளக்குகிறார்.
திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் 'சரவணபவ' என்பதாகும். 'சரவணபவன்' என்றால், நாணல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். 'சரவணபவ' மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

ச... ‍செல்வம்
ர ... கல்வி
வ ... முக்தி
ண ... பகை வெல்லல்
ப ... காலம் கடந்த நிலை
வ ... ஆரோக்கியம்

முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

கந்த புராணக் கதை, அநேகமாக அனைவருக்கும் தெரிந்ததே,

பாதாளச் சிறையிலே பாதகர் விரித்த வலையிலே
வேதா மேதைகள், தேவர்கள் யாவரும்; தங்கள்
கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
நாதா காப்பாய்தேவ தேவாவென்றே - நிந்தன்
பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே! (கவிஞர் திரு.கோ.ஆலாசியம்)

என்ற வரிகளில்,முருகன் அவதாரக் காரணத்தை அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என, முருகன் நின்றாடும் தலங்கள் பல இருந்தும், ஆறுபடை வீடுகள் என குறிக்கப்பெறும் தலங்கள் முருகப்பெருமானது வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையவை. அவையாவன,

ஓங்கார ஸ்வரூபியான முருகன், தந்தைக்கு அதனை உபதேசித்த, 'சுவாமிமலை', ஞானப்பழத்துக்காக, கோபம் கொண்டு, பின் சினம் தணிந்த 'பழனி', சூரனை சம்ஹரித்து, பின் சிவபூஜை செய்த 'நிராகுலத்' தலமான 'திருச்செந்தூர்', முருகன், தெய்வானைத் திருமணம் நடந்த 'உல்லாசம்' எனப் போற்றப் பெறும் 'திருப்பரங்குன்றம்', வள்ளியை மணம் புரிந்த,சல்லாபம்' எனப் புகழப்படும் 'திருத்தணி',  வள்ளி தெய்வானை சமேதராக அருள்மழை பொழியும் 'சர்வ வியாபக'த் தலமான 'பழமுதிர்சோலை'.

கந்தபுராணத்தைச் சுருக்கமாக,  "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” (சிவனாரின் மகன், சஷ்டித் திதியில் மாமரமாகி நின்ற சூரனை வேல் கொண்டு பிளந்தான்) என்று கூறுவதுண்டு.
சிவனாரிடமிருந்து, முருகன் தோன்றியதால், 'சிவமும் முருகனும்' ஒன்றே என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை, சைவத்தின் ஒரு கூறாகவே கருதுகிறது.

பிரம்மதேவர் பிரணவப்பொருள் அறியாததால் அவரைச் சிறையில் அடைத்து, அவரது படைக்கும் தொழிலைத் தானே செய்தது, சூரனை அழித்தது, தேவர்களைக் காத்தது, தனது உண்மையுருவை மறைத்து, வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியை மணம் புரிந்தது, பக்தருக்கு நித்தமும் அருளுவது என்று ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலியவற்றைச் செய்யும் பரம்பொருள் கந்தனே என்பதை,  கந்தபுராணக் காட்சிகள் மறைமுகமாக நமக்கு எடுத்தியம்புகின்றன.

முருகப்பெருமான், இச்சாசக்தியான வள்ளியையும், கிரியாசக்தியான தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.

கௌமாரத்தில், முருகனே, குண்டலினியாக உருவகப்படுத்தப்படுகிறார். ஆகவே , சில மாநிலங்களில், நாகரூபமாக முருகனை வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக'  (ஸ்ரீகந்தர் ஷஷ்டிக் கவசம்).

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளும் ஆறு ஆதாரத் தலங்களாகக் கூறப்படுகின்றன.அவை,  மூலாதாரம்....திருப்பரங்குன் றம், சுவாதிஷ்டானம்...திருச்செந்தூர் , மணிபூரகம்....பழனி, அநாஹதம்...சுவாமிமலை, விசுத்தி.....திருத்தணி, ஆஜ்ஞா....பழமுதிர்சோலை.
ஞானசக்தியாகிய முருகப்பெருமான், அன்பர் பலருக்கு ஞானோபதேசம் தந்து ஆட்கொள்ளும் கருணைப் பெருங்கடல். சிவனாருக்கு உபதேசித்த ஏரகத்துச் செல்வன், சித்தர் பலருக்கு ஞானோபதேசம் தந்து முக்தி நிலையை அருளிய
காருண்ய மூர்த்தி. ஸ்ரீ போகர், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ அருணகிரிநாதர், வள்ளலார்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள்,  என‌ ஷண்முகக் கடவுள், பல மகான்களுக்கு ஞானாசிரியனாக அருள் மழை பொழிந்து வருகிறார்.
பழமுதிர்சோலையில், ஔவைக்கு 'சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' எனக் கேட்டு, அகந்தை அகற்றி, ஞானம் அருளிய குகக் கடவுளின் கேள்விகளுக்குப் செந்தமிழ்ப்பாமாலை சூட்டி விடையளித்தார் தமிழ் மூதாட்டி. அரியது எது? என்ற கேள்விக்கு,

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

என்று துவங்கி, விரிகிறது ஔவையின் பாமாலை.
சரவணப்பொய்கையில் உதித்த ஷண்முகக் கடவுளை, கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம் முருகனை வழிபட உகந்த தினமாகும். தட்சிணாயனத் துவக்கத்தில், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும் விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று  விரதம் முடிப்பவர்களுக்கு, எம்பெருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும். வைகாசி விசாகம், முருகனின் திருஅவதாரத்தினமாகக் கருதப்படுகிறது. தைப்பூசத்தில், பிரம்ம வித்யா ஸ்வரூபமான வேல் சக்தியால் முருகனுக்கு வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத்தில் தெய்வானையை அம்மையை மணம் புரிந்தார். ஆகவே, இந்தத் தினங்கள் 'கௌமாரர்கள்' எனப்படும் முருகபக்தர்களால் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றன. காவடிகள் எடுத்துவந்து பக்தர்கள் முருகப்பெருமானை இந்தத் தினங்களில் வழிபாடு செய்கின்றனர். சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெற வேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை, பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் வைத்து, பொதிகை நோக்கிச் சுமந்து வரும் வேளையில், பழனியில், தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.

சுமை காவுபவர்கள்(தூக்குபவர்கள்), சுமை இலகுவாக இருக்க வேண்டி, ஒரு தடியில் சுமைகளைக் கட்டி, இம்மாதிரிச் சுமந்து செல்வர். காவுதடி, என்பதே காவடியாக உருமாறியது. வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே காவடியின் தத்துவம்.
இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. தமிழில் கா என்ற சொல், காப்பாற்று என்று பொருள்படும். முருகனின் திருவடிகள் காப்பாற்றும் என்பதால் முருகனுக்குரிய காணிக்கைகளைச் சுமந்து அவர் திருவடி சேர்க்கும் இம்முறைக்கு காவடி எனப் பெயர். காவடிகள், பால் காவடி, பன்னீர்க்காவடி, என‌ எண்ணிலா வகைகளைக் கொண்டது.

காவடியைச் சுமந்து செல்லும் பக்தர்கள், அரோஹரா' அல்லது 'அரோகரா' என்று முழங்குவது வழக்கம்.  'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கமே அரோகரா என்றாயிற்று. இதன் பொருள்,

'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'

என்பதாகும்.
திதிகளில் ஷஷ்டித் திதி, முருகனுக்கு உகந்தது. ஷஷ்டிதிதிக்குரிய தேவி, ஷஷ்டிதேவி எனப் போற்றப்படும் தெய்வானை அம்மை. (ஷஷ்டியில்) சட்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற சொல்வழக்கு, ஷஷ்டி விரதத்தின் மகிமையை உணர்த்துவதாகும். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் ஆறு தினங்கள் கந்தர்ஷஷ்டி என சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அந்தத் தினங்களில், முருகப்பெருமான் விரதம் இருந்து, ஷஷ்டியன்று சூரசம்ஹாரம் செய்தார். ஆகவே, அந்தத் தினங்களில், முருகப் பெருமானின் தலங்களில்,சூரசம்ஹாரப் பெருவிழா பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, முருகன் வேல் வாங்கிய தலமான சிக்கலில், வேல்பூஜைக்குப் பின், வேல்நெடுங்கண்ணியம்மையிடம் இருந்து, முருகன் வேல் வாங்கும் போது, முருகனின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம்.

திருத்தணித் திருத்தலத்தில் மட்டும்,  கந்தர்ஷஷ்டி, பூச்சொரிதல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமானது புகழைப்பாடும் துதிகள் அநேகம்...அநேகம். சிவபெருமானது புகழைப்பாடும் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டிருப்பது போல் முருகப்பெருமானது புகழைப் பாடும் நூல்களும் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பெரும்பணியைச் செய்தவர், திரு.தணிகைமணி செங்கல்வராய பிள்ளை ஆவார்.

  1. திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
  2. திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாம் திருமுறை
  3. திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாம் திருமுறை
  4. திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காம் திருமுறை
  5. குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாம் திருமுறை
  6. பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாம் திருமுறை
  7. பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாம் திருமுறை
  8. கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாம் திருமுறை
  9. திருவகுப்பு - ஒன்பதாம் திருமுறை
  10. கந்தரனுபூதி - பத்தாம் திருமுறை
  11. நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,   முதலானவர்கள் பாடல்கள் -பதினோராம் திருமுறை
  12. சேய்த்தொண்டர் புராணம் (சிவனாரது சேய் ஆன முருகனின் அடியவர் வரலாறு) -பன்னிரண்டாம் திருமுறை இயற்றியவர்.தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.
முருகப்பெருமானுக்கும் அவதாரங்கள் உண்டு. ஸ்ரீ குமாரில பட்டர், மாமதுரை அரசி மீனாட்சியம்மை, சொக்கநாதப்பெருமானின் திருக்குமாரர் உக்கிரபாண்டியனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரை முருகனின் திருஅவதாரங்களாகக் கருதுகிறார்கள்.

'வேலை வணங்குவதே வேலை' என்றிருப்போர் வேதனை தீரும். நாதன் முருகன் நல்லருள் தந்து சோதனை நீக்கிச் சுகம் பல தருவான். ஆறுமுகமும் பன்னிருகரமும் கொண்டு, சேவல்கொடியேந்தி மயில்வாகனத்தில், வள்ளி தெய்வானையோடு, வேல்முருகனாகக் காட்சியளிக்கும் எம்பெருமான் முருகனின் திருவுருவத்தை மனதிலிருத்தி, முருகப்பெருமானின் திருவடிகளைப் பணிவோம்.

முருகன் திருவடிகளே சரணம்.

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே (பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'தௌத்தியம்' (திருவடித் துதி)).