நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 15 செப்டம்பர், 2012

SRI SWARNA GOWRI POOJA,(18/9/2012), PART 1..... ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி விரத பூஜை, பகுதி 1.

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ர்யம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!
எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடலே இவ்வுலகம். பரந்த இப்பிரபஞ்ச வெளியெங்கும் இயங்கும் இயக்கமெல்லாம் அவன் தன் தேவியுடன் நிகழ்த்தும் அருளாடலே. சிவனும் சக்தியும் இணைந்து எப்போதும் அருளாட்சி புரிவது போலவே, இவ்வுலகில் ஆணும் பெண்ணும் இணைந்து, இயைந்து, இல்லறம் என்ற நல்லறம் பேணுமாறு செய்வதே திருமணம் என்ற உயரிய சடங்கின் நோக்கம். 

திருமணம் என்பது வெறும் ஊரும் உறவும் கூடி நடத்தும் சம்பிரதாயமோ, திருவிழாவோ அல்ல. அது இரு குடும்பங்களின் கூட்டுறவு. வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இரு ஆத்மாக்களின் சங்கமம். கூடி வாழ்தலில் காணும் இன்பம் கோடி பெறும் என்பதை உணர்ந்து, வருங்கால சந்ததிகளுக்கு தம் வாழ்வின் மூலம் உணர்த்துவது என்பது எளிதான காரியமில்லை. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்வாங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் செய்து காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். இறையருளின்றி எதுவும் நடக்காது .தம்பதிகளுக்குள் ஒற்றுமை என்றென்றும் இருக்க, குடும்பத்தின் ஆணி வேரான பெண்கள் ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது நமது சம்பிரதாயங்களில் முக்கியமான இடம் வகிப்பதாகும். 

திருமண தினத்தில், மணமகள் மணமேடைக்குச் செல்லும் முன்பாக, கௌரிதேவியைப் பூஜிப்பது சம்பிரதாயம். கணவனோடு இணைந்து வெற்றிகரமாக இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி, தேவியைப் பூஜித்த பின்பே திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது. 

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திருஅவதாரமான ஸ்ரீ ருக்மணி தேவியே, தன் மணநாளில், தனக்கு கணவனாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவே வரவேண்டுமென தேவியைத்தொழுது தன் எண்ணம் ஈடேறப் பெற்றாள்.

வெண்மை நிறமே 'கௌவர்ணம்' எனப்படுகிறது. அத்தகைய வெண்மை நிறத்தவளாக இருப்பதால் தேவி 'கௌரி' எனப்படுகிறாள். மலை(கிரி)மகள் என்று அறியப்படுவதாலும், தேவியை கௌரி என அழைக்கிறார்கள்.

ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது அனைத்து தேவதைகளையும் பூஜிப்பதற்குச் சமம் என்கின்றன புராணங்கள். நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, 108 வடிவங்களில் கௌரி தேவியை வடிவமைத்துப் பூஜிக்க வழி செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதையும் சற்று எளிமைப்படுத்தி, ஷோடச கௌரியாக, 16 வடிவங்களில் நாம் பூஜிக்கத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கௌரி ரூபத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த தினங்கள் பூஜிக்க ஏற்றது.

தக்ஷனின் மகளாக, தாக்ஷாயணி என்ற திருநாமத்துடன் அவதரித்த தேவி, தக்ஷ யாகத்தின் அக்னி குண்டத்தில், தன் தந்தை செய்த சிவ அபராதத்தை சகிக்காது தன் உயிரைத் தியாகம் செய்தாள். தன் மறுபிறப்பில் , ஹிமவானின் தவத்தின் பலனாக, அவருக்குப் புத்திரியாக திருஅவதாரம் செய்து அருளினாள்.

அன்னது ஓர் தடத்து இடை அசலம் அன்னவன் 
மன்னிய கௌரி தன் மகண்மை ஆகவும் 
தன்னிகர் இலா வரன் தனக்கு நல்கவும் 
முன் உற வரும் தவம் முயன்று வைகினான். (ஸ்ரீ கந்த புராணம், பார்ப்பதிப்படலம்).

இவ்வாறு அவதரித்த தேவி, இறைவனை மணாளனாக அடையும் பொருட்டு, கடும் தவம் புரிந்தாள். ஒவ்வொரு வித மரத்தடியிலும் ஒரு குறிப்பிட்ட காலம் அமர்ந்து தவம் செய்தாள்.ஆகவே ஒவ்வொரு கௌரி விரதங்களையும் அந்தந்த குறிப்பிட்ட மரத்தடியில் அமர்ந்து செய்வது சிறப்பு. ஆனால் இக்காலத்தில் அவ்வாறு இயலாது. ஆகவே, அந்தந்த மரக் கிளைகளை தருவித்து, கௌரிதேவியின் பிரதிமையுடன் சேர்த்து பூஜிக்கலாம். 
ஸ்ரீ கீர்த்தி கௌரி, ஸ்ரீ பல(பலால) கௌரி, ஸ்ரீ ஹரிதாளிகா(விபத்தார) கௌரி, ஸ்ரீ கஜ கௌரி, ஸ்ரீ ஞான கௌரி, ஸ்ரீ மாஷா கௌரி, ஸ்ரீ சாம்ராஜ்ய மஹா கௌரி, ஸ்ரீ சம்பத் கௌரி என ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் கௌரி விரதங்கள் எண்ணற்றவை. அவரவருக்கு வேண்டிய பலனைப் பொறுத்தும் அவரவர் குடும்ப வழக்கங்களைப் பொறுத்தும், கௌரி விரதங்களை அனுசரிக்கலாம்.

கிட்டத்தட்ட, மாதத்திற்கு ஒன்றாக குறைந்து, 12 கௌரி விரத பூஜைகள் ஒரு வருடத்தில் கொண்டாடப்படுகின்றன. கௌரி விரத பூஜைகளில் பிரதானமாக அறியப்படுவது தீபாவளி அமாவாசையன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதமும் விநாயக சதுர்த்திக்கு முன் தினம் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரதமும் ஆகும்.

கௌரிதேவியாம் பார்வதி தேவி, தவமிருந்து சிவனாரின் உடலில் சரிபாதியைத் தனக்காக‌ப் பெற்ற தினம் கேதார கௌரி விரத தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம்,  இந்த ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரத பூஜையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை, பிரளய காலத்தின் முடிவில், உலகெங்கும் சூழ்ந்திருந்த அலைகடலில் ஒரு ஸ்வர்ண லிங்கம் தோன்றியது. அதில் ஈசனை தேவர்கள் யாவரும் பூஜிக்க, அதிலிருந்து, பொன்மயமான சிவனாரும் உமையம்மையும் தோன்றி அருள் புரிந்தனர். இது நிகழ்ந்த நாள், ஆவணி மாதம் வளர்பிறை திருதியை நன்னாளாகும். ஆகவே, அன்று ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும். 


ஸ்வர்ண கௌரி விரத மஹிமை:
இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.

ஒரு முறை, ஸ்கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார். 

முன்னொரு காலத்தில், ஸரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.

ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.

அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.

முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.

இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.

முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே,  அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள்.ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருக்க ஒட்டாது விரட்டினார்கள்.

பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள். 

ராணியானவள், எந்த வேளையிலும் கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்.

அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.

எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.
இக பர நலன்களை அடைந்து வளமாக வாழ்வர்.


விரதம் அனுஷ்டிக்கும் முறையைப் பற்றி நாம் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள்  நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..