நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

SRI UMA MAHESWARA VIRATHAM..(30/9/2012)....ஸ்ரீ உமா மஹேஸ்வர‌ விரதம்.

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.  
(தாயுமானவ சுவாமிகள்,திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்)
உமையும் உமையொரு பாகனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னருள் புரிகிறார்கள். சிவனாரின் மகிமையைப் போற்றி, அவர் அருள் பெற அரிய விரதங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, புரட்டாசி, பௌர்ணமி தினத்தில் வரும் உமாமகேச்வர விரதம். அம்மையும் அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து, காத்து அருள்சுரந்தருளி, இம்மைக்கும் மறுமைக்கும் தோன்றாத் துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தைக் கடைபிடித்து வேண்டுவன அடையலாம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

PART 2, ANANTHA VIRATHAM...(28/9/2002), அனந்த விரதம், பகுதி 2.



வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் 
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் 
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று 
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
(பெரியாழ்வார் திருமொழி, முதல் திருமொழி, கதிராயிரம்)

சென்ற பதிவின் தொடர்ச்சி...........

கௌண்டின்யர், தம் தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி விழுந்து வணங்க, பகவானும், மகிழ்ந்து அவருக்கு அளப்பரிய செல்வம், தர்ம புத்தி, வைகுண்ட ப்ராப்தி ஆகிய மூன்று வரங்களையும் அருளினார். 

புதன், 26 செப்டம்பர், 2012

ANANTHA VIRATHAM , PART 1......(28/9/2012), அனந்த விரதம், பகுதி 1


அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்கதொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது. இதன் மகிமைகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, பாண்டவர்களுக்கு கூறி அருளியிருக்கிறார். 

வியாழன், 20 செப்டம்பர், 2012

RISHI PANCHAMI VIRATHAM (20/9/2012)......ரிஷி பஞ்சமி விரதம்


'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.

நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது திண்ணம். ரிஷிகள் அநேகம் இருந்தாலும் சப்த ரிஷிகள், ரிஷிகளில் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.இவர்கள், காசியில், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி  மண்டலமாகக் கொலுவிருக்கிறார்கள்.வானமண்டலத்தில் சனிபகவான் உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், இரவில், காசி விஸ்வநாதரின் கருவறையில் ஏழு பண்டாக்கள்(பூஜகர்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர். இது 'சப்த ரிஷி பூஜை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் ஆலயத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை ஆகும் இது.

துருவ நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக, வான மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுவது சப்த ரிஷி மண்டலமே, இதன் சுழற்சியை வைத்தே, இரவில் நேரம் கணித்து வந்தனர் நமது முன்னோர்.

திருமணங்களில், மிக முக்கியமான சடங்கு, 'அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது'. அம்மிக் கல், வீடுகளில் அக்காலத்தில் சமையலுக்கு உதவும் உபகரணங்களில் ஒன்று. அதை, திருமண வேளையில், மணப்பெண், மிதிப்பதன் பொருள், எத்தகைய சோதனைகள் இல்வாழ்வில் ஏற்பட்டாலும், பெண்ணானவள், மன உறுதியோடு அதை எதிர்கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்திற்கு புதிதாக வருகிற பெண்ணின் கையிலேயே, குடும்ப கௌரவம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த கௌரவத்தை, அம்மிக்கல் எப்படி, வளையாது நெளியாது நேராக இருக்கிறதோ, அதைப்போல், வளையாமல் காக்க வேணும் என்பதும் இதன் பொருள்.

அந்த வேளையில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஐதீகம். அருந்ததி, வசிஷ்டரின் தர்மபத்தினி. சப்த ரிஷி மண்டலத்தில், வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகிலேயே, மிகச் சிறிய அளவில் அருந்ததி நட்சத்திரத்தைக் காணலாம். அது போல் தம்பதிகள் பிரியாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். உண்மையில் அருந்ததி ஒரு இரட்டை நட்சத்திரம். பார்க்க ஒன்று போல் தெரியும். அதைப் போல் தம்பதிகள் உடலால் வேறு பட்டவர்களாயினும் உள்ளத்தால் ஒன்றாக இருக்க வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரதத்துக்கான பூஜா விதிகளில், சப்த ரிஷிகளின் பெயர்கள், ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி என்றே குறிப்பிடப்படுகின்றன. வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், ரிஷிகளின் மகத்துவம் ஒன்றே.

வசிஷ்ட மஹரிஷியும் அருந்ததி தேவியும்
ரிஷி பஞ்சமி விரதம் பெண்களால் செய்யப்படுவது. மிக முற்காலத்தில், ஏற்பட்ட ஆசார விதிகளின் நோக்கம் சுகாதாரம் பேணி நம் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதேயாகும். மாத விலக்கு நாட்களில், பெண்களின் உடல் இயல்பாகவே பலவீனப்படுவதால், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.  அந்நாட்களில் இப்போது இருப்பதைப் போல் நவீன வசதிகள் ஏதும் இல்லை. எனவே, அந்த நாட்களில், மற்றவரோடு கலந்து  அவர்கள் இருக்கும் போது, அவர்கள் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதற்கும், அது அவர்கள் மூலமாக மற்றவருக்குப் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அந்த நாட்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி, வேலை எதையும் செய்ய விடாது செய்திருந்தனர் நமது முன்னோர்.

தவறிப்போய் அவர்களால், இவ்விதிகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமாயின், அதை நிவர்த்தித்துக் கொள்ளவே இந்த விரதம் செய்யப்படுகிறது. 'ரிஷி பஞ்சமி' விரதத்தின் மூலம் நாம் வேண்டும் வரங்களைப் பெற்று மகிழ முடியுமாயினும், மிக முக்கியமாக, இந்தக் காரணத்திற்காகவும், பெண்களின் சௌபாக்கியம் அதிகரிக்க வேண்டியும் இந்த விரதம் செய்யப்படுகிறது. மிக வயது முதிர்ந்த பெண்களே, இந்த விரதத்தைச் செய்வது வழக்கம்.



இந்த விரத பூஜைக்கு முன்பாக, 'யமுனா பூஜையைச்' செய்ய வேண்டும். இது பஞ்சமியன்று மதியம் செய்யப்படுவது. இதைச் செய்வதற்கு முன்பாக, வேதம் ஓதிய வைதீகர்களை வைத்து முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின் வஸ்திர(புடவை) தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை சுமங்கலிகள் எடுத்தால் சிவப்பு நிறப்புடவை தானம் செய்வார்கள். சுமங்கலிகள் அல்லாதார் எடுத்தால் ஒன்பது கஜ வெள்ளைப் புடவையில், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து தெளித்து விட்டுத் தானம் செய்வார்கள். 

அதன் பின்,'நாயுருவி' செடியின், 108 குச்சிகளால் பல்துலக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பல்துலக்கிய பிறகும் குளிப்பது அவசியம்.

பல் துலக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஆயுர் பலம் யசோ' வர்ச்ச: ப்ரஜா: பசு' வஸூநி ச|
ப்ரஹ்ம ப்ரஜாம் ச மேதாஞ்ச தன்நோ தேஹி வனஸ்பதே||

பிறகு,சிவப்பு நிற ஆடை அணிந்து, பஞ்ச கவ்யம் (பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமயம்  இவை சேர்ந்தது தான் பஞ்ச கவ்யம். இதில் சிறிதளவு எடுத்து, மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளும் போது நமது உடலும் ஆன்மாவும் தூய்மை அடைகின்றன.) சாப்பிடவேண்டும். பிறகு முறைப்படி விக்னேஸ்வர பூஜையைச் செய்து, அரிசிமாவில் எட்டு இதழ் கமலத்தை வரைந்து, அதன் மேல் கலசத்தை வைத்து நெய் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசத்தில் யமுனை நதியின் நீரையே வைத்துப் பூஜிப்பது சிறந்தது.

மாலையில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும். விரதம் எடுத்து அன்றே முடிக்க வேண்டுமாயின், காலையிலேயே யமுனா பூஜை முடிந்த பின், விரத பூஜையைச் சேர்த்துச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. சாஸ்திரப்படி, எட்டு வருடங்கள் (ஒவ்வொரு வருடமும் ரிஷி பஞ்சமி தினத்தன்று)  பூஜை செய்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் இப்போது, விரதம் எடுத்த அன்றே முடிப்பது வழக்கத்திலிருக்கிறது. சிலர் எட்டு வருடங்களில் ஏதாவது ஒரு வருடத்தில் முடித்து விடுகிறார்கள்.

யமுனா பூஜைக்கு உபயோகித்த கலசத்தை வைத்தே ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்யலாம். அதன் பின், எட்டு முறங்களில் வாயனங்கள் வைத்து தானம் செய்ய வேண்டும்.
வாயனங்கள்:
அதிரசம், வடை, எள் உருண்டை, இட்லி, கொழுக்கட்டை, இயன்ற பழங்கள், வெற்றிலை பாக்கு தாம்பூலம், தேங்காய், தட்சணை முதலியவற்றை வைக்க வேண்டும்.

ஏழு முறங்களில் இவ்வாறு வைத்து விட்டு, எட்டாவது முறத்தில், வாயனங்களோடு,   ஒரு பெட்டியில், ரவிக்கைத் துண்டு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவற்றையும் வைக்க வேண்டும். வைக்கும் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருப்பது நல்லது. ஏழு முறங்களும் சப்த ரிஷிகளை உத்தேசித்தும் எட்டாவது முறம்(வாயனங்களோடு பெட்டியும் இருப்பது) அருந்ததியை உத்தேசித்தும் தானம் செய்யப்படுகிறது.

முறத்தில் வைக்கும்  பொருட்கள்  ஒவ்வொரு ஊர் வழக்கத்தை ஒட்டி மாறுபடும். மதுரைப் பகுதியில், எட்டு விதப் பழங்கள், எட்டு வித இனிப்புகள் ஆகியவை வடை, எள் உருண்டையோடு வைக்க வேண்டும்.மற்ற பகுதிகளில் மேற்சொன்ன விதத்தில் வைக்கிறார்கள். எட்டு வருடங்கள் பூஜை செய்வதானால், முதல் வருடம் அதிரசம் கட்டாயம் செய்ய வேண்டும். மற்ற வருடங்கள் சௌகரியப்பட்டதை செய்யலாம்.

விரதம் எடுத்தவர்கள் பால், பழங்கள் ஆகியவற்றையே அன்றைய தினம் உணவாக உட்கொள்ள வேண்டும்.

விரதத்தை முடிப்பதானால்:
ரிஷி பஞ்சமி தினத்தன்று, விரதத்தை முடிப்பதாக இருந்தால், சங்கல்ப ஸ்நானத்திற்குப் பின், விரதம் எடுத்து தானங்கள் செய்த பிறகு கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இதற்கு, எட்டு கலசங்கள் தேவை. அதில் வைக்க, வெள்ளித் தகட்டாலான‌, பிரதிமைகள் எட்டு, வஸ்திர‌ங்கள் எட்டு, தானம் செய்வதற்குத் தேவையானவை ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரதான கலசத்திற்கு மட்டும் ஒரு வேஷ்டியும் துண்டும் கட்டி, மற்றவற்றிற்கு சிறிய வஸ்திரங்களைக் கட்டலாம். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம். சௌகரியப்பட்டவர்கள், கலசத்திற்குள், தங்கள் வசதிக்கேற்றவாறு தட்சணைகள் போடலாம்.

தானம் செய்ய வேண்டியவை:
இந்த விரதம் மிகச் சிறப்பு வாய்ந்த பெரிய விரதமாகும். ஆகவே, இதற்கு பத்து வித(தச) தானங்கள் செய்யவேண்டும். தானங்கள் செய்வதன் நோக்கம், அறிந்தும் அறியாமலும், நம் வாழ்விலும், விரதங்களைக் கைக்கொள்ளும் முறையிலும், நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே.

1.கோதானம் (பசு அல்லது தேங்காய்),
2.பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை.) சக்தியுள்ளவர்கள், பசு, நிலம் முதலியவை கொடுக்கலாம். இல்லாதவர்கள், தேங்காய் அல்லது சந்தனக் கட்டையைச் சற்று கூடுதலான தக்ஷிணையுடன் தானம் செய்யலாம். நமது சாஸ்திர‌ விதிகளில், அவரவர் வசதியைப் பொறுத்து தானம் செய்ய வழி செய்யப்பட்டுள்ள‌து.  பலன் வேண்டும் என்பதற்காக, ந‌ம் சக்திக்கு மீறிச் செய்வது, கடன் வாங்குவது போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு வழி வகுக்கும்.  நமது சாஸ்திரங்களுக்கு இதில் உடன்பாடே இல்லை.
3. திலதானம்(எள்),
4.ஹிரண்யம்(பொன்னாலான நாணயம்),
5.வெள்ளி நாணயம்,
6.நெய்,
7.வஸ்திரம்,
8.நெல்,
9.வெல்லம்,
10.உப்பு ஆகியன.

ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். இயலாதவர்கள் தொன்னையில் வைத்துக் கொடுக்கலாம். இவ்விதம் தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை,வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் ஆகியன.

விரத தினத்துக்கு மறு நாள் தான் தானங்கள் செய்வது வழக்கம். அன்று தம்பதி பூஜையும் விசேஷமாகச் செய்வது வழக்கம். 

தம்பதி பூஜைக்குத் தேவையானவை:
புடவை, ரவிக்கைத் துணி, வேஷ்டி, அங்கவஸ்திரம், திருமாங்கல்யம், மெட்டி, இவை வைக்கத் தட்டு அல்லது ட்ரேக்கள் ஆகியவை தேவை. தாம்பாளமும் வாங்கலாம். புடவை வேஷ்டி, அவரவர் வசதிப்படி, கறுப்பு நூல் கலக்காததாக,  பட்டுப் புடவை, வேஷ்டியோ (கறுப்பு, அல்லது கருநீலக்கரை வேஷ்டியில் கறுப்பு நூல் கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு), அல்லது நூல் புடவை வேஷ்டியோ வாங்கலாம். இரண்டு மாலைகளும் வாங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்த பிறகு, கலசங்களுக்கு, நான்கு கால பூஜைகள் செய்ய வேண்டும். 

சப்த ரிஷிகளைப் பூஜிக்க உதவும் 'சப்தரிஷி அஷ்டோத்திர'த்திற்கு இங்கு சொடுக்கவும்.

ஒவ்வொரு கால பூஜைக்கும், தனித்தனியாக, பிரத்தியேகமான நிவேதனங்கள் செய்ய வேண்டுவது அவசியம். வடை, பாயசம், மஹா நைவேத்தியம், இட்லி, கொழுக்கட்டை போல் வசதிப்படும் எதையும்  நிவேதனமாக வைக்கலாம்.

இந்த பூஜை நிவேதனங்களை ஒரு தட்டில் வைத்து, நான்கு வைதீகர்களுக்கு தானம் செய்வது நல்லது. மேலும், நான்கு கால பூஜைகள் நிறைவடைந்த பிறகு, அன்றைய தினம் இரவில், எட்டு கலசங்களையும் தானமாகப் பெறவிருக்கும் வைதீகர்களுக்கு, உணவு(பலகாரம்) அளிப்பது முக்கியம்.

பூஜைகள் முடிந்ததும், மறு நாள் புனர் பூஜை செய்ய வேண்டும்.

புனர் பூஜை:
மறு நாள், சுருக்கமாகக் கலசங்களுக்கு தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதித்து புனர் பூஜை செய்த பின்,  விரதம் முடிப்போர், கலசங்களில் இருக்கும் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பின் கலசங்களைத் தானம் செய்ய வேண்டும். பின் தச தானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

தம்பதி பூஜைக்கு அமர்கிறவர்கள், வயது முதிர்ந்த தம்பதிகளாக இருந்தால் விசேஷம். அவர்களை பார்வதி பரமேஸ்வரனாகப் பாவித்து, மிகுந்த பக்தியுடன், உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். அவர்கள், மாலை மாற்றி, திருமாங்கல்ய தாரணம் செய்த பின், ஆரத்தி எடுத்து, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும்.

அதன் பின், பூஜையில் பங்கு கொண்டவர்கள், வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கிய பின், விரதம் எடுத்தவர்கள்  சாப்பிடலாம். பலகாரமாக (டிபன்) சாப்பிடுவது வழக்கம்.

பொதுவாக விரதங்களின் நோக்கம், எவ்விதத்திலாவது இறைவழிபாட்டில்  மனதை ஈடுபடுத்தி, வாழ்வின் நோக்கம் ஈடேறப் பெறுவதேயாகும். தானங்கள் செய்யும் போது வசதிக்கேற்றவாறு கொடுக்கும் மனப்பான்மை வளருகிறது. தானங்களில் சிறந்ததான அன்ன தானம் செய்யும் பொழுது நமது பாவங்கள் மறைகின்றன. லௌகீகமாகப் பார்க்கும் பொழுது, நம் உறவும் நட்பும் விரத பூஜை தினத்தில் நம் வீட்டுக்கு வந்து, நம்மோடு சேர்ந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் போது, அவர்களுக்கும் இறையருள் கிடைக்கப்பெற்று, அதன் பலனாக, அவர்கள் வாழ்வில் வளம் சேருகிறது. நம் உறவுகளும் பலமடைகின்றன.

இந்த விரதம் இப்போது நடைமுறையில் அருகி வருகிறது. ஆனாலும் இவ்விரதம் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய  வேண்டுமெனக் கருதியே இதைப் பதிவிட்டேன்.

இவ்விரத பூஜையைச் செய்ய இயலாதோரும், சப்தரிஷிகளை இந்நன்னாளில் வேண்டி வணங்கி நலம் பல பெறலாம். 

வெற்றி பெறுவோம்!!!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

PART 3, VINAYAGA CHATHURTHI POOJA (19/9/2012)....விநாயக சதுர்த்தி பூஜை....

சென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி........

விநாயகருக்குரிய வழிபாடுகளில் முதன்மையானது 'விநாயகசதுர்த்தி' ஆகும். பாத்ரபத (ஆவணி) மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியில் கொண்டாடப்படும் இது "ஆத்ம வைபவம்" ன்று புகழப்படுகிறது. இது நம் ஆத்மாவுக்கு நாமே செய்து கொள்ளும் ஆராதனை  அதாவது நம் அனைவருள்ளும் ஆத்மஸ்வரூபமாகிய விநாயகரே உறைகிறார். ஆகவே அவரைப் பூஜிப்பது, நம்முடைய ஆத்மாவுக்கு நாமே நிகழ்த்திக் கொள்ளும் பூஜையாகும்.


விநாயக சதுர்த்தி விநாயகப் பெருமானின் திரு அவதார தினமாகக் கருதப்படுகிறது. முதலும் முடிவும் இல்லா முழு முதல் கடவுளுக்கு அவதார தினமென்று நாம் கொண்டாடுவது நமது நன்மையையும், உலக நன்மையையும் வேண்டியே. குறிப்பாக, கண்ணன், விநாயகர் போன்ற தெய்வங்களை, குழந்தை வடிவினராகப் பாவித்துப் பூஜிக்கும் போது, நம் மனதுள் பொங்கும் பரவசம் வார்த்தைகளால் விவரித்தற்கரியது. தொடர்ந்த ஒரே  மாதிரியான வேலைகளின் நடுவில் வரும் இம்மாதிரிப் பண்டிகைகள், உறவுகளையும் மனதையும் ஒரு சேர புதுப்பிக்கும் அற்புத மருந்துகள்.

விநாயக சதுர்த்தி விரதம் மிக மகத்துவம் வாய்ந்தது. அன்னை பார்வதி தேவியே, விநாயகரை சதுர்த்தி தினத்தில் உபாசித்து நாம் பிறவிப் பயன் எய்தும் வழியைக் காட்டியிருக்கிறார். த‌க்ஷனின் மகளாக, சதிதேவியென்ற திருநாமத்துடன், பிறந்து வளர்ந்த உமாதேவி, சிவநிந்தனையைப் பொறுக்க மாட்டாது ,தக்ஷனின் யாகக் குண்டத்தில், தம் தேகத்தை தியாகம் செய்தார். மறு பிறவியில் இமவானின் புத்திரியாகப் பிறந்து வளரும் போது, கங்கையை மணக்கும் முன்பாக, சிவனார் தன்னை மணக்க வேண்டுமென்ற விருப்பத்துடன், தம் கருத்தை தம் தந்தையான இமவானுக்கு உரைத்தார். அவரும், சதுர்த்தி விரதத்தைக் கைக்கொண்டால் விருப்பம் நிறைவேறும் எனக் கூற, உமாதேவியாரும், இவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து, தம் எண்ணம் ஈடேறப் பெற்றார்.

எண்ணற்றோர் இந்தச் சதுர்த்தி விரதத்தைக் கைக்கொண்டு, பிறவாப் பெருநிலை அடைந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரது சரிதத்தை சுருக்கமாகக் காணலாம்.

நள மஹாராஜா:
நள மஹாராஜா, தமயந்தியை மணந்து, பத்மாஸ்தன் என்ற நல்லதொரு அமைச்சன் துணையுடன், நிடத நாட்டை சிறப்புற ஆண்டு வந்தார். அப்போது அந்நாட்டுக்கு எழுந்தருளிய கௌதம முனிவரைக் கண்டு பணிந்து, இம்மைப்பயன் எய்துவதற்கு வழி செய்யும் நல்லதொரு விரதத்தை எடுத்துரைக்கப் பிரார்த்தித்தார். கௌதம முனிவர்,"முற்பிறவியில் நீ கௌட தேசத்திற்கு அரசனாக இருந்தாய். நீ சத்ருக்களை ஜெயிக்கச் சென்றபோது, ஒரு கானகத்தில் தவம் புரிந்து வந்த கௌசிக முனிவரைக் கண்டு வணங்கி, இவ்விதமாகவே நல்ல தொரு விரதத்தைக் கூற பிரார்த்தித்தாய். அவர் உனக்கு உபதேசித்ததே 'விநாயக சதுர்த்தி விரதம்'. நீ அதைப் பக்தியுடன் அனுசரித்ததன் பலனாக, இப்பிறவியிலும் அரசனாகப் பிறந்து இருக்கிறாய்.ஆகவே, அந்த விரதத்தை இப்போதும் அனுசரித்து வர, பிறவாநிலையை அடையலாம்" என்று கூறி விரதத்தை அனுசரிக்கும் முறையை உபதேசித்தார். வருடந்தோறும் சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து நள மஹாராஜாவும் இறுதியில் விநாயகப் பெருமான் திருவடியடைந்தார்.
மன்மதன்:
மன்மதன், சிவனாரின் நெற்றிக் கண்ணினால் எரிக்கப்பட்டு சாம்பலானபின், இரதிதேவியின் வேண்டுதலுக்கிணங்கி, சிவனார், அவனை உயிர்ப்பித்து, "இரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவாய்" என்று வரமருள, அவனோ, தான் முன் போல் அனைவரின் கண்களுக்கும் தெரியும் மார்க்கத்தைக் கூறியருள வேண்டிப் பிரார்த்தித்தான். சிவனார், அவனை, விநாயகப் பெருமானைச் சரணடையும்படி கூறி, ஏகாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மன்மதனும் உடனே, மயூரத் தலத்தை அடைந்து ஆயிரம் வருடம் அந்த மந்திரத்தை ஜபித்து வர, விநாயகரும் அவன் முன் பிரசன்னமாகி, ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கும் பொழுது உன் எண்ணம் நிறைவேறும் என(மன்மதனே,பிரத்யும்னன் என்ற பெயரில் ஸ்ரீ கிருஷ்ணரின்  மைந்தனாக அவதரித்தார்) வரமருள, மன்மதனும், அகமகிழ்ந்து, அத்தலத்தில் பளிங்கினாலான விநாயக விக்கிரகத்தை 'மகோற்கட விநாயாகர்' என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
த‌க்ஷப்பிரஜாபதி:
த‌க்ஷன், சிவனாரை மதியாது யாகம் தொடங்கி, அந்த யாகம், சிவனாரின் நெற்றிக் கண்ணில் உதித்த வீரபத்திர மூர்த்தியால் அழிந்தது முதல் பல துன்பங்களை சிவநிந்தனையின் பலனாக, தொடர்ச்சியாக அனுபவித்து வந்தார். அவர், இந்த துன்பம் நீங்க வேண்டி, முத்கல முனிவரைச் சரணடைந்து, அவர் கூறிய விநாயக மகத்துவத்தை சிரத்தையுடன் கேட்டுப் பணிந்து, சதுர்த்தி விரதத்தை கைக்கொண்டதன் பலனாக, சிவனாரின் சினம் நீங்கப் பெற்று, இறுதியில் சாரூப பதத்தை அடைந்தார்.

ஆகவே, விநாயகரை, விநாயகசதுர்த்தி தினத்தில் முறையுடன் பூஜிக்க நாம் வேண்டும் வரங்களைப் பெறலாம்.

பூஜைக்குத் தேவையானவை:
விநாயகர் பிரதிமை. களிமண்ணால் செய்த பிரதிமை பூஜைக்கு மிக உகந்தது. வசிஷ்டரின் பேரரான பராசரர், தம் சிறுவயதில், களிமண்ணால் செய்த பிரதிமையில் விநாயகரைப் பூஜிக்க, அதனால் அகமகிழ்ந்த விநாயகப்பெருமான், களிமண்ணால் செய்த பிரதிமையில் தன்னைப் பூஜிப்பவருக்கு வேண்டும் வரங்களைத் தருவதாக வரமளித்தார். மேலும், விநாயகரைப் பூஜித்த பின், அந்தப் பிரதிமையை நீர் நிலைகளில் விடுவது வழக்கம். களிமண் பிரதிமை, நீர் நிலைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நீர் வளம் அதிகரிக்க விநாயகரை வணங்குவது மிக முக்கியம். ஆற்றங்கரையோரம், அரசமர நிழலில் விநாயகரை வணங்குவது இதனால் தான். கிணற்றில், நீர் இறைக்கும் அளவுகளை, 'இரண்டு பிள்ளையார் இறைக்கும், மூன்று பிள்ளையார் இறைக்கும்' என்று சொல்வது வழக்கம்.

பொதுவாக, பூஜை செய்பவரது கட்டை விரல் அளவைப் போல், விக்கிரகம் பன்னிரண்டு மடங்கு அளவு இருக்க வேண்டுமென்பது சாஸ்திரம். 

மற்ற பூஜைகளைப் போலவே, மஞ்சள், குங்குமம், சந்தனம் என எல்லாமும் தேவை. அருகம்புல், எருக்க மாலை, 21 வகை புஷ்பங்கள், பத்ரங்கள்(இலைகள்) ஆகியவையும் தேவை.

மழை, வெயில், என மாறி மாறி வரும் கால கட்டத்தில் அமையும் இந்தப் பண்டிகையின் போது, மற்ற பூஜைகளிலிருந்து வேறுபட்ட வகையில், ஏக த்விம்சதி பத்ர (மூலிகைக்குணம் கொண்ட இலைகள்) பூஜை, ஏக த்விம்சதி புஷ்ப (மலர்) பூஜை, ஏக த்விம்சதி தூர்வாயுக்ம (இரண்டிரண்டு அருகம்புல்) பூஜை முதலிய பூஜைகள் கட்டாயம்.

 "ஏக த்விம்சதி" என்றால் '21' என்று பொருள். மருத்துவகுணம் கொண்ட 21 வகையான மூலிகை இலைகள், மற்றும் அருகம்புல்லால் பூஜை செய்யும் போது அவற்றின் மணம் நம் நாசியில் படுவதால் இயற்கையாகவே, அந்தத் தட்பவெப்ப நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.
பிள்ளையாருக்குச் சாற்ற சிறு துண்டு, பூணூல், கஜவஸ்திரம் ஆகியவற்றையும் தயார் செய்து கொள்ளவும். பிள்ளையார் குடை கிடைக்கும் இடத்தில் அதையும் பயன்படுத்தலாம். 
நிவேதனங்கள்:
தேங்காய், உளுந்து, எள், மோதகம், உருண்டை ஆகிய ஐந்து விதக் கொழுக்கட்டைகளும், பச்சரிசி இட்லி, உளுந்து வடை, பாயஸம், மஹா நைவேத்யம்,(பச்சரிசி சாதத்தில், சிறிது பருப்பு, நெய் சேர்த்தது)ஆகியவை முக்கியமான நிவேதனங்கள். சில வீடுகளில், அப்பம், எள்ளுருண்டை ஆகியவையும் செய்வார்கள். சுண்டல் செய்வதும் வழக்கம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், விளாம்பழம், நாவல்பழம், பேரிக்காய்,கொய்யாப்பழம் முதலியவையும் வைக்க வேண்டும். கிடைத்தவற்றை வைக்கலாம்.
மோதக அச்சில் மோதகம் செய்யும் முறை.





பூஜை அறையில், கோலம், வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு மேடையில் வாழை இலையை வைத்து அரிசியைப் பரப்பிக் கொள்ளவும். அதில் விநாயகரின் பிரதிமையை வைத்து,எருக்கம் மாலை, வஸ்திரம் முதலியவை சார்த்தி, அலங்கரித்துக் கொள்ளவும். கிழக்குப் பார்த்து பிரதிமை இருப்பது நல்லது. பூஜை செய்பவர் வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜை செய்யலாம்.

பொதுவாக, விநாயக சதுர்த்தி பூஜையை மத்தியானம் செய்வது உகந்தது. பூஜை முடியும் வரை உபவாசமிருப்பது சிறந்தது.

பூஜைக்குத் தேவையானவை, நிவேதனங்கள் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். நடுவில் எழுந்திருப்பது உசிதமல்ல.

விநாயக சதுர்த்தி பூஜை ஆரம்பிக்கும் முன்பாக, விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்கு விக்னமில்லாமல் பூஜை நிறைவேற, அவரையே வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.

விநாயகருக்கு ஷோடசோபசார பூஜை செய்து,  அங்க பூஜை, ஏக த்விம்சதி புஷ்ப பூஜை, ஏக த்விம்சதி பத்ர பூஜை , ஏக த்விம்சதி தூர்வாயுக்ம‌ (அருகம்புல்லால் ) பூஜை ஆகியவை செய்யவும். ஸ்ரீவிநாயகர் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சிக்கவும்.

ஸ்ரீ விநாயக அஷ்டோத்திர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.

பின்,தூப தீபம் காட்டி நிவேதனங்களைப் பக்தியுடன் சமர்ப்பிக்கவும். கற்பூரம் காட்டி, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து வணங்கவும். பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குற்றங்களுக்காக, மன்னிப்பு வேண்டி,(க்ஷமா பிரார்த்தனை) பூஜையின் பலனை ஸ்ரீ விநாயக மூர்த்திக்கே அர்ப்பணம் செய்யவும்.
பூஜை பிரசாதங்களை விநியோகிப்பது நல்லது. ஆலயங்களுக்குச் சென்று விநாயகரைத் தரிசித்து வரலாம்.

சாஸ்திரப்படி, விநாயகர் பிரதிமை, அடுத்த புரட்டாசி மாத சதுர்த்தி வரை பூஜையிலிருக்க வேண்டும். தினமும் ஆவாஹனம் ஒன்றைத் தவிர்த்து மூன்று காலமும் பூஜித்து நிவேதனங்களைச் செய்ய வேண்டும். பிறகே நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும். தற்போது பல்வேறு காரணங்களால் அதைச் செய்ய இயலாததால், மறு நாள் புனர் பூஜை செய்து பின் விஸர்ஜனம் செய்து விடுகிறோம்.

புனர் பூஜை:
மறுநாள், விநாயகரை ஏற்கெனவே ஆவாஹனம் செய்து வைத்திருப்பதால், அதைத் தவிர்த்து, மற்ற உபசார மந்திரங்களைக் கூறி, அர்ச்சித்து,  தூப தீபம் காட்டி, மஹா நைவேத்தியம், வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். பிறகு, விநாயகரை, யதாஸ்தானம் எழுந்தருளப் பிரார்த்தித்து பிரதிமையை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். பிறகு நீர் நிலைகளில் சேர்த்து விடலாம்.

விநாயகரை முறைப்படி பூஜித்து, வேண்டுவன யாவும் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!!

திங்கள், 17 செப்டம்பர், 2012

PART 2, VINAYAKA CHATHURTHI (19/9/2012)....வேழ முகத்து விநாயகனைத் தொழ......பகுதி 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...
மஹாராஷ்டிராவில், புனே நகரைச்சுற்றி எழுநூறு கி.மீ. தூரத்துக்குள்    விநாயகருக்கு, "அஷ்டவிநாயக க்ஷேத்திரங்கள்" இருக்கின்றன.  அவை,
  1. ஸ்ரீமயூரேஷ்வரர் = மோர்காம்
  2. ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் = தேவூர்
  3. ஸ்ரீசித்தி விநாயகர் = சித்த டேக்
  4. ஸ்ரீ மஹா கணபதி = ராஞ்சன் காவ்
  5. ஸ்ரீகிரிஜாத்மஜர்   = லேன்யாத்ரி மலை
  6. ஸ்ரீவிக்னேஸ்வரர் = ஓஜர்
  7. ஸ்ரீபல்லாலேஸ்வரர்   = பாலி
  8. ஸ்ரீ வரத விநாயகர் =மஹத்,  ஆகியவை. "அஷ்டவிநாயக க்ஷேத்திரங்களை"ப் பற்றி, ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள், 'தெய்வத்தின் குரலில்' அருளியிருப்பதை கீழே தந்திருக்கிறேன்.

"காணபத்யம் அதிகம் அநுஷ்டானத்திலிருந்த மஹாராஷ்டிராவில் 'அஷ்ட விநாயகர்'கள் என்ற எட்டுப் பிள்ளையார்களுக்கான எட்டு க்ஷேத்ரங்கள் இருக்கின்றன. அவர்களில் 'மயூரேசர்'என்ற பிள்ளையாருக்கும் அவர் இருக்கிற 'மோர்காம்'க்ஷேத்ரத்துக்கும் பிரஸித்தி ஜாஸ்தி. 'மோர்காம்'என்பது 'மயூரக்ராமம்'என்பதன் திரிபு. பிள்ளையாரைச் சுற்றி அவருடைய பரிவார தேவதைகள் இருக்க வேண்டிய க்ரமத்திலேயே மோர்காமைச் சுற்றிப் பரிவார தெய்வங்களின் கோயில்கள் இருக்கின்றன.

மயூரம் என்பது தமிழில் மயில் என்றும், வடக்கத்தி பாஷைகளில் மோர் என்றும் இருக்கிறது. ஸுப்ரம்மண்யர் தான் மயில் வாஹனர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். புராணங்களின்படியும் தந்த்ர சாஸ்திரங்களின்படியும், நாம் மூஷிகவாஹனராகவே நினைக்கிற பிள்ளையாருக்கும் மயில் வாஹனத்தோடு ஒரு அவஸரம் (ரூப பேதம்) உண்டு. அவர்தான் மயூரேசர்.

மயூரேச க்ஷேத்ரமான மஹாராஷ்டிர மோர்காமின் க்ஷேத்ர புராணத்தில் நம் தமிழ்நாட்டுத் திருவலஞ்சுழியை உசத்திச் சொல்லியிருக்கிறது! 'தசஷிணாவர்த்தம்'என்று இதற்கு அங்கே பெயர் கொடுத்திருக்கிறது. 'தக்ஷிண'-வல;'ஆவர்த்தம்'-சுழி. இந்த 'தக்ஷிணாவர்த்தம்'தான் பிள்ளையாருடைய ராஜதானி, அதாவது Capital என்று சொல்லியிருக்கிறது".

 


விநாயகருக்கு விருப்பமான நிவேதனம் மோதகம். இதை முதன்முதலில் செய்து நிவேதனம் செய்தவர் வசிஷ்டரின் பத்தினி அருந்ததிதேவி. மோதகத்தில், வெளியே வெண்ணிற மேல்மாவின் உள்ளே இனிப்பான பூரணம் நிறைந்திருப்பது போல், இவ்வுலகமனைத்திலும் பூரணனான விநாயகர் நிறைந்திருக்கிறார் என்பது தத்துவம்.

ஒரு சமயம் விநாயகர் அனலாசுரன் என்ற அசுரனை, அவனை அழிப்பதற்காக, விழுங்கிவிட்டார். அந்த வெப்பத்தைத் தணிக்க, தேவர்கள், விநாயகரின் ஆணைப்படி, அருகம்புல்லால் அவரை அர்ச்சிக்க, அவருள் இருந்த அனலாசுரன் அழிந்து போனான். ஆகவே, அருகம்புல் அவருக்குப் பிடித்தமானதாயிற்று. மனிதர்கள் எதற்கும் பயன்படுத்தாத எருக்கம்பூவையே அவர், மாலையாக‌ விரும்பி ஏற்கிறார்.

ஸ்ரீ விநாயகரின் அருளால் காரியங்கள் சித்தி பெற உதவும் காரிய சித்தி மாலைக்கு இங்கு சொடுக்கவும்.

ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, 'பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். ஆனாலும்,'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை உலகுக்கு உணர்த்த, விநாயக சதுர்த்தியன்று, சந்திரனைப் பார்த்தால் தீராத அபவாதம் ஏற்படும் என்று அருளினார். அது நீங்க, சங்கடஹரசதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பிக்க வேண்டும்.

விநாயகருக்குப் பிடித்தமான இலை வன்னி இலை. இதன் பெருமையை விநாயக புராணத்தில் விநாயகரே கூறுகிறார். "வீமன் என்ற கொள்ளையனும் ஒரு ராட்சதனும் சண்டையிட்டுக் கொண்டு வரும் வேளையில், வீமன் ஒரு வன்னிமரத்தின் மேல் ஏறிவிட்டான். அவனை இறக்க, ராட்சதன் அந்த மரத்தை பலம் கொண்ட மட்டும் உலுக்க, வீமன் கிளையை இறுகப் பிடித்துக் கொண்டான். அந்தப் போராட்டத்தில், மரத்தின் கீழிருந்த என் மேல் சில வன்னி இலைகள் உதிர்ந்தன. அது வன்னி இலைகளால் என்னை அர்ச்சித்த பலனைக் கொடுக்கவே, அவர்கள் எமலோகத்தில் அவர்கள் செய்த பாவச்செயல்களுக்கான தண்டனைக்காலம் முடிந்ததும் கருப்பஞ்சாற்றுக்கடலில் இருக்கும் என் வசிப்பிடமான ஆனந்தலோகம் வந்தடைந்தனர்" என்று கூறுகிறார்.
விநாயகப் பெருமானுக்கு சூரிய பகவானே குரு. ஆகவே கணபதிக்குரிய பூஜைகளை காலை நேரத்தில் செய்கிறோம்.

ஸூமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷோ! பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
என்னும் விநாயகரின் பதினாறு நாமாவளிகளை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் தீர்க்க முடியாத துன்பமோ வருத்தமோ வாராது.

மானிடர், தம் பிறவிப் பயன் எய்துவதற்கான உன்னத மார்க்கமாக விளங்குவது  யோக மார்க்கமேயாகும். நம் உடலில் உள்ள  ஆறு ஆதாரச் சக்கரங்களில், முதலாவதான, மூலாதாரத்தில் குடி கொண்டு விளங்குபவர் கணபதி.  'மூலாதார மூர்த்தி' என்று போற்றப்படுபவர்.

தமிழ் மூதாட்டியாம் ஔவை, தனது ஒப்புயர்வற்ற யோக நூலாம் விநாயகர் அகவலில் முழு முதல் கடவுளும், ஞான ஸ்வரூபமுமான விநாயகரின் புகழை அற்புதமாக விவரித்திருக்கிறார்.

ஔவை, மிகச் சிறந்த விநாயக உபாசகியாக விளங்கியவர். அவரின் திருவருளாலேயே, கவிபாடும் திறன் பெற்று, இளமை நீங்கி முதுமைக் கோலமடைந்து, நாடெங்கும் தனது தமிழ்த் திறத்தால் நல்லறிவு புகட்டியவர்.

ஒரு முறை, சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், திருக்கைலாயத்துக்குப் புறப்பட்ட போது,   ஔவையையும் அழைத்தனர். தான் பூஜை செய்து முடித்த பிறகே வர இயலும் என்றும், பூஜையை வேகப்படுத்த இயலாதென்றும் ஔவை கூறிவிட்டார். ஆகவே இருவரும் திருக்கயிலைக்கு புறப்பட்டனர். ஔவை நிதானமாகப்  பூஜித்து முடித்தார்.

 பூஜை முடிந்ததும்,  விநாயகர் அவர் முன் பிரசன்னமாகி, தனது துதிக்கையால், அநாயாசமாக ஔவையைத் தூக்கி, நாயன்மார்கள் இருவருக்கும் முன்னதாக திருக்கைலாயத்தில் சேர்த்தார். அப்போது ஔவை பாடித் துதித்ததே  'விநாயகர் அகவல்'.
 அளப்பரிய மகிமை வாய்ந்த 'விநாயகர் அகவலில்',

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பக் களிறே!!!

என்ற வரிகளில், "சொற்களால் விவரிக்க முடியாத, உச்சந்தலையில் அமைந்துள்ள  சஹஸ்ராரம் என்றும் துரியம் என்றும் போற்றப்படும் ஆயிரம் இதழ் கமலத்தில், அற்புதமான மெய்ஞ்ஞானமாய் விளங்கும் கற்பக மூர்த்தியே!!" என்று விநாயகரைப் போற்றுகிறார் ஔவை. மேலும்,

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

"ஒன்பது துவாரங்களை உடைய இந்த உடலில், ஐம்புலன்களையும் அடக்க வல்ல ஒரு மந்திரத்தை உபதேசித்து, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் குண்டலினி சக்தியை நிறுத்தி (அதாவது மேலேறுமாறு செய்து), ஞானிகளால் மட்டுமே அடைய வல்ல மௌன  நிலையை அருள வேண்டும்".

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி 

"இடைகலை, பிங்கலை எனப்படும் இருபக்க நாடிகளின் வழியாக உள்ளிழுத்து வெளிவிடப்படும் மூச்சுக் காற்றானது, சுழுமுனை எனப்படும் நடு நாடியின் வழியாக, கபாலத்தை அடையும் மார்க்கத்தைக் காட்டி, அக்னிக் கண்டம், சூரியக்கண்டம், சோம கண்டம் (மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அநாஹ‌தம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோமக் கண்டமாகவும் அறியப்படுகிறது) எனப்படும் மூன்று மண்டலத்தில் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் பாம்பு வடிவமான  குண்டலினி சக்தியை எழுப்பி",

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே  

"மூலாதாரச் சக்கரத்தில் மூண்டு எழும் கனலாகிய குண்டலினி சக்தியை மூச்சுக் காற்றை முறைப்படுத்தி எழுப்பும் (கால் =காற்று)முறையை அறிவித்து",
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி.

"குண்டலினி, உச்சந்தலையிலுள்ள  சஹஸ்ராரச் சக்கரத்தை அடையும் போது அமிர்தம் பொழிவது போல் ஏற்படும்  நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயங்கும் விதத்தையும், குணத்தையும் கூறி, ஆறு ஆதாரச் சக்கரங்களில்(சஹஸ்ராரம் சேர்த்து ஏழு எனவும் கொள்ளலாம்)இடையில் உள்ள  சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ் கமலத்தின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி",

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.

சத், சித் அதாவது, உள்ளும் புறமும் சிவமேயென தெளிவாக உணர்த்தி அருள வேண்டும் என விநாயகப் பெருமானை வேண்டுகிறார் ஔவை.

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே .

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

VINAYAKA CHATHURTHI (19/9/2012), PART 1, GANAPATHYAM.....காணபத்யம், பகுதி 1


நான் எழுதி, உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் 'வகுப்பறை, மாணவர் மலரில் வெளிவந்த, க்ஷண்மதங்களில் ஒன்றான 'காணபத்யம்' பற்றிய கட்டுரையை   விரிவுபடுத்தி, மூன்று பகுதிகளாக உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

அல்லல் போம் வல்வினைபோம்-அன்னை
வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் நல்ல மாமதுரை
கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக்கால்.

"பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்ற சொல்வழக்குப் பிரபலமானது. விக்கிரகம், யந்திரங்கள் பிம்பங்களில் மட்டுமல்லாது மஞ்சள் கூம்பு, சாணி உருண்டை, களிமண் பிம்பம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் விநாயகரை வழிபடலாம். பிரத்யேகமான ஆவாஹன மந்திரங்கள் இருந்தாலும், ஒரு மஞ்சள் உருண்டையைக் கூம்பாகப் பிடித்து, "இது பிள்ளையார்" என்றால் அங்கே உடனே ஆவாஹனமாகி விடுகிறார். எந்த எளிய பூஜையையும் நிவேதனத்தையும் மனமார ஏற்று அருள் செய்பவர். கோவிலிலும் கொலுவிருப்பார். ஆற்றங்கரை அரசமரத்தடியிலும் அருள்புரிவார்.

தனக்கு மேல் நாயகன் இல்லாததால் "விநாயகர்" என்று பெயர் பெற்ற ஸ்ரீ மஹாகணபதியின் பெருமை பேசும் "காணபத்யம்" பற்றிய சில விவரங்களை நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஸ்ரீ மஹாகணபதியை நிர்க்குண நிராகார பரப்பிரம்மமாகக் கருதும் காணபத்யம், அவரே முழுமுதற்கடவுள் என்று உபதேசிக்கிறது. உலகத்தின் தோற்றமும், நிலைபெறுதலும் விநாயகராலேயே நிகழ்கிறது. முடிவில் பிரளய காலத்தில் ஒடுங்குதலும் விநாயகரிடமே. மும்மூர்த்திகளுக்கும் மேலான நாயகராய் விநாயகரே இருந்து இவ்வுலக இயக்கத்தைச் செயல்படுத்துகிறார். காணபத்யம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபலமாக இருக்கிறது. காணபத்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் 'காணபதர்கள்" என அழைக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிரம்மச்சாரியாக வணங்கப்படும் விநாயகர் வடநாட்டில், சித்தி, புத்தி எனும் இரு மனைவியரோடு கூடியவராக வழிபடப்படுகிறார்.


ஸ்ரீ வேதவியாச மஹரிஷி அருளிச் செய்த ஸ்ரீ விநாயக புராணம், விநாயகரின் தோற்றம், அவதாரங்கள், விநாயகரின் மகிமைகள் முதலிய பல செய்திகளை விரிவாக எடுத்துரைக்கிறது.

“கணபதி" என்னும் திருநாமத்தில், 'க' என்பது ஞானத்தையும் 'ண' என்பது மோட்சத்தையும் குறிக்கும். 'பதி' என்பது ஜீவாத்மாக்களின் தலைவனாக, பரப்பிரும்ம சொரூபமாக இருப்பதைக் குறிக்கும்.

"கணாநாம் த்வா" என்று துவங்கும் கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள‌ மந்திரமே, வேதங்கள் ஓதத் துவங்குமுன் உச்சரிக்கப்படுகிறது.

ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷம் என்னும் உபநிஷதம், "கணபதியே முழுமுதற்கடவுள்" என்று பற்பல ஸ்லோகங்களால் நிறுவுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும் விநாயகரின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்படுகிறது. பார்க்கவ புராணமாகிய‌ விநாயக‌ புராணத்தின் படி, வக்ரதுண்ட விநாயகர், பிரளயம் முடிந்ததும் மும்மூர்த்திகளையும் படைத்து, முத்தொழில்களையும் செய்யுமாறு ஆணையிட்டு மறைந்தருளுகிறார். பின் உலக நன்மைக்காக, மீண்டும் தோற்றமாகிறார்.

பார்வதிதேவி நீராடும் போது, மஞ்சள் பொடியைப் பிசைந்து ஒரு உருவம் செய்து ,அதற்கு உயிரூட்ட, விநாயகர் தோற்றமானார் என்பதே பொதுவாக விநாயகரின் தோற்றம் குறித்து வழங்கப் பெறும் புராணக் கதை.

கயிலாய மலையில், மந்திர ரூபமான ஒரு மணிமண்டபத்தில், மிகுந்த ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த "சமஷ்டிப் பிரணவம்""வியஷ்டிப் பிரணவம்" என்ற இரு பிரணவங்களை இறைவனும் இறைவியும் கருணையுடன் நோக்க, அவை ஒன்றிணைந்து பிரணவ ஸ்வரூபமான விநாயகர் தோற்றமானார் என்கிறது ஸ்ரீ விநாயக புராணம்.

வேதாந்தகன், நராந்தகன் என்னும் இரு அசுரர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காக்க, தேவர்களின் தாயான அதிதி, தன் கணவர் காஷ்யப மஹரிஷியின் ஆணைப்படி, விநாயகரை குழந்தையாகப் பெற வேண்டித் தவமிருந்தாள். விநாயகரும், "மகோற்கடர்" என்ற பெயரில் அதிதிக்குக் குழந்தையாக அவதரித்தார்.

ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகிய மூவரும் கயிலையில் சிவபெருமானை இசையால் மகிழ்விப்பவர்கள். மகோற்கடர் சிறு வயதாயிருக்கும் போது, அவர்கள் மூவரும் கயிலைக்குச் செல்லும் வழியில் காஷ்யப முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தனர். நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த,விநாயகர்,சிவன், பார்வதி, விஷ்ணு, ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குப் பூஜை செய்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தனர். தியானம் முடிந்து பார்க்கும் போது, விக்கிரகங்களைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், மகோற்கடரைக் கேட்ட போது, அவர் புன்சிரிப்புடன், தன் வாயைத் திறந்து காண்பிக்க, அவர் வயிற்றுக்குள் ஈரேழு உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன பஞ்சமூர்த்திகளும்அவர் வயிற்றுக்குள் இருப்பதைப் பார்த்து அதிசயித்து, விநாயகரே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்தனர்.

விநாயகர் யானை முகத்தவர். ஒற்றைத் தந்தம், இரு பெரும் செவிகள், மூன்று கண்கள் (விரூபாக்ஷர்), நான்கு புஜங்கள் கொண்ட ஐங்கரன் அவர்."கணேசாய நம:" என்ற ஆறு அக்ஷரங்களுக்கு உரியவர். விநாயகரின் ரூப பேதங்களில், வலம்புரி விநாயகரே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறார். 
இதன் காரணம், விநாயகரின் முகம் ஓங்கார பிரணவ ஸ்வரூபமானது. வலப்புறம் துதிக்கை சுழித்திருக்கும் விநாயகர் உருவத்திலேயே ஓங்கார ரூபம் கிடைக்கும்.

விநாயகரின் செவிகளும் தலையும் பெரிதாக இருக்கும் காரணம், நாம் மற்றவர்கள் சொல்வதைச் செவிமடுத்துக் கேட்கும் திறனும், நமது சிந்திக்கும் திறனும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்கே.

அவருடைய ஐந்து திருக்கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கும். எழுத்தாணி ஏந்திய வலக்கரம் படைத்தலையும், வரத முத்திரை தாங்கிய இடக்கரம் காத்தலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், அமுதகலசம் ஏந்திய துதிக்கை பிறவாப் பெருநிலை அருளலையும் குறிக்கும். அவரது பெரிய வயிறு, உலகங்களனைத்தும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. இச்சாசக்தி மற்றும் க்ரியாசக்திகளைத் தன் திருவடிகளாகக் கொண்ட ஞானசக்தியே விநாயகப் பெருமான்.

தணிகைப்புராணத்தில், 'கவிராட்சசர்' என்று அழைக்கப்படும் கச்சியப்பமுனிவர், விநாயகரின் ஐந்து கரங்களை, ஒரு கை தனக்கு, ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு, இரு கைகள் நம் போன்ற அடியார்களைக் காக்க' என்று அழகுற வர்ணிக்கிறார்.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனி விநாயக வடிவங்கள் விசேஷமாக வழிபாடு செய்யப்படுகின்றன. அதை அனுசரித்து, அவரவர் ராசிப்படி  வழிபடுவது அளவில்லா நன்மைகளை அளிக்கும். 

பன்னிரண்டு ராசிகளுக்குரிய விநாயகர் வழிபாட்டு விவரங்களை அறிய  கீழ் இருக்கும் சுட்டிகளைச் சொடுக்கவும்.

1. 12 ராசிகளும் விநாயகர் வழிபாடும் , முதல் பகுதி.
2. 12 ராசிகளும் விநாயகர் வழிபாடும்,  நிறைவுப் பகுதி.

விநாயகர், நவக்கிரகங்களில் முறையே, நெற்றியில் சூரியனையும், நாபியில் சந்திரனையும், வலது தொடையில் அங்காரகனையும், வலது முழங்கைப்பகுதியில் புதனையும், வலது கையின் மேல்பகுதியில் சனீஸ்வரனையும், தலையில் குருபகவானையும், இடது முழங்கைப்பகுதியில் சுக்கிரனையும், இடது கையின் மேல் பகுதியில் ராகுவையும், இடது தொடையில் கேதுவையும் தரித்திருக்கிறார். ஆகவே விநாயகர் வழிபாடு நவக்கிரக தோஷங்களை அகற்றும் சக்தி வாய்ந்தது என்கிறது விநாயக புராணம். 
மேலும், அங்காரக பகவான, கணபதியைத் தொழுதே, கிரக பதவி பெற்று,"மங்களன்" என்ற பெயரும் பெற்றார். ஆகவே, செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் பெறுகிறது. அன்று விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்வோரது திருமணத்தடை அகலும். எதிலும் தடங்கல் என்ற நிலை மாறி வெற்றி கிட்டும்.முருகனைப்போல், விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை, 
  • திருவண்ணாமலை (செந்தூர விநாயகர்), 
  • திருக்கடவூர் (கள்ள வாரணப் பிள்ளையார்),
  • மதுரை (முக்குறுணி விநாயகர்), 
  • திருநாரையூர் (பொல்லாப்பிள்ளையார்),
  • விருத்தாசலம் (ஆழத்து விநாயகர்), 
  • காசி (துண்டி விநாயகர்) ஆகியவை ஆகும்.
இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

சனி, 15 செப்டம்பர், 2012

SRI SWARNA GOWRI POOJA (18/9/2012). PART 2.... ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி விரத பூஜை, பகுதி 2


சென்ற பதிவின் தொடர்ச்சியாக, ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாம் இந்தப் பதிவில் காணலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீசமடைந்திருந்தாலோ,தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலோ அல்லது அஸ்தமனமாகியிருந்தாலோ ஏற்படும் தோஷங்களுக்கு , ஸ்ரீ கௌரி பூஜை மிகச் சிறந்த பரிகாரமாகும். தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, பிரிவு, கணவன், மனைவியின் உடல்  ஆரோக்கியம் பாதித்தல் இவை நீங்க  ஸ்ரீ கௌரி தேவியை விரதமிருந்து பூஜிப்பது மிக அவசியமாகும்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:
விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச்  சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

பூஜைக்குத் தேவையானவை:
  • கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.
  • மாவிலை தோரணங்கள், 
  • மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.
  • தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்(இயன்றால்).
  • பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம், 
  • புடவை, ரவிக்கை  அல்லது இரண்டு ரவிக்கைத் துணிக‌ள், 
  • திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி. 
  • தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
  • பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.

தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். மற்ற நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில் போளி நிவேதனங்களில் பிரதான இடம் பெறுகிறது. தாமரைப்பூவின் இதழ்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பது விசேஷம்.

விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு.முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.

மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.

வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.

தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.

அம்பிகையை அர்ச்சிக்க ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.

நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும்.
பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.

பூஜைப் பலன்களை தேவிக்கு சமர்ப்பித்து அர்க்யப் பிரதானம் (உத்திரிணியால்
பால், நீர் கலந்த தீர்த்தத்தை கிண்ணத்தில் சமர்ப்பித்தல்) செய்யவும். ஒரு பழம், சந்தனம், அக்ஷதையைக் கையில் வைத்துக் கொண்டும் அர்க்யம் விடலாம்).


சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.

பூஜை முடிந்தபின், அருகிலுள்ள,கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. பூஜைப் பிரசாதங்களைக் கட்டாயம் விநியோகிக்க வேண்டும். இதன் காரணம், பிரசாதம் பெறுபவர்களில் ஒருவராக பகவானும் எழுந்தருளி, பிரசாதத்தை ஏற்று நம் விருப்பங்களை ஈடேற்றி வைப்பார். பின் நாமும் பிரசாதத்தை பக்தியுடன் உண்ண வேண்டும்.

இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.

மறு நாள், தேவிக்கு சுருக்கமாக,புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு,  தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.

தமிழ்நாட்டில் கனுப்பண்டிகையை ஒட்டி, உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர் செய்வது போல், கர்நாடகாவில் கௌரி பண்டிகையை ஒட்டி சகோதரிகளுக்கு புடவை உள்ளிட்ட வரிசைப் பொருட்களைத் தந்து வாழ்த்துவது வழக்கத்தில் இருக்கிறது. பிறந்த வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பதும் உண்டு.

சில வீடுகளில், மறுநாள் விநாயக சதுர்த்தியாக இருப்பதால், மூன்றாம் நாளே, விநாயகரையும் தேவியையும் சேர்த்து உத்யாபனம் செய்வார்கள். மண் பிரதிமையாக இருப்பின் நீர் நிலைகளில் சேர்த்து விடலாம். 

ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜித்து, நமது நாட்டுப் பாரம்பரியத்தின் வேர் போன்ற குடும்ப ஒற்றுமை சிறந்தோங்க வேண்டி, 

வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

SRI SWARNA GOWRI POOJA,(18/9/2012), PART 1..... ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி விரத பூஜை, பகுதி 1.

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே 
சரண்யே த்ர்யம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!
எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடலே இவ்வுலகம். பரந்த இப்பிரபஞ்ச வெளியெங்கும் இயங்கும் இயக்கமெல்லாம் அவன் தன் தேவியுடன் நிகழ்த்தும் அருளாடலே. சிவனும் சக்தியும் இணைந்து எப்போதும் அருளாட்சி புரிவது போலவே, இவ்வுலகில் ஆணும் பெண்ணும் இணைந்து, இயைந்து, இல்லறம் என்ற நல்லறம் பேணுமாறு செய்வதே திருமணம் என்ற உயரிய சடங்கின் நோக்கம். 

திருமணம் என்பது வெறும் ஊரும் உறவும் கூடி நடத்தும் சம்பிரதாயமோ, திருவிழாவோ அல்ல. அது இரு குடும்பங்களின் கூட்டுறவு. வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இரு ஆத்மாக்களின் சங்கமம். கூடி வாழ்தலில் காணும் இன்பம் கோடி பெறும் என்பதை உணர்ந்து, வருங்கால சந்ததிகளுக்கு தம் வாழ்வின் மூலம் உணர்த்துவது என்பது எளிதான காரியமில்லை. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்வாங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் செய்து காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். இறையருளின்றி எதுவும் நடக்காது .தம்பதிகளுக்குள் ஒற்றுமை என்றென்றும் இருக்க, குடும்பத்தின் ஆணி வேரான பெண்கள் ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது நமது சம்பிரதாயங்களில் முக்கியமான இடம் வகிப்பதாகும். 

திருமண தினத்தில், மணமகள் மணமேடைக்குச் செல்லும் முன்பாக, கௌரிதேவியைப் பூஜிப்பது சம்பிரதாயம். கணவனோடு இணைந்து வெற்றிகரமாக இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி, தேவியைப் பூஜித்த பின்பே திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது. 

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திருஅவதாரமான ஸ்ரீ ருக்மணி தேவியே, தன் மணநாளில், தனக்கு கணவனாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவே வரவேண்டுமென தேவியைத்தொழுது தன் எண்ணம் ஈடேறப் பெற்றாள்.

வெண்மை நிறமே 'கௌவர்ணம்' எனப்படுகிறது. அத்தகைய வெண்மை நிறத்தவளாக இருப்பதால் தேவி 'கௌரி' எனப்படுகிறாள். மலை(கிரி)மகள் என்று அறியப்படுவதாலும், தேவியை கௌரி என அழைக்கிறார்கள்.

ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது அனைத்து தேவதைகளையும் பூஜிப்பதற்குச் சமம் என்கின்றன புராணங்கள். நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, 108 வடிவங்களில் கௌரி தேவியை வடிவமைத்துப் பூஜிக்க வழி செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதையும் சற்று எளிமைப்படுத்தி, ஷோடச கௌரியாக, 16 வடிவங்களில் நாம் பூஜிக்கத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கௌரி ரூபத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த தினங்கள் பூஜிக்க ஏற்றது.

தக்ஷனின் மகளாக, தாக்ஷாயணி என்ற திருநாமத்துடன் அவதரித்த தேவி, தக்ஷ யாகத்தின் அக்னி குண்டத்தில், தன் தந்தை செய்த சிவ அபராதத்தை சகிக்காது தன் உயிரைத் தியாகம் செய்தாள். தன் மறுபிறப்பில் , ஹிமவானின் தவத்தின் பலனாக, அவருக்குப் புத்திரியாக திருஅவதாரம் செய்து அருளினாள்.

அன்னது ஓர் தடத்து இடை அசலம் அன்னவன் 
மன்னிய கௌரி தன் மகண்மை ஆகவும் 
தன்னிகர் இலா வரன் தனக்கு நல்கவும் 
முன் உற வரும் தவம் முயன்று வைகினான். (ஸ்ரீ கந்த புராணம், பார்ப்பதிப்படலம்).

இவ்வாறு அவதரித்த தேவி, இறைவனை மணாளனாக அடையும் பொருட்டு, கடும் தவம் புரிந்தாள். ஒவ்வொரு வித மரத்தடியிலும் ஒரு குறிப்பிட்ட காலம் அமர்ந்து தவம் செய்தாள்.ஆகவே ஒவ்வொரு கௌரி விரதங்களையும் அந்தந்த குறிப்பிட்ட மரத்தடியில் அமர்ந்து செய்வது சிறப்பு. ஆனால் இக்காலத்தில் அவ்வாறு இயலாது. ஆகவே, அந்தந்த மரக் கிளைகளை தருவித்து, கௌரிதேவியின் பிரதிமையுடன் சேர்த்து பூஜிக்கலாம். 
ஸ்ரீ கீர்த்தி கௌரி, ஸ்ரீ பல(பலால) கௌரி, ஸ்ரீ ஹரிதாளிகா(விபத்தார) கௌரி, ஸ்ரீ கஜ கௌரி, ஸ்ரீ ஞான கௌரி, ஸ்ரீ மாஷா கௌரி, ஸ்ரீ சாம்ராஜ்ய மஹா கௌரி, ஸ்ரீ சம்பத் கௌரி என ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் கௌரி விரதங்கள் எண்ணற்றவை. அவரவருக்கு வேண்டிய பலனைப் பொறுத்தும் அவரவர் குடும்ப வழக்கங்களைப் பொறுத்தும், கௌரி விரதங்களை அனுசரிக்கலாம்.

கிட்டத்தட்ட, மாதத்திற்கு ஒன்றாக குறைந்து, 12 கௌரி விரத பூஜைகள் ஒரு வருடத்தில் கொண்டாடப்படுகின்றன. கௌரி விரத பூஜைகளில் பிரதானமாக அறியப்படுவது தீபாவளி அமாவாசையன்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதமும் விநாயக சதுர்த்திக்கு முன் தினம் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரதமும் ஆகும்.

கௌரிதேவியாம் பார்வதி தேவி, தவமிருந்து சிவனாரின் உடலில் சரிபாதியைத் தனக்காக‌ப் பெற்ற தினம் கேதார கௌரி விரத தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம்,  இந்த ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஸ்வர்ண கௌரி விரத பூஜையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை, பிரளய காலத்தின் முடிவில், உலகெங்கும் சூழ்ந்திருந்த அலைகடலில் ஒரு ஸ்வர்ண லிங்கம் தோன்றியது. அதில் ஈசனை தேவர்கள் யாவரும் பூஜிக்க, அதிலிருந்து, பொன்மயமான சிவனாரும் உமையம்மையும் தோன்றி அருள் புரிந்தனர். இது நிகழ்ந்த நாள், ஆவணி மாதம் வளர்பிறை திருதியை நன்னாளாகும். ஆகவே, அன்று ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும். 


ஸ்வர்ண கௌரி விரத மஹிமை:
இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.

ஒரு முறை, ஸ்கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார். 

முன்னொரு காலத்தில், ஸரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.

ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.

அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.

முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.

இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.

முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே,  அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள்.ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருக்க ஒட்டாது விரட்டினார்கள்.

பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள். 

ராணியானவள், எந்த வேளையிலும் கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்.

அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.

எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.
இக பர நலன்களை அடைந்து வளமாக வாழ்வர்.


விரதம் அனுஷ்டிக்கும் முறையைப் பற்றி நாம் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள்  நன்றி: கூகுள் படங்கள்.