நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 10 ஜனவரி, 2013

PONGAL SPECIAL. PART 1...ஞாயிறே நலமே வாழ்க! பகுதி 1........


இறையருளால் நான் எழுதி, உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் 'வகுப்பறை, மாணவர் மலரில் வெளிவந்த, க்ஷண்மதங்களில் ஒன்றான 'சௌரம்' பற்றிய கட்டுரையை   தைப்பொங்கல் பதிவுகளுக்காக, சற்று விரிவுபடுத்தி, இரண்டு பகுதிகளாக உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.  
உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார்  
அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க‌
ஓர் ஆழி தனை நடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே 
(கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்.)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான் 
(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப்பாடல்)

நமது இந்து தர்மம், வழிபடும் கடவுள்களை முதலாகக் கொண்டு ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. காணபத்யத்தை அடுத்து, சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வணங்கும் 'சௌரம்' பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

'லோக கர்த்தா' என வேதங்கள் புகழும் சூரிய பகவான், பிரத்யக்ஷமாக, நம் கண்முன் தோன்றி அருள் புரிபவர். அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர். உலகில் எவ்வுயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி, தூரத்தே நெருப்பை வைத்துச்  சாரத்தைத் தரும் தேவதேவன்.

அவரது ஒளிக்கற்றைகளில் பேதமில்லை.நம் எல்லோருக்கும் மேல், வானத்தில் பிரகாசித்து, எல்லா உயிர்கள், பொருட்கள் மீதும் தன் ஒளிக்கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர். பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர். தன்னை உதிக்கக் கூடாதென்று தன் கற்பின் சக்தியால் சாபமிட்ட நளாயினி, மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்த போது அவளது பக்திக்கு இரங்கி, அக்ஷய பாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான்.

சூரிய வழிபாடு, மிகப் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகக் காலத்துக் கல்வெட்டுக்களில், இவ்வழிபாடு இருந்த குறிப்புகள் இருக்கிறது. ‘முன் தோன்றிய மூத்த குடி’ என்று புகழப்படும் பழந்தமிழர் நாகரிகத்திலும் சூரிய வழிபாடே பிரதானமாக இருந்தது. உழவுத் தொழிலின் மேன்மைக்கு உதவும் சூரிய பகவானை பண்டைக்காலம் தொட்டே வழிபட்டு வந்துள்ளனர். தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல் நாள், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும், குறிப்பாக ரோமானிய நாகரிகத்தில் சூரிய வழிபாடு இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பாரசீகத்தின் 'மித்திரன்' என்ற பெயரிலும்,கிரேக்கத்தில் 'அப்பல்லோ' என்ற பெயரிலும், ரோமதேசத்தில் 'சால் இன்விக்டஸ் (Sol Invictus) என்ற பெயரிலும், எகிப்தில் ரா(Ra), என்றும், மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் லிசா (Liza) என்றும், வழங்கப்படுவதிலிருந்து, உலகெங்கிலும் சூரிய வழிபாடு வியாபித்திருந்ததை அறியலாம். ஜப்பான் முதலிய சில நாடுகளில் சூரியன் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார்.(http://ancienthistory.about.com/od/sungodsgoddesses/a/070809sungods.htm)

சௌரம்' என்ற சொல் 'நான்கு' என்ற பொருளில் நான்முகனான பிரம்மாவைக் குறிப்பது என்றாலும் மிகப்பெரும்பாலான நூல்களில் சூரியனை குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரிக் வேத‌ம் 'அக்னியின் முதல்வன்' என்றும், யஜூர் வேதம், 'சகல உலகத்தையும் காப்பவன்' என்றும், சாமவேதம் 'உயிரினங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பவன் என்றும் சூரிய பகவானைப் போற்றுகின்றன.

சூரிய பகவான், சிவாகமங்களில் 'சிவ சூரியன்' என்றும் ஸ்ரீ வைணவத்தில், 'சூரிய நாராயணன்' என்றும், புகழப்படுகிறார்.
சூரிய பகவானாலேயே உலக இயக்கங்கள் நடைபெறுவது கண்கூடு. ஒரு நாளின் துவக்கமும் முடிவும் சூரியோதயத்திலிருந்தும், அஸ்தமனத்தி லிருந்துமே கணக்கிடப்படுகின்றன. ஒரு ஆண்டின் இரு பிரிவுகளான‌, உத்தராயண, தக்ஷிணாயனங்கள் சூரிய பகவானின் சஞ்சாரத்திலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களின் முதல் நாள், சூரியன் பன்னிரெண்டு ராசிகளில்,ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் தினத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது.

பஞ்சாங்கங்களில், வருடம், மாதம் கணக்கிடப்படும் முறையில், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 'சௌரமானம்' எனப்படும். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமானம்’ (சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல்) நடைமுறையில் உள்ளது.

சூரியபகவானின் ஒளிக்கற்றைகளின் வெம்மை சுட்டாலும், உயிரினங்களின் வாழ்வாதாரமான மழை பொழிவதற்கும் சூரிய பகவானின் கிரணங்களே காரணம். கடல் நீர் சூரிய வெப்பத்தால், ஆவியாகி, பின் மேகமாக மாறி மழையாகப் பொழிந்து உலகை காத்தலை அனைவரும் அறிவோம்.

மந்திரங்களில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிற 'காயத்ரி மந்திரம்' சூரிய பகவானைப் போற்றுவதாகும். இம்மந்திரம், “யார் நம் அறிவைத் தூண்டி நம்மை வழிநடத்துகிறாரோ, அந்த சுடர்க் கடவுளின் மேலான, பிரகாசமான‌ ஒளியை தியானிப்போமாக'' ' என்று பிரார்த்திக்கிறது. காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், இம்மந்திரத்தைக் கூறி, சூரிய பகவானைப் பிரார்த்தித்து அர்க்யம் விடுவது (சூரிய பகவானை நோக்கி, இருகரங்களிலும் நீரை ஏந்தி அருவி போல் பொழிந்து சமர்ப்பிக்கும் பூஜை முறை) இந்து தர்மத்தில், எந்த தெய்வத்தை வழிபட்டாலும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
எல்லா இறை மூர்த்தங்களிலும், வலது கண், சூரிய பகவான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண் சம்பந்தமான நோய்கள் நீங்க, ஞாயிற்றுக் கிழமைகளில், சிவபெருமானை சந்தனத்தால் அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் சாற்றி, வெள்ளெருக்கு சமித்தால் சூரியனுக்கு ஹோமம் செய்து, வழிபாடு செய்வது சிறப்பு.

சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பது போல், சூரிய பகவான் 'நமஸ்காரப் பிரியர்'.

யோகாசனங்களில், பன்னிரெண்டு நிலைகளை உள்ளடக்கிய, 'சூரிய நமஸ்காரம்',செய்வதால், முதுகுத்தண்டு, வயிறு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். விடியற்காலை வேளையில் இதைச் செய்வது மிக, மிக நல்லது.

'தேஹகர்த்தா, ப்ரஸாந்தாத்மா விஸ்வாத்மா, விஸ்வ தோமுக|
சராசராத்மா ஸூக்ஷ்மாத்மா, மைத்ரேய: கருணான்வித:||'
(சூரிய பகவான் உடல் காரகர், மகிழ்ச்சியளிப்பவர், உலகத்தின் மூலம், அண்ட சராசரங்களிலெல்லாம் ஒளிர்பவர். கருணையே வடிவானவர்).

பகவத் கீதையில், ‘ஒளிரும் பொருட்களில் நான் சூரியன்' என்கின்றார் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.

"ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 
"(கீதை, பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்).

முதல் முதலில் கீதை உபதேசிக்கப்பட்டது சூரிய பகவானுக்கே. அவர் இதை மனிதகுலத் தந்தையான மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் உபதேசித்தனர். இக்ஷ்வாகு மன்னர், ஸ்ரீ ராம பிரானின் குல முன்னோர்களில் ஒருவர். காலப்போக்கில், அதன் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டதாலும், சில கருத்துக்கள் சிதைவுண்டதாலும், மீண்டும் இதை அர்ஜூனனுக்கு உபதேசிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே கூறுகிறார்.

"இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்"

இதில் விவஸ்வான் என்பது சூரிய பகவானின் ஒரு திருநாமம். சூரிய பகவானுக்கு, கங்க வம்சத்து அரசன் முதலாம் நரசிம்மன் எடுப்பித்த 'கொனார்க்' சூரியனார் கோவில் சிற்ப களஞ்சியங்களில் ஒன்று.

தமிழ்நாட்டில், சோழமன்னன், முதல் குலோத்துங்கனால் கட்டப்பட்ட, தஞ்சை மாவட்டம், திருமங்கலக்குடிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள‌ 'சூரியனார் கோவில்' சூரிய பகவானுக்கான நவக்கிரக க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.

சூரிய பகவானின் தோற்றம் குறித்துப் பல்வேறு விதமாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஆணைப்படி, பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய போது, அவ்வுலகங்களிலிருந்த இருள் நீங்க, பிரம்மா, ஓங்காரமாகிய பேரொலியை உண்டாக்கினார். அதிலிருந்து பிரகாசமான ஒளியுடன் சூரிய தேவன் தோன்றினார் என்பது ஒரு புராணக் கதை.

சூரியபுராணத்தின்படி, காஸ்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்தவரே சூரிய பகவான். நவக்கிரக மண்டலத்தின் தலைவர் இவரே. இவர் க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுகிறார். ஆகவே, இவர் ஆதிபத்தியம் பெற்ற சிம்ம இராசி, சிம்ம  லக்கினத்தைச் சேர்ந்தவர்கள், இயல்பாகவே, தலைமைப் பொறுப்புகளுக்கு உரிய ஆளுமைக் குணம், தன்னைச் சேர்ந்தவர்களைப் பாதுக்காத்து வழி நடத்துதல் போன்ற குணங்களைக் கொண்டு இருக்கிறார்கள்.

சூரிய பகவான், ஒற்றைச் சக்கரத் தேரில், வேதத்தின் ஏழு சந்தஸ்களை ஏழு குதிரைகளாகப் பூட்டி, அருணன் சாரதியாக இருக்க, மேருமலையைப் பவனி வருகிறார் என்கின்றன புராணங்கள். வாரத்தின் ஏழு தினங்களே ஏழு குதிரைகள் என்றொரு கூற்றும் உண்டு. ஒற்றை சக்கரமானது, நாம் விண்ணில் சூரியனைக் காணும் பரிதி (வட்ட) வடிவத்தைக்குறிக்கும். சூரிய பகவான் இரு கரங்களிலும் சங்கு சக்கரத்தை ஏந்தியுள்ளார். இதில், .சங்கு பிரபஞ்சம் யாவும் அவனிடமிருந்து வந்தவை என்பதையும் சக்கரமானது உலகம், சூரியபகவானின் ஆணையால் ஒழுங்குமுறையுடன் இயங்குகிறது என்பதையும் குறிக்கிறது.

சூரிய பகவானுக்கு, உஷா, ப்ரத்யுஷா என்ற இரு மனைவியரும், வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் இருக்கின்றனர். கொடை வள்ளல் கர்ணன், சுக்ரீவன், வால்மீகி முனிவர், அகத்தியர், வசிஷ்ட மஹரிஷி, பிருகு முனிவர் ஆகியோர் சூரிய பகவான் அருளால் பிறந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றன.

அக்னி புராணம், சூரிய புராணம், விஷ்ணு புராணம் முதலிய அநேக புராணங்களில் சூரிய பகவான் போற்றப்படுகிறார். ஸ்ரீ ராமபிரான் அவதரித்த சூரிய குல முதல்வன் சூரிய பகவானே. 'நவ வியாகரணப் பண்டிதர்' என்று புகழப்படுபவர் சூரியன். விநாயகப் பெருமான் சூரியனை வலம் வந்தும், ஆஞ்சநேயர் சூரிய பகவானுக்கு எதிர்முகமாக‌ சஞ்சரித்தும் அவரிடமிருந்து கல்வி கற்றனர்.
சூரிய பகவானைக் குறித்துப் பல துதிகள் இருந்தாலும், அவரை நிர்க்குணப்பரப்பிரம்மமாகப் போற்றும் 'ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம்' சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீராம ராவண யுத்த சமயத்தில், அகத்திய மாமுனிவரால், ஸ்ரீராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டது. இது. இதன், முதலிரு ஸ்லோகங்கள், இது சொல்லப்பட்ட சூழ்நிலையையும், மூன்றாவது ஸ்லோகம், அகத்தியர்,ஸ்ரீராமபிரானை நோக்கிக் கூறுவதாகவும், நான்கு முதல் முப்பதாவது ஸ்லோகங்கள் வரை சூரியனைப் போற்றுவதாகவும், முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம், சூரியபகவான், ஸ்ரீராமபிரானை வாழ்த்துவதாகவும் அமைந்திருக்கிறது. அதில் சில ஸ்லோகங்களையும் அவற்றின் பொருளையும் காணலாம்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: "

சூரிய பகவானே, பிரம்மா, விஷ்ணு, சிவன், கந்தன், மக்களின் தலைவனாகிய‌ ப்ரஜாபதி, இந்திரன், தன(பொருட் செல்வ)த்தை அருளும் குபேரன், காலம், யமதர்மராஜன், சந்திரன், மற்றும் வருணனுமாவார்.(அபாம்பதி -வருணன்).

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேபுத்ர: சங்க: சிசிரநாசன:

உலகத் தோற்றம்,ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாகச் சொல்வதுண்டு. அது இங்கே பொன்னாலான கருப்பையாகச் சொல்லப்படுகிறது.அந்தப் (உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான) பொன்மயமான கருப்பையை உடையவர் சூரிய பகவான்.. குறைந்த வெப்பத்தால் உண்டாகும் குளிரையும் நடுக்கத்தையும் தருபவர். எல்லாவற்றையும் உருவாக்குபவர். ஒளிவீசச் செய்பவர். அக்னியைத் தன் உடலாகக் கொண்ட அதிதியின் மகனான சூரிய பகவான், தன் வெப்பத்தால் குளிரைப் போக்குபவர்.

'நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே'

சூரியபகவான், விண்மீன்களுக்கெல்லாம் தலைவர்.அண்டத்தின் பிறப்பிடமானவர். ஒளி வீசுபவர்க்கெல்லாம் ஒளியாகத் திகழ்பவர். (சந்திரன் முதலிய விண்மீன்கள், சூரியனிடமிருந்தே ஒளி பெறுகின்றன). பன்னிரு வடிவங்களைத் தாங்கியவர்.


இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..