நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

GNANA GANESHA SARANAM SARANAM.......ஞான கணேசா சரணம் சரணம்.


இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற கேள்வி அநேகமாக பெரும்பாலோருக்கு மனதில் எழும்பியிருக்கும். அடிப்படையில், 'ஒன்றே பரம்பொருள்' என்பதே இந்து தர்மத்தின் கொள்கையும். உலகெங்கிலும் உள்ள எல்லா மதங்களின் அடிப்படைக் கோட்பாடான, 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்', ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே இந்து தர்மத்தின் அடிநாதமும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இதற்கு மாறுபட்ட, முரண்பாடுடைய  கொள்கைகள் உள்ளதாகத் தோன்றினாலும்,  ஆழமாகச் செல்லும்போது இந்த உண்மையை யாவரும் உணரலாம். 

மனிதர்கள் எல்லோரும் ஒரே விதமான மனப்போக்குக் கொண்டவர்களல்லர். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து எண்ணங்கள்,  கொள்கைக‌ள் முதலியவை மாறுபடும். இத்தகைய ஒரு நிலையில், அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற்போன்ற தெய்வத்தை (உருவ) வழிபாடு செய்து, ஆன்மீகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டிய பிறகு நிர்க்குண நிராகார பரம்பொருளை வழிபடும் விதமாகவே இந்த 'பல தெய்வக் கட்டமைப்பு'  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த உருவ வழிபாட்டு முறையிலும், வழிபடுபவர் மனோ தர்மத்துக்கு ஏற்ற வகையில், அம்பிகை, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், முருகன், என்று எந்த  திருவுருவின் மீது மனம் லயிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வழிபடலாம். ஏதேனும் ஒரு தெய்வத்தை உபாசனா மூர்த்தியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை  அன்னையாக, தந்தையாக, குருவாக, குழந்தையாக, தோழனாக, எஜமானனாக எந்த பாவனையில் மனம் லயிக்கிறதோ அந்த பாவனையில் வழிபடலாம். 

உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணரை, குழந்தையாகக் கருதி அலங்கரித்து, சின்னத் தொட்டிலிலிட்டு வழிபடலாம். கீதை உரைத்த ஞான குருவாகக் கருதி வழிபடலாம். 'சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்' என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளியது போல், எஜமான பாவத்திலும் வழிபடலாம். ஒவ்வொரு தெய்வத்தைக் குறித்த புராணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே அருளப்பட்டிருக்கின்றன. 

ஸ்ரீமத் பாகவதத்தில், யசோதைக்குக் குழந்தையாகவும், அர்ஜூனனுக்குத் தோழனாகவும், இடையர்களுக்குத் தலைவனாகவும் ஸ்ரீகிருஷ்ணர் புரிந்த லீலைகளைச் சொல்வது, எந்த பாவனையில், நம் மனம் லயிக்கிறதோ, அந்த பாவனையில் வழிபடும் மார்க்கத்தை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.

வழிபடும் முறைகளிலும், எளிய முறையில் வழிபடுவதிலிருந்து, விஸ்தாரமான பூஜா முறைகளில் வழிபடுவது வரை பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் இருக்கின்றன.  மானசீக பூஜைக்கும் மிக உன்னத இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த முறையில் வழிபட்டாலும், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆத்மார்த்தமான பக்தி உணர்வு  மட்டுமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய நிவேதனப் பொருள்களிலும் ஆழமான உள்ளர்த்தங்கள். பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு நிவேதனப் பொருள். பெரும்பாலும், அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய், பழங்களே நிவேதனத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. முக்குணங்களான, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையிலும் நிவேதனப்பொருள்கள் அமைகின்றன.  உதாரணமாக,  குழந்தை ரூபத்தில் வழிபடு தெய்வம் இருக்குமானால், பசும்பால், நெய், வெண்ணை முதலிய சத்வ குணம் நிரம்பிய நிவேதனம் குறிக்கப்படுகிறது.

ஒருவருக்கு துன்பம் நேரிடும்போது, அந்தத் துன்பத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரை 'கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டார்' என்றே சொல்வது வழக்கம்.  பக்தர்களுக்கு ஏற்படும் சகலவிதமான துன்பங்களிலிருந்தும் கை கொடுத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வ உருவங்களுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு எனக் கரங்கள் அமைத்து வழிபடும் முறை வந்தது. சூட்சுமமாகப் பார்க்கும் போது இதற்கு வேறு விதப் பொருளும் உண்டு. அது போல், பரம்பொருளின், படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், பிரளய காலத்தில் ஒடுக்குதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் விதமாகவும், அந்த செயல்களின் சுருக்கம் மற்றும் விரிவாக்கமாகவே மூன்று, ஐந்து, ஆறு, என்று முகங்களுடையவர்களாக தெய்வ உருவங்கள் இருக்கின்றன. 

ஆனால் எத்தனை முகங்கள் அல்லது எத்தனை கரங்கள் கொண்டதாக தெய்வ உருவம் இருப்பினும், திருவடிகள் மட்டும் இரண்டு. பக்தர்கள் தம் இரு கைகளால் பற்றிக் கொண்டு வணங்க எளிதாக இருக்கும் பொருட்டே அனைத்து தெய்வ உருவங்களிலும் திருவடிகள் மட்டும் இரண்டு என்று கிருபானந்த வாரியார் சுவாமிகள்   அருமையாக விளக்குவார்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வாகனம். அதிலும் ஆழ்ந்த உட்பொருள். பசுபதியாகிய சிவனாருக்கு காளை வாகனம். பசு என்பது உயிர்கள் எனவும் பதி என்பது இறைவன் எனவும் பொருள்படும். அதைக் குறிக்கும் விதமாக காளை வாகனம். காக்கும் கடவுள் ஸ்ரீ விஷ்ணு, பக்தனுக்குப் பறந்து வந்து உதவுவார் என்பதற்காக கருட வாகனம். பணம் மனிதனை ஆட்சி  செய்ய வல்லது என்பதை உணர்த்துவதற்காக,  நவநிதிகளின் அதிபதியாகிய‌ குபேரனுக்கு நர (மனிதன்) வாகனம்.

மந்திரங்கள் அல்லது வழிபாட்டுத் துதிகள் எனப் பார்த்தால் அவை பெரும்பாலும் மறைமுகமாக, auto suggestion  என்பதாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இறைவனின் எல்லையற்ற‌ பலத்தை, சக்தியைப் போற்றும் அதே நேரத்தில், அவை நமது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக, எல்லையற்ற சக்தியை வழங்குவதாகவும் இருக்கிறது. நம் உள்ளிருப்பதும் இறைவன் அல்லவா?

மேற்சொன்னவற்றின் ஒரு உதாரணமாக,  ஸ்ரீ கணேசரைப் ப‌ற்றி    பார்க்கலாம். எப்போது பார்க்க நேரிட்டாலும் ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்துகிற விஷயங்களில் ஒன்று யானை. அந்த யானையின்  முகத்தைக் கொண்டுள்ள கடவுள் அவர். பெரிய தலை, வயிறு, நான்கு கரங்கள், நீண்ட துதிக்கை, இவற்றுடன் கூடிய ஞானச்செல்வம் கணபதி.

பூர்ண ஞானத்தின் வடிவமாகக் குறிக்கப்படுவதால், எல்லா தெய்வங்களின் பூஜைகளிலும் முதல் பூஜை இவருக்குத்தான். தெளிந்த அறிவுச்சுடரின் முன் எந்த இருளும் நில்லாது. அது போல், எடுத்த காரியத்தில் எவ்விதத் தடங்கலும் வராமல் காப்பார் கணபதி. பெரிய தலை, இவர் ஞானத்தின் திருவுரு என்பதைக் குறிக்கிறது. அறிவு எப்போதும் நிறைவாக, ஆழமாக இருக்க வேண்டுமென்பதைக் குறிப்பதே இவரது நீண்ட துதிக்கையுடன் கூடிய யானை முகம்.

புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு விதமாக கணேசரின் அவதாரம் குறிக்கப்பட்டிருந்தாலும், பார்வதி தேவி, தான் நீராடப் போகும் போது, யாரும் வராமல் காவல் காப்பதற்காக, தன் ஸ்நானப் பொடியைப் பிசைந்து உயிரூட்டிய வடிவமே விநாயகர் என்பதே பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை.

நினைவாற்றல் அதிகமுள்ளதாக சொல்லப்படுவது யானை. ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுக்கு அபரிமிதமான நினைவாற்றலும் அவசியம். அதன் காரணமாகவும் யானை முகம். தந்தங்களில்  ஒன்று ஒடிந்து காணப்படுவது, ஆணவமற்ற தன்மையைக் குறிக்க.  பெரிய வயிறு இவ்வுலகனைத்தும் அவருள் அடக்கம் என்பதைக் குறிப்பதாகும்.  மிகச்சிறிய ஊசியிலிருந்து, மிகப்பெரிய மரம் வரை தூக்கக் கூடிய சக்தி படைத்தது யானையின் துதிக்கை. அது போல், விநாயகரும், ப்ரச்னை என்ன அளவானாலும் அதிலிருந்து மீட்டுக் காக்கக் கூடிய சக்தி படைத்தவர்.

பரம்பொருளின் அருளிச் செயல்நிலைகளைக் குறிக்கும் விதமாக, கணபதியின் வடிவங்களை, 16 வித கணபதி (ஷோடச கணபதி), 32 வித கணபதி என்று வேறுபடுத்தி வழிபடுகிறோம்.

மேலும், பஞ்சமுக விநாயகர், மூன்று முகத்தோடு கூடிய விநாயகர் (த்ரிமுக கணபதி) இரண்டு முக கணபதி (த்விமுக கணபதி)  என  ஒன்றிற்கு மேற்பட்ட திருமுகங்கள் உடையவராகவும் விநாயகர் வழிபடப்படுகிறார். ஷோடச கணபதிகளில், வரத கணபதி, 10 கரங்கள் கொண்டவராகவும்,  நிருத்ய கணபதி, க்ஷிப்ர ப்ரஸாத(உள்முக வழிபாட்டை விரும்புபவர்) கணபதி முதலான திருவுருவங்களில், விநாயகர் 6 கரங்கள் கொண்டவராகவும், விக்ந கணபதி எட்டுக்கரங்கள் கொண்டவராகவும் வழிபடப்படுகிறார்.

வழிபடு முறை என்று பார்த்தால், மஞ்சள் கூம்பு முதற்கொண்டு, ஐம்பொன் விக்ரகம் வரை கணநாதரை எதில் வேண்டுமானாலும் வழிபடலாம். மிகச் சுலபமான, எளிமையான வழிபாட்டு முறைகளே அவருக்கு போதுமானது. ஆனால் விஸ்தாரமான பூஜை செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தால், மிக விரிந்த பூஜாகல்பம் அவருக்கு. அருகம்புல், பலவித மலர்கள், இலைகள் என்று பூஜை செய்யும் பொருட்களும், முறைகளும் விரியும். கணபதியின் புகழ்பாடும் துதிகளும் அநேகம்.

நிவேதனங்களில், பிரதானமாக மோதகம் விளங்குகிறது. பூரணத்துடன் கூடிய வேக வைக்கப்பட்ட கொழுக்கட்டையே மோதகம். பரந்த உலகினுள் பூரணமாக விநாயகர் இருக்கிறார் என்பதை விளக்குவதாக இந்த நிவேதனம்.  லௌகீகமாகப் பார்த்தால், பூரணத்தின் இனிப்புச் சுவை மனச்சோர்வை விலக்கும். மேலும் வேக வைக்கப்பட்டதால் சாத்வீக குணம் நிரம்பியதாகவும் கொள்ளலாம். அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும் மனதிலேயே ஞானம் குடிகொள்ளும் என்பதால், சாத்வீக குணம் தரும் நிவேதனம் பிரதானப்படுத்தப்படுகிறது.

மிக மெல்லிய மூச்சுக் காற்று, வினைப் பயனான இவ்வுடலைச் சுமந்து செல்வதைக் காட்டும் முகமாக அத்தனை பெரிய விநாயகருக்கு சிறிய மூஷிக வாகனம்.

இது போல், ஒவ்வொரு தெய்வ உருவத்திலும், ஆயிரமாயிரம் உட்பொருள்கள் உள்ளன. ஆழ்ந்த பக்தியின் மூலம், சாதகன் இவற்றை அறிந்து, பின்,  படிப்படியாக, ஆன்மீக சாதனையில் உயரும் போது,  நிர்க்குண நிராகார‌ பரம்பொருளை அறிந்து பேரின்பமெய்துகிறான். மனிதப் பிறவியின் பயனான மோக்ஷ நிலைக்கு ஒவ்வொரு ஆன்மாவையும் உயர்த்துவத‌ற்கே,  ஆன்மீக நிலையில் இப்படிப்பட்ட கட்டமைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.

நன்றி:  இந்த என் கட்டுரையை முதலில் வெளியிட்ட 'வல்லமை' மின்னிதழுக்கு(www.vallamai.com)
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெற்றி பெறுவோம்!!!!

ஞாயிறு, 24 மார்ச், 2013

THE COLOURFUL FESTIVAL, HOLI....வண்ணத் திருவிழா......


ஒவ்வொரு வருடமும், பருவ காலங்களில் ஏற்படும் மாற்றத்தை ஒட்டி சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குளிர் காலம் முடிந்து, கோடை துவங்குவதை ஒட்டி, 'வசந்தோற்சவம்' கொண்டாடுவது மிகப் பழங்காலத்தில் இருந்தே நம் நாட்டில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இன்றும் நம் நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பெயர்களில் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

பல நிறப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவிக் களிக்கும் ஹோலிப் பண்டிகையாக‌ வடஇந்தியாவிலும், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காம தகனப் பண்டிகையாகவும் கொண்டாடப்படும் இந்த வண்ணத் திருவிழா,பெரும்பாலும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தை ஒட்டியே கொண்டாடப்படுகிறது.

ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி சொல்லப்படும் புராணக் கதை பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்ததே.

அசுரனான ஹிரண்யகசிபுவின் மகன்  பிரகலாதன், மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஸ்ரீ வைஷ்ணவ மரபு 'பிரகலாதாழ்வார்' என்றே பிரகலாதனைப் போற்றித் துதிக்கிறது. அசுரனான ஹிரண்யகசிபுவோ, மகனின் விஷ்ணு பக்தியை வெறுத்தான். எத்தனை சொல்லியும், உத்தமனான பிரகலாதன் பத்தருக்கருளும் எம்பெருமான் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை.

நாளடைவில், ஹிரண்ய கசிபுவின் வெறுப்பு மைந்தனிடமே திரும்பியது. பெற்ற மகனையே கொல்லத் துணிந்தான். வெவ்வேறு விதமாக கொலை முயற்சிகள் செய்தும், பிரகலாதனின் எட்டெழுத்து மந்திர உச்சாடனம், அவனை இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றிய வண்ணம் இருந்தது.  ஹிரண்ய கசிபு, தன் கடைசி முயற்சியாக, தன் சகோதரி 'ஹோலிகா' வின் உதவியை நாடினான்.

அசுரப் பெண்ணான ஹோலிகா, ஓர் அற்புத வரம் பெற்றிருந்தாள். பிரம்ம தேவனின் அருளால் பெற்ற ஒரு புதுமையான சால்வை அவள் வசம் இருந்தது.

அதை அவள் போர்த்திக் கொண்டால், அவளுக்குத் தீயினால் தீங்கு எதுவும் வாராது என்பதே அந்த சால்வையின் சிறப்பு. 'கொழுந்து விட்டெரியும் தீயில் அவளை அமர்த்தி அவள் மடியில் பிரகலாதனையும் அமர்த்தி விட்டால்,  பிரகலாதன் பஸ்மமாகி விடுவான்...' இப்படி நினைத்தான் அசுரத் தந்தை. எத்தனை சிறந்தது அத்தை உறவென்பதை மறந்து, அண்ணனுக்குத் தங்கையாக மட்டுமே இருக்க ஹோலிகாவும் ஒப்புக்கொண்டாள்!!.

பிரம்மன் அளித்த சால்வை தன்னைக் காக்கும் என்று நம்பினாள். பிரம்மனின் தந்தையான ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய மந்திரம், நம்பினோரைக் காக்கும் மாபெரும் கவசம் என்பதை துளியும் அறியாமல், தன் அழிவுக்குத் தானே விதையிட்டுக் கொண்டாள் ஹோலிகா.

ஆளுயரத் தீ வளர்த்து அதனூடே அமர்ந்தாள் ஹோலிகா, ஆசை ஆசையாய் பிரகலாதனை அழைத்தாள். அத்தை அழைக்கிறாளே என்று அருமை மருமகனும் வந்து அவள் மடிமேல் அமர்ந்தான்.  வெஞ்சுடரின் வெம்மை, பக்தியின் சுடர் விளக்கை என்ன செய்யும்?. திடீரென, சுழன்றடித்தது காற்று. ஹோலிகாவின் மேல் இருந்த சால்வை நழுவியது. பக்த சிரோமணிக்குப் பொன்னாடையாய் மாறி அலங்கரித்தது. பளபளக்கும் தீ நாக்குகள், ஹோலிகாவை உள்வாங்கி உண்டன.

'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தைச் சிக்கெனப் பிடித்த பக்தருள் உத்தமன் பிரகலாதன், சுடச் சுட ஒளிரும் பசும் பொன் போல், தீ நடுவே தேஜஸூடன் வீற்றிருந்தான்.

'ஹோலிகா தகனம்' நடந்து நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாகவே 'ஹோலிப் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. நாம் தென்னாட்டில் செய்யும் சொக்கப்பனை வழிபாடு போல், ஹோலி தினத்திற்கு முதல் நாள் இரவில் பெரிய அளவில் தீ வளர்த்து, அதனுள், பசுஞ்சாண உருண்டைகளை எறிந்து தீமை அழிந்ததைக் கொண்டாடுவர். ஹோலி தினம், வண்ணங்களின் திருவிழா. எத்தனை எத்தனை நிறங்கள் உண்டோ அத்தனை நிறங்களும் எங்கெங்கு நோக்கினும் தென்படும். வண்ணப் பொடி தூவி வாழ்த்தும் விளையாட்டு, இப்போது காலமாற்றத்தால் தேசமெங்குமே கொண்டாடப்படுகிறது.


ஆனால் முற்காலத்தில், இப்படி வண்ணப் பொடி தூவி விளையாடும் வழக்கம் ஏற்பட்டதில் ஒரு காரணம் இருக்கிறது. இந்தப் பண்டிகை கொண்டாடும் கால கட்டத்தில்,  சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாறுதல்களால், காய்ச்சல் போன்ற நோய்கள் வரக்கூடும்.   இயற்கை வண்ணங்களான, சந்தனப் பொடி, வேம்புப் பொடி, மஞ்சள், இலைகள், பூக்கள் ஆகியவற்றை காய வைத்து அரைத்து எடுக்கப்பட்ட பொடிகளையே பயன்படுத்துவது அக்கால வழக்கம். இவை யாவும் மருத்துவ குணங்கள் கொண்டவை. நோய் தீர்க்கும் சக்தி படைத்தவை.  இன்றோ செயற்கை வண்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இப்பண்டிகை வடஇந்தியாவின் சில பகுதிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் 'ஹோலிகா' என்ற அரக்கியை அழித்ததைச் சிறப்பிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.

காமன் பண்டிகை:
'காமன்'  என்னும் பெயர் காதற்கடவுளாக அறியப்படும் மன்மதனைக் குறிக்கும். வசந்தன்,அனங்கன்,அன்பன் என்னும் பல்வேறு பெயர்களால் அறியப்படும் மன்மதன், இரதி என்னும் தன் துணையோடு சேர்ந்து, இவ்வுலக உயிர்களின் பிறப்புக்குக் காரணமான காதலுணர்வை ஏற்படுத்தி, உலக இயக்கத்திற்குத் துணை புரிகிறான்.

காம தேவன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு, பின் உயிர்ப்பிக்கப்பட்ட புராணத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சூரபன்மனால் கொடுந்துயரம் அனுபவித்தன‌ர் இந்திராதி தேவர்கள்.  தேவர்களின் தலைவனான தேவேந்திரன், இந்த இன்னல் நீங்க வேண்டி சிவனாரை குறித்துத் தவம் செய்தார். அத்தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், தேவேந்திரன் முன் தோன்றி, தம் அம்சமான சிவ குமாரனால் சூரன் வதம் செய்யப்படுவான் என அருளினார்.

அதன் பின் சில காலம் கழிந்தது. முற்பிறவியில் தாக்ஷாயணியாகப் பிறந்து, தக்ஷனின் யாக குண்டத்தில் வீழ்ந்து மடிந்த சக்தி தேவி, இமவான் பெற்ற வரத்தின் பலனாக,  'பார்வதி'   என்ற திருநாமத்துடன் இமவான் மகளாகப் பிறந்து, இறைவனை மணம் புரிந்து கொள்ள வேண்டி தவம் இயற்றி வந்தார். சிவனார், திருக்கயிலாயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக மோன நிலையில் வீற்றிருந்து அருளினார்.

சிவனாரின் மோனத் தவம் கலைந்தாலே விரைவில் சிவ பார்வதி திருமணம் நடைபெறும், சிவகுமாரனான எம் பெருமான் முருகவேள் அவதரித்தருளுவார் என்பதால்,  அதற்கு ஆவன செய்ய வேண்டி, மன்மதனை இந்திராதி தேவர்கள், சிவனாரிடம் அனுப்பத் திட்டமிட்டனர். மன்மதன் முதலில் மறுத்தான். ஆனால் அதன் பின், தேவர்களின் கட்டாயத்துக்காக இசைந்தான். திருக்கயிலை சென்று, மோனத் தவத்தில் மூழ்கி இருக்கும் எம்பெருமானின் மேல் மலர்கணையை எய்தான்.

அண்டமெல்லாம் நடுங்க, எம்பெருமானின் நெற்றிக் கண் திறந்தது. சிவனாரின் கோபாக்கினி, நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டது. காமன் எரிந்து சாம்பலானான்.

தன் கணவனான மன்மதனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு, இரதி தேவி பதறி அழுதாள்.  தேவர்களும், மன்மதனின் மனைவியான இரதி தேவியும், சிவனாரை வணங்கித் தொழுது, மன்னிப்பு வேண்டினர். மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்கக் கோரினர். சிவனாரும் அதற்கு இசைந்து, தம் திருமண நன்னாளில், மன்மதனை உயிர்ப்பிப்பதாக வாக்களித்தார்.

அதன்படியே, உமா தேவியாரை இறைவன் மணந்த நன்னாளில், இரதி, உலக உயிர்கள் அனைத்தையும் பெற்ற உமாபதியான இறைவன் முன் விழுந்து பணிந்தாள்.
தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி
இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து
மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல்
பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள்.(கந்த புராணம்)

இறைவனும் காமனை உயிர்ப்பித்து, 'இரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் அனங்கனாக (அங்கம் இல்லாதவனாக)இருப்பாய்' என அருளினார். இவ்வாறு, காமதேவன் தகனம் நடந்த திருநாளே காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. இதை பத்து முதல் பதினாறு நாட்கள் கொண்ட திருவிழாவாகச் சிறப்பித்து, நிறைவு நாளன்று, காமதேவன் உயிர் பெற்ற திருநாளைக் கொண்டாடி மகிழ்வது பழங்கால வழக்கம்.

காமன் பண்டிகை, பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்று. பழந்தமிழ் நூல்கள் யாவும் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன். 

”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே”  என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.

இளங்கோவடிகள், இப்பண்டிகை பற்றி சிலம்பில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். ஊர்காண் காதையில் காமவேள் என்னும் மன்மதனைச் சிறப்பிக்கும் விழா 

வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” என்று குறிக்கப்படுகிறது.

காமன் வழிபாடு, பாவை நோன்பின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. தான் விரும்பும் துணையை அடையவும், கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்து விழாவாகவும் காமன் பண்டிகை இருந்ததை, நாச்சியார் திருமொழியின் மூலம் அறியலாம். ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, காமன் பண்டிகை கொண்டாடும் முறையை விரிவாகத் தருகிறது.
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண்டலமிட்டுமாசி முன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்க தேவா
உய்யவு மாங்கொலோ வென்று
சொல்லி உன்னையு மும்பியையும்
தொழுதேன் வெய்யதோர் தழலுழிழ்
சக்கரக்கை வேங்கட வற்கென்னை
விதிக்கிற்றியே.......’  என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், தம் இல்லத்தை மெழுகித் தூய்மை செய்து, புது மணல் பரப்பி கோலமிட்டு, அனங்க தேவனான காமனை வழிபாடு செய்து, தம்மை திருவேங்கடப்பெருமானுக்கு வாழ்க்கைப்பட உதவுமாறு வேண்டுகிறார்.

கிட்டத்தட்ட மறந்து, மறைந்து விட்ட இப்பண்டிகை, இப்போது, பழங்குடியினரில் சில இனத்தினராலும், இலங்கையிலும் மட்டுமே இப்போது கொண்டாடப்படுகிறது.

பழங்குடியினரில் சில இனத்தவர், பத்து நாட்கள், காமன் கதை படித்து, இரவெல்லாம் 'காமன் கூத்து ' எனும் நாடகம் ஏற்பாடு செய்து நடத்தி, பத்தாம் நாள் இரவு (அநேகமாக அது பௌர்ணமி தினமாக இருக்கும்), காம தகனம் நடைபெற்றதை ஒட்டி, காமதேவன் உருவ பொம்மையை எரித்து விட்டு, அன்றிலிருந்து மூன்றாம் நாள் அதிகாலை, பச்சை மரக் கன்று ஒன்றை, காம தேவன் உருவ பொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்பெற்றதற்கு அடையாளமாக நட்டு வைத்து வழிபடுகிறார்கள். இது போல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு  விதமாகக் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கணவன், மனைவி ஒற்றுமை அருகி வரும் இப்போதைய கால கட்டத்தில், காமன் பண்டிகை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும். அன்றைய தினம், உமையோடு கூடிய சிவனாரின் திருவுருவப்படத்திற்கு வழிபாடு செய்து,  அதன் பின், கரும்பிலோ அல்லது மன்மதனின் உருவப்படம் இருந்தால் அந்தப் படத்திலோ, காம தேவனை ஆவாஹனம் செய்து பூஜிப்பது கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்த உதவும்.


இந்த வருடம்,ஸ்ரீராமர், -சீதை, திருமுருகன் -தெய்வானை, ஸ்ரீஆண்டாள் -திருவரங்கநாதர் முதலான‌ தெய்வத் திருமணங்கள் பல நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளை ஒட்டியே காமன் பண்டிகை வருகிறது. திருக்கல்யாண உற்சவங்களில் பங்கு கொள்வதும், அச்சமயம், இறை மூர்த்தங்களுக்கு கல்யாண மாலை சாற்றி வழிபாடு செய்வதும் மிகச் சிறந்த புண்ணியப் பலன்களைத் தரும். குறிப்பாக, திருமணம் கை கூட வேண்டுவோரும், மனதுக்கு இசைந்த வாழ்க்கைத் துணை வேண்டுவோரும் நிச்சயம் இந்த வழிபாடு செய்ய வேண்டும். அதனோடு கூட, இல்லத்திலும், இறைவழிபாடு செய்தால், நிச்சயமாக‌ வேண்டிய வரங்களெல்லாம் பெறலாம்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 14 மார்ச், 2013

KAARADAYAN NONBU(14/3/2013)....காரடையான் நோன்பு!.


மாசி மாதமும் பங்குனி மாதமும் சேரும் நேரத்தில் கடைபிடிக்கப்படுவதே, சாவித்திரி விரதம் எனப்படும் காரடையான் நோன்பு.  இந்த நோன்பு நோற்கும் முறைகளைப் பற்றி விரிவாக, என் உருகாத வெண்ணையும் ஓரடையும் பதிவில் எழுதியிருக்கிறேன்.

இந்த வருடம், 14/3/2013, வியாழன் அன்று மாலை சுமார் 3லிருந்து 3.45 மணி அளவில் காரடையான் நோன்பு வருகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில், நமது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருளும் ஸ்ரீ காமாக்ஷி அன்னைக்கு பூஜை செய்வது அன்னையில் ஈடிணையில்லாத அருளைப் பெற்றுத் தரும். பூஜையின் போது அம்பிகையைப் போற்றும் தீர்க்க சௌமாங்கல்யத்தை அளிக்கும் ஸ்லோகம் சொல்லலாம். மிகச் சிறிய ஆனால் மகிமை பொருந்திய துதியான, இதை தினமும் சொல்வது சிறப்பு.  ஸ்லோகத்துக்கு இங்கு சொடுக்கவும்.

அன்று நோன்பு நோற்றவுடன், சத்தியவான் சாவித்திரி விரதக் கதையைப் படிப்பது சிறப்பு.

பொதுவாக, சாவித்திரி சத்தியவான் விரதக் கதை அனைவருக்கும் தெரியும். பெரும்பாலும் சுருக்கமாகவே அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. உண்மையில் சாவித்திரி, தர்மத்தின் ஸ்வரூபமானவரும், 'தர்மராஜர்' என்றே போற்றப்படுபவருமான யமதர்மராஜனிடம் நடத்திய உரையாடல், மிகப் பெரும் ஆன்மீக உண்மைகளையும், நுணுக்கமான ஆன்ம ரகசியங்களையும் உள்ளடக்கியது. 'இதம் சரீரம் க்ஷேத்திரம்' என்பதற்கேற்ப, நம் ஆன்மா, ஒவ்வொரு உடலையும் பிறவியையும் ஒரு க்ஷேத்திரம் போலவே கடந்து செல்கிறது. 'உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இந்த பிறப்பு, இறப்பு சுழலின் நடுவில், ஒருவர் செய்யும் கர்மாக்களின் வகைகள், அவற்றின் பலன்கள் ஆகியவை, ஒருவரின் ஆன்ம யாத்திரையில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவரின் கர்மாக்களைப் பொறுத்தே அவர் மறுபிறவி எடுப்பதோ பரமபதம் அடைவதோ நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய நுண்ணிய ரகசியங்களைச் சொல்லும்அந்த உரையாடலை, இந்தப் பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் ஒரு சுருக்கமான முன்கதை. அஸ்வபதி ராஜனின் திருமகளான சாவித்திரி, தன் விருப்பத்திற்கேற்ப, சத்தியவானைக் கரம் பிடிக்கிறாள். தன் கணவன் அற்ப ஆயுள் உள்ளவன் என்று தெரிந்தும் அவள் உறுதி மாறவில்லை. நாரத மஹரிஷியின் சொற்படி, சாவித்திரி விரதம் இருந்து அம்பிகையை மனமாரப் பூஜித்து வந்தாள். தன் கணவனின் ஆயுள் முடியும் தினமாக, நாரத மஹரிஷி சொன்ன தினத்தில், விறகு வெட்டவும், பழங்கள் சேகரிக்கவும் கானகத்திற்குச் சென்ற கணவனுடன் தானும் உடன் சென்றாள்.

காட்டில் சத்தியவான், விறகு வெட்டும் சமயத்தில், உயிர் துறந்தான். தர்மராஜர், கட்டை விரல் பருமனுள்ள அவன் ஆன்மாவை கட்டி எடுத்துக் கொண்டு சென்றார். அது சாவித்திரியின் கண்களில் தென்பட்டது. தன் கணவனின் உடலை, மிருகங்கள் தீண்டாவண்ணம், இலை தழைகளால் மூடி வைத்து விட்டு, தானும் தர்மராஜரைப் பின் தொடர்ந்தாள்.

அதைக் கண்ட தர்மராஜர், 'பெண்ணே, உன் கணவன் பூவுலகில் வாழும் காலம் நிறைவடைந்து விட்டது. அவன் தன் கர்மாவை அனுபவிக்க என் உலகம் வருகிறான். ஆகவே நீ திரும்பிச் செல்!' என்று கூறினார்.

சாவித்திரி உடனே 'கர்மாவை அனுபவிக்க என்று கூறினீர்களே, கர்மம் என்றால் என்ன? அது எதனால் வருகிறது? என்று கேட்டாள்.

தர்மராஜர் 'பெண்ணே, கர்மங்கள் சுபம், அசுபம் என இரு வகைப்படும். யார் யாருக்கு என்னென்ன கடமைகள் என்பது வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவையே சுபமான கர்மாக்கள். செய்யக்கூடியவற்றைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாதவற்றைச் செய்வதும் அசுபமான கர்மாக்களை விளைவிக்கும். கர்மங்களுக்கு காரண ரூபிணியும், கர்ம பலனைக் கொடுக்கிறவளும் மாயா ஸ்வரூபியான பிரகிருதி தேவியே. பலனை எதிர்பாராது செய்யும் இறைவழிபாடே, கர்மங்களை நீக்கி, பரமபக்தியைக் கொடுக்கும். இவ்வாறு கர்மங்கள் நீங்கியவரை முக்தி அடையச் செய்பவளும், கர்மங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டியவரை மறுபிறவி அடையச் செய்பவளும் பிரகிருதி தேவியே' என்றார்.

சாவித்திரி, 'ஸ்வாமி, எந்த கர்மாக்களினால் ஜீவாத்மாக்கள் பிறவியையும், சொர்க்க நரக வாசத்தையும் அடைகிறார்கள்?' என்றாள்

இதைக் கேட்டவுடன், அவளது அறிவுத் திறனையும் ஞானத்தையும் கண்டு வியந்த தர்மராஜர், மிகுந்த சந்தோஷத்துடன், 'பெண்ணே, உன் ஞானத்தைக் கண்டு மிகுந்த சந்தோஷமடைகிறேன்!!. வேண்டிய வரங்களைக் கேள்!!' என்றார்.

சாவித்திரி, தனக்குத் தன் நாயகனிடத்தில் நூறு பிள்ளைகளும், தன் பெற்றோருக்கு நூறு பிள்ளைகளும், தன் மாமனாருக்குக் கண் பார்வையும், அவர் இழந்த தன் ராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தாள்.

அவள் கேட்டவாறு வரமளித்து, பின், சத்தியவானின் உயிரையும் திரும்பத் தர உவந்த தர்மராஜர், சாவித்திரி முதலில் கேட்ட கேள்விகளுக்குப் பின் வருமாறு விடையளித்தார்.

"சுப, அசுப கர்மாக்களைப் புரிபவர்கள், அதற்கேற்ப முறையே, சொர்க்கத்திலும் நரகத்திலும் வாசம் செய்து, பின் கர்மத் தளையிலிருந்து விடுபடுவதற்காக பூமியில் பிறக்கிறார்கள்.

தனக்கென எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் தான் செய்யும் கர்மாக்களை எல்லாம்,  இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்பவன், தன் ஆயுள் முடிந்ததும் எவ்விதத் துன்பத்தையும் அடைவதில்லை. பிறவித் தளையிலிருந்து விடுபட்டு விடுகிறான்.  அவனே நிஷ்காமன். இதற்கு மாறாக, தான் செய்யும் கர்மாக்களில் விருப்பு வெறுப்பு உள்ளவன் சகாமன்.

சுப கர்மாக்களைச் செய்யும் சகாமர்கள், எந்தெந்த தெய்வங்களிடம் பக்தி செலுத்துகிறார்களோ அந்தந்த தெய்வங்களுக்கான உலகங்களுக்குச் செல்கிறார்கள். தம் புண்ணியப் பலன்கள் நிறைவடையும் வரை அங்கிருந்து விட்டு,  பின் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்".

இவ்வாறு கூறிவிட்டு, சுபகர்மாக்களில் முதன்மையான, தான தர்மங்களின் பலன்களைச் சொல்லத் துவங்கினார்.
தானங்களின் பலன்கள்:
"தானங்களில் சிறந்தது அன்னதானம்.  அன்னதானம் செய்பவர், பருக்கைக்கு  ஒரு வருடம் என்ற கணக்கில் சிவலோக வாசம் பெறுவார். அன்னதானத்திற்கு கால நியமம் என்று ஒன்றுமில்லை. எந்த சமயத்திலும் அன்னமிடலாம்.

கன்னிகாதானம் செய்பவர் பதினான்கு இந்திர காலம் வரையிலும், வஸ்திரங்கள், தங்கம் வெள்ளி முதலானவற்றை தானம் செய்பவர் ஒரு மன்வந்திரம் வரையிலும் சந்திரலோகத்தில் வாசம் செய்வார்கள்.

பூமியைத் தானம் செய்பவர்கள், சந்திர சூரியர் இருக்கும் வரையிலும் விஷ்ணு லோகத்தில் வாசம் செய்வார்கள். குளம் போன்ற நீர் நிலைகளை ஏற்படுத்துபவர்களும், அவற்றைத் தூர் வாரி சுத்தம் செய்பவர்களும், ஜனலோகம் என்ற உயர்ந்த லோகத்தை அடைவார்கள்.  நந்தவனத்தை தானம் தருபவர் துருவ லோகத்தை அடைவார்.

தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகளின் பலன்கள்:
இறைவன் கோவில் கொண்டருளும் ஆலயங்களுக்குச் செய்யும் சேவைகளும் இணையில்லாத நற்பலன்களை அளிக்கும். கோவிலுக்கு பல்லக்கு, சப்பரம் முதலியவை செய்து அளிப்பது சொர்க்க வாசம் பெற்றுத் தரும். இறைவன் திருவீதி  உலா வரும் வீதிகளைச் செப்பனிட்டுத் தருபவர், ஆயிரக்கணக்கான வருடங்கள் இந்திர லோக வாசம் செய்வார்கள். பசு தானம் செய்பவர்கள் கோலோகத்தையும், கஜ(யானை) தானம் செய்பவர்கள் இந்திரனுக்குச் சமமான நிலையையும், வெண்சாமரம் அளிப்பவர் பதினாயிரம் வருடம் வாயுலோக வாசத்தையும் பெறுவார்கள்.

இறைவனுக்கு டோலோற்சவம் செய்பவர் பரமபதத்தை அடைவர். தேவி உபாசகர்கள், ஸ்ரீ லலிதா தேவியின் இருப்பிடமான மணித்வீபத்தில், அம்பிகையின் ஸ்ரீபாத சேவையில் இருப்பார்கள். சித்திரை, மாசி மாதங்களில் சிவபூஜை செயபவர்கள், சிவலோகத்தை அடைவர்.  ஸ்ரீராமநவமியை பக்தியுடன் அனுஷ்டிப்பவர்கள் ஏழு மன்வந்திரங்கள் விஷ்ணு லோக வாசம் செய்து, பின்  பூவுலகில் ராமபக்தராய் அவதரிப்பார்கள். ஏகாதசியன்று விஷ்ணு ஆராதனை செய்பவர், பிரம்மதேவரின் ஆயுள் பரியந்தம் விஷ்ணு லோக வாசம் செய்து, பின் பூவுலகில் கிருஷ்ண பக்தராய்ப் பிறந்து கோலோகத்தை அடைவார்கள்.

ஞாயிறு, மாதப்பிறப்பு, சுக்கில பக்ஷ சப்தமி ஆகிய தினங்களில் சூரியனை ஹவிஸூடன் ஆராதிப்பவர்கள், பதினான்கு இந்திரர் காலம் வரை சூரிய லோக வாசம் பெறுவர். அதன் பின், நல்ல தேக ஆரோக்கியம் கொண்டவராக பூமியில் பிறப்பார்கள். மாசி மாதம் சுக்கில பஞ்சமியில் சரஸ்வதி தேவியை ஆராதிப்பவர்கள், பிரம்மனின் ஆயுள் பரியந்தம் மணித்வீபத்தில் வாசம் செய்து, பின் பூமியில் ஸ்ரீ விஷ்ணுவின் தேஜஸூடன் விளங்குவர்.

ஹரிநாம சங்கீர்த்தனத்தை நாராயண க்ஷேத்திரத்தில் செய்பவர் விஷ்ணுலோகத்தை அடைவர்.  மண்ணால் ஆன லிங்கத்தை பூஜிப்பவர்கள், ஒரு மண் துகளுக்கு ஒரு வருடம் வீதம் சிவலோக வாசம் செய்வார்கள். தீர்த்த யாத்திரை செய்பவர்கள், பரமபதத்தை அடைவார்கள்.

அம்பிகையைப் பூஜித்துத் தொழும் தேவி யக்ஞமே, யக்ஞங்களுள் தலை சிறந்தது. மும்மூர்த்திகளும், திரிபுர சம்ஹார நேரத்தில்  இந்த யக்ஞத்தைச் செய்து ஜகன்மாதாவின் அருளைப் பெற்றார்கள். இதைச் செய்தே, தக்ஷப்பிரஜாபதி அம்பிகையை மகளாகப் பெற்றார்.

புண்ணிய தீர்த்தங்களுள் கங்கை, பரிசுத்தமானவற்றுள் விபூதி, விரதங்களுள் ஏகாதசி, நக்ஷத்திரங்களுள் சந்திரன்,  வனங்களுள் பிருந்தாவனம், சம்பத்துக்களுள் லக்ஷ்மி தேவி, வித்தையோடு கூடியவர்களுள் சரஸ்வதி, பதிவிரதைகளுள் துர்க்கை, சௌபாக்யவதிகளுள் ராதை எவ்வாறு சிறப்பாகக் கருதப்படுகின்றனவோ அவ்வாறு தேவி யக்ஞம் யக்ஞங்களுள் சிறப்பாகப் போற்றப்படுகிறது".

இவ்வாறு தர்மராஜர் கூறி, சாவித்திரியை, தன் கணவனுடன் திரும்பிச் சென்று நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்குமாறு ஆசீர்வதித்தார்.  அப்போது சாவித்திரி, யமதர்மராஜரை, மிக மகிமை வாய்ந்த 'யமாஷ்டகத்தால்' துதித்தாள். யமதர்மராஜரின் திருநாமங்களையும் மகிமைகளையும் போற்றும்  யமாஷ்டகம், எப்பேர்ப்பட்ட பாவங்களிலிருந்தும் விடுபடச் செய்யும் மகத்தான ஸ்லோகம். யமாஷ்டகத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்.

சாவித்திரி பின், அசுப கர்மாக்களின் விளைவான நரக தண்டனைகள் குறித்தும், பிரளய காலத்தில் உயிரினங்கள் பரம்பொருளிடம் ஒடுங்கும் விதம் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தாள்.

பின், தர்மராஜரை வணங்கி தன் இருப்பிடம் திரும்பிய சாவித்திரி, தான் பெற்ற வரங்களின் பலனாக, ராஜ்யம், நன்மக்கள், சகோதரர்கள், என அனைத்தையும அடைந்து, சகல சௌபாக்கியங்களையும் பெற்றவளாக நீண்டகாலம் வாழ்ந்தாள்.

சாவித்திரி சத்தியவான் கதை, பெண்களின் மனவுறுதியையும் எதையும் சாதிக்கும் திறனையும் கோடிட்டுக் காட்டும் ஒரு சரித்திரமாகவே கருதப்படுகிறது. காரடையான் நோன்பு தினத்தில், இதைப் படிப்பது, தெய்வீக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு மிகப் பெரும் பலம் அளிப்பதாக இருக்கிறது. 

காரடையான் நோன்பு தினத்தன்று, விரத நியமங்களுடன் அம்பிகையைப் பூஜித்து, 

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
ஆதார நூல்கள்: ஸ்ரீ தேவி பாகவதம், ஸ்ரீமத் பாகவதம், பவிஷ்ய புராணம்.

சனி, 9 மார்ச், 2013

SIVA LINGA MAHIMAI...சிவலிங்க மகிமை(சிவராத்திரி தின (10/3/2013)சிறப்புப் பதிவு)


நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

திருகயிலை வாசனான எம்பெருமான் சிவனின் ஆராதனைக்குரிய தினங்களுள் முக்கியமானது 'மஹா சிவராத்திரி'.

சிவராத்திரி தினத்தில், சிவலிங்க பூசனையும், சிவ நாம ஸ்மரணையும், சிவமஹிமை கூறும் சிவமஹாபுராணம், இலிங்கபுராணம், திருமறைகள், திருமுறைகள் முதலியவை ஓதுதலும் மனித வாழ்வின் மேன்மைக்கு உதவும் முக்கிய சாதனங்களாகும்.

சிவலிங்கத்தின் மகிமை:
இவ்வுலகின் ஆதி தோற்றுவாய், இலிங்கமே என்று இலிங்க புராணம் போற்றுகிறது. இலிங்கம், பரப்பிரம்மத்தின்  உருவமில்லா நிலையைக் குறிப்பதாகும். இலிங்க உபாசனை, நிர்க்குணப் பிரதானம் என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணபரமஹம்சரும் குறிக்கிறார். சிவலிங்கத் தோற்றமே, ஒரு விதையின் உருவம் போல் அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வுலகத் தோற்றத்திற்குக் காரணமான வித்தே இறைவன் என்பதன் குறியீடே சிவலிங்கமாகும். சிவலிங்கத்திலிருந்தே, அனைத்துத் தெய்வங்களும் தோற்றமாயின.

ஸ்ரீ விஷ்ணுவுக்கும் பிரம்மதேவருக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற விவாதம் வந்த போது, சிவனார், விண்ணும் மண்ணும் அளாவிய பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். விவாதத்தை நிறுத்தி விட்டு, இந்த ஜோதி லிங்கம் எங்கிருந்து உண்டானது என்பதை அறிவதற்காக, ஸ்ரீவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு செல்ல, பிரம்ம தேவர், அன்னபட்சியின்(ஹம்ஸம்) ரூபம் எடுத்துக் கொண்டு, ஜோதியின் மேல் நோக்கிச் சென்றார். அந்த ஜோதிப் பிழம்பே இலிங்க ரூபமாக நிலை கொண்டதென்று  சிவமஹாபுராணம் போற்றுகிறது.

அவ்வாறு லிங்கோற்பவம்(இலிங்க உற்பத்தி) ஆன தினமே சிவராத்திரி.
அரியும் யானும் முன்தேடும்
    அவ்அனல்
கிரியெனும்படி நின்றதால்
    அவ்வொளி கிளர்ந்த
இரவதே சிவராத்திரி யாயின
    திறைவள்
பரவி உய்ந்தனர் அன்னதோர்
    வைகலில் பலரும்
----(கந்தபுராணம், தக்ஷகாண்டம்.)

இலிங்கம் பிரணவத்தின் ஸ்வரூபமே என்கிறார் திருமூலர் பெருமான்.
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.(திருமந்திரம்)

பாணலிங்கம்:
திருக்கோவில்களில், சுயம்புலிங்கமாக சிவனார் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அவற்றுள்ளும் தனிச்சிறப்பு மிக்கவை பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள். 

இல்லங்களில் வழிபாடு செய்யப்படும் இலிங்க உருவங்களில், பாணலிங்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. இது நர்மதை நதியின் ஓங்கார குண்டத்திலிருந்து பெறப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் சாளக்கிராம மூர்த்தம் போல், பாணலிங்கத்தில் எப்போதும் சிவசாந்நித்யம் நிறைந்துள்ளது. இதில் இயற்கையிலேயே பூணூல் அணிந்திருப்பது போன்ற(குறுக்காக) ரேகை படர்ந்திருக்கும். ஒரு பாணலிங்கம், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. இதைப் பூஜை செய்வது சிவசாயுஜ்ய நிலையைப் பெற்றுத் தரும்.

சிவலிங்க பூஜையின் மகிமை:
அரியும் அயனும் தத்தம் இருதயத்தில் எப்போதும் சிவபூஜையே செய்கின்றார்கள் என்று சிவமஹாபுராணம் கூறுகிறது. எப்பேர்ப்பட்ட துக்கம் வரினும், சிவபூஜை செய்ய அது ஒழிந்து போகும். ஜென்ம ஜென்மாந்திரப் பாவங்களையும் தீர்க்க வல்லது சிவபூஜையே ஆகும்.

சிவனாருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று ஒருவர் நினைத்த மாத்திரத்தில், தன் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவார். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தவர், தன்னோடு சேர்த்து, தன் எட்டுத் தலைமுறை பித்ருக்களையும் புனிதப்படுத்தி, சிவசாயுஜ்யம் பெறச் செய்வார்.

தேவர்களும் பூஜிக்கும் இலிங்க ரூபத்தின் அபிஷேகத்திற்கு, அபிஷேகப் பொருட்களை அளிப்பவர், ஆயிரம் பசுக்களைத் தக்கவருக்குத் தானம் செய்த புண்ணியப் பலனைப் பெறுவர்.

சிவலிங்கத்தை மனமார ஒருவர் பூஜிப்பாராயின் அவர் தேவர்களும் அடைதற்கரிய போகங்களை அனுபவித்து, இறுதியில் சிவசாயுஜ்ய நிலையை அடைவார் என்று சிவமஹாபுராணம் கூறுகிறது.

சிவராத்திரி மகிமை:
'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து  பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

திங்கட்கிழமையன்று, அமாவாசை திதி அறுபது நாழிகையும் இருந்தால் அது யோக சிவராத்திரி எனச் சிறப்பிக்கப்படும். அது சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் மிக உகந்த தினமாகக் கருதப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை(11/3/2013) அமாவாசை திதி வருகிறது. அன்று அஸ்வத்தப் பிரதட்சணம்/அமாசோம விரதம் செய்வது மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். அதன் விதிகளைப் பற்றி, அஸ்வத்தப்(அரசமர) பிரதட்சணம், அமாசோம விரதம் பதிவில் எழுதியிருக்கிறேன்.

ஒரு முறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின் படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினமே மஹா சிவராத்திரி.

தேவர்களும் அசுரர்க‌ளும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்க வேண்டி சிவனார் அருந்தினார்.  உடனே,அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தை பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகமுழுவதிலும் வியாபித்திருப்பவர். ஈரேழு பதினாலு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன. ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு 'திருநீலகண்டன்' என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப்  பிறக்க அருள் செய்தார்.

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில்    நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும். இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறு நாள் காலை பாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் அப்பி, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். (கந்த புராணம்)
சிவராத்திரி தினத்தன்று, எம்பெருமானைப் பூஜித்து, சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

வியாழன், 7 மார்ச், 2013

SAIVAMUM TAMILUM.....சைவமும் தமிழும்.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். (திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணம்) 

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. (திருமூலர், திருமந்திரம்)

பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனாம் சிவபெருமானை ஆதியும் அந்தமும் நடுவுமாய்த் தொழும் சைவ சமயத்தைப் பற்றி, நானறிந்த வரையில் இக்கட்டுரையில் சொல்லப் புகுகின்றேன். 

மானிட வாழ்வை நல்வழிப்படுத்தி, அந்த உயிரைப் பரிபக்குவ நிலைக்கு இட்டுச் செல்வதே சமயம் ஆகும் இந்து சமயம் என்பது சைவ சமயமே என்பது சைவ சித்தாந்த வழி நடப்போரின் துணிபு. உலகளாவியது இச்சமயம்.  . சிவனாரை முதன்மைப் படுத்தி வணங்குவதால், 'சிவசம்பந்தம்' பெற்றது என்னும் பொருளில் சைவம் என்று போற்றப்படும் இந்தச் சமயம் அநாதியானது. அதாவது தொடங்கிய காலம் அறிய இயலாதது. சைவசித்தாந்தம் என்னும்   மிகவுயர்ந்த உன்னத நெறி, சைவ சமயத்தின் உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.

சிவனாரை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுவோரே சைவர். இறைவன், அனைத்தையும் தாமே அறியும் பேரறிவு உடையவன். அவர் ஒருவரே பதி.  இறைவன் எண்குணத்தான். 

எண்குணமாவன, தன் வயம் உடைமை,  தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை , முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவையாம்.

சைவ சித்தாந்தத்தின் படி,  உயிர்கள் அநாதியானவை.  அவை  அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன.  இறைவனானவர் அவற்றைப் படைப்பதில்லை.  இறைவன் கருணை வடிவானவர்.  நாம் படைக்கப்பட்டதாலேயே, இவ்வுலகில் துயருறுகிறோம். அவ்வாறிருக்க, அவர் நம்மைப்படைத்து,  துன்பத்தில் உழலவிட்டார் எனில் அவர் எங்ஙனம் கருணைக்கடலாயிருத்தல் சாத்தியம்?. ஆகவே ஆன்மாக்களை இறைவன் படைக்கவில்லை. 

ஆனால் அவற்றின் மும்மலங்களை நீக்கும்  பொருட்டு, தநு, கரண, புவன போகங்களைப் படைத்தல், படைத்தவற்றைக் காத்தல், மீண்டும் அவற்றை ஊழிக்காலத்தில் ஒடுக்குதல், ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல், வீடுபேறாகிய முத்தியின்பத்தை அருளல் ஆகிய ஐந்தொழில்களைப் புரிகிறார்.

ஒருவனு மேஉலகு ஏழும் படைத்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் அளித்தான்
ஒருவனு மேஉலகு ஏழும் துடைத்தான்
ஒருவனு மேஉலகு ஓடுஉயிர் தானே. (திருமூலர், திருமந்திரம்)

தநு, கரணம், புவனம் போகம் ஆகியவற்றின் பொருள், முறையே, 
தநு= உடல், 
கரணம்=புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம்(மனம், புத்தி) முதலியன, 
புவனம்= வினையை அறுவடை செய்யும் களமாக உள்ள இந்த உலகம்,
போகம்= அனுபவிக்கப்படும் பொருள்.

சிவனார், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறார். இதுவே சைவசித்தாந்தம் காட்டும் அத்துவிதம் (இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு) ஆகும். 

“அவையே தானேயாய், இருவினையின்
 போக்கு வரவு புரிய ஆணையின்
 நீக்கமின்றி நிற்கும் அன்றே”        (சிவஞானபோதம்)

சைவ சித்தாந்தம், பசு,பதி, பாசம் என்னும் மூன்று பெரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கியது.

பசு= ஆன்மா
பதி= இறைவன்
பாசம்= ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். திரோதானம், மாமாயை ஆகியவற்றைச் சேர்த்து ஐவகை மலங்களாகக் கொள்வதும் உண்டு.

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.  (திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)

அரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல்  மனித ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.

ஆணவம்: நான், என்னுடையது எனும் கருத்தே ஆணவமாகும். இது சகஜ மலம் என்று கூறப்படுகிறது ஆணவமலம், பிறக்கும் போதே, ஆன்மாவோடு சேர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, ஆன்மா உடலெடுத்து, எங்கும் சென்று, எதையும் செய்ய இயலும்.

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.  (திருமூலர், திருமந்திரம்)

 உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார்.  இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார்.  சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு கன்மமும் மாயையும் ஆகந்துக மலம் (இடையில் சேர்க்கப்பட்டது) எனப்படுகிறது. 

கன்மம் என்பது,  ஆன்மாக்கள் பிறவியெடுத்துச் செய்த புண்ணிய பாவங்கள்(நல்வினை, தீவினையாகிய இரு வினைகள்). நல்வினை, தீவினைக்கேற்ப பலனளிப்பவர் இறைவனே.

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
(நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்பெருமான் தேவாரம்).

ஒவ்வொரு பிறவியிலும் இவ்வாறு சேர்ந்த கன்மங்கள் சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இந்த சஞ்சித கன்மங்கள், இன்ப துன்பங்களைத் தந்து பயன்படும்பொழுது பிராரத்தம் எனப் பெயர் பெறும்.  மனம், வாக்கு, காயம் இவற்றால், எடுத்த பிறவியில் செய்த இருவினைகள் ஆகாமியம் எனப் பெயர் பெறும். மூலகன்மம் நுண்வினை. மற்ற மூன்று வினைகளும் பருவினை எனப்படுகிறது.

ஒரு விதையில் மரமும், மரத்தில் விதையும் தொடர்ந்து வருவது போல், கன்மம், ஆன்மாக்களைத் தொடரும்.

உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின்
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும்
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின்
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல்.    (அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார்  )

செய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன்
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில்
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. (சிவஞான சித்தியார்)

மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது. 

அஞ்ஞா னம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பய
மாவேழ் குணமும் மாயைக் கருளினை
இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும்
விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த (இருபா இருபஃது, அருணந்தி சிவாச்சாரியார்)

சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என  மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்றன.

மும்மலங்களின் அடிப்படையில் சீவர்கள் மூவகைப்படுவர். ஆணவமலம் மட்டும் உடையவர், விஞ்ஞானகலர். ஆணவம், கன்மம் என்ற இருமலமுடையோர் பிரளயாகலர். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலமுடையோர் சகலர் ஆவர்.

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. (திருமூலர், திருமந்திரம்)
வீடுபேறாகிய முத்தி நிலை: 
வீடு பேறு என்பது உயிர்கள், மும்மலம் நீங்கப்  பெற்று  சிவனாரின் திருவடிகளில்  கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். 'திருவடிகளில் கலந்து' என்று சொல்லப்பட்டாலும்   சிவனாரின் அடிமையாய்,  ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றலில்லாமல் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையே இது. முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவா நிலையை அடைகின்றன.

முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதன் மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.

ஆணவ மலத்தின் ஆற்றல், உயிரின், இச்சை, செயல்களை மறைக்க இயலாமல் நிற்கும் நிலையே மலபரிபாகம் எனப்படும். உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.

மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா (குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு).

(பொருள்: மலபரிபாகம் வரும்வரை, உயிர்கள், பலநாள் அலைப்புண்டு உழலும்)

மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.
புண்ணியம், பசுபுண்ணியம், பதி புண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியமாகிய சிவ புண்ணியமே, சத்திநிபாதத்தின் பயன்.

சிவபெருமானை நினைந்து, அவரை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் அனைத்தும் பதி புண்ணியம். அவ்வாறில்லாமல் செய்யப்படும் நற்செயல்கள், பசு புண்ணியம் ஆகும். பசு புண்ணியத்தின் பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியம் அவ்வாறு அழிவதில்லை.

பிற உயிர்களுக்குச் செய்யும் நற்செயல்களை, இறையருளால் செய்வதாக நினைந்து செய்யும்போது அது பதிபுண்ணியம் ஆகி விடுகிறது.

இறையருள் கிடைப்பதற்கு உயிர்கள் செய்கிற முயற்சியே சமயநெறியாகும். சமய நெறிகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் (சிவஞான சித்தியார்)

சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாத(தாச) மார்க்கம் ஆகியவற்றை  

சரியை (உடலால் வழிபடுவது), கிரியை(உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது), யோகம் (உள்ளத்தால் வழிபடுவது), ஞானம் (எங்கும் இறையருட்கருணையையே காண்பது) என்றும் கூறுவர்.

தாதமார்க்கம் (சரியை): திருக்கோவிலுக்கும், அக்கோவிலில் உறைகின்ற இறையனாருக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்வதே இந்த நெறி. இதன் மூலம், சாலோகம்(இறைவனுடைய உலகம்) செல்லுகின்ற பேறு கிட்டும்.

சற்புத்திர மார்க்கம்(கிரியை):  இது இலிங்கத் திருமேனிக்கு, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றினாலும் அகத்திலும் புறத்திலும் செய்து வழிபடுதல் ஆகும். இந்நிலையில் இறையனாருக்கு அபிடேகம் செய்தல் போன்ற வழிபாடுகளின் போது மந்திரம் கூறித் துதித்தல் வேண்டும். இவ்வழிபாடு, திருக்கோவிலில் இருக்கும் இலிங்கத் திருமேனிக்குச் செய்யப்படும் போது, பரார்த்தம் எனவும், ஞானாசிரியரிடமிருந்து பெற்ற இலிங்க வடிவத்திற்குச் செய்யப்படும்போது ஆன்மார்த்தம் எனவும் பெயர் பெறும். இதன் மூலமாக, சாமீபம் (இறைவனுக்கு அருகிலிருப்பது) எனும் பேறு கிட்டும்.

சகமார்க்கம் (யோகம்)
இது அட்டாங்க யோகத்தைக் குறிக்கும். அவை, இயமம்( தீய ஒழுக்கங்களை விலக்குதல்) நியமம்( நெறிமுறைகளைக் கடைபிடித்தல்), ஆதனம்(யோகாசனங்கள்), பிரணாயாமம் (பேச்சினை அடக்குதல், மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதல்), பிரத்தியாகாரம்(தான் நினைத்த பொருளின் வடிவாக மாற்றிக் கொள்ளுதல்) தாரணை(மனத்தை ஒருநிலைப்படுத்துதல்), தியானம் (இறைவனை ஒளி வடிவினனாக எண்ணுதல்), சமாதி (அந்நினைவில் தன்னை மறந்திருத்தல்) ஆகியவை ஆகும்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. (திருமூலர், திருமந்திரம்)

இதன் மூலம், சாரூபம்(இறைவனின் உருவ அடையாளங்கள்) பெறலாம்.

சன்மார்க்கம் (ஞானம்): பசு, பதி, பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி தெளிவாக உணர்வதால் மும்மலம் நீங்கி ஞானம் கிடைக்கும். 

ஞானநூல் தனை ஓதல், ஓது வித்தல்,
நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை (சிவஞான சித்தியார்)
திருமறையாகிய வேதம், 28 சிவாகமங்கள், புராணங்கள், சமயக்குரவர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலியோர் அருளிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் ஆகியவற்றை  ஓதுதல், ஓதுவித்தல், சைவசித்தாந்தப் பொருள்களைத் தக்கவரிடத்து கேட்டல், கேட்பித்தல், இறைவனாரைச் சிந்தித்தல் ஆகிய ஐந்தும் சாயுஜ்ய நிலை (இறையருளை முழுமையாகப் பெறும் நிலை) தரும் ஞானமார்க்கமாம். இதில் சாயுஜ்ய நிலை 'பரமுத்தி' எனவும் ஏனைய மூன்றும் 'அபரமுத்தி'  எனவும் கூறப்படுகின்றன.

(வேதங்கள் போற்றித் துதிக்கும் வேதநாயகனான சிவபெருமானை, நிர்குணப் பரம்பொருளென புகழ்ந்து தொழும் வேத ஸார சிவ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்).

சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை,  ஆண்டான் அடிமை போன்றதாகும்(திருநாவுக்கரசர் பெருமான்). கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றதாகும்(திருஞானசம்பந்தப் பெருமான்). யோக நெறியில், இரு தோழர்களுக்கு இடையேயான உறவைப் போன்றது(சுந்தரர் பெருமான்). ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்(மாணிக்கவாசகர் பெருமான்).

ஒரு நற்குருவை நாடி, மேற்கூறிய மார்க்கங்களைக் (ஞானம் தவிர்த்து) உணர்த்தும்படி வேண்டுதல் வேண்டும். அவ்வாறு உணர்த்துபவர் 'கிரியா குரு' ஆவார். ஞானத்தை சிவனார் ஒருவரே உணர்த்த வல்லவர் ஆதலின் அவரே ஞான குரு ஆவார்.

மேற்கூறிய மார்க்கங்களில்,  உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரியாகுரு சரியை முதலியவற்றை, 'தீக்கை' (தீக்ஷை ,பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல்) அளித்து உணர்த்துவார். 

தீக்ஷை சபீசம்(ஓதியுணர்ந்த உத்தமர்களுக்குச் செய்வது), நிர்பீசம் (எழுபது வயதுக்கு மேற்பட்டோர், வியாதியாளர்கள், யோகத்தின் பால் ஈடுபாடுடையோர் முதலியோருக்குச் செய்யப்படுவது) என இருபெரும் வகைப்படும் அது சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகை முறைகளில் ஆசாரியரால் தரப்படும்.

தீக்ஷைகளில் சமய தீக்ஷை , விசேட தீக்ஷை, நிருவாண தீக்ஷை ஆகிய மூன்றும் முக்கியமானவையாகும்.

இதில் சமய  தீக்ஷை, 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணும் முறையைக் கற்பிக்கிறது. இது சைவ சமயத்தில் நுழைவதற்குத் தரும் அனுமதிச் சீட்டுப் போன்றதாகும். விசேட தீக்ஷை, அன்றாடம் சிவபூசனையைச் செய்யும் நெறியைக் கைக்கொள்ளச் செய்கிறது. நிருவாண  தீக்ஷை, பாசபந்தம் அனைத்தையும் நீக்கி, சிவனார் திருவடியை அடையச் செய்வதாகும். இது சிஷ்யனின் பக்குவமறிந்து செய்யப்படுவது.

சிவனார் தம் உடலில் சரிபாதியாக விளங்கும் உமாதேவியாரோடு, திருக்கயிலையில் வாசம் புரிகிறார். திருக்கோவில்களில் இலிங்க உருவில் பேரருள் புரிகிறார். சுயம்பு லிங்கங்கள் தோறும் மூர்த்திகரித்திருக்கிறார். அன்பே சிவமாகி, சிவமே அன்பாகி நின்று விளங்குகிறார்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம் மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.

சைவத்தில் வீரசைவம், காஷ்மீர சைவம் முதலிய பிரிவுகள் பல உண்டு. 63 நாயன்மார்களும் சிவநெறியில் ஒழுகி பிறவாப் பெருநிலை அடைந்தனர். 

சைவசமயம் எந்நாளும் வாழ்வது. அதற்கு சோதனைகள் நேருவது போல் தோன்றுவதெல்லாம் எம்பெருமான், அதன் புகழை ஓங்குமாறு செய்வதற்காகச் செய்யும் திருவிளையாடலே.

சைவ சமயத்தைப் பற்றிய விவரணங்களை ஒரு கட்டுரையில் அடக்குதல் கடலினைக் குடுவைக்குள் அடக்க முயல்வது போன்றதாகும். இதில் உள்ள குற்றங்குறைகளை, படிக்கும் அன்பர்களும் சான்றோர் பெருமக்களும் பொறுத்தருளுவதோடு, மேலதிகத் தகவல்களைத் தந்து என்னை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

 இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

வகுப்பறை(www.classroom2007.blogspot.in) தளத்தில், க்ஷண்மதங்கள் பற்றி  நான் எழுதிய தொகுப்பில் வெளிவந்தது.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.