நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 24 மே, 2013

ARUMUGAN ARULAMUTHU....100TH POST....ஆறுமுகன் அருளமுது..நூறாவது பதிவு.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
(கந்தரலங்காரம்)

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்.......

திருமுருகன்  திருவ‌ருளாலும், உங்கள் அனைவரின் நல்லாசியாலும் பேராதரவாலும் 'ஆலோசனை'யின்  நூறாவது பதிவுவைகாசி விசாகத்துக்கான சிறப்புப் பதிவாக மலர்கிறது.  இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து,  நட்பாகத் தொடர்ந்து வரும்  அனைத்து நண்பர்களுக்கும், வாசகப் பெருமக்களாகிய‌ உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். 'ஆலோசனை' இந்த நிலைக்கு உயர்ந்திருப்பது,  உங்களால் மட்டுமே. நீங்கள் அனைவரும் என் எழுத்துக்களுக்குத் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்தாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. தொடர்ந்து தங்கள் நல்லாதரவை நாளும் எதிர்பார்க்கிறேன்.

தமிழ் மாதங்களில்  இரண்டாவது மாதமான வைகாசி மாதத்திற்கு 'வைசாக மாதம்' என்று பெயர். விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்த நன்னாள், தமிழ்க்கடவுளாம் கந்த வேளின் திருஅவதார தினமாகக் கருதப்படுகிறது.


வைகாசி விசாகம், திருமுருகன் உறையும் திருத்தலங்களில் எல்லாம் சிறப்புறக் கொண்டாடப்படும் திருவிழா. குறிப்பாக, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தலங்களில் இது பாற்குட விழாவாகப் பெரும் மகிழ்வோடு கொண்டாடப்படுகிறது. கோடானு கோடி பக்தர்கள், பாற்குடம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவார்கள். விடியற்காலையில் ஆரம்பமாகும் அபிஷேகம், நடுப்பகல் தாண்டியும் தொடரும்.

'விசாகன்' என்ற பெயருக்கு, 'மயில் மீது ஏறி வலம் வருபவன்' என்றும் பொருள். மயில்வாகனான முருகப்பெருமானின் திருநாமங்களுள் ஒன்று 'விசாகன்'. 

'இன்சொல் விசாகா' என்றே திருப்புகழில் அருணகிரியார் முருகனைப் போற்றுகிறார்.

முருகனின் புகழ் பாடும் எண்ணற்ற துதிகளில் ஒன்று, அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தரனுபூதி.விவரிக்கவொண்ணா மகிமைகள் பொருந்திய இந்தத் துதியின் காணொளியினை கீழே கொடுத்திருக்கிறேன். இதை வலையேற்றிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி. இதைத் தினம் பாராயணம் செய்ய, நிஜமாகவே வாழ்வில் வரவேற்கத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

றுமுகன் அவதார தினம்;
வைகாசி விசாகம், பிரதானமாக, முருகப்பெருமான் அவதார தினமாகவே கொண்டாடப்படுகிறது. ஆதி அந்தமில்ல அருமறை நாயகன், அழகுக் குழந்தையாக சரவணப் பொய்கை தனில் தவழ்ந்த நன்னாள் இது. முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. ஷண்மதங்களையும் ஒன்றிணைக்க வல்லவன் ஷண்முகக் கடவுள் ஒருவனே.

தன்னை நாடி வரும் பக்தரின் வினை கோடியாயினும், தன் வேலாயுதத்தால் அவற்றைப் பிளந்து, பிறவா நிலை தந்தருளும் ஞான பண்டிதனின், கருணையை விவரிக்க வார்த்தைகளேது?. தன்னை எதிர்த்த சூரனையும், சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி ஆட்கொண்ட கருணைப் பெருங்கடல் கந்த வேள். 'சூரசம்ஹாரம்' என அழைக்கப்பட்டாலும், சூரனின் அகந்தை மட்டுமே சம்ஹாரம் ஆனது கண்கூடு. 'செந்தமிழால் வைதாரையும் வாழ்விப்பான்' என்று தமிழுலகம் பறை சாற்றும் தமிழ்க்கடவுள் கார்த்திகேயன்.

எந்த நேரமும் நினைத்தால் சிந்தையில் வந்தருளும் செந்திலாண்டவன், 'இம்முறையில் தான் வழிபட வேண்டும்' எனக் கேட்பதில்லை. எம்முறையில் வழிபட்டாலும் இன்னருள் செய்கிறான்.

முருகப்பெருமானுக்கு பலவித நிவேதனங்கள், வழிபாடுகள் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஆயினும் 'பிச்சிப்பூ, பச்சைப்பால், சம்பா சாதம்' இவை மூன்றும் பிரதானமாகக் கருதப்படுகின்றன.  இருந்தாலும், கந்த வேளின் திருவிளையாடலுக்கு எல்லை ஏது?. பழனி அருகில் ஒட்டன் சத்திரத்தில் அமைந்துள்ள  வேல்முருகன், 'மிட்டாய் முருகன்' என்றே அழைக்கப்படுகின்றான்.

இங்கு முருகனை அர்ச்சிக்கவும், நிவேதனம் செய்யவும் மிட்டாய்களே பயன்படுத்தப்படுகின்றன. இத்தலத்தில், குழந்தை வரம் வேண்டிய ஒரு பக்தர், முருகனருளால் குழந்தைப்பேறடைந்த பின், இந்தத் தலத்திற்கு வந்து பக்தர்கள் அனைவருக்கும் மிட்டாய்களை விநியோகித்திருக்கிறார். அன்றிரவே, முருகன் அவர் கனவில் வந்து, 'எனக்கு மட்டும் ஏன் மிட்டாய் தரவில்லை?' என்று கேட்க, அவர் மறுநாளே மிட்டாய்கள் கொண்டு வந்து சமர்ப்பித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மிட்டாய்கள் சமர்ப்பிப்போரின் வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுவதால், நாள் தோறும் முருகனுக்கு மிட்டாய்கள் குவிகின்றன. வைகாசி விசாக நன்னாளன்று, டன் கணக்கில் மிட்டாய்கள் முருகனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

முருகன் பெருமானைப் போற்றும் எனது பதிவுகளில் இரண்டு...

1. கௌமாரம்

2. ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன்.

வைகாசி விசாக தினத்தின் மற்ற சிறப்புகள்:
வைகாசி விசாகத்தன்று தான், புத்தபகவான் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். மேலும் அவர் அவதரித்ததும் முக்தி அடைந்ததும் வைகாசி பௌர்ணமி தினத்திலேயே. ஆகவே, அன்று 'புத்த பூர்ணிமா' பௌத்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அர்ஜூனனுக்கு சிவனார் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் வைகாசி விசாகத்தன்று தான். காலதேவனான எமதர்மராஜரைப் போற்றித் தொழுவதற்கும் வைகாசி விசாகம் உகந்த தினம் என்றும், அன்று அவரைத் துதிப்போருக்கு எமபயம் இல்லை என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

திருமால் உறையும் திருத்தலங்களில் பக்தர்களின் சிரத்தில் வைக்கப்படும் சடாரி, சடகோபம் என்றே அழைக்கப்படுகிறது. அந்தச் சடாரியில் கொலுவிருந்து, பெருமானின் அருளை நமக்குச் சேர்ப்பிக்கும், சடகோபராகிய‌ நம்மாழ்வார் அவதரித்ததும், தேவர்கள் அமுதம் உண்டு பிறவா நிலை அடைந்ததும் வைகாசி விசாகத்தன்றே.

வைகாசி விசாக விரதம்:
வைகாசி விசாக தினம் முழுமையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும். மாலையில் வடிவேலனை பூஜித்து, ஆலய தரிசனம் செய்ய வேண்டும். தயிர்சாதம், பானகம் நீர்மோர் முதலானவற்றை தானம் செய்ய வேண்டும். இது 'வைசாகதானம்' என்றே அழைக்கப்படுகிறது.

மழலை பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் இந்த விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் மிகுந்த மகிமை பொருந்தியது. முக்காலமும் உணரும் சக்தியும் இந்த விரதத்தால் கிடைக்கும்.

விசாக நட்சத்திரம் சிவபெருமானுக்கும் உகந்தது. வைகாசி பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய நன்னாளில் சிவனாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, செந்தாமரை, வெண்தாமரை மலர்களால் மாலை அணிவித்து, வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, தயிர்சாதம், எள்ளோதரை முதலியவை நிவேதனம் செய்தால், சந்திர பகவானால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும். லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
அன்பர்கள், வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை வழிபட்டு, தங்கள் விருப்பங்களனைத்தும் ஈடேற்றப் பெறப் பிரார்த்திக்கிறேன்.

'ஆலோசனை'யின் மேம்பாட்டுக்கான தங்களது கருத்துகளை மனமார வரவேற்கிறேன்.

மீண்டும் ஒரு முறை என் நன்றியை உங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பித் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!

நன்றியுடனும் நட்புடனும்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 15 மே, 2013

SRI SANKARA JAYANTHI (15/5/2013).....ஸ்ரீ சங்கர ஜெயந்தி...


அஹமானந்த ஸத்யாதிலக்ஷண:கேவல:சிவ:
ஸதானந்தாதி ரூபம் யத்தேநாஹமசலோsத்வய: (அத்வைதானுபூதி)

("ஆனந்தம், சத்தியம் இவற்றின் இலக்கணமான சிவமே நான்.  எது எப்போதும் ஆனந்தமய ரூபமாக இருக்கிறதென்று கூறப்படுகிறதோ, அது போலவே, 'நான்' என்ற ஒன்றும் அசைவில்லாத, இரண்டற்ற பரதத்வம் ஆகும்.")

நமது சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதரித்த குருமார்களில் முக்கியமானவர், ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாகவே கருதப்படும் ஸ்ரீஆதிசங்கரர், இப்போதைய கேரள மாநிலத்திலிருக்கும் 'காலடி' என்னும் புண்ணியத் திருத்தலத்தில், சிவகுரு, ஆரியாம்பிகை தம்பதியினரின் தவத்தின் பலனாக, திருஅவதாரம் செய்தார். இந்த‌ப் பதிவில், ஆசாரியரின் அவதார நோக்கம், மற்றும் அவரது பால பருவத்தில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஆதிசங்கரரின் அவதார நோக்கம்:
முற்காலத்தில் நமது ஹிந்து தர்மம், ஒன்றிணைந்த ஓருருவாக இல்லை. பல்வேறுபட்ட நம்பிக்கைகள், கொள்கைகள் சார்ந்து 72 பிரிவாகப் பிரிந்து இருந்தது. அதில் முக்கியமாக, 'மீமாம்சை' எனும் கொள்கை வலுவாக வேரூன்றியிருந்தது.

மீமாம்சைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள், வேதத்தில் கூறியிருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்களைத் தவறாமல் பின்பற்றுவார்கள். ஆனால் ஞான காண்டமாகிய உபநிஷதங்களை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களை கர்ம மார்க்கக்காரர்கள்  என்றே அந்நாளில் அழைத்தனர். இந்தக் கொள்கையை நிறுவியவர் ஜைமினி மஹரிஷி. ஹிந்து தர்மத்தின் ஆறு தரிசனங்களில் மிக முக்கியமானது மீமாம்சை. இது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என இருவகைப்படும்.
மீமாம்சகர்கள் 'நீரீஸ்வர வாதம்' எனப்படும் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள்( இது எவ்வளவு காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்திருக்கிறது பாருங்கள்!!!). 'ஒரு செயலைச் செய்தால், அதன் விளைவு தானே ஏற்படுகிறது(நியூட்டன் 3வது விதியை நினைவு கொள்ளவும்). இதற்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் இருந்தால், நன்மையும் தீமையும் எங்கிருந்து வந்தன?' என்பது அவர்கள் கருத்து. ஆனால் அவர்கள் 'தேவர்கள்' என்று  மனிதரிலும் மேம்பட்ட ஒரு இனம் இருப்பதை ஒப்புக் கொண்டு, அவர்களுக்கு யாகங்களில் அவிர்ப்பாகங்கள் அளித்து வந்தனர். ஆனாலும், யாகம் தான் யாகத்தின் பலனைத் தருகிறது என்பதில் உறுதியான கருத்துள்ளவர்கள்.

பிறவிப் பயனை அடையும் வழியாக மீமாம்சை கூறுவது என்னவென்றால், 'கடமைகளை, விருப்பு வெறுப்பின்றி செய்வதால், வினைப் பயனைக் கழித்து, ஜனன மரணச் சுழலில் இருந்து விடுதலையடையலாம்' என்பதே.

கிட்டத்தட்ட, பக்தி, ஞானம் இவையெல்லாம் மறைந்தே விட்டிருந்த சூழலில், இவற்றையெல்லாம் மீட்டெடுத்து புத்துயிர் அளித்து, அத்வைத சித்தாந்தத்தை உலகில் வேரூன்றச் செய்து, நமது பழமையான சனாதன தர்மம் தழைக்கச் செய்த அரும்பெரும் சாதனையைப் புரிந்தவர், ஸ்ரீ ஆதிசங்கரர்.  இவையனைத்தையும் தம் வாழ்நாளான 32 வயதிற்குள் சாதித்தார் ஆதிசங்கரர்.

அத்வைதம், பின்வருமாறு, மீமாம்சைக் கொள்கையைக் கண்டிக்கிறது.

"வேதங்கள் கூறும் சடங்குகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த மட்டுமே உதவும். அவை வீடுபேறாகிய மோக்ஷம் அளிப்பதற்கு உதவாது.  தூய உள்ளம் அடைந்த பின், ஆன்ம விசாரணை மேற்கொண்டு, பரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதை, ஞான மார்க்கத்தாலேயே பெற முடியும். எல்லாக் காரணங்களுக்கும்  மூல காரணமே பரம்பொருள். அதை அறிவது என்பது அதுவாகவே ஆவதுதான். அந்நிலையில் கர்மாக்களே இல்லாமல் போகிறது. இப்பிரபஞ்சமே ஒரு மாயத் தோற்றம் போல் உருக்கொண்டு விடுகிறது ....." இப்படிப் போகிறது அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள்.  இவற்றை விவரிக்க வேண்டுமெனில் ஒரு வாழ்நாள் போதாது.

பகவத் பாதரின் பால பருவத்தில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள்.
சிவகுருவும் ஆரியாம்பிகையும், சிவப்பேரூர் திருத்தலத்தில் (இன்றைய திருச்சூர்), பிள்ளை வரம் வேண்டி, ஒரு மண்டல காலம் பஜனம் இருந்து, விருஷாசலேசரின் அருளால் அவரது அம்சாவதாரமாகப் பெற்ற திருக்குழந்தையே  ஆதிசங்கரர். சங்கரன் என்ற பெயருக்கு, என்றும் நிலையான மங்களத்தைச் செய்பவன்  என்று பொருள். அவரே, நம் சனாதன தர்மத்திற்கு நிலையான மங்களத்தைச் செய்யப் போகிறார் என்பதை அறியாமலேயே, அந்தப் பெயரையே தம் தவக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். 

அவரது இளம் வயதில், ஒரு நாள், சிவகுரு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆரியாம்பிகைக்கும் உடல் நிலை சரியில்லை. குழந்தையிடம், 'ஸ்வாமிக்கு ஏதேனும் நிவேதனம் செய்' என்றாள். உலகநாதனே ஒரு வடிவாகி வந்த சிறு குழந்தை யோசித்தது.... ஆம்!!! சிந்தனைக்கு எட்டாத சிவ வடிவம் யோசித்தது... அப்போது, பால் தரும் பணிமகள், ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலை வாங்கிக் கொண்டு, அந்த பிஞ்சுக் குழந்தை, தன் சின்னஞ்சிறு பாதம் எடுத்து வைத்து, 'ஜல், ஜல் ' என கொலுசொலிக்க நடந்து பூஜா கிருகத்தை அடைந்தது.

அப்பா பூஜை செய்யும் போது, பாலசங்கரன் அருகிருப்பது வழக்கம். எனவே, பாலை பூஜை கிருகத்தில் வைத்து விட்டு, மனப்பூர்வமாக, 'பாலை நிவேதனமாக அளிக்கிறேன்' என்று கண்களை மூடிக் கொண்டு, கூறியது.

கண்ணைத் திறந்து பார்த்தால்..காணோம் பால்!!. ஒரு கிண்ணம் பாலும் காணவில்லை. கிண்ணம் காலியாக இருந்தது. குழந்தை பதறிவிட்டது. சிறு உதடு துடிக்க, கண்களில் நீர் மழை கொட்ட, 'அழுது அருளினார்'பகவத் பாதர் . அழுகையினூடே திரும்பவும் கிண்ணத்தைப் பார்த்தால்... அது நிரம்ப, நிரம்ப பால் இருந்தது!!!. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலவில்லை குழந்தைக்கும். தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பார்த்தது. கிண்ணத்தில் இருந்த பாலை எடுத்துப் பருகி ஆனந்தமடைந்தது.

அன்னை அன்னபூரணியின் திருவிளையாடலே இது.சங்கரருக்கு, ஞானத்தையே பாலாக அளித்து, பின்னாளில், தம் மேன்மையான கவிதா விலாசத்தால், பல வடமொழி நூல்களை அவர் அருளுவதற்கு வித்தூன்றி விட்டாள் அன்னை.  இதையே,  பகவத் பாதர்,  தம் சௌந்தர்யலஹரியில், 

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

என்று அருளியிருக்கிறார். அக்காலத்தில் தென்னாடெங்கும் திராவிட நாடெனவே அறியப்பட்டது. ஆகவே, 'திராவிட சிசு' என்பது   சங்கரரைத் தான் குறிக்கும் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

மற்றொரு நிகழ்வு நாம் யாவரும் அறிந்ததே.

உபநயனம் ஆகி, குருகுல வாசம் செய்து வந்த ஆதிசங்கரர், பிக்ஷை பெறுவதற்காக, அயாசகனுடைய இல்லத்தின் வாசலில் நின்றார். குருகுல வாசம் செய்வோர், பிக்ஷை எடுத்தே உண்பது சம்பிரதாயம்.

தன் குடும்பத்துக்காக, யாரிடமும் எதையும் யாசிக்காததால் 'அயாசகன்' என்றே பெயர் அந்த இல்லத்தலைவனுக்கு. அதனால் ஏழ்மையின் எல்லையில் நின்றது அந்த இல்லம். பார்ப்போருக்கு எந்த முக்கியத்துவமும் தோன்றாத அந்த இல்லம், பெரும் பாக்கியம் செய்தது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

அன்றைய தினம் துவாதசி. அயாசகன், நித்யானுஷ்டானங்களை முடிப்பதற்காக சூர்ணா நதிக்கரைக்குச் சென்றிருந்தார். அவன் மனைவி, 'பவதி பிக்ஷாம் தேஹி' என்ற இனிய குரல் கேட்டு, இல்லத்தின் வெளியே வந்தாள். அழகிய சிறு பாலகன். முகத்தில் பிரம்ம தேஜஸ் மிளிர, நெற்றியில் வியர்வை அரும்ப, தன் சிறு வாய் திறந்து தேனினும் இனிய குரலில் பிக்ஷையிடுமாறு கேட்கிறான்.

துடித்துப் போனாள் பாவம். இல்லத்தில் பிக்ஷையிட ஏதும் இல்லை. கணவன் வீடு வந்ததும் ஏகாதசி விரதம் முடித்து துவாதசி பாரணை செய்வதற்காக வைத்திருந்த சிறு நெல்லிக் கனி மட்டும் இருந்தது.

எதையும் யோசிக்கவில்லை அவள். ஓடி வந்து, மிகவும் கூச்சத்துடன், அந்த நெல்லிக்கனியை பிக்ஷா பாத்திரத்தில் இட்டாள். உடனே, அந்த இடத்தில் நிற்காமல், கண்களில் பொங்கும் நீருடன், உள்ளே ஓடினாள்.

நெல்லிக்கனியைப் பார்த்த ஆதிசங்கரருக்கு, அந்த இல்லத்தின்  ஏழ்மை தெளிவாகத் தெரிந்தது. அதைத் தனக்குப் பிக்ஷையாக இட்ட அன்பின் திருவுருவமான அந்தப் பெண்ணின் உள்ளமும் தெரிந்தது. அன்பே சிவம். சிவமே அன்பு. சிவப்பரம்பொருளின் அவதாரமாகவே கருதப்படும் ஆதிசங்கரரின் உள்ளத்தில் கருணை நிரம்பியது. அவரது முதல் கிரந்த மான‌ 'கனகதாரா ஸ்தவம்'  அவரது திருவாயினின்று, பொங்கிப் பிரவகித்துக் கிளம்பியது.

ல‌க்ஷ்மி தேவியைக் குறித்து, அமுதூறும் சொற்களால் பாமாலை பாடி, அம்பிகையின் திருநோக்கு, அந்த ஏழைத் தம்பதியர் மேல் திரும்ப வேண்டும் என மனமுருக வேண்டினார் ஆதிசங்கரர். அதில் ஒரு ஸ்லோகமும் பொருளும் உங்களுக்காக...

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:|

("ஸ்ரீமந் நாராயணரின் பிரியத்துக்குகந்த உன் (ஸ்ரீலக்ஷ்மியின்) கடாக்ஷம் என்ற கார்மேகம்,   உனது கருணை என்ற பூங்காற்றின் துணை கொண்டு,  பல காலம்  செய்த  பாவமாகிய கோடை வெயிலை நீக்கி,  செல்வமாகிய பெரும் மழையை, இந்த   சாதகப் பட்சியின் மேல் பொழியட்டும்".

சாதகப் பட்சி என்பது, கவிஞர்களின் மரபில் கூறப்படும் ஒரு பறவை. அது கழுத்தில் துவாரமுள்ளது. அதனால் நீர் அருந்த இயலாது. வானிலிருந்து பொழியும் மழை நீரே, அதன் கழுத்துத் துவாரத்தின் வழியாகச் சென்று அதன் தாகம் தீர்க்கும்.  அது போல், சாதகப் பட்சியாகிய இவர்களுக்கு, பாவமாகிய  கழுத்துத் துவாரம் பொருள் எனும் நீரை அருந்த விடாமல் தடை செய்தாலும், உன் கருணைப் பூங்காற்றின் துணை கொண்டு, கடைக்கண் நோக்கால் பொழியும் செல்வமழை, இவர்களது ஏழ்மையைத் தீர்க்க வேண்டும் என்பது கருத்து.)

சங்கரரின் திருமுன் திருமகள் தோன்றினாள். அயாசகனுடைய முன் வினைகளை நினைவூட்டினாள்.

அயாசகன், முற்பிறவியில், குசேலனாகப் பிறந்து, ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் செல்வச் செழிப்பை அடைந்தார். அதன் பின், செல்வத்தை சிறிதும் லட்சியம் செய்யாது, கணக்கு வழக்கின்றி செலவு செய்தார். முறையற்ற செலவு காரணமாக, இப்பிறவியில் இந்த நிலை அயாசகனுக்கு.

"பொருளைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் செலவு செய்வோரிடம் தாம் தங்குவதில்லை" என ஆதிசங்கரரிடம் திருமகள் திருவாய் மலர்ந்தருளினாள்.


ஆதிசங்கரர், 'தாயே, நீ உன் பக்தர்களின் தலை எழுத்தை, உன் திருப்பாதங்களாலேயே உதைத்து அழித்து விடக் கூடியவளாயிற்றே!!!. மனிதர்களின் கர்ம வினையாகிய மூட்டையை, அவர்கள் அன்பு வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடுமே!!!. இருந்த ஒரு நெல்லிக்கனியையும் எனக்குப் பிக்ஷையிட்ட இவளது அன்புக்காக, உன் கருணை ததும்பும் கடைக்கண் நோக்கு, இவர்கள் மேல் படலாகாதா' என்று வேண்டினார்.

திருமகள் உள்ளம் குளிர்ந்தது. ஜீவர்களின் மேல் பாயும் தம் பெருங்கருணை வெள்ளமென, பொன் நெல்லிக்கனிகளை அந்த இல்லத்தின் மேல் பொழிந்தாள் ஹரிப்ரியை.

இன்றும் அந்த இல்லம், 'ஸ்வர்ணத்து மனை' என்ற பெயரில் காலடி க்ஷேத்திரத்தில் இருந்து வருகிறது.

செல்வத்துக்குத் தலைவியான, லக்ஷ்மி தேவியை குறித்த  அற்புதத் துதி இது. தினமும் இதைப் பாராயணம் செய்வோருக்கு,  திருமகளின் அருளால், பொருட் தட்டுப்பாடு என்பதே ஏற்படாது.  இக்கலியுகத்தில் கண்கண்ட உண்மை இது.

ஆதிசங்கரரின் இவ்வுலக வாழ்வு, நமக்கு அரும்பெரும் உண்மைகளை உணர்த்த வல்லது. அவற்றை விவரிப்பது எளிதான செயல் அல்ல. பிறிதொரு சந்தர்ப்பத்தில், குருவருள் இருப்பின், ஆதிசங்கரரின் திவ்ய சரிதத்தில் இருக்கும் மேலும் சில நிகழ்வுகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதிசங்கரர் அவதரித்த திருநாளான இன்று, அவரைப் போற்றி, அவரது பெருங்கருணை நம் உள்ளங்களில் ஞான ஜோதி ஏற்றிடப் பிரார்த்திப்போம்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 11 மே, 2013

AKSHAYA THRUTHIYAI....அனைத்து வளங்களும் தரும் அக்ஷய திருதியை (13/5/2013).

ஸ்ரீயம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம், அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரண:சரணமஹம் ப்ரபத்யே
(சரணாகதி கத்யம்).

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியை, 'அக்ஷய திருதியை' எனச் சிறப்பிக்கப்படுகிறது. அக்ஷய என்றால் குறையாத என்று பொருள். ஆகவே இந்த சிறப்பான தினத்தில் செய்யும் தான தருமங்கள், இறைவழிபாடு முதலியவை அக்ஷயமாக வளர்ந்து பன்மடங்கு பலனளிக்கும் என்பது ஐதீகம்.

வெள்ளி, 3 மே, 2013

AMBAREESHA CHARITHAM......அம்பரீஷ சரிதம்



பக்தி  என்பது பூர்வபுண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது. க‌டும் வெயிலில் குடை போல்,  இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும். நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம் தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.

'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.

மிகச் சிறந்த பக்திமான்களின் சரிதங்கள் நமக்கு எப்போதும் உற்சாகமூட்டி நம்பிக்கை அளிப்பவை. அவர்களுக்கு நேர்ந்த சோதனைகளும், அவற்றை, பக்தியின் சக்தியால் அவர்கள் வெற்றி கொண்ட விதமும் படிக்குந்தோறும் நம்மைப் பண்படுத்தி, உயர்த்தக்  கூடியவை. அப்பேர்ப்பட்ட பக்திமான்களுள் ஒருவரான அம்பரீஷனின் சரிதத்தை இந்தப் பதிவில் நாம் காணலாம்.

வைவஸ்வத மனுவின் பத்தாவது புதல்வன் நபாகன். நபாகனுடைய குமாரன் நாபாகன். நாபாகனின் மைந்தனே அம்பரீஷச் சக்கரவர்த்தி .


மச்சாவதாரம் நிகழ்ந்த சமயத்தில், அந்நிகழ்வுக்குத் துணை புரிந்த சத்யவிரதனே வைவஸ்வத மனுவானார். மச்சாவதாரப் புராணம் குறித்த செய்திகளுக்கு கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள் பதிவைப் பார்க்கவும்.(மத்ஸ்ய ஜெயந்தி....மே 7, செவ்வாய்க்கிழமை).

அம்பரீஷர், ராஜரிஷி எனப் போற்றப்பட்டவர். மிகச் சிறந்த பக்திமான்.  இப்பூவுலகு முழுவதையும் ஒரு குடையின் கீழ் அரசு புரிந்து, நிகரற்ற செல்வத்தை அடைந்திருந்த போதிலும், அதன் காரணமாக, எவ்வித மதி மயக்கமும் அடையாதவர். பகவான் வாசுதேவனிடத்தில் அசையாத பக்தி பூண்டவர். பகவானின் பரம பக்தர்களான பாகவதர்களை மிகவும் மதித்துப் போற்றி பூஜிப்பவர்.

பற்றின்றி, தான் செய்யும் எல்லாவிதமான செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து, ஒருமைப்பட்ட மனதுடன் பக்தி செய்த அம்பரீஷர‌து பக்திக்கு மெச்சி, பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஆயிரம் முனைகளுடைய தம் சுதர்சன சக்கரத்தை அவரைக் காக்கும் பொருட்டு அவருக்கு அளித்து அருளினார்.

த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோsஸ்ய‌
பக்த்யைவ தேவ நசிராதப்ருதா: ப்ரஸாதம் |
யேனாஸ்ய யாசனம்ருதேsப்ய பிரக்ஷணார்த்தம்
சக்ரம் பவான் ப்ரவிததரா ஸ ஹஸ்ரதாரம் || 
(ஸ்ரீமந் நாரயணீயம்)

(தேவ தேவா!!, எல்லாச் செயல்களையும் உம் பிரீதிக்காகவே செய்து வந்த அவரை(அம்பரீஷனை) மெச்சி, அவருக்கு அருள் புரிந்தீர். அவரைக் காக்கும் பொருட்டு, அவர் பிரார்த்திக்காமலேயே, ஆயிரம் கூரிய நுனிகளை உடைய சுதர்சன சக்கரத்தை அளித்தீர்.)

அம்பரீஷர், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிக உகந்த த்வாதசீ ((ஏகாதசி) விரதத்தை ஒரு வருட காலம் அனுஷ்டிக்க நிச்சயித்து, அவ்வண்ணமே, அந்த உயர்ந்த விரதத்தை, ஒத்த மனதினளான தம் பத்னியுடன் அனுஷ்டித்தார். ஒரு வருடம் கழித்து, கார்த்திகை மாதம் விரதம் நிறைவடையும் சமயத்தில், மூன்று நாட்கள் உபவாசம் இருந்து, யமுனா நதியில் நீராடி, மது வனத்தில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தார். அறுபது கோடி கோதானம் செய்து பகவானை ஆராதித்தார். பகவானின் பக்தர்களையும் பூஜித்தார்.

பின் பூஜையில் பங்கேற்ற  அனைவருக்கும் சிறந்த உணவை வழங்கி, அவர்கள் யாவரும் உண்ட பின், அவரவர் வேண்டிய பொருளை தானமாக அளித்து, பின் அவர்கள் அனைவரின் அனுமதியையும் பெற்று, பாரணை  (விரத நிறைவு) செய்ய முற்பட்டார்.

அந்தச் சமயத்தில் துர்வாஸ மஹரிஷி எழுந்தருளினார். எளிதில் கோப வசப்பட்டு பிறரைச் சபிக்கும் சுபாவமுடையவர் துர்வாஸர்.

துர்வாஸரைக் கண்ட அம்பரீஷர், ஓடிச் சென்று அவரைத் தகுந்த முறையில் உபசரித்தார். அவருக்கு ஆசனமளித்து மரியாதைகள் செய்து, உணவு உண்ண வேண்டினார். அதை ஏற்ற துர்வாஸரும், தாம் யமுனையில் நீராடி விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

யமுனையில் நீராடிய துர்வாஸர், கண்களை மூடி பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இங்கே நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. த்வாதசீ திதி நிறைவடையும் நேரத்திற்குள் அம்பரீஷர் பாரணை செய்தாக வேண்டும். அப்போதே இந்த ஒரு வருட காலமாக அனுஷ்டித்து வந்த விரதம் நன்முறையில் நிறைவும் பெறும். ஆனால், துர்வாஸரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் கவலை கொண்ட அம்பரீஷர், தம் குருமார்களுடன் கலந்தாலோசித்தார். 'த்வாதசீ திதி நிறைவடைவதற்குள் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். அவ்வாறு அருந்துவது  பாரணை செய்ததற்குச் சமம். அதே வேளையில் அதிதியாகிய துர்வாஸ மஹரிஷியை விட்டுவிட்டு உணவருந்திய பாவத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம்' என்று அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றார்.

அவ்வாறே பாரணை செய்து விட்டு, துர்வாஸ மஹரிஷியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.

துர்வாஸ மஹரிஷி வந்தவுடன், தகுந்த முறையில் உபசரித்தார். ஆனால் துர்வாஸரோ, தம் ஞானதிருஷ்டியின் மூலமாக, அம்பரீஷர் செய்ததைத் தெரிந்து கொண்டார். மிகுந்த கோபம் கொண்டு, 'அதிதியான‌ என்னை போஜனம் செய்ய அழைத்து விட்டு, எனக்கு உணவளிக்காமல், தான் மட்டும் உண்டு விட்ட உனக்கு அதன் பலனைத் தருகிறேன் பார்' என்று விட்டு, தம் ஜடாமுடியிலிருந்த ஜடை ஒன்றைக் கிள்ளி, கீழே எறிந்தார். அது ஒரு மிகக் கொடிய பிசாசாக உருவெடுத்தது.

அதைக் கண்டு சிறிதும் அம்பரீஷர் மனங்கலங்கவில்லை. தம் இடம் விட்டு அசையாது நின்றார். ஆனால் அவரைக் காக்க பகவானால் அருளப்பட்ட  சக்ராயுதம் அந்தப் பிசாசைத் தாக்கி, அதைப் பொசுக்கி விட்டு, பின் துர்வாஸரை நோக்கிப் பாய்ந்தது. 

துர்வாஸர் ஓட ஆரம்பித்தார்.  எங்கு சென்றாலும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவரை விடாமல் துரத்தியது. துர்வாஸர் சத்ய லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரைச் சரண் புகுந்தார். அவரோ,   சக்ராயுதத்தை தம்மால் மீற முடியாதென்று சொல்லி விட்டர். பின் துர்வாஸர் கைலாயத்தை அடைந்தார். சிவனார், ஸ்ரீவிஷ்ணுவையே சரணடையுமாறு ஆக்ஞாபித்தார். (சில புராணங்களில், சக்ராயுதம், பிசாசைத் துரத்த, அது பயந்து ஓடி, ஒரு கட்டத்திற்கு மேல், கோபமடைந்து தன்னை ஏவிய துர்வாஸரைத் துரத்தத் துவங்கியதாகவும், பிசாசு, சக்ராயுதம் இரண்டாலும் துரத்தப்பட்ட துர்வாஸர் பிரம்மதேவரைச் சரண‌டைந்ததாகவும் கூற‌ப்படுகிறது).

அதன் பின், துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், யார் இவ்வுலகப் பற்றனைத்தையும் துறந்து என் பால் பக்தியுடன் என்னைச் சரணடைகிறார்களோ, அவர்களை நான் ஒரு போதும் கைவிடுவதில்லை. நல்ல பெண்மணிகள், தம் கணவன்மார்களை எவ்வாறு தம் அன்பினால் வசப்படுத்துகிறார்களோ, அவ்வாறே,  பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர். பக்தர்களின் இருதயமே நான். என் இருதயமே பக்தர்கள் வசம் கட்டுண்டு இருக்கிறது. உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர் அம்பரீஷனையே சரணடையும்'  என்று திருவாய் மலர்ந்தருளினார்.

துர்வாஸர், உடனே அம்பரீஷர் இருக்கும் இடத்தை அடைந்து, அவரது காலைப் பற்றி, மன்னிப்புக் கோரினார்.   சக்ராயுதத்திடமிருந்து  தம்மைக் காக்குமாறு வேண்டினார்.


உடனே அம்பரீஷர், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைப் போற்றித் துதி செய்தார். துர்வாஸரை விட்டு விடக் கோரி வேண்டினார்.

(ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை வழிபடுவது அளவில்லாத நன்மைகளை அளிக்கக் கூடியது. குறிப்பாக, கொடும் நோய், தீய சக்திகளால் துன்புறுதல், எதிரிகளால் தொல்லை போன்ற அனைத்தும் சக்கரத்தாழ்வாரை வழிபட உடனடியாக நீங்கும். கருட புராணத்தில் இருக்கும், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் மகிமைகளைப் போற்றும் ஸ்ரீ சுதர்சன‌ சக்கர ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்).

அவரது பக்திக்கு மனமிரங்கி, சக்கரத்தாழ்வாரும் சாந்தமடைந்தார்.


கிட்டத்தட்ட ஒரு வருட காலம், துர்வாஸர் திரும்ப வருவதை எதிர்பார்த்து உணவு உண்ணாமல் காத்திருந்தார் அம்பரீஷர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. மிகச் சிறந்த பொறுமைசாலியான அம்பரீஷரை மெச்சி, துர்வாஸ மஹரிஷி, அவருக்கு எல்லா விதமான ஆசிகளையும் அளித்தார். பின் அன்புடன் அம்பரீஷர் அளித்த உணவை உண்டு, அவரிடமிருந்து விடைபெற்று, ஆகாய மார்க்கமாக‌ பிரம்ம லோகத்தை அடைந்தார்.

அம்பரீஷர், முன்பிருந்ததை விட அதிகமாக பகவானிடத்தில் பக்தி செலுத்தலானார். நாளடைவில், தம் மக்களிடம் அரசை ஒப்புவித்து விட்டு, இகலோக பந்தங்களிலிருந்து விடுபட்டு, பகவான் ஸ்ரீவாசுதேவனிடம் மனதை நிலைநிறுத்தி, மேலான  மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்தார். 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான, திருவித்துவக்கோடு என்னும் திருத்தலமே, அம்பரீஷர் முக்தி அடைந்த திருத்தலம் என்பது புராணம்.

பக்தியின் சக்தியை, பகவான் பக்தருக்குக் கட்டுப்பட்டவர் என்பதைத் தெளிவாக விளக்கும் இந்த அம்பரீஷ சரிதத்தைப் படிப்பவருக்கும் தியானிப்பவருக்கும் பகவான் மேல் அசையாத பக்தி உண்டாகும். அதன் பயனாக, இறையருள் பெற்று, இக பர நன்மைகளை எல்லாம் அடைந்து வாழ்வாங்கு வாழ்வர்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.