நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 18 ஜூன், 2013

PAPA HARA DASAMI(18/6/2013)...பாபஹர தசமி(பாவங்களை நீக்கும் தசமி).


இன்றைய தினம் (18/6/2013) 'பாபஹர தசமி'. ஒவ்வொரு வருடமும், ஆனி மாத சுக்ல பட்ச தசமி 'பாபஹர தசமி' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நம் மனம், வாக்கு, சரீரம் இவை மூன்றால் செய்யப்பட்ட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உயிரினங்களின் பாவங்களைப் போக்கி அருளும் கங்காமாதாவின் திருஅவதார தினமும் இன்று தான். இந்தப் பதிவில் கங்கையின் அவதார நிகழ்வை சுருக்கமாகப் பார்க்கலாம்.

சூரிய குல மன்னனான சகரனுக்கு காசியபரின் புத்திரியாகிய சுமதியும், விதர்ப்ப ராஜனின் மகளாகிய கேசினியும் மனைவியர். சகர மன்னனும் அவன் மனைவியரும், புத்திரப் பேற்றை அடைய விரும்பி, ஔரவ முனிவரைத் துதித்தார்கள். அவர், சகரமன்னனின் மனைவியரை நோக்கி,'உங்களில்  ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறப்பார்கள், உங்கள் விருப்பப்படி அது அமையும்' என அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு புத்திரனையும், சுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜன் என்ற ஒரு மைந்தன் பிறந்தான். அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்ற ஒரு புத்திரன் பிறந்தான்.

சிறு வயதிலிருந்து அஸமஞ்சன், பல தீய செயல்களைச் செய்து வந்தான். அவன்  தீய செயல்களைப் பொறுக்க மாட்டாது சகரன் அவனை நாடு கடத்தி விட்டான்.

சுமதியின் அறுபதினாயிரம் பிள்ளைகளும் துஷ்டத்தனம் மிக்கவர்களே.

ஒரு முறை, சக்ரன் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பை தன் அறுபதினாயிரம் மைந்தர்களிடன் ஒப்படைத்தான்.

சகரமன்னனின் பிள்ளைகளின் அடாத செயல்கள் பொறுக்க மாட்டாமல், தேவேந்திரன் அந்த யாகக் குதிரையை பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியின் பின்னால் கட்டி வைத்து விடுகிறான்.

குதிரையைத் தேடிக் கொண்டு பாதாள லோகம் வந்த சகர புத்திரர்கள், கபில மஹரிஷியே யாகக் குதிரையை அபகரித்தவர் என்று கருதி அவரை இம்சிக்க, அவர் தவத்திலிருந்து விழித்து சகரபுத்திரர்களை நோக்கினார். அவர் விழிகளிலிருந்து கிளம்பிய அனல், சகர புத்திரர்களை சாம்பல் குவியல்களாக்கியது.

தன் புத்திரர்களையும், யாகக் குதிரைகளையும் காணாத சகரன், தன் பேரன் அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடச் சொன்னான். தன் தந்தைமார்கள் பூமியைத் தோண்டி, பாதாளம் சென்ற வழியை அறிந்த அம்சுமான் அவ்வாறே தானும் சென்று, யாகக் குதிரையையை கண்டடைந்தான். அங்கு இருந்த கபிலமாமுனிவரின் வழியாக, நடந்தவற்றை அறிந்து மன்னிப்பு வேண்டினான்.

கபில முனிவர், அம்சுமானின் பணிவை மெச்சி, 'குழந்தாய், பாவங்களைத் தீர்க்கும் பரம பவித்திரமான கங்கா தேவி பூவுலகை புனிதப்படுத்த அவதரிக்கப் போகிறாள். அதற்கு வித்திடும் நிகழ்வே இது. கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத மகிமைகளை உடையது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நீராடாவிட்டாலும், நீராடுபவரது பாவங்கள் நீங்கும்.

பாவங்களைச் செய்தவனாயினும், ஒருவன் இறந்தால், அவனுடைய  சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று  கங்கை நீரால் நனைக்கப்பட்டாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தருபவள் புனித கங்கை. கங்கை நீர் பட்டதும், இந்த ஆத்மாக்கள் சுவர்க்கம் பெறுவர். சிவனாரைக் குறித்துத் தவம் செய்து, கங்கையை பூவுலகிற்கு வரவழைக்க முயற்சிப்பாயாக. ஆனால், உன் பேரன் பகீரதனாலேயே இம்முயற்சி கைகூடும்'  என அருளினார்.

அம்சுமான், யாகக் குதிரையுடன் தன் சகரனிடம் திரும்பினான். சகரன் யாகத்தைப் பூர்த்தி செய்தான். தன் புத்திரர்கள் பாதாளம் செல்வதற்காக தோண்டிய குழியை நீரால் நிரப்பினான். அதுவே 'சாகரம்' என்றழைக்கப்படும் சமுத்திரம். சமுத்திரத்தையே தன் புத்திரனாகக் கருதி, தன் சோகத்தை ஒருவாறு மறந்தான் சகரன்.

அம்சுமானுக்கு திலீபனும், திலீபனுக்கு பகீரதனும் பிறந்தனர். அம்சுமானும், திலீபனும், தவம் முதலானவற்றைச் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயற்சித்தாரெனினும் கபில முனிவர் அருளியதைப் போல் அவர்கள் முயற்சி கைகூடவில்லை.

திலீபன், பகீரதனுக்கு அவன் முன்னோர்களின் கதையைக் கூறினான். தன் முன்னோர்களின் கதையைக் கேட்டு வருந்திய பகீரதன், கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர உறுதி பூண்டு,  கங்கையைத் துதித்துத் தவமிருந்தான். பகீரதன் முன் தோன்றிய கங்கா தேவி, அவன் தவத்திற்கு மெச்சி, பூவுலகம் வர இசைந்தாள். ஆனால் தன் வேகத்தைத் தாங்கக் கூடியவர் சிவனார் ஒருவரே என்றும், அவரைத் துதித்துத் தவம் செய்து, தன்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய வரம்  பெறுமாறும் உபதேசித்து மறைந்தாள். பகீரதனும் லக்ஷம் வருடங்கள் சிவனாரைத் துதித்தார். பக்தர்களின் உள்ளத்தில் மகிழ்ந்துறையும் சிவனாரும், பகீரதன் முன் தோன்றி அவன் கோரிய வரத்தை அளித்தார்.

கங்கா தேவி, அளப்பரிய வேகத்துடன், விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தாள். சிவனார் அவளைத் தன் தலையில் தாங்கி, தன் சடாமுடியால் கட்டினார். பின் ஒரு இழையை மட்டும் விடுவித்து, பூமியில் கங்கையைப் பாயச் செய்தார்.

பகீரதன் அகமகிழ்ந்து, கங்காதேவியை, தன் முன்னோர்களின் சாம்பல் குவியலை நோக்கி நடத்திச் சென்று அவர்களை நற்கதி அடையச் செய்தார்.

பகீரதனால் பூமிக்குக் கொண்டு வரப்பட்டதால் 'பாகீரதி' என்ற திருநாமம் பெற்ற கங்கா மாதா, அதன் பின், காசி, ஹரித்துவார் முதலிய பல்வேறு தலங்களின் வழியாகப் பாய்ந்து, இந்தப் பரந்த பாரத பூமியைப் புனிதப்படுத்தி வருகிறாள். வற்றாத ஜீவ நதியாக, பெற்ற தாயின் கருணையைப் போல்,  மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களைப் புனிதப்படுத்தி வருகிறாள்.

பூஜா முறை:

இன்றைய தினத்தில், புனித நதிகளில் நீராடுவது சிறந்தது. அவ்வாறு இயலாவிட்டால், இல்லங்களில் நீராடி, கங்கையைப் பூஜிக்கலாம். பொதுவாக, நம் அனைவரது இல்லங்களிலுமே கங்கைச் செம்பு இருக்கும். அதைத் தூய்மை செய்து, சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரித்து, அரிசி நிரம்பிய தட்டில் வைத்து இயன்ற துதிகளைக் கூறி வழிபடலாம். அல்லது ஒரு செம்பில் நீர் நிரப்பி, மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து, பூர்ண கலசமாக அரிசி நிரம்பிய தட்டின் மேல் வைத்து, அதில் கங்கையை எழுந்தருளப் பிரார்த்தித்தும் பூஜை செய்யலாம்.

விநாயகர் துதியைக் கூறி பூஜை துவங்கவும். கலசத்தில், கங்கா தேவியை எழுந்தருளப் பிரார்த்தித்து, தூய நீராலும், மலர்களாலும் அக்ஷதையாலும் உபசார பூஜைகளைச் செய்யவும்.

ஸ்ரீராமபிரான் அருளிய 'ஸ்ரீராம க்ருத கங்கா ஸ்துதி' மிகச் சிறப்பு வாய்ந்த துதியாகும். சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமரே கங்கையின் மகிமைகளை இந்தத் துதியில் புகழ்ந்துரைக்கிறார். இன்றைய தினம் அதைக் கூறி வழிபடுவது  மேன்மையான பலன்களைத் தரும்.

பின், ஊதுபத்தி ஏற்றி காண்பித்து, ஒற்றை அகல் தீபம் ஏற்றி கங்கா தேவிக்குக் காண்பிக்கவும். இயன்ற நிவேதனம் செய்யலாம். சுத்த அன்னம், பாயசம் நிவேதிப்பது சிறப்பு என்று கூறப்படுகிறது. பக்தியுடன் மலர்களைச் சமர்ப்பித்து வலம் வந்து வணங்கி, வேண்டும் வரங்களைக் கூறிப் பிரார்த்திக்கவும்.

மஞ்சள், குங்குமம் கரைத்த நீரால் ஆரத்தி செய்து, பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக கங்காமாதாவிடம் மன்னிப்புக் கோரி பூஜையை நிறைவு செய்யவும்.

கலச ஸ்தாபனம் செய்து பூஜித்தால், பூஜை நிறைந்தவுடன், சிறிது புஷ்பம், அக்ஷதைகளைச் சமர்ப்பித்து, கலசத்தை வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்கவும்.

 பின், அதிலிருக்கும் நீரை சிறிதளவு பருகி விட்டு, மீதியை ஸ்நானம் செய்யும் போது உபயோகிக்கலாம்.

இன்று சிவாலய தரிசனம் செய்வதும் நன்று.

இம்மாதிரி முறையாக கங்கையைப் பூஜித்தால், நம் அனைத்துப் பாவங்களும் நீங்கும். கங்கா தேவியின் அவதார சரிதத்தைப் படிப்பது மேன்மையான பலன்களைப் பெற்றுத் தரும்.

அன்பர்கள் அனைவரும், கங்காதேவியை வழிபட்டு, வாழ்வாங்கு வாழப் பிரார்த்தனை செய்கிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    நேற்று கங்கை மிகவும் உற்சாகத்துடன் தடைகளை எல்லாம் துவம்சம் செய்து வெள்ளமாக பிரவாகித்துள்ளாள். ஜெய் ஜெய் கங்கே....

    பதிவில் ராம் க்ருத கங்கா ஸ்துதி லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ஷேத்ரயாத்ரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் பதிவுகள் கொடுத்த ஊக்கத்தினாலேயே இந்தப் பதிவு எழுதினேன். அதற்காக, மீண்டும் தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  2. கங்கையைப் போற்றுவோம் கர்மங்கள் தீரவே...

    விடையேறிய விமலன் மலை மருகன்
    சடை முடியேறிய மாதே வாழீ
    தடைபல உடைபட பாவங்கள் நொறுங்கிட
    மடைபொங்கி பெருகவே வாநீ
    அடைபடும் வழித்தடை விலக்கிட உற்றபாவம்
    உடைபட்டொழிந்திட கடைக்கண் அருளுதியோ.

    அருமையான பதிவு பகிர்விற்கு நன்றிகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதல்களுக்கும் அருமையான கவிதை பகிர்விற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா!!

      நீக்கு
  3. சிறப்பான பகிர்வு... தகவல்கள் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை... முதல் படம் கண்கொள்ளாக் காட்சி...

    நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. முற்றிலும் புதிய ஒரு தகவலை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பகீரதனின் முன்னோர்களைப் பற்றிய புராணம் அருமையாகவும் எளிமையாகவும் கூறியுள்ளீர்கள்.

    இன்றளவும் உபயோகமில்லாமல், சோம்பேறியாக உள்ளவர்களை 'அசமஞ்சம்' என்று குறிப்பிடப்படுவது நடைமுறையில் உள்ளது, நன்மை செய்து பெயர் நிலைப்பது போலவே, தீமை செய்தும் பெயர் நிலைத்தவர் அசமஞ்ச‌ந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!!. அருமையான கருத்துக்களைத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..