நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 1 ஜூன், 2013

SRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்




மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாகப் போற்றப்படுபவர்  ஸ்ரீதத்தாத்ரேயர்.  இவர் பரம்பொருளின் ஆசார்ய ஸ்வரூபமாக வழிபடப்படுகின்றார். ஸ்ரீ தத்தாத்ரேயரின் ஜெயந்தி மஹோத்சவம்,வரும் ஜூன் 3ம் தேதி திங்களன்று கொண்டாடப்படுகிறது.(ஸ்ரீதத்தர், மார்கழி மாதம் பௌர்ணமி திதியில் பிறந்ததாகவும் ஒரு கூற்று இருக்கிறது).

அத்ரி முனிவர், அனுசூயா தேவி தம்பதியரின் தவப்பயனாகத் தோன்றியவர் தத்தாத்ரேயர்.

இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்தி நிலைகளுக்கும் அப்பாற்பட்ட முழுமையான நிர்க்குணப் பரம்பொருளைக் குறிப்பதே அத்ரி என்ற திருநாமம்(அ‍ -திரி).

அசூயை அதாவது வெறுப்பு, பொறாமை போன்ற தீய குணங்கள் இல்லாதவள் என்ற பொருள் தருவதே அனுசூயை என்ற திருநாமம். இவ்விருவருக்கும் புதல்வராக அவதரித்தருளியவரே இவ்வுலகனைத்தும் போற்றும், மஹாகுருவாகிய ஸ்ரீதத்தாத்ரேயர். 'தத்த' என்ற திருநாமத்திற்கு, 'வழங்கப்பட்டது' என்பது பொருள். இது தன்முனைப்பு இல்லாத, சுயநலமற்ற வழங்குதலையே (தியாக உணர்வு)குறிக்கிறது.  அத்ரி  முனிவரின் புத்திரனாதலால், 'ஆத்ரேயர்' என்னும் திருநாமமும் இணைந்து 'தத்தாத்ரேயர்' என்ற திருநாமம் வழங்கலாயிற்று. 

அனுசூயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கித் தாலாட்டிய புராணம் நம் எல்லோருக்கும் தெரியும். முப்பெருந்தேவியரின் வேண்டுகோளுக்கிணங்கி, அனுசூயா தேவி, மும்மூர்த்திகளையும் குழந்தைகள் உருவிலிருந்து சுய உருவம் அடையச் செய்தார். அச்சமயம், மும்மூர்த்திகளும், தமது ஒருங்கிணைந்த அம்சமாக, அனுசூயா தேவிக்கு ஒரு புத்திரன் தோன்றுவான் என்று அருளிச் செய்தனர். அவ்வாறே அவதரித்தார் தத்தாத்ரேயர். இவர் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சம் மட்டுமே என்ற கூற்றும் உண்டு. ஆனால் அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாகிய தத்தாத்ரேய உபநிஷதம், ஸ்ரீ தத்தரை சிவஸ்வரூபம் என்றே குறிக்கிறது.

Ravi Varma-Dattatreya.jpgபொதுவாக, ஸ்ரீ தத்தர், மும்மூர்த்திகளின் சொரூபமாதலால், மூன்று திருமுகங்களும் ஆறு திருக்கரங்களும்  உடையவராக வழிபடப்படுகிறார். ஆறு திருக்கரங்களில், பிரம்ம தேவரை குறிக்கும் கமண்டலம், ஜபமாலை, சிவபெருமானைக் குறிக்கும் திரிசூலம், உடுக்கை, ஸ்ரீவிஷ்ணுவைக் குறிக்கும் சங்கு, சக்கரம் முதலியவற்றைத் தாங்கி அருளுகிறார். அவர் திருப்பாதங்களின் அருகில் இருக்கும் நான்கு நாய்களும் நான்கு வேதங்களைக் குறிக்கும். வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் ஒருவரே என்பதை, இந்த நான்கு நாய்களும் அவரது திருவடிகளின் அருகில் இருப்பது குறிக்கிறது. ஸ்ரீதத்தரின் பின்புறம் இருக்கும் பசு, பூமியையும், படைப்புத் தொழிலையும் குறிக்கும்.


ஸ்ரீதத்தாத்ரேயர், மிகச் சிறு வயதிலேயே தம் இல்லம் விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைவதற்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்றார். கர்நாடகாவில் உள்ள கங்காபுரம்(Gangapur) என்னும் ஊரில் பிரம்ம ஞானத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது பத்தினி அனகா தேவி. ஆந்திர மாநிலத்தில் , அனகாதேவி.  விரதம் மிகப் பிரபலமானது. இதைக் கடைபிடிக்கும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

ஸ்ரீதத்தர், நிர்க்குண உபாசகர்களின் மஹாகுரு. யோகிகள், யோகசாதனையில் வெற்றியடைவதற்கு உதவும் பரமதயாளர். கார்த்த வீர்யார்ஜூனன், பரசுராமர் போன்றோரின் குரு இவரே. குறிப்பாக, பரசுராமருக்கு ஸ்ரீவித்யோபாசனையை அளித்த ஸ்ரீகுரு இவரே. 'திரிபுர ரஹஸ்யா' என்னும் நூல் ஸ்ரீதத்தரால் அருளிச்செய்யப்பட்டது.

வடஇந்தியாவில் ஸ்ரீதத்தாத்ரேயரின் வழிபாடு மிகப் பிரபலமானது.  இவர், சிரஞ்சீவிகளுள் ஒருவர். அவதூதர்.  ஸ்ரீ இராமகிருஷ்ணபரமஹம்சர், 'அவதூதர் என்பவர் இறைநிலை எட்டிய பின்  அதனை மக்களுக்கு உணர்த்த இறங்கி வருபவர்'. என்று கூறுகிறார்.


ஸ்ரீகிருஷ்ணர், உத்தவகீதையில் இவர் பெயரைக் குறிப்பிடாமல் அவதூதர் என்றே குறிப்பிடுகிறார்.  சந்திர வம்சத்து அரசனான யாயாதியின் மகன் யது என்பவர்,  ஸ்ரீதத்தாத்ரேயரைச் சந்தித்து, அவர் ஞானம் பெற்ற வரலாறு குறித்துக் கேட்கும் போது, ஸ்ரீதத்தர், தமது 16 குருமார்களை குறித்து, விளக்கமாக அவரிடம் எடுத்துரைக்கிறார். இந்த சரிதத்தை ஸ்ரீ கிருஷ்ணர், 'உத்தவ கீதையில்' அருளியிருக்கிறார்.

 ஸ்ரீதத்தர் அவதூதர் என்பதால், மிகப் பல இடங்களில் பாதுகைகளே இவரது வழிபாட்டுக் குறியீடாக விளங்குகிறது. உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில், 'குருமூர்த்தி' என்ற பதம், 'ஸ்ரீ தத்தரை'க் குறிப்பதாகவே விளங்குகிறது. மைசூரில் அமைந்துள்ள, ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமியின் தத்த பீடம் மிகப் பிரசித்தமானது. தமிழகத்தில், புதுக்கோட்டை, ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள் அமைத்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அதிஷ்டானத்திலும், சேங்காலிபுரத்திலும் ஸ்ரீதத்த பீடங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ தத்தரின் பாதை, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாகவே அறியப்படுகிறது. உண்மையின் பாதையே ஸ்ரீதத்தரின் பாதை. இவ்வுலகில் குருவாக அறியப்படுகிறவர்களுக்கெல்லாம் குருவான மஹாகுரு, ஸ்ரீதத்தரே.

ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி மகராஜ், அக்கல்கோட் சுவாமிஜி என்றழைக்கப்படும், ஸ்ரீசுவாமி சமர்த்த மகாராஜ், ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆகியோர் ஸ்ரீதத்தரின் மறு அவதாரங்களாகவே போற்றப்படுகின்றனர். ஸ்ரீசாயிநாதரின் வழிபாட்டில், ''ஸ்ரீதத்த பாவனி' எனப்படும், ஸ்ரீதத்தரின் மகிமைகளைப் போற்றும் துதிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

ஸ்ரீதத்த ஜெயந்தி தினத்தில், ஸ்ரீதத்தாத்ரேயரை வழிபட்டு, அருள் பெறுவோம்!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. மிகவும் அழகான பதிவு. அற்புதமான விளக்கங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா!!.

      நீக்கு
  2. பத்து நாட்களாய்
    பதிவை காணோமே..

    நலம் தானே
    நலமே பெறுக

    நல்வாழ்த்தும்
    நல்வணக்கமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான விசாரிப்புக்கு என் மனமார்ந்த நன்றி. சற்று உடல்நலக் குறைவு, வெளியூர் பயணங்கள் இரண்டும் சேர்ந்து கொண்டதால் இந்த இடைவெளி. மீண்டும் வழக்கம் போல் பதிவுகள் வெளிவரும் ஐயா. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை மறுமுறையும் கூறிக் கொள்கிறேன்.

      நீக்கு
  3. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா எனும் இடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பச்சைக்கல்லில் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கும் விக்ரஹம் பிரதிஷ்டை செய்துள்ளார் என்ற தகவலை இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    எம்.மாரியப்பன், தன்வந்திரி குடும்பத்தினர்

    மேலும் விவரங்களுக்கு www.dhanvantripeedam.com www.danvantripeedam.blogspot.in

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..