நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

VARAMAHALAKSHMI VRATHAM...(16/8/2013)..வரமஹாலக்ஷ்மி வருக... ..(வரலக்ஷ்மி விரதம்..16/8/2013)


அழகியலோடு சேர்ந்த நம் கலாசார, பண்பாட்டுக் கண்ணாடியாகத் திகழும் வரலக்ஷ்மி விரதம் வந்தே விட்டது. வரும் வெள்ளிக்கிழமை(16/8/2013) அன்று வரலக்ஷ்மி, வரங்களை அள்ளி வழங்க, நம் இல்லங்கள் தேடி வருகிறாள்.

வரலக்ஷ்மி விரதம் குறித்தும், அன்று செய்ய வேண்டியவை, அதற்கு முன் தினம் செய்ய வேண்டியவை  குறித்தும் நான் சென்ற வருடப் பதிவுகளில் எழுதியிருப்பதன் சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். கிட்டத்தட்ட முழுமையான 'கைடு' போல அவை இருக்கும் என்பது என் நம்பிக்கை. சுட்டிகளுக்கு, கீழே சொடுக்கவும்


2.வளம் பெருக... வரம் தருக... வரலக்ஷ்மி (இரண்டாம் பகுதி)

நல்லவை அனைத்திற்கும், சிறந்தவை அனைத்திற்கும், தூயவை அனைத்திற்கும், ஸ்ரீலக்ஷ்மியைத் தொடர்புபடுத்திப் பாராட்டுவது நம் மரபு.

'லக்ஷ்மீகரமாக இருக்கிறது' என்னும் ஒற்றைச் சொல்லில் தான் எத்தனை வித அர்த்தங்கள்!!. ஸ்ரீமஹாலக்ஷ்மியே, அஷ்ட லக்ஷ்மியாகவும் ஷோடச லக்ஷ்மியாகவும் விரிவடைந்து, எல்லா விதங்களிலும் நம் நல்வாழ்வு சிறக்க, பேரருள் மழை பொழிகின்றாள்.

திருமகள் அவதரித்தாள்:

திருமகள் திருப்பாற்கடலில் அவதரித்த தினம் 'அக்ஷய திருதியை' என்று சொல்லப்பட்டாலும், ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை என்றும் ஒரு கூற்று இருக்கிறது. ஆகவே, அன்றைய தினமும் திருமகளின் அவதார தினமாகக் கருதப்பட்டு, பல காலமாக, லக்ஷ்மி வழிபாடு நடைபெறுகிறது. திருமகளே வரங்களை அள்ளி அருளும் அருட்பிரவாகம். அன்றைய தினத்தில், அவளை வரங்களை அருளும் வரலக்ஷ்மியாக தியானித்து பூஜித்தனர் நம் முன்னோர்.

திருமகளின் அவதாரங்கள்;

திருமாலின் அவதாரங்கள் தெரியும். திருமகளின் அவதாரங்கள் தெரியுமா?.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் திருமகள் திருமால் மனம் மகிழ, திரிபுவனங்களும் நலம் பெற அவதரிக்கின்றாள்.

  1. ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிருகு மஹரிஷியின் புதல்வியாகவும்
  2. ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில், அக்னியிலும்
  3. ஔத்தம மன்வந்திரத்தில், நீரிலிருந்தும்
  4. தாமஸ மன்வந்திரத்தில் பூமியிலிருந்தும்
  5. ரைவத மன்வந்திரத்தில், வில்வமரத்தில் இருந்தும்
  6. சாக்ஷூஸ மன்வந்திரத்தில், தாமரைப்பூவில் இருந்தும்
  7. வைவஸ்வத மன்வந்திரத்தில் திருப்பாற்கடலில் இருந்தும் ஸ்ரீதேவி அவதரித்தாள்.

ஆக, வரலக்ஷ்மி அவதரித்த தினமாகவே கருதி, ஆவணி பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் செய்கின்றோம்.

வரலக்ஷ்மி விரதம் குறித்த புராணக் கதை:

ஒவ்வொரு புராணத்திலும் இது வெவ்வேறு விதமாக உள்ளது. இருப்பினும் பொதுவாக, கீழ்க்கண்ட புராணக் கதையே வழங்கப்படுகின்றது.

சியாமபாலாவின் சரிதம்:

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் பெரும் விஷ்ணு பக்தன். சுரசந்த்ரிகா என்னும் பட்டத்தரசியுடன், தன் நாட்டை நலமுற ஆண்டு வந்தான். அவனது செல்வத் திருமகளாக உதித்தவளே சியாமபாலா. சியாமாவை, மாலாதரன் என்னும் சக்கரவர்த்திக்கு மணம் செய்து தந்தார்கள்.

'விதி சதி செய்தது' என்னும் வார்த்தை பட்டத்தரசிக்குப் பலிக்கும் காலம் வந்தது. 'தெய்வம் மனுஷ ரூபேண' என்பது பலருக்குப் புரிவதில்லை. தேவதைகள், எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் தோன்றுவார்கள். ஆகவே யாராக இருந்தாலும் சரியான மரியாதை கொடுக்க வேண்டும். ஏளனமாக எவரையும் எண்ணக் கூடாது என்பது பெரியோர்கள் வாக்கு.

தான் பெற்ற திருமகளை மணமகளாக்கி புகுந்த வீடு அனுப்பிய பின்,பட்டத்தரசி ஒரு நாள்,  ஓய்வாக அமர்ந்திருந்தாள்.அப்போது ஸ்ரீலக்ஷ்மி தேவி, அவளைச் சோதிக்க எண்ணம் கொண்டாள். ஒரு முதிய சுமங்கலி வடிவில் தோன்றி, சுரசந்த்ரிகாவிடம், வரலக்ஷ்மி விரதம் பற்றிய குறிப்புகளை விரிவாக எடுத்துரைத்தாள். ஆனால், சுரசந்த்ரிகாவோ, அம்மையை, 'யாரோ யாசகம் கேட்க வந்தவள்' என்று நினைத்து கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி, அவளை வெளியே விரட்டிவிட்டாள். வெகுண்டு, கோபம் மிகக் கொண்டு வெளியேறிய லக்ஷ்மி தேவியை, அச்சமயம், தாயைக் காண பிறந்தகம் வந்து கொண்டிருந்த சியாமா, வாயிலருகில் சந்தித்தாள். கிழவியின் முகம் கண்டு துணுக்குற்றாள். மிகப் பணிவுடன்,முதியவளைச் சமாதானப்படுத்தி, அவளிடம் இருந்து விரத முறைகளைக் கேட்டறிந்தாள். தன் தாய் செய்த செயலுக்காக மன்னிப்பும் கோரினாள்.

அதன் பின், ஒவ்வொரு வருடமும், வரலக்ஷ்மி விரதம் இருந்து, முறை தவறாமல் சிரத்தையுடன் பூஜித்து வந்தாள் சியாமபாலா.அதன் பலனாக எல்லா செல்வ வளங்களும் அவள் இல்லம் தேடி வந்தன.

இப்படியிருக்க, பத்ரச்ரவஸ்ஸின் அரண்மனையில் காட்சிகள் மாறின. அவனது எதிரிகள், அவன் மீது படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றினர். மன்னனும், பட்டத்தரசியும் தப்பியோடி கானகத்தில் தஞ்சம் புகுந்தனர். உண்ண உணவும் இல்லாது வருந்தினர்.

சியாமா, பெற்றோர்களின் நிலை அறிந்து துயரம் மிகக் கொண்டாள். தகுந்தவர்கள் மூலம் விசாரித்து, பெற்றோர்கள் வசிக்கும் இடம் அறிந்தாள். தன் இருப்பிடம் அழைத்து வைத்துக் கொண்டு பராமரித்து வந்தாள். ஆனால், எத்தனை நாள் மருமகன் இல்லத்தில் மாமனார் வாசம் செய்ய இயலும்?. எனவே, ஒரு குடம் நிறைய தங்கக் காசுகள் எடுத்து பெற்றோரிடம் கொடுத்து, 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றாள் சியாமா. ஆனால், திருமகள் வாசம் செய்யும் செம்பொன், தீவினையாளாரிடம் சேர்ந்ததும் கரித்துண்டுகளாக மாறியது.  இதைப் பார்த்து அதிர்ந்த சுரசந்திரிகாவுக்கு, வரலக்ஷ்மி விரதம் குறித்து உபதேசித்த மூதாட்டியின் நினைவு வந்தது.

'அவள் சாதாரண மானிடப் பெண் அல்ல' என்பதை உணர்ந்தாள். தன் மகளிடம் வரலக்ஷ்மி விரதத்தை உபதேசிக்கும்படி கேட்டுக் கொண்டு, முறைப்படி விரதம் செய்து வந்தாள்.

கருணைக் கடலான வரலக்ஷ்மியின் அருட்பிரவாகத்தின் பலனாக, பத்ரச்ரவஸ்ஸிற்கு தைரிய லக்ஷ்மியின் அனுக்கிரகம் நிரம்பியது. தீரத்துடன் படை திரட்டி, போர் புரிந்து, இழந்த நாட்டை வென்றான். தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றனர் பத்ரச்ரவஸ்ஸூம் சுரசந்த்ரிகாவும்.

மற்றொரு புராணக் கதை:

சித்திர நேமி என்ற அப்சரஸ்(தேவ குலப் பெண்), அவளது உயர் குணம் மற்றும் கல்வியறிவின் காரணமாக மிக மதிக்கப்பட்டு வந்தாள். தேவர்களிடையே எழும் சிறிய சச்சரவுகளை எல்லாம், தன் சீரிய மதிநுட்பத்தால் நீதிபதியைப் போன்று, நடுநிலை தவறாமல் தீர்ப்பளித்து, தீர்த்து வைத்தாள். ஒரு முறை அவள் நடுநிலை தவறியதால், பாதிக்கப்பட்டவர் அன்னை உமையிடம் முறையிட்டனர். உமாதேவி, சித்திரநேமிக்கு, தொழுநோய் பீடிக்கும்படி சாபமிட்டாள்.

சித்திரநேமி, பதறி, தன்னை மன்னிக்கும்படியும் சாப விமோசனமளிக்கும்படியும் அன்னையை வேண்ட, அன்னையும், 'கங்கை நதிக்கரையில் வரலக்ஷ்மி விரதத்தை அனுசரித்தால் சாப விமோசனம் கிட்டும்' என அருளினாள்.

அவ்வாறே விரதம் அனுஷ்டித்து, சாப விமோசனம் அடைந்தாள் சித்திரநேமி. மேலும் 'இது போல், நதிக்கரைகளில் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பன்மடங்கு பலனை அடைய வேண்டும்' என்று ஸ்ரீலக்ஷ்மி தேவியிடம் வேண்டி, வரம் பெற்றாள். ஆகவே, இவ்விரதத்தை, நதிகளில் நீராடி, பின் நதிக்கரைகளில் செய்வது சிறப்பு.

இதே புராணக் கதை, சித்திரநேமி என்பவனை சிவனாரின் கணங்களில் ஒருவனாகச் சித்தரித்தும் வழங்கப்படுகின்றது. ஒரு முறை, சிவனாரும் உமையம்மையும் சொக்கட்டான் விளையாடியபோது, நடுவராக இருந்த சித்திரநேமி, பாரபட்சமாகத் தீர்ப்பளித்ததாகக் கருதிக் கொண்டு, உமை அவனுக்கு குஷ்டரோகம் வருமாறு சாபமிட்டுவிட்டார். பின்னர், காட்டுப் பகுதியில் அலைந்த அவன், ஒரு தடாகத்தில், தேவலோக மாதர்கள், வரலக்ஷ்மி விரதம் அனுசரிப்பதைப் பார்த்தான். அந்தப் பூஜையின் நெய்தீப வாசனையும், பூஜையைப் பார்த்த பலனும் அவன் நோயை விரட்டி விட்டன. அகமகிழ்ந்த சித்திரநேமி, தேவலோக மாதர்களிடம் பூஜை விவரங்களை அறிந்து கொண்டு, விரதம் அனுஷ்டிக்கத் தொடங்கி, அதன் பலனாக, விரைவில் தேவலோகம் சென்றான்.

இத்தகைய சிறப்பு மிக்க விரதத்தை நாம் செய்தால், அம்பிகையின் அருளால் அனைத்து நலன்களையும் பெறலாம்.

இனி, கொஞ்சம் பொதுவான குறிப்புகள்.

விரத பூஜையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.(முக்கியமாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு)

1.திட்டமிடல் எந்த வேலையையும் எளிதாக்கும். ஒரு மணி நேரம் ஒதுக்கி, ஆர அமர யோசித்து, செய்ய வேண்டிய வேலைகளையும் அழைக்க வேண்டிய நபர்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.பூஜைக்குத் தேவையானவற்றை முதலிலேயே திட்டமிட்டு வாங்கி வைத்துக் கொள்ளவும் (விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் இருக்கின்றது)

2. இம்முறை வியாழன் விடுமுறை தினம் என்பதால் அன்றே அனைத்தையும் சேர்த்து வைத்து கொள்ள வேண்டாம். என்ன சமையல், என்ன நிவேதனம் என்பதையும்,  தாம்பூலத்தில் என்ன தரவேண்டும் என்பதையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போது வாங்க வேண்டியதை வாங்கினால், கடைசி நேர டென்ஷன் மிச்சம். முக்கியமாக, எழுதின விபரங்களை கண்களில் படும்படி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.  முடிந்தால் தெரிந்தவர்களுக்குப் போன் போட்டு, எழுதியவற்றைச் சொன்னால், நமக்கு மறந்து போனதை அவர்கள் நினைவுபடுத்துவார்கள்(இது என் சொந்த அனுபவம்).

3. பூஜைகளை சிடி அல்லது பூஜா விதானத்தின் துணை கொண்டு செய்வதாக இருந்தால், முதல் நாளே  பூஜா விதானத்தை எடுத்து வைக்கவும். சிடி ஓடுகிறதா என்று செக் செய்யவும்.

4.  மின்சார வசதிகள் குறைவாக இருக்கும் இடத்தில், எந்த நேரத்தில் மின்சாரம் இருக்கும் என்பதை பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளவும். அதற்கேற்றாற் போல், அரைப்பது முதலியவற்றை திட்டமிடவும். பூஜை நேரத்தில் மின்சாரம் இருக்காதெனில், பூஜா விதானம் புக்கை நம்புவது கைகொடுக்கும்.

5. அம்மனுக்குச் சாற்ற வேண்டிய ரவிக்கைத் துண்டு, நோன்புச் சரடுகள், கொழுக்கட்டை மாவு தயாரித்த பின் அதை மூடி வைக்கத் தேவையான துணி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி, எடுத்து வைக்கவும். இது போன்ற விஷயங்களே டென்ஷனில் மறந்து போகும்.

6. எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல், இயன்ற‌ வேலைகளைப் பிரித்துக் கொடுங்கள். உதாரணமாக, தாம்பூலப் பொருட்களை கவரில் போடுவது முதலியவற்றை வீட்டில் உள்ள குழந்தைகளைச் செய்யச் சொல்லலாம். மறக்காமல், மறு நாள் தாம்பூலம் வாங்க வருபவர்களிடம்,  'தாம்பூலக் கவர் போட்டது'எங்க ரம்யா(அ) ரமேஷ் தான்' என்று சொல்வது குழந்தைகளை உற்சாகப்படுத்தும். அடுத்த முறை வேலை செய்ய  அழைக்காமலே ஓடி வருவார்கள்.

முக்கியமாக, பண்டிகை தினத்தில் பண்டிகை தின மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இன்றைய இறுக்கமான சூழலில், மனதை இலகுவாக்க இது போன்ற பண்டிகைகள் கட்டாயம் உதவும். ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு அம்பிகையை அலங்காரம் செய்து பாருங்கள்!!. அலங்காரம் அழகாக அமையும். மனம் மகிழ்ச்சியில் மிதக்கும். எனவே, வேண்டாத டென்ஷன்களை இரண்டு நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பூஜை முடிந்ததும் அவை போன இடம் தெரியாது!!.

இல்லம் சிறிதெனினும், அதை சுத்தப்படுத்தி, எளிமையாக, இருப்பவற்றக் கொண்டு அலங்கரித்து, முத்துப் போல் கோலமிட்டு விளக்கேற்றி வைத்து, உள்ளன்போடு அர்ச்சித்தால் ஜகன்மாதா கட்டாயம் அங்கு கொலுவிருப்பாள். ஆகவே, எதைச் செய்தாலும் அதை உள்ளன்போடு, உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்து அம்பிகையை ஆராதியுங்கள். அன்போடு வரம் பல தருவாள் வரலக்ஷ்மி!!. அம்பிகையை வரவேற்போம்!!. அவளருளால்..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

  1. அருமையான தகவல்
    அற்புதமாக கருத்து சிதறல்

    இந்த ஒரு பதிவிற்காகவே
    இல்லங்கள் தோறும் உங்களை வாழ்த்தும்

    உங்களை சகோதரியாக பெற்றதில்
    உண்மையிலேயே பெரு மகிழ்வு கொள்கிறோம் தாயே

    பல்லாண்டு வாழ்க
    பலர் போற்ற வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கமளிக்கும் அன்பான கருத்துரைக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!!.

      நீக்கு
  2. வளம் பெருக வரமரும் வரலஷ்மி விரதம் பற்றி
    விரிவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கமளிக்கும் தங்கள் வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா!!

      நீக்கு
  3. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வலைப்பூவில் ஆயிரமாவது பதிவு ஒரு பெரும் சாதனை. தங்களை வாழ்த்துவதால் நாங்களே பெருமையுறுகிறோம்.

      நீக்கு
  4. பூஜை செய்த நிறைவை கட்டுரையே அளித்து விட்டது.நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மேன்மையான கருத்துரைக்கும் என் உளமார்ந்த நன்றிகள் ஐயா!!

      நீக்கு
  5. நேசிப்பார் தனக்கும்; பூசிப்பார் தனக்கும்;
    யாசிப்பார் தனக்கும்; அருள் மந்திரம்
    வாசிப்பார் தனக்கும் - செங்கமலச் செல்வி
    காசினியிலே காட்டிடுவாள் சொர்க்கமதை!


    அன்னையவளின் அருளுக்கு தடம் அமைக்கும் அருமையான பதிவு...

    அன்னையவள் அன்பரில்லம் வந்து முன்பாவம்தீர்த்து
    அருளோடுப் பொருளுந்தந்து கருணைபுரியட்டும்.

    நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா!!.

      நீக்கு
  6. வரலக்ஷ்மி தேவி வந்தருள் புரிவாள்! அவளைப் போலவே அழகான பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றி!!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..