நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 31 அக்டோபர், 2013

DHANTERAS..(1/11/2013)...திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!!!

தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டாடப்படும் இது, வடநாட்டில் ஐந்து நாள் பண்டிகை!!!. தனதிரயோதசி துவங்கிக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, நரகசதுர்த்தசி, லக்ஷ்மி பூஜை, பலிபிரதிமா, பாய்தூஜ்(யமதுவிதியை) அன்று நிறைவுறுகிறது.

கோவத்ஸ் துவாதசி துவங்கி, பண்டிகைகள் கொண்டாடுவதும் உண்டு..இன்றைய தினம் கோவத்ஸ துவாதசி..

கோவத்ஸ துவாதசி விரதம் பற்றிய செய்திகளுக்கு, என் பதிவொன்றின் சுட்டி தருகிறேன். இது சென்ற வருடம் பதிவிட்டது..

கோவத்ஸ துவாதசி விரதம்

பொருட்செல்வம் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது. திருமகளின் கருணை நிரம்பிய பார்வை அனைத்து செல்வங்களையும் தர வல்லது. இப்பதிவில் தனதிரயோதசி குறித்த செய்திகளையும், திருமகளின் அருள் சேர்க்கும் எளிய முறை பூஜையையும் காணலாம்.

திருமகள் அருள், மன்னுயிர்கள் வாழ்வில் நலமெல்லாம் பெருக, பொங்கிப் பிரவகிக்கும் தினம் தன திரயோதசி . இன்றைய தினம் 'அக்ஷய திருதியை' தினத்திற்குச் சமமாகப் போற்றப்படுகின்றது.

ஸ்ரீலக்ஷ்மி பூஜை, தன்வந்திரி பூஜை, யமதீபம்,  கோத்ரிராத்ரி விரதம் என திரயோதசி தினத்தன்று கொண்டாடப்படும் பண்டிகைகள் அணிவகுக்கின்றன.

தனமாகிய செல்வத்துக்கு அதிபதியாம் லக்ஷ்மி தேவியைப் பூஜிக்க உகந்த தினம் தன திரயோதசி. தொழிற்கூடங்கள், வியாபார நிலையங்கள், இல்லங்கள் அனைத்தும் அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்றன. அல்பனா, ரங்கோலி முதலியவை வரையப்பட்டு, அன்னையின் நல்வரவைக் குறிக்கும் வகையில் ஸ்ரீபாதங்கள் எழுதப்பட்டு விளங்குகின்றன. மாலையில் தீபங்கள் ஏற்றப்பட்டு, அன்னையின் திருவருளை வேண்டி பூஜைகள் செய்யப்படுகின்றன...

தன திரயோதசி அன்று வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே, தங்கம், வெள்ளி துவங்கி, எவர்சில்வர், இரும்பு வீட்டு உபயோகப்பொருட்கள் வரை வாங்குகிறார்கள். முதலீடுகள் செய்வதும் மிக நல்லது என்பதால், சிறிய அளவிலேனும், பங்குகள், வியாபாரங்கள், டெபாசிட்களில் முதலீடுகள் செய்கிறார்கள்..

தன திரயோதசி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.

1.வெள்ளியினால் ஆன லக்ஷ்மி தேவி, பிள்ளையார் உருவங்கள் வாங்குவது வீடுகளிலும் தொழிலகங்களிலும் வெற்றி, விருத்தி முதலியவை அளிக்கும்.

2.வெள்ளி நாணயங்கள், பித்தளை பூஜைப் பொருட்கள், மரத்தாலான கடவுளர் உருவங்கள் வாங்குவது வளம் பெருக்கும்.  இவற்றை அன்பளிப்பாகப் பிறருக்குத் தருவது விசேஷம்.

3. எவர்சில்வர், இரும்பு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, சனீஸ்வரபகவானின் அதிதேவதையான எமதர்மராஜரை திருப்திப்படுத்தும். நீண்ட ஆயுளை நல்கும்.

4.  சமையலறையில் உபயோகிக்கும் பாத்திரங்கள் . தன்வந்திரி பகவான், தன் கையில் அமுதம் நிரம்பிய கலசப் பாத்திரத்துடன் தோன்றியதால், பாத்திரங்கள் வாங்குவதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள்.

5.தானிய விதைகள். இவற்றை உழவு நிலங்களில் தூவுகிறார்கள். இது தானிய விருத்தியையும் நீர் வளத்தையும் பெருக்கும்.

6. கண்/காது சொட்டு மருந்துகள், பிற மருந்துகள். இவற்றை வாங்கி, கட்டாயம் எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.  இது நோயற்ற வாழ்வை நல்கும்.

7. புது கணக்குப் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதில் தீபாவளி தினத்தன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்து,புதுக்கணக்கு எழுதத் துவங்குகிறார்கள்.

கூர்மையான முனையுடைய கத்தி, கத்தரிக்கோல் இன்ன பிற பொருட்கள் வாங்குவதைக் கட்டாயம் தவிர்க்கிறார்கள்.

தன திரயோதசி தினத்தன்று பாற்கடலில் இருந்து அபூர்வப் பொருட்களுடன் திருமகள் வெளிவந்ததாகக் கருதி, லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்கிறார்கள். மேலும், அன்றைய தினம் பெண்குழந்தை பிறந்தால், லக்ஷ்மீ தேவியே பிறந்ததாகக் கருதி, அதிர்ஷ்டக் குழந்தை என்று போற்றுகிறார்கள். அந்தப் பெண், திருமணமாகி, கணவன் வீடு செல்லும் போது, ஒரு தட்டில் குங்குமத்தை நிரப்பி, அதில், அவளது பாதச்சுவடுகளைப் பதிக்கச் சொல்லி வாங்குகிறார்கள். இதனால், இல்லத்தில் என்றென்றும் லக்ஷ்மீ தேவி நீங்காது நிலைத்திருப்பாள் என்று நம்புகிறார்கள்..

தன திரயோதசி தினம் குறித்த கதைகள் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையே.. அவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்.

தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, தன்வந்திரி பகவான் அமுதம் நிரம்பிய கலசத்துடன் தோன்றிய தினம் தன திரயோதசி.. ஆகவே அன்றைய தினம் தன்வந்திரி பகவானுக்கும் பூஜைகள் செய்கிறார்கள்.

ஹிமா என்ற அரசனின் 16 வயது மகன், திருமணமான நான்காம் நாள் இரவு பாம்பு கடித்து இறப்பான் என்று அவன் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் சொல்ல, அவன் இளம் மனைவி, அந்த நாளில், வீடெங்கும் தீபமேற்றி, நடுவில் ஒரு குவியலாக, தன் ஆபரணங்களை வைத்து, தன் கணவனைத் தூங்க விடாது, பாடல்களைப் பாடியும், புராணக் கதைகளைச் சொல்லியும் பார்த்துக் கொண்டாள். பாம்பு உருவில் வந்த யமதர்மராஜா, தீபங்கள் மற்றும் ஆபரணங்களின் பிரகாசம் கண்களை கூசச் செய்யவே, விடியும் வரை காத்திருந்து பின் திரும்பி விட்டாராம். இவ்வாறு அந்தப் பெண், தன் கணவனைக் காத்தாளாம். ஆகவே, யம பயம் நீங்க, யமதீபம் ஏற்றப்படுகின்றது. 

இதே கதை சிறு மாற்றத்துடனும் சொல்லப்படுகின்றது.

ஹிமாவின் மகனின் உயிரைப் பறிப்பதற்காக, யமதூதன் வந்த போது, அவன் இளம் மனைவி அழுது, தன் கணவன் உயிரைக் காக்க ஒரு உபாயம் சொல்லுமாறு வேண்டியதாகவும், உடனே யமதூதன் அவள் மீது இரக்கம் கொண்டு, யமதர்மராஜரை அணுகிக் கேட்க, அதற்கு தர்மராஜர், கார்த்திகை கிருஷ்ண பக்ஷ திரயோதசியில், தெற்கு நோக்கி தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவோரை, அகால மரணத்திலிருந்து தாம் காப்பதாகக் கூறினார்.
யம‌தூதனும் இதை இளவரசியிடம் உரைத்தார். அவ்வாறே அவளும் தென் திசை நோக்கி தீபங்கள் ஏற்றி, தொழுது வணங்கி, தன் கணவனைக் காத்தாள்.

தன திரயோதசி குறித்த மற்றொரு கதை:

'தந்தெரஸ்' என்ற சொல்லுக்கு, செல்வத்தை மழை போல் வர்ஷிக்கும் தினம் எனவும் பொருள் சொல்லப்படுகிறது. திருமளை அன்றைய தினம் வழிபாடு செய்ய வேண்டியதன் காரணத்தைச் சொல்லும் ஒரு கர்ணபரம்பரைக் கதை..

இது மனதால் ஒன்றுபட்ட திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகளுள் ஒன்று..
திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகள் எல்லாம் மானிடர்களாகிய நமக்கு நல்வழி புகட்ட அல்லவா?!!.

ஸ்ரீமஹாவிஷ்ணு ஒரு முறை லோக சஞ்சாரம் செய்யப் புறப்பட்டார். அப்போது, ஸ்ரீலக்ஷ்மீ தேவி, தானும் உடன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள்.  
அன்னையின் வேண்டுகோளைக் கேட்ட திருமால், இரண்டு  நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் தன்னுடன் வர இயலும் என்று கூறினார். ஒன்று, தேவி உலகாயத விருப்பங்களுக்கு ஆட்படக்கூடாது. இரண்டு, தென் திசை நோக்கி தன் பார்வையை செலுத்தக் கூடாது.

அன்னை இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, உடன் வர ஒப்புக் கொண்டாள்.

ஆனால் அன்னையால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற இயலவில்லை. லோக சஞ்சாரம் செய்யும் வேளையில், தற்செயலாக, தன் பார்வையை தென் திசை நோக்கி செலுத்திய தேவி, அங்கு அழகு கொஞ்சும் மஞ்சள் வண்ண மலர்கள் மலர்ந்திருந்த தோட்டத்தைக் கண்டாள். மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்துச் சூடிக் கொண்டு, வயல்வெளிகளில் நடனமிடத் துவங்கினாள். அருகிருந்த கரும்புத் தோட்டத்தின் கருப்பஞ்சாறையும் அன்னை ருசிக்கத் துவங்கினாள்.

தன் நிபந்தனைகளை தேவி மீறிவிட்டதைக் கண்டு, ஸ்ரீமஹாவிஷ்ணு கோபம் கொண்டார். தேவியிடம்,' இந்த மலர்ச்செடிகளுக்கும் கரும்புகளுக்கும் உரிமையாளனான விவசாயியிடம், நீ பன்னிரண்டு ஆண்டுகள் சாதாரண கூலியாளாக இருந்து வேலை செய்ய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின், என்னை வந்து அடைவாய்' என்று கூறிவிட்டு வைகுண்டம் ஏகினார்.

தேவி லக்ஷ்மி, தான், நிபந்தனைகளை மீறி, லோகாயத விருப்பங்களுக்கு ஆட்பட்டதை எண்ணி வருந்தினாள். இருப்பினும், தன் மணாளனின் கட்டளைப்படி, அந்த விவசாயியிடம் கூலியாளாகப் பணியாற்றலானாள்.

அன்னையின் வரவால், விவசாயி, மிக அதிக அளவிலான விளைச்சலை அடைந்தான். பன்மடங்கு லாபத்தின் காரணமாக, வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்தான் அவன். 

பன்னிரண்டு ஆண்டுகள் விரைவாகச் சென்றன. பன்னிரண்டாம் ஆண்டு முடிவில், தேவி, விவசாயியிடம் சென்று, தான் விடைபெற்றுக் கொள்வதாகக் கூறினாள். ஆனால் அவனோ, ஒரு நல்ல கூலியாளை அனுப்பத் தயாராக இல்லை. தான் அதிக அளவு சம்பளம் தருவதாகக் கூறினான். தேவி மறுக்க, அவன் மீண்டும் மீண்டும் சம்பளத்தை அதிகரித்து, வற்புறுத்தலானான்.

இறுதியில் தேவி ஒரு வேண்டுகோள் வைத்தாள். விவசாயியை கங்கைக்குச்  சென்று நீராடி வருமாறும், அச்சமயம், தான் தரும் சங்குகளை கங்கை ஆற்றுக்குச் சென்று சேர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள். விவசாயி திரும்ப வரும் வரை,  தான் அங்கேயே தங்கி இருப்பதாகவும் வாக்களித்தாள். நான்கு சிறிய சங்குகளையும் விவசாயியிடம் தந்தாள்.

விவசாயி, சங்குகளோடு புறப்பட்டான். கங்கைக் கரையை அடைந்து, சங்குகளை நீரில் சேர்க்கும் சமயம், நான்கு கரங்கள் நதியில் இருந்து, விரைந்து வந்து அவற்றைப் பெற்றுக் கொண்டன. 

விவசாயி, சங்குகளை தன்னிடம் அளித்தவர் சாதாரண மானிடப் பெண் இல்லை என்பதை உணர்ந்தான். அவர் யாரென தனக்குக் காட்டுமாறு, கங்கா மாதாவிடம் பிரார்த்தித்தான். 

கங்கா தேவியின் பெருங்கருணையால், வந்திருப்பது திருமகளே என உணர்ந்து, விரைந்து இல்லம் சேர்ந்தான். திருமகளை, தன் இல்லம் விட்டுப் போக வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.

அன்னை, விவசாயியிடம், தான் அங்கேயே இருக்க இயலாதென்பதைக் கூறி, தான் ஒவ்வொரு வருடமும் தனதிரயோதசி தினத்தன்று அவன் இல்லம் வருவதாகவும், அச்சமயம், இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசற்படியில் அகல் தீபங்களை ஏற்றினால்,  என்றென்றும் அவன் இல்லத்தை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும் வாக்களித்தாள்.

அன்று முதல், தன திரயோதசி தினத்தன்று, இல்லங்களைத் தூய்மை செய்து, அகல் தீபங்களை ஏற்றி ஸ்ரீலக்ஷ்மி தேவியை வழிபடும் வழக்கம் உண்டானது.

தன திரயோதசி  எளிய முறை  பூஜை விதிகள்
1. இல்லத்தை சுத்தமாக வைக்கவும். கோலங்கல் முதலியவற்றால் அலங்கரிக்கவும். 
2. பூஜை செய்யும் இடத்தில், ஒரு சுத்தமான துணியை விரித்து, அதில் அரிசியைப் பரப்பி வைக்கவும்.
 3. ஒரு தாமிர/பித்தளை செம்பில், முக்கால் பாகம் நீர் நிரப்பி, பாக்கு, மலர்கள், ஒரு நாணயம், சிறிதளவு அரிசி இவற்றை இடவும்.
4. செம்பில், மாவிலைக் கொத்தை வைத்து, அதன் மேல் ஒரு சுத்தமான தட்டை வைக்கவும். தட்டின் மேல் மஞ்சள் பொடி கொண்டு, தாமரை மலரை வரைந்து, அதன் மேல் ஒரு சிறிய லக்ஷ்மி தேவி விக்ரகம் அல்லது படம் வைக்க வேண்டும். கலசத்தின் அருகில்  சிறு விநாயகர் விக்ரகம் வைக்கவும். பிற தெய்வத் திருவுருவங்களையும் வைக்கலாம். 
5.திருவிளக்கை ஏற்றிக் கொள்ளவும்.
6. மனதில் லக்ஷ்மி தேவியின் திருவுருவை  ஆழ்ந்து தியானிக்கவும்..
7.கலசத்திற்கு, குங்குமத்தாலோ, மலர்களாலோ அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டவும்.
8. இயன்றால் ல‌க்ஷ்மீ தேவியின் விக்ரகத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். ஷோடசோபசார பூஜையும் செய்யலாம். தேவியின் திருவுருவிற்கு, மணி பிளான்ட்டின் இலைகள், சந்தன உருண்டைகள் இவற்றால் ஆன மாலைகள் சாற்றுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
9. இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை சமர்ப்பிக்கவும். குறைந்தது, ஐந்து வகை இனிப்புகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

10. பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பிக்கவும்.

அமைதியாக, ஆரத்தி காண்பிக்கவும். க்ஷமா பிரார்த்தனை நிறைவுற்ற பின், சிறிது நேரம் லக்ஷ்மீ தேவியைத் தியானிக்கவும். 

பிரசாதங்களை சிறிதளவு உண்டுவிட்டு, பின் விநியோகிக்கவும்.

மேற்கண்ட விதிகளில், அவரவர் சௌகரியப்படி பின்பற்ற முடிந்ததைப் பின்பற்றலாம். இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது மட்டும் முக்கியம். பூஜை செய்ய இயலாதவர்கள், அன்னையை மௌனமாக தியானிக்கலாம்.. 

சிலரது இல்லங்களில், குபேரனுக்கும் தனதிரயோதசி அன்று பூஜை செய்யப்படுகின்றது. பதிமூன்று தீபங்கள் ஏற்றி, தூப தீப ஆராதனைகளுடன், குபேர அஷ்டோத்திரம் சொல்லி வழிபாடு செய்யப்படுகின்றது.

யம தீபம் பூஜிக்கும் முறை:
1. மாவினால் ஆன தீபம் ஒன்று செய்து கொள்கிறார்கள். தீபத்தில் நான்கு திரிகள் போட்டு, நெய் அல்லது எண்ணை ஊற்றுகிறார்கள்.. 
2. இதுவே யம தீபம். யமதர்மராஜரின் திருப்திக்காகவும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும்  இதை ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.
3. பெரும்பாலும் பூஜையை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்தே செய்கிறார்கள். பூஜைக்கு அமர்பவர்கள் அனைவருக்கும், குடும்பத்தில் மூத்த பெண்மணி அல்லது மணமாகாத கன்னிப் பெண், நெற்றியில் திலகமிட்டு அக்ஷதை போடுகிறார்.
4. திருவிளக்கையும் யமதீபத்தையும் ஏற்றுகிறார்கள்.
5. யமதீபத்தைச் சுற்றிலும் புனித நீர் தெளித்து, அக்ஷதை, மலர்கள், காசுகள் கொண்டு பூஜை செய்கிறார்கள்.
6. நான்கு திரிகளுக்காக, நான்கு வித இனிப்புகள் படைக்கிறார்கள். வேறு நிவேதனங்களும் செய்கிறார்கள்.
7.பெண்கள், யம தீபத்தை நான்கு முறை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.
8.குடும்பத்தின் மூத்த ஆண், தன் தலை மீது சுத்தமான துணியை அணிந்து கொண்டு, யம தீபத்தை எடுத்துச் சென்று, தலைவாயிலின் வலப்புறத்தில் வைக்கிறார்.

இதன் பிறகு, மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுகின்றனர்.

இவ்வாறு செய்வதால், யமதர்மராஜரின் ஆசியும், முன்னோர்கள் ஆசியும்,  கிடைக்கும். நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெறலாம் என்பது நம்பிக்கை.

தன திரயோதசி தினத்தில், நம் இல்லங்களிலும் இயன்ற அளவு திருமகளைப் பூஜித்து, எல்லா வளங்களும் நலங்களும் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 26 அக்டோபர், 2013

SRI AHOI MATHA PUJA..AHOI ASHTAMI VRATH POOJA ..... PART 2...ஸ்ரீ அஹோய்/ஆஹோயி பகவதி மாதா பூஜை, ஆஹோய் அஷ்டமி விரத பூஜை பகுதி 2..(26/10/2013)


சென்ற பதிவின் தொடர்ச்சி..

இன்னொரு கதை:

இது பெரும்பாலும் முதல் கதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.

முன்னொரு  காலத்தில், ஒரு கிராமத்தில்,  மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை உடைய ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத்தில் இரு மகன்கள். இருவரும் ஒரு இல்லத்திலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இளைய மகன், தன் மனைவியிடம், 'தீபாவளிச் சந்தைக்காக‌, புதிய பானைகள் செய்து விற்பனை செய்ய வேண்டும். ஆகவே, நீ சென்று கொஞ்சம் மண் சேகரித்துக் கொண்டு வா' என்று அனுப்பினான். அவளும் ஒப்புக் கொண்டு, அருகில் இருந்த கானகத்திற்குச் சென்றாள்.

மண் சேகரிக்கக் குழி தோண்டிய போது தவறுதலாக, ஒரு குள்ளநரியின் ஏழு குட்டிகளைக் கொன்று விட்டாள். அவள் மிகவும் வருந்திய போது அவ்விடம் வந்த தாய் நரி நடந்ததை எல்லாம் அறிந்தது.மிகுந்த கோபத்துடன், 'நீ என் குடும்பத்தை அழித்தாய்..உன் குடும்பமும் இவ்வாறே ஆகும்' என்று சாபமிட்டது.

அந்தப் பெண், நிலைகுலைந்தாள். அழுதாள்.. நரியிடம் மன்னிப்பு வேண்டினாள். இறுதியில், 'நான் எதை வேண்டுமானாலும் செய்கிறேன், தயவு செய்து என் குடும்பத்தைக் காப்பாற்று' என்று கூறினாள்.

நரி, 'நீ உனக்குப் பிறக்கும் ஏழு குழந்தைகளை, அவை பிறந்ததும் கொண்டு வந்து தந்து விட வேண்டும். அவ்வாறு செய்வதாக சத்தியம் செய்.. என் சாபத்தை நான் திரும்பப் பெறுகிறேன்..' என்றது.

அந்தப் பெண்ணும் ஒப்புக் கொண்டாள். அவளுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை, மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அவை பிறந்தவுடன் நரியிடம் சேர்த்தாள்.

ஒரு நாள் அவள் குடிசைக்கு ஒரு முனிவர் வந்தார். மிக வருத்தம் தோய்ந்த அவள் முகத்தைப்  பார்த்து விட்டு, பரிவோடு அவளிடம் காரணம் கேட்டார். அந்தப் பெண், மனத்துயரத்தோடு தன் குறையை அவரிடம் கூறினாள்.

அந்த முனிவர், வரும் அஹோய் அஷ்டமி தினத்தன்று, உபவாசம் இருந்து, அஹோய் மாதாவை பிரார்த்தனை செய்து, பூஜித்து விரத நிறைவு செய்யக் கூறினார். அன்னை அவள் குழந்தைகளைக் காப்பாள் என்று ஆறுதல் கூறினார்.

அந்தப் பெண்ணும் அவ்வாறே விரதம் இருந்து, விரத நிறைவும் செய்தாள். அன்னை மனம் மகிழ்ந்தாள். நரியிடம், 'உன் துயரத்திற்கு ஈடாக அவளும் துன்பப்பட்டு விட்டாள்..அவளது குழந்தைகளைத் திரும்பக் கொடு.. என்று கட்டளையிட்டாள். நரியும் அவ்வாறே செய்தது.

அந்தப் பெண், தன் ஏழு குழந்தைகளையும் திரும்பப் பெற்று மன மகிழ்ந்தாள்.

விரதம் இருக்கும் முறை:

Alpana
விரதம் இருக்கும் பெண், அதிகாலையில் எழுந்து, நீராடி,  பூஜையறையில் தேவியின் திருமுன் அமர்ந்து சங்கல்பம்(உறுதி) செய்து கொள்ள வேண்டும். ' அம்மா, இன்று முழுவதும் உணவு உண்ணாமலும் நீர் பருகாமலும் உன்னை நினைத்து உபவாசம் இருக்கிறேன்.. இன்று இரவு நட்சத்திரங்களைத் தரிசித்த பின்னரே விரதம் நிறைவு செய்வேன்..உன் பெருங்கருணை, இந்த விரதத்தை நிறைவேற்றி வைத்து, என் குழந்தைகளைக் காக்க வேண்டுகிறேன்..' இவ்வாறு கூறிப் பிரார்த்தித்த பின், நாள் முழுதும் உபவாசம் இருக்க வேண்டும்..

சில குடும்பங்களில் சந்திரோதயம் ஆன பின்னரே விரத நிறைவு செய்தல் வழக்கத்தில் இருக்கிறது.

மாலையில், பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒரு சுவரில், அஹோய் மாதாவின் திருவுருவப் படத்தை வரைய வேண்டும். அஷ்டமி தினத்தைக் குறிக்கும் வகையில் எண் கோண வடிவத்தை வரைந்து அதனுள் அன்னையின் திருவுருவம் வரைய வேண்டும்.  ஏழு மகன்கள், மருமகள்கள் உருவங்களும், சிங்கம், நரி போன்றவற்றின் உருவங்களும், அஹோய் விரதக் கதையினை நினைவுபடுத்துவது போல்  வரையப்படுகின்றன. தற்போது இது கடைகளில் படங்களாக விற்பனை செய்யப்படுகிறது. அதையும் வாங்கி வந்து பூஜையில் வைக்கிறார்கள்.

படத்தின் முன் 'அல்பனா' எனப்படும் கோலங்கள் வரைகிறார்கள்..

பின், அன்னையின் திருமுன், ஒரு மர முக்காலி அல்லது தரையில், முழு கோதுமை பரப்பி வைக்கிறார்கள். ஒரு நீர் நிரம்பிய கலசம், தானியத்தின் மேல் வைக்கப்படுகின்றது.  கலசத்தைச்  சுற்றிலும் மஞ்சள் தோய்க்கப்பட்ட சிவப்பு நிற நூல் சுற்றப்படுகின்றது. கலசம், மண் பானையிலும் வைக்கலாம்.

கலசம், மண்ணால் செய்யப்பட்ட மடக்கு ஒன்றினால் மூடப்படுகின்றது.. அதன் மேல் மண்பானை(சிறியது) ஒன்று வைக்கப்படுகின்றது. இதுவும் நீரால் நிரப்பப்பட்டு மடக்கால் மூடப்படுகின்றது..

ஒரு தட்டில் அந்தப் பகுதியின் பிரபலமான தானியங்கள்(அ) கோதுமை, நெற்கதிர்கள் வைக்கப்படுகின்றன.

நிவேதனங்களாக, எட்டு பூரிகள், எட்டு புவா(மால்புவா), ஹல்வா, வேகவைக்கப்பட்ட கொத்துக் கடலை முதலியன வைக்கப்படுகின்றன.

புவா செய்முறைக்கு இங்கு சொடுக்கவும்..

இன்னொரு தட்டில்,  வாயணம் மற்றும் மாமியாருக்கான ஒரு அன்பளிப்பு/பணம் தயாராக வைக்கப்படுகின்றது. பூஜை முடிந்ததும், இதை மாமியாருக்கு அளித்து வணங்க வேண்டும்..

சிலரது குடும்ப வழக்கப்படி, பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பணம் தர வேண்டும். அந்த வழக்கமுள்ளவர்கள், குழந்தைகளுக்குத் தரும் பணத்தையும் அன்னையின் முன் வைக்கிறார்கள்.
பூஜையின் முக்கிய அம்சமே, அன்னைக்குச் சமர்ப்பிக்கும் மாலை. அவரவர வழக்கப்படி, பூக்கள், தானியங்கள், ரூபாய் நோட்டுக்கள், வெள்ளி/தங்க‌ மணிகளால் ஆன மாலை சமர்ப்பிக்கிறார்கள். இது பெரும்பாலும் அவரவர் தொழிலை ஒட்டியே அமைகிறது. ரூபாய்கள், வெள்ளி/தங்க மணி மாலைகள், தலைமுறை தலைமுறையாக கை மாற்றப்பட்டு, பூஜைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. சிலர் ஒவ்வொரு வருடமும் புது மாலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் ஏதாவது நேர்ந்து கொண்டு அது நடந்தால், புதிய மாலை செய்து சாற்றுகிறார்கள்.

சில குடும்பங்களில் வெள்ளியாலான அஹோயி செய்து வைத்திருப்பார்கள். இதை, பூஜையின் போது பால்,அக்ஷதை முதலியவற்றால் பூஜித்து, பூஜைக்குப் பின் நூல் கொண்டு கழுத்தில் டாலர் போல் அணிந்து கொள்வார்கள்.

பூஜையை, குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அல்லது அக்கம்பக்கத்தோர் அனைவரும் சேர்ந்து செய்வது வழக்கம்.

பூஜை சந்தியா வேளையில் துவங்கப்படுகின்றது.. தூப தீபங்கள் முதலானவை சமர்ப்பித்து தேவி ஆராதிக்கப்படுகின்றாள்.

(ஸ்ரீ  அஹோய் மாதா ஆரத்திப் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்..)

பூஜை முடிந்து, நிவேதனங்கள் சமர்ப்பித்த பின், ஏழு கோதுமை தானியங்களை கையில் எடுத்துக் கொண்டு விரதக் கதை கேட்கிறார்கள். வயதில் மூத்த பெண் 
கதை சொல்கிறார். கதை நிறைவில், 'அந்தக் குழந்தைகளைக் காத்தது போல், எங்கள் குழந்தைகளையும் காப்பாய் அன்னையே..' என்ற வேண்டுதலோடு நிறைவு செய்கிறார்கள்.

சின்னப் பானையில் இருக்கும் நீரை எடுத்துக் கொண்டு, நக்ஷத்திரங்களுக்கு/சந்திரனுக்கு அர்க்கியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின் வாயணம், அன்பளிப்பு முதலியவை மாமியாருக்குத் தந்து, பாதம் தொட்டு வணங்குகிறார்கள்.

தங்கள் குழந்தை கையால், ஒரு தம்ளர் நீர் அல்லது பழரசம் அருந்தி விரதம் நிறைவு செய்கிறார்கள். பணம், இனிப்பு முதலியவை விநியோகிக்கப்படுகின்றன.

பெரிய பானையில் இருக்கும் நீரை நரகசதுர்த்தசி ஸ்நானத்திற்கு உபயோகிக்கிறார்கள்.

இவ்வாறு விரதமிருந்து பூஜிப்பவர்களது குழந்தைகளை, அன்னை கட்டாயம் காக்கின்றாள் என்பது உறுதியான நம்பிக்கை..

 அன்னையைப் பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!

 அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி; கூகுள் படங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

SRI AHOI MATHA PUJA..AHOI ASHTAMI VRATH POOJA ..... PART 1...ஸ்ரீ அஹோய்/ஆஹோயி பகவதி மாதா பூஜை, ஆஹோய் அஷ்டமி விரத பூஜை பகுதி 1..(26/10/2013)


நம் பழம்பெரும் பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பலவிதமான பூஜைகள், வழிபாடுகள், விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த விரதங்களும் பூஜைகளும் மிக முற்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு விரதமும் பூஜையும் பிரத்தியேகமான செய்முறைகள், விதிகளைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் செய்வதாகவே இவை அமைந்திருக்கின்றன.

மேலும் ஒவ்வொரு விரதம்/பூஜைக்கும் ஒரு விரதக் கதை உண்டு. பூஜை நிறைவுற்ற பின் கதையைப் படிப்பது கட்டாயம்.

இந்த விரதங்கள்/பூஜைகளின் வழிபடு தெய்வம், இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் வேறுபடுகின்றது. பெரும்பாலும் அன்னை சக்தியின் அம்சங்களாகத் திகழும் தேவியரே பிரதான தெய்வம்.

இம்மாதிரியான, பூஜை/விரதங்களில், நானறிந்த, அதிகம் பிரபலமாகாத சிலவற்றை தங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன்.. அந்த வரிசையில் அஹோய் விரதம் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில்..

அஹோயி அஷ்டமி விரத பூஜை:

தாய்மை என்னும் உன்னதமான, ஒப்புவமையில்லாத உறவின் பெருமையை அறியாதார் யார்?!!.  தன் குழந்தைகள் நலன் வேண்டி, அன்னையானவள் அநேக நோன்புகளைச் செய்கிறாள். விரதம் இருந்து, தன் மக்கள் நிறை வாழ்வு வாழ வேண்டுகிறாள். தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டி நோற்கும் நோன்புகளின் ஒன்று இது..

அண்டமெல்லாம் பரந்து விரிந்த அன்னை சக்தியின் அம்சங்களில் ஒன்றே ஸ்ரீ அஹோய் மாதா/அஹோய் பகவதி என்னும் திருநாமத்துடன் வழிபடப்படும் கிராம தேவதை. குழந்தைகளின் நலம் காக்கும் தேவியாக வழிபடப்படும் இந்த அன்னையே அஹோயி அஷ்டமி பூஜையில் பிரதான இடம் பெறுகிறாள். ஹோய் மாதா என்றும் தேவி அறியப்படுகின்றாள்.

விரதம் செய்யும் தினம்:

 இம்மாதம் வட இந்தியர்களுக்கு கார்த்திகை மாதம்.. கார்த்திகை கிருஷ்ண பக்ஷ அஷ்டமியே  அகோயி அஷ்டமி என்று வழங்கப்படுகின்றது. நம் பஞ்சாங்கத்தின்படி, தீபாவளிக்கு முன்னதாக வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் இது அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம், இது வரும் சனிக்கிழமை, அக்டோபர் 26ம் தேதி வருகின்றது. 27ம் தேதியும் சில பகுதிகளில் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த விரதத்தை இந்த மாதத்தில் அனுசரிப்பதற்கும் காரணம் இருக்கிறது...

வட இந்தியர்கள், ஒரு வருடத்தின் பன்னிரண்டு மாதங்களையும், ஸ்ரீகிருஷ்ணரின் பன்னிரு திருநாமங்களுடன் இணைத்து வழங்குகிறார்கள். அதன்படி, இந்த மாதம் தாமோதர மாதம். பிரபஞ்சம் நிறைந்த பரம்பொருள், யசோதையால் உரலில் கட்டப்பட்ட லீலை நடந்த மாதம் இது என்று கூறப்படுகிறது. சின்னஞ் சிறிய கண்ணனின் திரு வயிற்றில்(உதரம்), கயிறு (தாமம்) கட்டப்பட்டதால் 'தாமோதரன்' என்னும் உயரிய திருநாமம் வழங்கலாயிற்று.. கண்ணன், உரலில் கட்டப்பட்ட விருத்தாந்தத்தை நித்தம் நினைத்துத் தொழுவோர், பந்தம் என்னும் கட்டுக்களில் இருந்து விடுபடுவர். மேலும், விஷமக்காரக் கண்ணன், வெண்ணை திருட ஆரம்பித்த மாதம் இதுவாம்.... பத்ம புராணத்தின்படி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகப் பிடித்த மாதம் இது.

இந்த மாதம் ஒவ்வொரு நாளும், மாலை வேளையில், ஸ்ரீகிருஷ்ணருக்கும் துளசிக்கும் தீபங்கள் காட்டி, ஸ்ரீதாமோதராஷ்டகம் பாராயணம் செய்வது விசேஷப் பலன்களைத் தரும்..

(ஸ்ரீ தாமோதராஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்..அருமையான ஸ்லோகப் பதிவுகளைத் தொடர்ந்து அளித்து வ‌ரும் சகோதரர் திரு.க்ஷேத்ரயாத்ராவின் வலைப்பூ இது )

இந்த மாதத்தில் செய்யும் விரதங்கள் மிக அதிகப் பலன் கொடுக்கும் என்பது ஐதீகம். அதனால் இம்மாதம், வட இந்தியர்களுக்கு விரதங்கள் அனுசரிக்கும் மாதம்.

ஆகவே குழந்தைகளின் நலன் நாடும் இந்த விரதம், இந்த மாதம் அனுசரிக்கப்படுகின்றது.
  
பொதுவாக இந்தியாவில் கிழக்குப் பகுதி மாநிலங்களில் வசிப்போர், இந்த விரதத்தைக் கட்டாயம் கடைபிடிக்கிறார்கள். மஹாராஷ்டிரா, இந்த விரதம் அனுஷ்டிக்கும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது.

விரதக் கதை:

விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் வரக் காரணமான கதைகளை, தற்போது பார்க்கலாம். இவை செவி வழிக் கதைகளே. ஆனாலும், ஆழ்ந்த இறைநம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன.. இந்த விரதத்துக்கு இரண்டு மூன்று கதைகள் வழங்கப்பட்ட போதிலும், அடிப்படையில் அவை அனைத்தும் பொதுவான விஷயங்களைக் கொண்டுள்ளன. அவை,

1.குழந்தைகளின் நலனை, ஆழ்ந்த நம்பிக்கையோடு கூடிய வழிபாடு நிச்சயம் காப்பாற்றும்.

2.நெருப்பானது அறிந்து தொட்டாலும் அறியாது தொட்டாலும் சுடும் என்னும் உண்மை போல், பாவமானது அறிந்து செய்தாலும் அறியாது செய்தாலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். 

3.இறைவனின் கருணை, கர்மவினைகளையும், பாவங்களையும் மன்னித்து நீக்க வல்லது.

முதல் கதை:
அது ஒரு கிராமம். ஏழு மகன்களை உடைய ஒரு தாய், தீபாவளியை முன்னிட்டு தன் இல்லத்தை அழகுற அலங்கரிக்கத் துவங்கினாள்... அவளுக்கு சற்று அதிக அளவில் மண் தேவைப்பட்டது. உடனே, அருகில் இருந்த காட்டுக்குச் சென்றாள்,  சிறிய குத்தீட்டி போன்ற ஆயுதத்தை வைத்து குழி தோண்ட ஆரம்பித்தாள். சற்றுப் பெரிய குழியாக வெட்டி விட்டு, குத்தீட்டியை அருகில் இருந்த புதரில் எறிந்தாள்.. கூடைகளில் மண்ணை சேகரிக்க ஆரம்பித்தாள்.

வேலை முடிந்தது. குத்தீட்டியைத் தேடியவள், புதரிலிருந்து அதனை எடுக்கச் சென்ற போது அதிர்ந்தாள்.. அந்தோ... அங்கு ஒரு சிங்கக் குட்டி, இவள் எறிந்த குத்தீட்டியால் உயிர் துறந்திருந்தது...

பதறிப் போனாள் அந்தப் பெண்... அறியாமல் செய்த தவறு.. ஆயினும் என்ன செய்ய நேரும்?!!!!.. வருத்தத்துடன் குத்தீட்டியையும் கூடைகளையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினாள்..

ஆனால், பண்ணிய பாவம் சும்மா விடவில்லை. அடுத்தடுத்த வருடங்களில் அவள் ஏழு மகன்களும் மறைந்தனர். துயரத்தால் அழுது புலம்பினாள் அந்தப் பெண்.. என்ன பாவம் செய்தோம்?!!! என்று வருந்தினாள்..ஒரு வேளை, தான் அந்த சிங்கக் குட்டியைக் கொன்றது காரணமோ என்று அவளுக்குத் தோன்றியது..

கிராமத்துப் பெண்கள் அவளை நாடி வந்து ஆறுதல் சொன்னார்கள்.. அதில் ஒரு மூத்த பெண்மணியிடம், தான் அறியாது சிங்கக் குட்டியைக் கொன்றது குறித்து விவரித்தாள் அந்தப் பெண்.. இந்தப் பாவத்திற்குப் பரிகாரமும் கூறுமாறு கேட்டுக் கொண்டாள்.

அதற்கு அந்த முதியவள் 'பார்,  எப்போது நீ செய்த தவறை உளமார ஒப்புக் கொண்டாயோ, அப்போதே உன் பாவத்தில் பாதி குறைந்து விட்டது. நம் அஹோயி மாதா,தாய்க்கெல்லாம் தாய். அவளிடம் முறையிடு.. வரும் அஷ்டமி தினத்தில், விதிமுறைப்படி விரதம் இரு.. கட்டாயம் நல்வழி பிறக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்வாழ்வு வாழலாம்..' இப்படிப் பலவாறு கூறித் தேற்றினாள்.

விரத நெறிமுறைகளைக் கேட்டறிந்து, அதன் படி நம்பிக்கையுடன் விரதத்தைத் தொடர்ந்து கடைபிடித்தாள் அந்தப் பெண்.  அன்னை அஹோயி, அவளது பூஜைகளை ஏற்று, அவளை மன்னித்து அருள்புரிந்தாள். அன்னையின் அருளால், அந்தப் பெண் விரைவில், தன் அனைத்துக் குழந்தைகளையும் உயிருடன் கண்டடைந்து சுக வாழ்வு வாழத் துவங்கினாள்.

இதைக் கண்ட கிராமத்தார் அனைவரும், தம் குழந்தைகளின் நலனுக்காக, இந்த விரதத்தை அனுஷ்டிக்கத் துவங்கினர்.

மற்றொரு கதை;
முற்காலத்தில், தாத்யா என்னும் ஒரு சிற்றூரில் சந்திரபான் என்னும் ஒருவன் வசித்து வந்தான். வட்டிக்குப் பணம்  கடனாக வழங்கும் தொழில் செய்து வந்த அவன், அந்தத் தொழில் மூலம் ஏராளமாகப் பணம் குவித்தான்.. 

அவன் மனைவி சந்திரிகா.. அழகிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மங்கையான அவள், தன் கணவனின் அன்புக்குகந்தவளாகவும் திகழ்ந்து வந்தாள்...

ஆனால் குறைகளில்லா வாழ்வேது?.. சந்திரிகா பல குழந்தைகளை ஈன்றாள். ஆனால் அவை யாவும் விரைவில் உயிர் துறந்தன...

சந்திரபான் மனம் கலங்கினான். எத்தனையோ வழிமுறைகளில் முயன்றும் அவர்களின் ஒரு குழந்தைக்கும் நீண்ட ஆயுள் ஆசீர்வதிக்கப்படவில்லை.

கணவன் மனைவி இருவரும், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தனர். தம் செல்வம் அனைத்தையும் ஒன்று திரட்டி பெரும் மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். 'யார் இருக்கிறார் இவற்றை ஆள?' என்னும் எண்ணம் அவர்கள் உள்ளம் முழுமையையும் ஆக்கிரமித்தது... அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, அருகிலிருந்த கானகத்துக்குச் சென்ற அவர்கள், அங்கு ஓர் மரத்தடியில் மூட்டையை வைத்து விட்டு, நடக்கத் துவங்கினர்...

நடந்து, நடந்து பத்ரிகாசிரமத்திற்கு அருகில் வந்து விட்டனர். அங்கே ஒரு அழகு வாய்ந்த குளத்தைக் கண்ட தம்பதிகள், அதன் அருகே அமர்ந்தனர். 

மனத் துயரம் தாங்காமல், உணவையும் நீரையும் துறந்து, உயிர் துறக்கத் தீர்மானித்தனர்.

அவ்வாறே ஏழு தினங்கள் சென்றன. ஏழாவது தினம் ஒரு அசரீரி எழுந்தது, 'தம்பதிகளே, நீங்கள் உங்கள் பழைய கர்மவினைகளின் காரணமாக, இந்த துன்பத்தை அடைந்தீர்கள். நாளை அஹோய் அஷ்டமி. சந்திரிகா, அஹோய் மாதாவைத் தொழுது, அஹோய் அஷ்டமி விரதம் அனுஷ்டிப்பாளாக... இந்தப் புனிதக் குளம், பெருமை வாய்ந்த 'ராதாகுண்ட்' ஆகும். நீங்கள் இருவரும், விரத அஷ்டமியன்று இரவு, இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து, அஹோய் மாதாவைப் பூஜித்தால், விடிவதற்குள் அன்னை பிரசன்னமாவாள். அவளிடம் நீங்கள், உங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளைக் கேட்டுப் பெறுங்கள்..' இவ்வாறு அந்த அசரீரி கூறியது.

சந்திரிகா, முழு நம்பிக்கையுடன் விரதம் அனுஷ்டித்தாள். நாள் முழுவதும், உணவும் நீரும் இன்றி அன்னையைத் துதித்தாள். இரவு வந்தது. வானெங்கும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டலாயின. தம்பதிகள் இருவரும் குளத்தில் மூழ்கி எழுந்து, அன்னையைப் பூஜித்தார்கள். பின் மன நிறைவுடன் இருவரும் அங்கிருந்து வீடு திரும்பலாயினர்.

வரும் வழியில், அசரீரி கூறியபடி அன்னை பிரசன்னமானாள். தம்பதிகள் மனமகிழ்ந்து அன்னையைத் துதித்தார்கள்.. மாதா, அவர்களுக்கு வேண்டும் வரம் நல்குவதாக வாக்களித்தாள். இருவரும், தமக்கு 'நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள சத்புத்திரன் வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தனர். அன்னை, 'அவ்வாறே' என வரமளித்து மறைந்தருளினாள்.

சில காலம் சென்று, சந்திரிகா, தான் வேண்டிய வரத்தின் படி, ஒரு அழகான ஆண்குழந்தையை ஈன்றேடுத்தாள். தம்பதிகள் இருவரும் மனம் மகிழ்ந்தனர்.

( விரதம் அனுஷ்டிக்கும் முறையை அடுத்த பதிவில் காணலாம்..)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.)

வெள்ளி, 18 அக்டோபர், 2013

KOJAGARI LAKSHMI POOJA.. கஜகரி லக்ஷ்மீ பூஜை(18/10/2013)


அன்பர்களுக்கு வணக்கம்.

ஐப்பசி பௌர்ணமி நன்னாள் இன்று. விண்ணும் மண்ணும் படைத்து, நமக்கெல்லாம் உணவிட்டு அருளும் சிற்றம்பலத்தானுக்கு, சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

ஐப்பசி பௌர்ணமி தினத்தில், வட இந்தியாவில் மிக முக்கியமாக அனுசரிக்கப்படும் ஒரு பூஜையைப் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.

'கஜகரி லக்ஷ்மீ பூஜை' என்று வழங்கப்படும் இது ஐப்பசி பௌர்ணமி தினத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.

நமக்கு வெள்ளிக்கிழமை லக்ஷ்மீ பூஜைக்கு உகந்த தினம் என்பது போல், வட இந்தியர்களுக்கு, வியாழக்கிழமை லக்ஷ்மீ பூஜைக்கு உகந்த தினம். வியாழக்கிழமையை 'லக்ஷ்மீ வாரம்' என்றே குறிப்பிடுகின்றார்கள். இந்தப் பூஜையை ஒவ்வொரு வியாழக் கிழமையும் செய்தால் ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால், அவ்வாறு தொடர்ந்து செய்வது சில நேரங்களில் இயலாது போவதால், வருடத்திற்கொரு  முறை, 'சரத் பூர்ணிமா' தினமான இன்று செய்கிறார்கள்.

இந்தியாவில், வங்காளம், ஒரிசா, அஸ்ஸாம்  முதலான மாநிலங்களில் பெருவாரியாகச் செய்யப்படும் இந்தப் பூஜை, மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்கள் சிலவற்றிலும் கடைபிடிக்கப்படுகின்றது.

வங்காளத்தில் இது, 'கோஜாகரி லக்ஷ்மி விரதம்' என்று அழைக்கப்படுகின்றது. 'கோ ஜாகர்தி' என்றால் வங்க மொழியில் 'யார் விழித்திருக்கிறார்கள்' என்று பொருள். இந்த விரத தினத்தின் இரவில் யார் விழித்திருக்கிறார்களோ அவர்களுக்கு லக்ஷ்மியின் திருவருள் கிட்டும். சரத் பூர்ணிமா தின இரவில், லக்ஷ்மி தேவி, 'யார் விழித்திருக்கிறார்கள்?' என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொரு இல்லத்துக்கும் வருவாளாம். விழித்திருப்போருக்கு அருள் மழை பொழிவாளாம். சரத் பூர்ணிமா தினத்தின் விஞ்ஞான ரீதியான காரணத்தைப் பார்க்கும் போது, இரவு விழித்திருக்கச் சொல்லும் காரணம் புரிபடுகின்றது.

ஐப்பசி பௌர்ணமியின் முக்கியத்துவம்.

சரத் பூர்ணிமா என்றழைக்கப்படும், ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று, சந்திரன் தன் அமுதகிரணங்களை பூமியில் முழுமையாகப் பொழிவதாக ஐதீகம். இந்தப் பௌர்ணமி தினத்திலேயே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளுடன் பிருந்தாவனத்தில் 'ராஸலீலை' புரிந்தார். கோபிகைகளின் மனத்திலிருந்த உயர்ந்த பக்தி நிலையை உலகறியச் செய்த தினமே இன்று.

ஆகவே, இன்றைய தினம், ஆன்மீக உயர் உணர்வு நிலையை அடைய விரும்புபவர்களுக்கு உன்னதமான தினமாகும். பூஜை, நாமசங்கீர்த்தனம், பகவத் கீதை, ஸ்ரீலக்ஷ்மீ புராண பாராயணம், ஸ்ரீகிருஷ்ண வழிபாடு, சந்திரனுக்கு வழிபாடு செய்தல் ஆகியவை மிக உயர்ந்த நற்பலன்களைத் தரும். இணையற்ற இதிகாசமாகிய இராமாயணத்தை அருளிய ஸ்ரீவால்மீகி முனிவரின் ஜெயந்தி தினமும் இன்றுதான்.

விஞ்ஞான ரீதியிலான முக்கியத்துவம்:

இன்று சந்திரன், பூமிக்கு மிக அருகில் வருகிறது. ஆகவே, சந்திரன் பேரொளிமயமாகத் தெரிகிறது. மேலும் சந்திரனின் ஒளிக்கிரணங்களுக்கு, நோய்களைக் குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் அதிகரிக்கிறது. ஆகவே, இன்று பெரும்பாலான வட இந்தியர்கள், சந்திரனின் ஒளி விழும் இடத்தில், பாலைக் காய்ச்சி பருகும் சம்பிரதாயத்தை வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பூஜையின்  முக்கியத்துவம்:

பொதுவாக, பௌர்ணமி ஸ்ரீலக்ஷ்மீ தேவியின் பூஜைக்கு உகந்த நாள் என்று கருதப்படுகின்றது. அன்றைய தினம், ஸ்ரீலக்ஷ்மீ தேவி, இல்லங்கள்  தோறும் எழுந்தருளி, தன்னைப் பூஜிப்பவர்களுக்கு, எல்லா வளமும் நலமும் தருகின்றாள் என்பது நம்பிக்கை. வங்காளிகள், ஐப்பசி மாதம், ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்கு மிக உகந்த மாதம் என்று நம்புகிறார்கள். விஜயதசமி தினத்துக்கு அடுத்து வரும் பௌர்ணமி திதியே இந்த பூஜைக்கு உகந்தது. பெரும்பாலும் ஐப்பசி பௌர்ணமியாகவே இது வருவதால் இந்தப் பூஜை ஐப்பசி பௌர்ணமி தினத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.

செய்யும் முறை;

பூஜைக்காக, களிமண்ணால் செய்யப்பட்டு அலங்கரிக்கபட்ட அன்னையின் திருவுருவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடைகளில் விதவிதமாக, கலர்கலராக, 'கொலு' போன்று வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரதிமைகளைப் பார்ப்பதற்கே கோடிக் கண்கள் வேண்டும்.  பிரதிமைகளை வாங்கி வந்து இல்லங்களில் பூஜிக்கின்றார்கள். பூஜை செய்யும் முறை, இனத்துக்கு இனம், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.

பொதுவான பூஜை முறை:
அனைத்துப் பூஜைகளுக்கும் செய்வதைப் போல, இல்லங்களைச் சுத்தப்படுத்துகின்றார்கள். வீட்டு வாயிலிலும்   பூஜை செய்யும் இடத்திலும் , 'அல்பனா'/'அல்போனா/ எனப்படும் ரங்கோலி டிசைன்கள் வரையப்படுகின்றன. பெரும்பாலும் 'ஸ்ரீபாதம்' என்று நாம் வரையும் டிசைன்களை இவை ஒத்திருக்கின்றன.

'கஜகரி லக்ஷ்மீ' என்றால் 'மாலையில் வரும் லக்ஷ்மீ' என்று பொருள். அன்று காலையில் இருந்து உபவாசம் இருக்கிறார்கள். ஒரு பலகையில் நெல்லைப் பரப்பி வைத்து, அதன் மேல் ஒரு தாமிரச் செம்பில் நீர் நிறைத்து வைத்து, மாவிலை, தேங்காய், சந்தனம், குங்குமம், வஸ்திரம் இவற்றால் அலங்கரித்து வைக்கிறார்கள். வாங்கி வந்த ஸ்ரீலக்ஷ்மீ பிரதிமைகளையும் நன்றாக அலங்கரித்து, கலசத்திற்கும் பிரதிமைக்கும் பூமாலைகள் சாற்றுகிறார்கள்

பூஜை செய்யும் இடத்தில் நிறைய தீபங்கள் ஏற்றுகிறார்கள்  . அகல் விளக்கு மிக உகந்ததாகக் கருதப்படுகின்றது.

அன்று மாலை, கோதூளிகா வேளை எனப்படும் ஐந்து மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள் பூஜை துவங்கலாம். பெரும்பாலும் 'பண்டிட்ஜி' எனப்படும் புரோகிதரின் துணை கொண்டே இந்தப் பூஜை செய்கிறார்கள். விரதம் இருப்போர், அக்கம்பக்கத்தில் இருக்கும் சுமங்கலிப் பெண்களை விரதத்தில் பங்கேற்க அழைக்கிறார்கள்.

பெண்கள் வந்ததும், அவர்களை வாசலில் நிற்க வைத்து வரவேற்கிறார்கள். அவர்களுக்கு குங்குமம் இட்டு, வாயால் குலவைச் சத்தம் இட்டு, சங்கு ஊதி லக்ஷ்மீயை உள்ளே அழைக்கிறார்கள். சங்கு, வங்காளிகளுக்கு  மங்கலச் சின்னம்.

முதலில் பிள்ளையார் பூஜை. அதன் பின், திவ்ய தம்பதிகளை இணைத்தே பூஜிக்க வேண்டும்  என்ற முறை தவறாது ஸ்ரீநாராயணருக்கு பூஜை செய்யப்படுகின்றது. ஸ்ரீநாராயணரின் உலோகப் பிரதிமைகள் அல்லது படத்தில் பூஜிக்கிறார்கள்.

பின்,ஸ்ரீலக்ஷ்மீ தேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து, ஷோடசோபசார பூஜைகள் செய்து, ஸ்ரீலக்ஷ்மீ அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்கிறார்கள்.

நிவேதனமாக பெரும்பாலும் இனிப்பு வகைகள் இடம் பெறுகின்றன. மோவா(Moa, Mowa) எனப்படும் வெல்லம் கலந்த பொரி உருண்டைகள், பேஜனோ சோலா(Bhejano chola) எனப்படும், ஊற வைத்த கொண்டைக்கடலையில் வெல்லம், துருவிய தேங்காய் சேர்த்து செய்யப்படும் இனிப்பு ஆகியவை பிரதானம். குறைந்தது 5 வகை இனிப்புகள், 5 வகை பழங்கள் நிவேதிக்கிறார்கள்.

பழங்களை ,விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில் துண்டங்களாக நிவேதனம் செய்கிறார்கள்.

அதன் பின், பூஜையில் பங்கேற்கும் அனைத்துப் பெண்களும், பசும் புல், மலர்கள், அட்சதை   எடுத்துக் கொண்டு, ஒருமுகப்பட்ட சிந்தையுடன், ஸ்ரீலக்ஷ்மீயை மனமுருகிப் பிரார்த்தித்து, அன்னையின் பாதங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்கிறார்கள். பின் அனைவருக்கும் நிவேதனங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

விரத பூஜைக் கதையைப் படித்து, மீண்டும் அன்னைக்கு ஆரத்தி செய்து, நமஸ்கரித்து பூஜையை நிறைவு செய்கிறார்கள்.
விரதம் இருப்பவர் அதன் பின்னே உணவு கொள்கிறார்.  விரதம் இருப்பவரும், அவரது குடும்பத்தினரும், அன்றைய தினம் இரவு முழுவதும் விழித்திருந்து, அம்பிகையின் துதிகளையும், லக்ஷ்மி புராணம் முதலியவற்றையும் பாராயணம் செய்கிறார்கள். இது  மிக முக்கியமாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

விரத பூஜைக் கதை:

வட இந்தியாவில் ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பெண்கள் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளானார்கள். அப்போது ஸ்ரீநாரத மஹரிஷி, ஸ்ரீ லக்ஷ்மீ தேவியைத் துதித்து, 'இந்த நிலைக்கான காரணம் என்ன?, இது எப்போது மாறும்?' என்று வேண்டினார்.

அதற்கு லக்ஷ்மீ தேவி, 'அகம்பாவமே மனிதர்களை அழிக்கின்றது. மக்கள், செல்வச் செருக்கினால் அகம்பாவம் கொண்டு யாரையும் மதிக்காது நடந்தார்கள். அவர்களுடைய கெட்ட குணங்களே அவர்களுக்கு கஷ்டங்களைக் கொண்டு வந்தன. பெண்கள், தங்கள் குழந்தைகள், கணவர்கள்,முதியோர்கள் யாவரையும் மதிக்காது நடந்தார்கள். இறை வழிபாட்டை மறந்தார்கள். தலைமுடியை விரித்துப்  போட்டுக் கொண்டும், சத்தமாகப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்தும், பூமி அதிர நடந்தும்,மங்கலச் சின்னங்களை மதியாமலும் வாழ்ந்தார்கள்.

நன்னடத்தையே மக்களின் ஒப்பற்ற செல்வம். அதைக் கைவிட்டதால் கஷ்டங்கள் வந்தன'. என்றுரைத்தாள்.

நாரத மாமுனி, ஸ்ரீலக்ஷ்மீ தேவியிடம், மன்னுயிர்கள் சார்பில் மன்னிப்பை வேண்டினார். லக்ஷ்மீ தேவியும் அவரது வேண்டுதலை ஏற்றாள்.

அவந்தி நகரில், ஒரு பெண், காட்டில் மிகுந்த சிரமத்துடன் அலைந்து கொண்டிருந்தாள். ஆற்று நீர் வற்றி விட்டாலும் ஊற்று நீர் உதவுவது போல, பெண்களில் இன்னும் நற்குணங்களை மறக்காத ஒருத்தி அவள். அவளுக்கு ஏழு மகன்கள். செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த அவளது செல்வங்கள் அனைத்தும் பறிபோயின. அவள் மகன்கள் அனைவரும் அவளை விட்டுப் பிரிந்து விட்டனர். அவள் மூலம் அன்னை மனித குலத்திற்கே நல்லருள் புரிய திருவுளம் கொண்டாள்.

அவள் முன் வேறு ரூபம் எடுத்துத் தோன்றிய அன்னை, அவளைப் பற்றி விசாரித்தாள். ஆனால் துன்பத்தால் துவண்டு நின்ற அந்தப் பெண்ணோ தன்னைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. பின், அன்னை தன் சுய உருவில் தோன்றி, அந்தப் பெண்ணைத் தேற்றி, 'கஜகரீ லக்ஷ்மீ' பூஜை விதியையும் அனுசரிக்கும் முறையையும் கூறினாள். இவ்வாறு பூஜித்து, விரதக் கதையைப்ப் படிப்பவர்கள் இல்லத்தில், தான் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பதாக வரமும் அளித்து மறைந்தாள். 

அந்தப் பெண்ணும், காட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு, லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்க, இழந்த செல்வங்களையும், மக்களையும் மீண்டும் பெற்றாள். அவளே இந்தப் பூஜை முறையை பலருக்கும் உபதேசித்து, நல்வழி காணச் செய்தாள்.

இன்னொரு கதை:

வலித் என்பவன் ஒரு ஏழை. மிகுந்த உழைப்பாளி ஆன அவன், எவ்வளவு உழைத்தும் செல்வம் நிறையாமல் வருந்தினான். அவனது நல்ல குணத்திற்கு சற்றும் பொருந்தாத மனைவி சாந்தினி. செல்வம் இல்லாததால் அவனை மதிக்காததோடு, அவன் எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாகச் செய்வது அவள் வழக்கம்.

வலித்தின் தகப்பனாருக்கு திதி கொடுக்கும் தினம் வந்தது. தன் மனைவியின் குணத்தை அறிந்த அவன், 'இன்று நான் திதி கொடுக்கப் போவதில்லை' என்றான். சாந்தினி, 'உங்களுக்கென்ன ஆயிற்று, இது நமக்குப் பாவம் சேர்க்குமே, நீங்கள் கட்டாயம் இதை முறைப்படி செய்து தான் ஆகவேண்டும், போய் பிக்ஷை பெற்று பொருள் திரட்டி வாருங்கள்' என்றாள். வலித்தும் அதன் படியே செய்து, நல்ல முறையில் திதி கொடுத்து முடித்தான். ஆனால் மறந்து போய், மனைவியிடம், பிண்டங்களை குளத்தில் சேர்க்குமாறு சொல்லி விட்டான். ஆனால் அவள், த‌ன் சுபாவப்படி, அவற்றை சாக்கடை நீரில் சேர்த்து விட்டாள்.

வருந்திய வலித், அவளை விட்டு நீங்கி, காட்டுக்குச் சென்றான். அங்கு, மூன்று நாகக் கன்னியர்கள், இந்த விரதத்தை அனுஷ்டிப்பதைப் பார்த்து, அங்கு சென்று, அவர்களுடன் இணைந்து இந்த விரதத்தை அனுஷ்டித்து, லக்ஷ்மீ தேவியின் அருளால் மலையளவு செல்வம் பெற்றுத் திரும்பினான்.  சாந்தினி மன மகிழ்வு கொண்டு கணவனை அன்புடன் வரவேற்றாள். லக்ஷ்மீ தேவியின் அருளால் நல்ல குணங்கள் அவளுள் குடி கொண்டன. மனம் திருந்திய‌ தன் மனைவியுடன் சுகமாக பல்லாண்டு வாழ்ந்தான் வலித்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெறும் பூஜைகள், விரதங்கள், சம்பிரதாயங்களை பதிவிட்டு, அனைவரும் அறியச் செய்வதே  இம்மாதிரியான பதிவுகளின் நோக்கம். ஸ்ரீலக்ஷ்மீ தேவியை இந்த உன்னத தினத்தில் பூஜித்து, வேண்டும் வரங்களைப் பெற்று,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

 இந்தப் பதிவிற்காக‌, வல்லமை மின்னிதழ், எனக்கு வல்லமையாளர் விருது வழங்கியிருக்கிறது.  இறைவனின் கருணைக்கும் வல்லமை மின்னிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. இதன் விவரம் அறிய கீழே சொடுக்கவும்...
  http://www.vallamai.com/?p=39536