நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 21 நவம்பர், 2013

SRI LAKSHMI GURUVARA VIRATHAM PART 1....ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம் பகுதி 1


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!..

நாம், நம் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் விரதங்கள் பற்றித் தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில், இந்தப் பதிவில், மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்படும் 'ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம்' பற்றிக் காணலாம். ஆந்திராவின் சில பகுதிகளிலும்(விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் முதலிய பகுதிகள்) இது கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்த விரதம் குறித்து 'ஸ்ரீபத்ம புராணத்தில்' கூறப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். வட இந்தியர்கள், இந்த விரதத்தை மிகவும் சிரத்தையுடன் செய்கிறார்கள்.

இந்த விரதம்,நம் கார்த்திகை மாதம், வட இந்தியர்களின் மார்கழி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் செய்யப்படுகின்றது. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து வியாழக்கிழமைகள்  செய்கிறார்கள்.

இவ்வருடம் இந்த விரதம், நவம்பர் 21, நவம்பர் 28, டிசம்பர் 5, டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் செய்யப்படுகின்றது.

இந்த பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெறலாம். இம்மாதத்தின் அனைத்து வியாழக்கிழமைகளிலும் பூஜை செய்து, பின், வருட முழுவதும், வியாழக் கிழமையில் விரதக் கதையை மட்டும் படிக்க வேண்டும்.

விரதம் அனுசரிக்கும் விதம்:

விரத தினத்தில் அதிகாலையில்  எழுந்து, நீராடி,  பூஜைக்கு அமரவும். 

1.ஒரு சுத்தமான இடத்தில் சாணமிட்டு மெழுகி, ஸ்வஸ்திக் கோலம், ரங்கோலி போட்டு, ஒரு பலகையை அதன் மேல் வைக்க வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் கோலமிட வேண்டும். பலகையின் மேல் கோதுமையைப் பரப்பி, அதன் மேல் மஞ்சள் குங்குமத்தால் கோலமிடவும்.

2.ஒரு தாமிர/செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதனுள், அருகம்புல், கொட்டைப் பாக்கு, நாணயம் போட வேண்டும்.

3. ஐந்து வித  மரக்கிளைகள், சின்ன அளவில் கலசத்தினுள் செருக வேண்டும். மா,பலா, ஆல், அரசு, அத்தி மரக் கிளைகளை வைக்கலாம். வேறு கிளைகளும் வைக்கலாம்.

4. ஒரு மட்டைத் தேங்காய் அல்லது தேங்காயை கலசத்தின் மேல் வைத்து, சந்தனம், குங்குமம்,வஸ்திரத்தினால் அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் அருகில், ஸ்ரீமஹாலக்ஷ்மி யந்திரம் அல்லது யந்திரத்துடன் கூடிய ஸ்ரீலக்ஷ்மி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.

5. கலசம், படத்தின் அருகில் ஒன்றரை ரூபாய் சில்லறையாக வைக்கவும்.

6. இனிப்புகள் நிவேதனம் செய்வது விசேஷம்.

7. அம்பிகைக்கு,பஞ்சோபசார பூஜை (இதில் ஐந்துவகையான உபசாரங்கள் இருக்கும்.  சந்தனம்(கந்தம்) புஷ்பம், தூபம், தீபம் நைவேத்தியம் ஆகியவை).

8.இனிப்புகளுடன், வாழைப்பழம்,  மற்ற பழவகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பசும்பால் அவசியம் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை முடிவில், விரதக் கதை படித்து, ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகமும் படிக்க வேண்டும்.

ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்..

மாலை வேளையில் மீண்டும் கலசத்திற்கு பூஜை செய்ய வேண்டும். காலையில் செய்தது போலவே பஞ்சோபசார பூஜை செய்து, இனிப்பு, மற்ற நிவேதனங்கள் அளிக்கவும்..நிவேதனம் செய்தவற்றிலிருந்து கொஞ்சமும், தாம்பூலத்தில் வைத்த வெற்றிலையும், தனியே எடுத்து வைத்து, பிறகு பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்). பூஜை முடிவில், ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகம் சொல்லி நமஸ்கரித்து, ஆரத்தி எடுக்கவும்.

மறுநாள், வெள்ளியன்று காலையில், பூஜைக்குப் பயன்படுத்திய ஐந்து வித மரக்கிளைகளையும் வீட்டின் மூலைகளில் வைக்கவும். பூஜையில் வைத்த தேங்காய், பாக்கு, நாணயத்தை தனியே வைக்கவும். இதையே அனைத்து வியாழக்கிழமைகளிலும் பயன்படுத்த வேண்டும். வியாழக்கிழமைகளில் பூஜையை நிறைவு செய்த பின், இவற்றை கிணற்றிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கலாம்.

அனைத்து வியாழக்கிழமைகளிலும் பூஜித்த மலர்களை தனியே சேகரித்து வைக்கவும். அதையும், பூஜைகள் நிறைவுற்ற பின், நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி புராணம் என்று போற்றப்படும் புராணத்தை விரத நிறைவில் படிக்க வேண்டும். பெரும் மஹானான பலராம் தாசர் இயற்றியது இந்தப் புராணம். இது குறித்து, அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

  1. பூஜை விவரம் நன்று பாரு... செய்து பார்க்க ஆவலாகிறது மரக்கிளை அத்தனை கிடைக்குமா என்று தெரியவில்லை மற்றபடி மிக எளிமையாக இருக்கிறது. அன்னை ஆசியில் இதை அளித்த பார்வதிக்கு நன்மையே நடக்க அக்காவின் ஆசியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்போட்டா மரக் கிளைகள் கூட வைக்கலாம் அக்கா!!!...முட்கள் இல்லாத பூச்செடியின் கிளைகள் கூட வைக்கிறார்கள்.

      நீக்கு
  2. குரு வார விரதம் பற்றி அருமையான விளக்கங்கள்..
    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அம்மா!!

      நீக்கு
  3. வைபவ்லக்ஷ்மி பூஜையைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கடைசி வியாழக்கிழமையன்று... அதாவது பூஜை நிறைவு பெறும் தினத்தன்று சுமங்கலிகளை அழைத்து ஹல்திகுங்கும்(மஞ்சள் குங்குமம்) கொடுப்பது வழக்கம். இந்தத் தாம்பூலத்தில் வைபவ்லக்ஷ்மி பூஜைப் புத்தகம், பூ, வாழைப்பழம் எல்லாம் வைத்துக்கொடுப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  4. இல்லை. இது வேறு. வைபவ லக்ஷ்மி பூஜைக்கு
    கலசம் ஐந்து வித கிளைகளால் வைக்கத்
    தேவையில்லை. மலர்,காசுகள்,குங்குமம் வைத்து
    அர்ச்சிக்க வேண்டும் மற்றவை நீங்கள் சொல்வது போல் தான் .
    தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்
    ரொம்ப நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..