நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 28 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI...SONG # 12 ......திருவெம்பாவை பாடல் # 12


பாடல் # 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்

நம்மைப் பந்தித்த பிறவியாகிய துயர் நீங்குவதற்காக, நாம் சேர்ந்து,மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் இருப்பவன். இங்கு பிறவியாகிய துயர், வெப்பமாகக் கருதப்படுகின்றது.. அது நீங்க.. இறைவனாகிய தீர்த்தத்தில் மூழ்கி எழுதல் வேண்டும் என்பது பொருள்.

நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்

சிற்றம்பலமாகிய தில்லையில், ஒரு திருக்கரத்தில் அனலேந்தி ஆடுகின்ற கூத்த பிரான். 

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய 

விண்ணுலகு, மண்ணுலகு உள்ளிட்ட எல்லா உலகங்களையும், காத்தும், படைத்தும், நீக்கியும் விளையாடுபவனாகிய இறைவனது புகழைப் பேசி, வளையல்கள் ஒலிக்க, அணிந்திருக்கும் நீண்ட அணிமணிகள் அசைந்து ஓசை எழுப்ப,  

அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொய்கையில் நிறைந்துள்ள, வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்கள், நம் அழகிய கருங்கூந்தல் மேல் விளங்க, நீரைக் குடைந்து, நம்மை உடையவனாகிய இறைவனது பொற்பாதத்தைத் தொழுது ஏத்தி, பெரிய மலைச்சுனை நீரில் மூழ்கி நீராடுவாயாக. (குளத்துள் மூழ்கும் போது, பொய்கையின் மலர்கள் கூந்தலைச் சேருதல் இயல்பு. வண்டுகள் ஆர்க்கும் அந்த மலர்கள், கூந்தலைச் சேர்ந்ததை, 'அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் ' என்று வருணித்தார்.)

'ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்'=== 'ஆர்த்த' என்ற சொல்,இங்கு இரு இடங்களில், இரு வேறு பொருளில் கையாளப்படுகின்றது. 'பந்தித்த, பிணித்த' என்ற பொருளில் முதலில் கையாளப்படுகின்றது..'நம்மைப் பிணித்த பிறவித் துயர் கெட நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால், நாம் ஈசனாகிய தீர்த்தத்தில் மகிழ்ந்து ஆடுதல் வேண்டும்' என்றார். 

இங்கு ஆளுடைய பிள்ளையின் 'பச்சைப் பதிகம்' நினைவு கொள்ளத் தக்கது.

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

'தீர்த்தன்' என்ற சொல்லால் இறைவனைக் குறித்தது, இறைவனின் புனிதத்தன்மையை விளக்குதற்காம்... இறைவனின் அபிடேக நீரைத் தீர்த்தம் என்போம். மிகச் சிறந்த ரிஷிகள்,முனிவர்கள், பக்தர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளும் அவர் தம் சக்தியை உள்வாங்கி 'தீர்த்தம்' எனப்படுகின்றது.. ஆகவே, புனிதனான இறைவனைச் சேர்ந்து, மகிழுவதால் நாமும் புனிதமடைந்து, நம் பிறவிப் பிணி அகலும் என்பது உணர்த்தப்படுகின்றது.

'நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்'==ஞானாகாசமாகிய சிற்றம்பலத்தினுள் இறைவன் கூத்தாடுகின்றான்.. பிரபஞ்ச இயக்கமே இறைவனது திருக்கூத்து, ..நற்றில்லைச் சிற்றம்பலத்தினுள் என்று குறிப்பாகச் சொன்னமைக்கு கீழ்க்கண்ட பாடலை விளக்கமாகக் கொள்ளலாம்.

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.(திருமந்திரம்),

பொன்னம்பலமாகிய தில்லையே அனைத்து அண்டங்களாகவும், ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே ஆகாயமாகவும் கொள்ளப்படுகின்றது.. ஆலயத்தின் முதல் ஆவரணத்தினுள் உள்ள திரு அம்பலமே,   ஐந்தொழில் செய்யும் சக்தியாக அமைய‌, இறைவன் திருநடனம் செய்கின்றான்.பொன்னம்பலம் என்பதை 'சிதாகாசம்' எனவும் கொள்ளலாம்.

'தில்லை' என்பது 'இருதய' ஸ்தானமாகும்.

'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.(திருமந்திரம்)

அண்டத்திலிருப்பதே பிண்டத்திலும் என்பதற்கிணங்க.. சிவனார், அண்டம், பிண்டம் இரண்டிலும் இருக்கும் பொற்பதிகளில் நடமிடுவதை..'தீயாடுங் கூத்தன்' என்று விளக்கினார்.

'தீ' என்று குறித்தது.. இறைவனார் சங்கார(சம்ஹார) மூர்த்தியாகி,  அழித்தல் தொழில் செய்தலைக் குறித்தது.

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

ஐந்தொழிலும் சிவனார்க்கு விளையாடலே..வான், குவலயம் என்பதோடு 'எல்லோமும்' எனத் தன்மையிடத்தால் குறித்தது, 'நம் எல்லோரையும்' என்பதாக. மனிதப் பிறவி தேவர்களினும் மேம்பட்டது. தேவர்களும் மானிடப் பிறவியை விரும்புகிறார்கள்.. இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேறும் மனிதர்களுக்கே கிடைக்கிறது.. ஆகவே, மனித இனைத்தை உயர்வுபடுத்துவதற்காக அவ்வாறு கூறினார்.

காத்தும், படைத்தும், கரந்தும் என்று, காத்தல் தொழிலை முன்னிறுத்தியது...இறைவனது காத்தருளுதல் என்ற இரு தொழில்களையும் சேர்த்து உணர்த்துவதற்காக..அழித்தல் தொழில் முன்பே குறிக்கப்பட்டது.

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய

'வளை'   என்ற சொல், 'உடல் உணர்வைக் குறிப்பால் உணர்த்துவதற்காக, பல இடங்களில் தத்துவார்த்தமாகக் கையாளப்படுகின்றது.

நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையும் கொண்(டு)எம்
உயிரும் கொண்டுஎம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக் கண்நம்
சென்னி மின்னிப் பொலியுமே(சென்னிப் பத்து, மாணிக்கவாசகப் பெருமான் ).

இப்பாடலில், 'வளையும் கொண்டு' என்றது, உடல் உணர்வைக் கடந்ததற்கு அறிகுறியாகச் சுட்டப்படுகின்றது.

உடல் உணர்வின் காரணமாக, எழும் வெளி ஆரவாரங்களின் ஒலிகளையே ஆபரணங்களின் ஒலி என்றார். மனதை ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுத்தி(குடைந்து) நம்மை உடையவனாகிய இறைவனின் பாதங்களைச் சிந்திப்பது அவற்றை நீக்க உதவும்..(அவ்வாறு செய்து) 

'இருஞ்சுனை நீராடேலோ எம்பாவாய்'=========இருவினைகளால் ஏற்படும், பிறவியைக் கடப்பாயாக‌!! என்றருளினார்.. சமயநெறிகளில், சன்மார்க்கம் இவ்வாறாக அருளிச்செய்யப்பட்டது.

வெற்றி பெறுவோம்!!


மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

5 கருத்துகள்:

  1. அனந்நியமாக உள்ள ஆண்டவனை
    'அர்' விகுதி போட்டு வேறுபடுத்துவது சரியா..

    சிவனார் என 'அர்' விகுதி போடுவது
    சரியா தெரியவில்லை..

    'அர்' விகுதி அடியார்களுக்கும்
    'அன்' விகுதி ஆண்டவனுக்கும் என்று தானே

    அருண்மொழி தேவர் நமக்கு வழிகாட்டி அருளி உள்ளார்
    அப்படியிருக்க உங்கள் ('அர்' விகுதி) பயன்பாட்டிற்கு ஆதாரம் சொல்லமுடியுமா?

    பதிலளிநீக்கு
  2. நம் அனைவருக்கும் ஆதாரமாயுள்ள சிவனை அன்பின் மிகுதியால் 'அர்'விகுதி கொண்டு சுட்டுவது எனக்குத் தவறாகப்படவில்லை.. 'பித்தா, பேயா' என்ற அன்பர் அழைத்தலையும் உவந்து ஏற்கும் எம்பிரான், 'அர்' விகுதி கொண்டு அழைத்தால் மறுத்து விடுவானா என்ன?.. இங்கு இலக்கணவிதிகளுக்கு இடமில்லை ஐயா!!..எம்பெருமான் மீதுள்ள பக்தியால், அவரது கருணையாலேயே எழுதுகிறேன்... என்னாலியன்றது இதுவே!!!.. பெருமானது கருணை ஒன்றே என் ஒரே ஆதாரம்!!.. என்றென்றும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////அழைத்தால் மறுத்து விடுவானா?////
      நீங்கள் விளிக்கும் இந்த தொடரிலேயே
      நீங்களும் உங்களை அறியாமல் இறைவனை அன் விகுதி போட்டே

      "விடுவாரா?" என விளிக்காமல்
      "விடுவானா?" என விளித்துள்ளீர்

      இது ஒன்றே எமது வினாவிற்கு விளக்கம் மட்டுமல்ல
      இதில் சொன்ன எமது கருத்துக்கும் செவிசாய்ப்பது

      வளர்க உங்கள் தொண்டு
      வாழ்க நலமுடன்

      நீக்கு
    2. உங்கள் அன்பு புரிகின்றது..
      உள்ளபடி சொன்னால் இலக்கணவிதிகளை இங்கு குறிப்பிடவில்லை

      ஆதாரமாக கேட்டது புராண விதிகளில் (அ) விளக்கங்களில்
      அப்படியல்ல என் எண்ணம் (அ) விருப்பமென்றால் எம்மிடம் பதில் இல்லை

      'அன்' விகுதி போடுவது அனந்நியமாக இருப்பதையும்
      'அர்' விகுதி போடுவது அந்நியபடுவதையும் இயல்பாகவே குறிக்கும்

      அவரவர் விருப்பம் அது என்றாலும்
      அடியார் பெருமை உரைக்கும் பெரியபுராணம் தந்த

      அருன் மொழி தேவர் என்னும் நம்
      அன்பினால் வணங்க தக்க சேக்கிழார் பெருமான்

      வழிகாட்டி உள்ளார் அதனை மாற்றுவது சரியா என
      வாதம் செய்யவில்லை.. விளக்கம் கேட்டோம் ...

      "அப்பன்" நீ அம்மை நீ என பாடும் பெருமகனால்
      "அப்பர்" அல்லவா

      முன்னவர் இறைவன்
      பின்னவர் அடியார் தானே

      சிவன் "அவன்" என் சிந்தையுள் நின்ற அதனால்
      "அவன்" அருளாலே அவன் தாழ் பணிந்து போற்றுவோம்

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..