நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 4 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.... SONG # 19...திருவெம்பாவை.....பாடல் எண் : 19



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்:

எங்கள் பெருமான்!

எங்கள் தலைவனே!

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
உனக்கொன் றுரைப்போம்கேள்

"உன் கையில் இருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலமாகும்" என்று பலகாலமாக வழங்கி வருகின்ற பழமொழியைப் புதுப்பிக்கிறோம் என்று அஞ்சிக் கொண்டே உன்னிடம் ஒன்று சொல்வோம், கேட்பாயாக.

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

எம் கொங்கைகள் உன் அன்பர்கள் அல்லாதாரின் தோள்களைச் சேராதிருக்கட்டும். எம் கரங்கள், உனக்கன்றி, மற்றொருவருக்கு, எந்தப் பணியும் செய்யாதிருக்கட்டும். இரவும் பகலும், எம் விழிகள், உன்னையன்றி,  வேறொரு பொருளைக் காணாதிருக்கட்டும்.. 

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

இந்த உலகில், இவ்விதமான எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றுவாயாகில், சூரியன் எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

///உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்///

ஒரு குழந்தையைப் பெற்ற தாயிடம் சென்று, 'உன் கையிலிருக்கும் உன் குழந்தை உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளது, அதை நீ கருத்துடன் காக்க வேண்டும்' என்று சொல்லத் தேவையேயில்லை.. அதை அவளே நன்கு அறிவாள்.  அதனால் அவ்வாறு சொல்வது பொருளற்றது..

இறைவனிடம், 'நாங்கள் உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளோம்' என்று சொல்வதும் அவ்வாறே.. இப்போது பாவை மகளிர் இறைவனிடம் வேண்டும் பொருளும் இத்தன்மையதே என்பதால், 'இவ்வாறு பொருளின்றி நாங்கள் கூறுவதற்காக கோபம் கொள்ளாதே' என்று வேண்டுகோள் வைத்தனர்.'

நாங்கள் சொல்வது, 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்னும் இந்தப் பொருளற்ற பழமொழி போன்றது' என்பது உட்பொருள்... இதற்காக, இறைவன் கோபம் கொள்வாரோ என்று தாங்கள் அஞ்சுவதையே  'அச்சத்தால்' என்று தெரிவித்தனர். 'கோபம் வேண்டாம்' என்று மறைமுகமாகக் கோரினர்.

இறைவன், பாவை மகளிரின் கோரிக்கைகள் அனைத்தையும் அறிவான். அவர்கள் தன் மீது வைத்த பக்தியினை அறிந்திருப்பதால், அந்த வழியினின்றும் அவர்களைத் தவற விடான். இருப்பினும், பாவை மகளிருக்கு, 'தம் ஊழ்வினையால் இறைநெறியைத் தவற விட்டு விடுவோமோ' என்ற அச்சம் அறியாமையால் தோன்றியது..(இதனால் கோரிக்கை வைப்பவர்கள் பக்குவமற்ற ஆன்மாக்கள் என்பதும், அவர்கள் பரிபக்குவ நிலையை நாடுகிறார்கள் என்பதும் அதன் விளைவே இந்த வேண்டுகோள் என்பதும் புலப்படும்)

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

திருமணம் ஆன பின்னர், கணவனின் மனப்போக்கையே மனைவி அனுசரிப்பது இல்லற தர்மம். இறைநெறியில் செல்லும் கணவன் வாய்த்து விட்டால் அதையன்றி மனைவி பெறக் கூடிய பேறு வேறு இல்லை..

இறைவனையே நாடி, அனுதினம் தொழுது பூசிக்கும் கணவனுக்குத் துணை நிற்பது ஒன்றே மனைவிக்கு வீடு பேறு வாய்க்கச் செய்து விடும்.. உள்ளும் புறமும் இறை நாமம் துலங்குவது சற்றும் சிரமமின்றி நடைபெறும். தன் முயற்சியால், 'இறைவனைத் தொழ வேண்டும்' என்றில்லாமல் தொண்டர் பணி செய்தலே இறை பணியுமாகி விடும்.

உலகியல் வழியிலும், ஆன்மீக வழியிலும் இவ்விதம் கணவனும் மனைவியும் ஒத்து நடப்பது போற்றத் தகுந்ததொரு நிலை. அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்பது பாவை மகளிரின் வேண்டுகோள்..

'இறை நெறியில் நிற்பவரே எமக்குக் கணவராக வர வேண்டும்..' என்பது முதல் வேண்டுகோளாயிற்று..

எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

'எங்கள் கரங்கள் உமக்கல்லாது பிறருக்குப் பணி செய்யாதிருக்கட்டும்' என்பதை சற்று சிந்திக்கலாம். 'இறைவனுக்கு மட்டுமே பணி' என்றால் இல்லறத்தின் பிற கடமைகள் என்னாவது?' என்ற கேள்வி இங்கு எழும்..இறைநெறியில் நிற்பவரே கணவர் என்னும் போது, அவர் செய்யும் எந்தச் செயலும் இறையனார்க்கான பூசனையாகவே திகழும்.. அவரது செயல்களுக்கு உதவுவதே இறைவனுக்கான பணி.

இதை வேறொரு விதமாகவும் சிந்திக்கலாம்..

இதற்கு முந்தைய பாடலில், இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறித்துப் பாடினர் மகளிர். ஆகவே, இல்லறமும், இறைவனின் இருப்பிடமே..

இல்லறக் கடமைகளை, இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி  நிறைவேற்றுவது, இறை பணியாகவே அமையும்..

இதன் மூலம், செய்யும் எந்தச் செயலையும், இறைவனுக்கான பணியாகக் கருதிச் செய்ய வேண்டும் என்பதும் புலப்படுகிறது. இப்படி இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் போது 'நான், எனது' என்ற ஆணவம் அழிந்து, உயிருக்கு நற்பேறு கிட்டுகிறது. 'பகவத் கீதை' சொல்லும் கர்மயோகம் இதுவல்லவா?

'கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க'== இவ்விதமாக, இறைபணியாகவே கருதி, ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, எங்கும், எதுவும் இறைவனாகவே தோற்றமளிக்கக் கூடிய நிலை வாய்க்கும்.. 

உதாரணமாக, அடியார்களுக்கு அன்னமிடும் போது, 'அடியார் இறைவனே' என்ற எண்ணம் மீதூற, அந்தப் பணியைச் செய்வதால், அடியார்கள் இடத்தில் ஆண்டவனே குடிகொண்டிருப்பது போன்ற பாவனை ஏற்படும்..'யத் பாவம் தத் பவதி' (நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய்) என்பதை ஒட்டி, இது உண்மையாகி, அகத்தில் உறைந்திருக்கும் ஆன்ம ஸ்வரூபம் புறத்திலும் தன் தன்மையைக் காட்டியருளும்.

இதுவே 'ஆன்ம போதக் காட்சி'... எல்லாப் பொருட்களிலும் இறைவனே நிறைந்திருப்பதை மனமார உணரும் போது, இரவும், பகலும், கண்கள் எதை நோக்கினாலும் அதில் இறைவனே தென்படுவான்.

அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்று வேண்டுகின்றனர் பாவை மகளிர்.

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்...

'இவ்விதமாக நாங்கள் வாழும் முறைமை எங்களுக்கு நீ அருள் செய்தாயென்றால், எங்கள் பிறவித் துயர் ஒழியும்.. உன்னோடு இணைந்திருக்கும் சாயுஜ்ய நிலை கிட்டும்.. அந்நிலை வந்த பின், ஞாயிறு உதிப்பதும் மறைதலும் இயல்பாகிய இவ்வுலகைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையேயில்லை.. அது பற்றி, பிறவிச் சுழலில் ஆட்படுவோர் அல்லவா கவலைப்பட வேண்டும்' என்கின்றனர் பாவை மகளிர்.. இரவும் பகலும் இறைவனையே கண்டு, இறைபணியையே செய்யும் நிலை வாய்க்கும் போது, இறுதியில் இறைவனோடு ஒன்றும் முக்திப் பேறு வாய்ப்பது மிக இயல்பு.. அந்த 'சிவசாயுஜ்ய' நிலை கிட்ட வேண்டும் என்பதே உட்பொருள்..

இப்பாடலில், 'சிவனாரன்றி வேறு யாருக்கும் தாம் ஆட்படாதிருக்க வேண்டும்' என்ற தம் உள்ளக் கிடக்கையையே இவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றனர் பாவை மகளிர்.

இக்கருத்தையே

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு  
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

என்று அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையும்,

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

என்று திருத்தாண்டகத்தில் அப்பர் சுவாமிகளும்

புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
    புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
    ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
    எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
    கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன். 

என்று சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியாரும் உரைக்கின்றார்கள்..

அடியார் உள்ளம், திருவுள்ளம் அறியும் எனினும், அறியாமையால் இவ்விதம் கேட்கத் தலைப்பட்டனர். இவ்வாறு தாம் கேட்பது பொருளற்றது என்பதை உணர்ந்தே.. 'வெகுளி வேண்டா' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பாவை மகளிர், தம் கோரிக்கைகளை, 'வேண்டும்' என்று நேர்நிலை தோன்றக் கேட்காமல், 'சேரற்க, செய்யற்க' என்று எதிர்நிலை தோன்றுமாறு கேட்டது, தம் நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக.

அடியார்க்கிரங்கும் பெருமான் அகலாது நம் நெஞ்சத்துறைவானாகுக!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..