நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 3....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 3.



பதிகம் # 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:
"தாயும் தந்தையும் ஆனவனே!.. நிகரில்லாத மாணிக்கமே!..அன்பாகிய கடலில் விளைந்த ஆரமுதே!..பொய்யான, வீணான செயல்களையே செய்து, வாழ்நாளை பாழாகக் கழிக்கின்ற, புழுக்களை இடமாக உடைய உடலைக் கொண்ட கீழ்மையேனுக்கு, மிக உயர்ந்த சிவபதத்தை அளித்தருளிய, பக்தர்களின் உண்மையான செல்வமாகிய சிவபெருமானே, இப்பிறவியிலேயே, நான் உய்யும் பொருட்டு, உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறேது?."

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இறைவனே நமக்கு அன்னையும் தந்தையும்.. நம் பால் வரம்பில்லாத அன்போடு  இருப்பவன் ஆதலினால் இறைவனே அன்னை, தீமையான நெறியிலிருந்து நம்மை விலக்கி, நன்னெறி காட்டுதலால் இறைவனே நமது தந்தை என்கிறார் வள்ளலார் பெருமான்..

     திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற் 
     குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும் 
     பொருவில் அன்னையும் போக்கது தந்தையும் 
     தரும வெள்விடைச் சாமிநின் நாமமே(திருவருட்பா)

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்று,  திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான் அருளியிருப்பதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'ஒப்பிலா மணியே' என்பது, 'நிகரில்லா மாணிக்கமே' என்பதாக, இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது.... 

'மாணிக்கம்' என்கின்ற சொல், எம்பிரானைப் போற்றும் பல பதிகங்களில் பயன்படுத்தப்படுவதால், இது சிறப்பு வாய்ந்ததெனப் புலனாகிறது..

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே என்று சுந்தரர் பெருமானும்,

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.என்று அப்பர் பெருமானும்,

வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா 
     மாணிக்க மேகருணை மாகடலே ‍ என்று வள்ளலார் பெருமானும் பாடிப்பரவுகின்றார்கள்.

இதற்கு ஒரு அருமையான விளக்கம் கேட்கப் பெற்றேன்..முத்தி நிலையாவது, சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலை...மாணிக்கத்தோடு பளிங்கை இணைத்து வைத்தால், வெண்ணிறப் பளிங்கு, மாணிக்கத்தின் சிவந்த நிறத்தைப் பெற்று, அதுவும் மாணிக்கமே என்று சொல்லத் தகுமாறு தோன்றும்... அதைப் போல், சிவத்தினுள் கலந்து சிவமாகவே ஆகும் நிலையை உயிர்கட்கு அருளுதலால், எம்பிரானை 'மாணிக்கம்' என்கிறார்கள்.

அன்பினில் விளைந்தஆ ரமுதே===பாற்கடலைக் கடையும் போது வந்த ஆலகால விஷத்தை உண்டு, உயிர்கட்கு நலமருளியவன் எம்பிரான்..  ஐயனின் அருளால் அன்றோ அமுதம் கிடைத்தது!... பக்தர்கள், எம்பெருமான் மீது கொண்ட கடல் போன்ற பேரன்பில் தோன்றும் அமுதமே சிவம்!..'அமுதம்' இங்கும் முத்தி நிலையைக் குறிக்கும் குறியீடாகவே கொள்ளப்படுகின்றது.

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்====உயிருக்கு நன்மை தருவது, எம்பிரானின் கழலிணைகளை இடையறாது சிந்தித்தலாம்.. அதை விடுத்து, உலகியல் விஷயங்களில் சிந்தனையை உழல விடுவது வீண் காலம் கழித்தலேயாகும்..பிறவியின் நோக்கமே பெருமானை அடைதல் என்றிருக்க, அதற்கு உதவாத செயல்களைச் செய்தல் பொய்ம்மையைப் பெருக்கி, பொழுதைச் சுருக்குதலேயாம்.. இங்கு 'பொழுது' என்பது வாழ்நாளைக் குறிக்கும்.. வீணே காலம் கழித்தலால், நம் வாழ்நாள் சுருங்கி, பெருமானை நினைத்து உய்வு பெறும் கால அவகாசம் குறைகிறது..

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. (அப்பர் பெருமான்)

புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த====இவ்வரிகளின் மூலம், இவ்வுடலின் நிலையாமை புலப்படுத்தப்படுகின்றது... நிலையாத இவ்வுடல் எடுக்கும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, எம்பிரான், மிக உயர்ந்த சிவபதம் அருளியமை பகன்றார் வாதவூரார்.

'செல்வமே சிவபெரு மானே'===அடியார்களின் பெருநிதியம் சிவபிரான். ஆகவே 'செல்வமே' என்றார்.

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.== இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன் என்றருளுகிறார் வாதவூரார்.. இறைவனை அடைய, வேறொரு பிறவி அவசியமில்லை.. இப்பிறவியில், வினைகளால் சூழப்பட்ட இவ்வுடலில் இருப்பதால், இறைவன் அருள மாட்டான் என்பதில்லை..உள்ளன்போடு, உறுதியோடு சிவனை நினைந்தால், கட்டாயம் அவன் கழலிணைகள் அடையலாம். அடியார்கள், தமது பக்தியால் பரமனடி தொழுது வேண்ட, இம்மையிலேயே அவன் கட்டாயம் அருள் செய்வான் என்று திண்ணமாகக் கூறுகிறார்..

இவ்வாறு இறைவன் கழலிணைகளை உறுதியாகப் பற்றிப் பிடிக்க, இறைவன், தன் திருவடிகளைத் தந்து, முத்திநிலை அருளுவான்..சிவத்தோடு கலந்த பின்பு, எம்பிரான் தனியாக எழுந்தருளுவதெங்கே!.. ஆதலினால், 'எங்கெழுந்தருளுவது இனியே?!' என்றார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU..SONG # 2....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'..பதிகம் # 2


பதிகம் # 2
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
இடப வாகனத்தை விடாது மிக விரும்பிய விண்ணவர் அரசே!, வினைகளினால் சூழப்பட்டவனாகிய நான் உணர்ந்த உண்மைப் பொருளே!, அடியேன்,  நாற்றம்  நீங்காத‌,   முழுவதும் புழு நிரம்பிய இவ்வுடற் கூட்டினிலே கிடந்து, முதுமையின் காரணத்தால், மண்ணிலே மறைந்து கீழ்மையடையும் நிலையைத் தாராது, எம்மைக் காத்து ஆண்டருளிய கடவுளே!.. கருணைப் பெருங்கடலே!..இடைவெளி இல்லாது, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்..நீ இனிமேல் எங்கு எழுந்தருளுவது?!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

இங்கு 'விடை என்பது இடபவாகனத்தைக் குறித்தாலும், தர்ம தேவதையே சிவபிரானின் இடபவாகனமாகக் கருதப்படுவதால், இறைவன் விடாது தர்மத்தையே விரும்புவது உணர்த்தப்படுகின்றது.... இப்பதிகத்திலும் இறைவன், 'விண்ணோர்களுக்கு அரசன்' என்றே போற்றப்படுகின்றார்...மனித நிலையிலும் மேம்பட்டது தேவர்களின் நிலை.. இறைவன் தேவாதி தேவன்.. பதிகங்கள் முத்திக்கலப்புரைக்கும் அனுபவத்தைக் கூறுதலாலும், முத்தி, மிக மேலான உயரிய நிலை என்பதாலுமே இறைவன் இவ்வாறு போற்றப்படுகின்றார் என்று கொள்ளலாம்..

இடபத்தை, சித்தாந்த நோக்கில் 'பசு' எனக் கருதினாலும், பசுவாகிய உயிர்களை விடாது விரும்பி, அவை உய்வு பெற்று, தம்மை வந்தடைதலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் எம்பிரான் எனவும் பொருள் கொள்ளலாம்.

விடை வாகனனான எம்பெருமானை, உருவ நிலையின் குறியீடாகக் கருதுவது மரபு,

'தோடுடைய செவியன் விடையேறி' என்ற சம்பந்தப் பெருமானின் பதிகப் பொருளின்படி, 'விடையேறி' என்பது உருவ நிலையையும், 'பொடி பூசி' என்பது அருவ நிலையையும், 'உள்ளங்கவர் கள்வன்' என்பது அருவுருவநிலையையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகின்றது..

'வினையனே னுடையமெய்ப் பொருளே' என்பதில், உடைய என்னும் சொல்லின் பொருள் வெகு அருமையானது.. இறைவன், முத்தர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டுமே உடையவனல்ல.. கர்மவினைகளால் சூழப்பட்டு, துன்புறும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமானவன்.. அவ்வுயிர்களைத் தம் கருணையால் ஆள்பவன்.. ஆகவே, நமது வினையின் காரணமாக, இறைவன் நம்மை விரும்பார் என்பது இல்லை.. அவனே நமது அன்னையும் தந்தையும் ஆதலினால் உண்மைப் பரம்பொருளாகிய அவன் கருணை நமக்குக் கட்டாயம் கிட்டும் என்பது குறிப்பால் இவ்விடத்தில்  உணர்த்தப்படுகின்றது.

'முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து'

முடை என்பதை இவ்விடத்தில் நாற்றம் என்பதாய் பொருள் கொண்டால், நாற்றம் நீங்காது இருக்கும் இவ்வுடலைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம். குரம்பை என்பது, உடலையே குறிக்கும். 'மூத்தற' என்பதை, 'அற மூத்து' என மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்..

வயதின் காரணமாக, முதுமை எய்தி, நாற்றம் நீங்காத இவ்வுடல் மரணித்து, மண்ணில் வீழ்ந்து, புழுக்களால் உண்ணப்படும் நிலையைத் தாராது , எம்மை ஆட்கொண்டாய் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
        எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
        குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல   சுகமாலக் (திருப்புகழ்)

முதுமை எய்தாத நிலை, அதாவது என்றும் இளமையோடு இருக்கும் நிலையாவது இறைவனோடு கூடியிருக்கும் நிலை.. பிறப்பிறப்பிலா முத்தி நிலை..

இங்கு 'நாற்றம்' என்பதை, 'வாசனா மலமாகவும் பொருள் கொள்ளலாம்.

'அடியேன் முடை நாய்த் தலையே' என்ற அபிராமி பட்டரின் வாக்கும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.

இப்போது முடை என்பதைத் 'தடை' என்னும் பொருளில் பார்க்கலாம். வினைகள், இறையருளைப் பெற  முடியாதபடி தடை செய்கின்றன.. அத்தகைய குறைபாடுகள், தடைகள் விடாத அடியேனாகிய தம்மையும் ஆட்கொண்டார் எம்பிரான் என்கிறார் வாதவூரார்.

இவ்வாறு, தம்மை கீழ்மையிலாழ்த்தாது, அதாவது பிறவிச் சுழலில் சிக்க வைக்காது, தமது கடல் போன்ற கருணையினால் ஆட்கொண்ட இறைவனை, இடைவிடாது எந்நேரமும் தாம் உறுதியாகப் பற்றிப் பிடித்திருப்பதால், அவர் தமது இதயத் தாமரையிலேயே எப்போதும் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

இங்கு 'கடவுளே' என்ற பதம் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.. உள் கடந்து ஒளி உருவாய் நிற்பவன் இறைவன் என்பதாலும், தொடர்ந்து தாம்,தமது நெஞ்சகத்தில் இறைவனை இருத்தி சிந்திப்பதைப் புலப்படுத்தும் பொருட்டும், இவ்வாறு உரைத்திருப்பதாகக் கொள்ளலாம்..

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 26 பிப்ரவரி, 2014

PIDITHTHA PATHTHU, SONG # 1...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய., 'பிடித்த பத்து' பதிகம் -1


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

சிவராத்திரியை முன்னிட்டு, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகங்களுக்கு, சிவனருளால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொருள் எழுத முயன்றிருக்கிறேன்.. தினமொரு பதிகமாக கூடுமானவரை எழுத எண்ணம்...அரனருள் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்....

சிவராத்திரியை ஒட்டிய சென்ற வருடப் பதிவு, தங்களின் மேலான பார்வைக்காக...


மாணிக்கவாசகப் பெருமான், 'பிடித்த பத்து' பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை 'பிடித்த பத்து' எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் 'முத்திக் கலப்புரைத்தல்' எனப்பட்டது...

பிடித்த பத்து (முத்திக் கலப்புரைத்தல்)

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்: உம்பர்‍- தேவர்..'தேவர்கட்கு அரசரே!,அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற கலந்திருப்பவனே!, அழுக்கினை உடைய உடல் தரித்த எனக்கு, புதிய பொருள் போலத் தோன்றி வந்து, என் குடி முழுவதும் ஆண்டு, மாயையினால் ஆன இவ்வுலக வாழ்வு நீங்குமாறு, பேரின்ப வாழ்வு தந்தருளிய அமுதம் போன்றவனே!.. 'செம்மையான, மெய்ப்பொருள் நீயே' என்று துணியப்படுபவனே!...சீர்மை பொருந்திய கழலிணைகள் உடையவனே!..நிலையான பேரின்ப நிதியாகிய செல்வமே!.. சிவபெருமானே!...யாம் உய்யும் பொருட்டு, உம்மைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!...நீ இனிமேல் என்னை விட்டு எங்கெழுந்தருளிச் செல்வது?....'

சற்றே விரிவாக...

இங்கு 'யோகம்' என்ற சொல், 'சேர்ந்திருப்பது', 'கலந்திருப்பது' என்னும் பொருளில் அறியப்படுகின்றது.. எம்பெருமான் இப்பிரபஞ்ச முழுதும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினன் ஆதலின், 'ஒழிவு அற நிறைந்த யோகமே' என்றார்... 

'ஊத்தையேன்' அல்லது 'ஊற்றையேன்' என்பது, 'அழுக்கான உடல் தரித்த என்னை' என்று பொருள் தரும்.. இதில் அழுக்கு என்பது புற அழுக்கு மட்டுமல்லாது, மும்மலங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்..

பாம்பாட்டிச் சித்தரின்

ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே 
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே 
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம் 
வறையோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

என்ற பாடலையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

'வம்பெனப் பழுத்த' என்ற சொல்லின் பொருள் மிக ஆழமானது.. இருப்பினும் மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம்.. இறைவன் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்.. பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியன்..
இறைவன், புதிய பொருள் போலத் தோன்றி தம் குடி முழுதும் ஆண்டு கொண்டான் என்கிறார்....

அஞ்ஞான இருள் நீங்கி, என்றும் புதிதான ஞான ஆதித்தன் (இறைவன்) உதித்து, தம் ஆன்மாவை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்ட இயல்பையே வியந்துரைக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். இங்கு 'குடி' என்னும் சொல், உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட குடும்பத்தைக் குறிப்பதாகவே பெரும்பான்மையான உரையாசிரியர்கள் கொள்கின்றனர். இவையெல்லாம் நிலையானவை அல்ல என்பது வாதவூரார் அறியாததல்லவே!!.. பல பிறவிகளின் கர்ம மூட்டையால் பிணிக்கப்பட்டுள்ள ஆன்மாவை, இறைவன் அருள் தந்து அவனுடையதாக்கிக் கொள்ளலையே 'குடி முழுதும் ஆண்டு' என்றார்... தம்மை முற்றாக, முழுமையாக இறைவன் ஏற்றுக்கொண்டதையே அவர் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்..

அடுத்து வரும் 'வாழ்வு அற' என்ற வரியும் இதை உறுதி செய்கிறது.. இறைவனது அருள் பெற்ற உயிர்,மீண்டும் பிறவா நிலையை அடைகிறது.. பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபடுகிறது...

'வாழ்வு அற வாழ்வித்த மருந்தே' என்பதால், இவ்வுலகத்தில் பிறவி எடுத்தல் என்னும் நிலை நீங்குமாறு பேரின்ப வாழ்வளித்து அருள் செய்தான் இறைவன் என்பதைச் சொல்கிறார்.. மருந்தே என்பது இங்கு அமுதமே என்பதாகப் பொருள்படும்.. இறவா நிலை தரக் கூடியது அமுதம்.. இறைவன் பிறப்பிறப்பு நீக்கி சாயுஜ்ஜிய நிலையை அருளியதைச் சுட்டுவதாக, இதனைக் கொள்ளலாம்.

செம்பொருள் என்பது, உண்மையான பொருள் என்பதாகப் பொருள்படும்.. உண்மையான பொருள் எது என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், இறுதியாக, சிவமே மெய்ப்பொருள் என்று துணிவர்.. ஆகவே, 'அத்தகைய உண்மையான பொருள் நீயே' என்று துணியத் தக்கவனே என்றார்..

சீருடைக் கழலே என்பதில் கழல் என்பது ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளைக் குறிக்கின்றது.. உண்மையான சிவப்பரம்பொருளின் திருவடிகளை அடைவதே மானிடப் பிறவி எய்தியதன் நோக்கம்... 

தில்லை மூதூர் ஆடிய திருவடி 
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி 

என்று கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதை இங்கு ஒப்பு நோக்கிப் பொருள் கொள்ளலாம்.

'எம்பொருட்டு' என்றது, பதிகங்களைப் பாடும் நமக்கு அறிவுறுத்தியது.. நம் பொருட்டு,  நாம் உய்ய வேண்டுமெனில், எம்பெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும்..  இதனைச் செய்வதால் பலனடைவோர் நாம் தான் அல்லவா?!.. சிக்கெனப் பிடித்தல் என்பது, நம்மை முற்றாக இறைவனது திருவடிகளில் சமர்ப்பித்து..'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதற்கிணங்க,  இறைவனை மிக உறுதியாகப் பற்றிப் பிடித்தலாகும்.. 'சிக்கென' என்பதன் மூலம் தளராத உறுதிப்பாடு கூறப்பட்டது..உறுதியாக, 'நீயே கதி' என இறைவனைப் பற்றிப் பிடிப்போரின் இதயத் தாமரையில் இறைவன் நிரந்தரமாக எழுந்தருளுவான் ஆதலின், 'எங்கெழுந்தருளுவது இனியே..' என்றார்.. சித்தம் சிவலோகமாக மாறிய பின், எங்கும் அதுவே காணுதலால், அவர் பிறிதோரிடத்து தோன்றுதல் என்பது கிடையாது.. ஆகவே 'தாம் வேறெங்கும் எழுந்தருளுவது இயலாது...' என்று உரிமையுடன் உரைத்தார்...

இவ்வாறு, தாம், இறையனாரின் இணையடிகளை உறுதியாகப் பற்றிப் பிடித்தமையும் அதன் காரணமாக, இறைவன், தம் ஆன்மாவின் மலங்கள் நீங்குமாறு செய்து, பேரின்ப வாழ்வளித்தமையையும் உரைக்கிறார் பெருமான்...'முத்திக் கலப்புரைத்தல்' சொல்லும் பதிகங்களில், முதற் பதிகத்தின் பொருள் இவ்வாறு அமைந்ததாகக் கொள்ளலாம்.

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

SEETHA ASHTAMI..சீதா அஷ்டமி...(23.2.2014)...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இந்தப் புண்ணிய பாரத பூமியில் தினந்தோறும் திருநாளே!.. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகவே விளங்குகிறது.. 

இன்றைய தினம் 'சீதா அஷ்டமி'.. பூமியின் புதல்வியாகிய அன்னை, தான், ஜனகனின் திருமகளாகப் போற்றப்பட திருவுளம் உவந்த‌ புண்ணிய தினம் இன்று...

ஜனக மகாராஜன், பொன்னேர் பூட்டி உழத் தொடங்கிய நன்னாளில், பூமியிலிருந்து கிடைத்த பெட்டியில் கண்டெடுத்தார்.  ஒரு பெருங்கருணைப் பொக்கிஷத்தை..

ஜனக மகாராஜன், ஒரு வேள்வி செய்ய விரும்பி, அதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்... யாகபூமியை சமம் செய்வதற்காக, முறைப்படி வழிபாடுகள் செய்து, எருதுகளில் தங்கக் கலப்பையைப் பூட்டி, உழ ஆரம்பித்தார்..அப்போது, ஓரிடத்தில், ஏர் முனை நகராது போகவே, அதை ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பெட்டி கிடைத்தது...பெட்டியில் சிறு குழந்தையாகத் திருமகள் தோன்றியருளினாள்

கம்ப இராமாயணம், பால காண்டம், கார்முகப் படலம், பாடல்கள்  16,  17 &  18. இந்த நிகழ்வை மிக அழகுற விவரிக்கின்றன. 'கொழுமுகத்தின் முனையில், சூரியன் உதயமாவதுபோல் ஒளி தோன்றியது'.  என்று சீதையின் திருஅவதார நிகழ்வை விவரிக்கின்றார் கம்பர் பெருமான்.

இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல் பல சால் உழுதேம்

'உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென, புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள். 

'குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து, அவை உய்யப்
பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு உற்றார்

அன்னையைப் 'பெண்ணரசி' என்று போற்றுகிறார் கம்பர்.. சீதையின் தூய குணங்களைச் சிந்தித்தால், அதுவே நம் உள்ளத்தைப் பண்படுத்தும்...

இராமாயணத்தில் இரு நிகழ்வுகள், சீதையின் உயர்ந்த குணத்தைப் புலப்படுத்துகின்றன..

சீதா தேவி, அனைவரிடமும் சமமாக அன்பு செலுத்துபவர்... மன்னன் மகளாயினும், அனைவருக்கும் மதிப்பளித்து, அதன் பலனாக, குடிமக்களின் பேரன்பைப் பெற்றவர்..

ஸ்ரீராமர், சுயம்வரத்தில் வென்றதும், ஜனகர், இது குறித்து, தம் தூதர்கள், புரோகிதர் மூலம் தசரதருக்கு செய்தி அனுப்புகிறார்.. செய்தியைக் கேட்டு மகிழ்ந்த தசரதர், செய்தியைக் கொண்டு வந்தவருக்கு முத்து மாலை பரிசளிக்கிறார்.

ஆனால் செய்தி கொணர்ந்த புரோகிதரோ அதை வாங்கிக் கொள்ளப் பணிவுடன்  மறுத்து, கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். '

சீதா தேவி, தன் தந்தைக்குச் சமமாக, என்னையும் மதித்து நடக்கிறார். ஆகவே, நான் இப்போது மணப்பெண் வீட்டுக்காரன். நாங்கள் சீதனங்களைத் தரலாமே  அன்றி, பெற்றுக் கொள்வது முறையல்ல' என்று அன்புடன் கூறுகின்றார்.


இதிலிருந்து சீதையின் பணிவு,அன்பு முதலான பல நற்குணங்கள் புலப்படுகின்றன.

மற்றொரு நிகழ்வு..

ஸ்ரீராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதர் நாள் குறிக்கின்றார்.. பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமரின் மாளிகையை அடைந்த  அமைச்சர் சுமந்திரர் பெருவியப்படைகிறார். அங்கே சீதா தேவி, முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்.. ஒரு அரசனின் மகள், ஒரு சக்கரவர்த்தியின் மருமகள், இன்று பட்டமேற்கப்போகும் ராஜாராமனின் பட்டமகிஷியாகப் போகிறவள்...எளிமையாக முற்றம் பெருக்குவதைக் கண்டு பதைக்கிறார் அமைச்சர்.. ஆனால் சீதையின் பதிலோ எளிமையாக வருகிறது..'ஏன் இதனாலென்ன.. இன்று பட்டாபிஷேகம்.. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருநாள்.. இதில் பங்கு பெற வேண்டுமென்று அரண்மனை வேலையாட்களுக்கு மட்டும் ஆவல் இருக்காதா..அவர்கள் விரைவாக தத்தமது இல்லங்களுக்குச் சென்றால் தானே அழகாக அலங்கரித்துக் கொண்டு விழாவில் பங்கு கொள்ள இயலும்.. ஆகவே நானே அவர்களை அனுப்பிவிட்டேன். இது நமது இல்லம் அல்லவா.. இந்த வேலைகளை நானே செய்வதில் என்ன தவறு?!!'

அசோகவனத்தில் தன்னைப் படாத பாடு படுத்திய அரக்கியருக்கும் கருணை சுரந்தவர் சீதாதேவி..அவர் படாத துன்பங்களா மனித வாழ்க்கையில்..பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கும் ஜானகி தேவி அவதரித்த தினம் இன்று..

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினமே சீதா அஷ்டமி.. இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் சிலவற்றிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினம் சீதையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது... எனினும் பெரும்பாலான பகுதிகளில் சீதையின் ஜெயந்தி உத்சவம் இன்று தான்..

இன்றைய தினம், ஸ்ரீ சீதா தேவிக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது மிக நல்லது..

இல்லங்களிலும், ஸ்ரீ சீதாராமரின் திருவுருவப்படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீராமரின் அஷ்டோத்திரங்களைக் கூறி வழிபடலாம்.. அண்ணலின் திருநாமங்களைக் கூறியல்லவோ அனுமன் அசோகவனத்தில் அன்னையின் உயிர் காத்தான்!!...

திருக்கோயில்களில் இன்று விசேஷ வழிபாடுகள் செய்யப்படுவதால், கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ சீதாராமரை தரிசனம் செய்யலாம். இராமாயணம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் மிக நல்லது..

ஜானகி தேவியின் ஜன்ம தின உத்சவத்தில், அன்னையின் அருங்குணங்களைச் சிந்தித்து வணங்கி,  நலம் பெறுவோம்!..

வெற்றி பெறுவோம்!!!!!....

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ANGARAHA CHATHURTHI...அங்காரக சதுர்த்தி..(18/2/2014)..

 
 அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

முழுமுதற்கடவுளான கணேசரைப் போற்றும் விரதங்களில் முதன்மையானது சதுர்த்தி விரதம்.. அதிலும் தேய்பிறை சதுர்த்தி 'சங்கடஹர சதுர்த்தி' என்றே சிறப்பிக்கப்படுவதை நாம் அறிவோம்..

மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. பொதுவாக, செவ்வாய் கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி 'அங்காரக சதுர்த்தி' என்றே போற்றப்படுகின்றது.. மாசி மாதம் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் இந்த சிறப்பு உண்டு..

விரதம் தோன்றிய  புராணக் கதை:

பரத்வாஜ முனிவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவர் அங்காரக பகவான்.(பரத்வாஜ முனிவருக்கும், தேவலோகத்துப் பெண்ணான துருத்திக்கும் பிறந்து, பூமாதேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும்...அங்காரகன் சிவபெருமானின் வியர்வையிலிருந்து உதித்தவர் என்றும் புராணங்கள் உண்டு..)

பரத்வாஜ முனிவர், ஸ்ரீவிநாயகரின் பரம பக்தர்.. தந்தையின் வழியிலேயே மைந்தனின் மனம் சென்றது.. ஒரு நன்னாளில் தந்தையிடமே  கணநாயகரின் திருமந்திரத்தை உபதேசம் பெற்றுக் கொண்டார். தவறாது அதை ஜபித்து வரலானார்.. அகமும் புறமும் அம்பிகை பாலனின் திருவடி தொழுதது!.. 

அங்காரகனின் தீவிரமான தவம், கணபதியின் கருணையைப் பெற்றது.. அவர் முன் எழுந்தருளினார் விக்னேஸ்வரர்.. 'வேண்டுவன கேள்' என்று இன்மொழி பகர்ந்தார்..

அங்காரகர்,'தமது பெயரும் நினது பெயரோடு இணைத்து வழங்கப்படுதல் வேண்டும்' என்பதையே கோரிக்கையாக வைத்தார். ஆனால் கயிலை நாதனின் திருப்புதல்வர் கிரக பதவியையே அளித்தார்.. 

மேலும், அங்காரகனுக்கு உரியதாகிய செவ்வாய் கிழமை வரும் தேய்பிறை சதுர்த்திக்கு, 'அங்காரக சதுர்த்தி' என்றே பெயர் வழங்கப்படும் என்று வரமளித்தார். 

இந்த நிகழ்வு நடந்த தினம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி..மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி, எந்தக் கிழமையில் வந்தாலும் அதுவும் 'அங்காரக சதுர்த்தி' என்றே வழங்கப்படும் என்ற ஆசியும் அளித்தார் ஏகதந்தர்..

சங்கடஹர சதுர்த்தி விரதங்களிலேயே மகிமை வாய்ந்தவை அங்காரக சதுர்த்தியும், மஹா சங்கடஹர சதுர்த்தியும்.. அதிலும் அங்காரக சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்,  அளவற்றவை..

செவ்வாய் பகவான் பூமி காரகன்.. கடன்களில் இருந்து நிவாரணம் தருபவன்.... ஆற்றலின் ஊற்றுக்கண் அங்காரகனின் திருவருளே!..ஜாதகத்தில் செவ்வாய் பகவானோடு ராகு/கேது பகவானின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றவர்கள் அங்காரக சதுர்த்தி விரதமிருப்பது மிக நல்லது..பொதுவாகவே இம்மாதிரி அமைப்புள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியிலிருந்தே தொடங்குவது வழக்கம்..மாசி மாதம் தொடங்கி, தொடர்ந்து ஒரு வருடம், சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள் கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக விடுபடுவர் என்கின்றன சோதிட நூல்கள்.

அங்காரக சதுர்த்தி விரதத்தினால் பெறப்படும் ஆன்மீக ரீதியிலான பலன்கள் குறித்து, பவிஷ்ய புராணமும் நரசிம்ஹ புராணமும் விளக்குகின்றன.. இந்த விரதம் இருப்பவர்கள், தமது இகலோக வாழ்க்கை நிறைவடையும் நேரத்தில், விநாயகப் பெருமானின் வாசஸ்தலமான ஸ்வானந்த லோகத்தை அடைகிறார்கள். ஆகவே, பிறவித் தளையிலிருந்தும் விடுபடுகின்றார்கள்.

விரதம் இருக்கும் முறை:

சதுர்த்தி விரதத்துக்கும் சந்திர பகவானுக்கும்  இருக்கும் தொடர்பு  நாம் அறிந்ததே!.... வர (சுக்ல பக்ஷ) சதுர்த்தி விரதம் மற்றும் சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்போர், மாலையில் சந்திரோதயம் ஆன பின்னரே பூஜைகள் மேற்கொண்டு விரதம் நிறைவு செய்ய இயலும்..

அங்காரக சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் நீராடி, கணபதியின் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் திருமுன்பாக, விளக்கேற்றி, சிறிய அளவில் நிவேதனம்(உலர் பழங்கள், இரு வாழைப் பழங்கள்.. இது போல் இருக்கலாம்) செய்து, ஆரத்தி காட்டி வழிபடவேண்டும்....விரதம் இருக்க சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்..

அன்று முழுவதும், முழு உபவாசம் இருப்பது சிறப்பு.. இயலாதோர் ஒரு வேளை உணவு அருந்தலாம்.. அதிகம் பேசாது விரதம் இருக்க வேண்டும். சந்திரோதய நேரம் வரை மௌன விரதம் இருப்பது சிறந்தது.

அன்று மாலையில் சந்திரோதய வேளையில் பூஜை தொடங்க வேண்டும்.. கணபதியின் திருவுருவப்படத்தை அல்லது விக்கிரகத்தை செந்நிற வஸ்திரம் கொண்டு அலங்கரித்து, பஞ்சோபசார/ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.. செந்நிறத்தாலான மலர்கள் சமர்ப்பிப்பது சிறப்பு!..21 தூர்வாயுக்ம பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்..மோதகம் முதலான நிவேதனங்கள் செய்யலாம்..

பூஜை நிறைவடைந்தவுடன், சந்திர பகவானுக்கும் அர்க்கியங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.. பிரசாதங்களை விநியோகித்த பின், விரதம் நிறைவு செய்யலாம்..

'ஸ்ரீ கணபதி அதர்வசீர்ஷம்' பாராயணம் செய்வது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது..இயன்ற மற்ற துதிகளும் பாராயணம் செய்யலாம்..

அங்காரக சதுர்த்தி விரதம் இருப்போரின் அல்லல்கள், ஆனைமுகன் அருளால் நிச்சயம் அகன்று நல்வாழ்வு கிடைக்கும்!...

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 10 பிப்ரவரி, 2014

BHISHMA EKADASI, SRI VISHNU SAHASRANAMA JAYANTHI, BHISHMA PANCHAKA VRATHAM..பீஷ்ம ஏகாதசி, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம ஜெயந்தி, பீஷ்ம பஞ்சக விரதம்.....(10/2/2014)


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்..

தை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி திதி, பீஷ்ம ஏகாதசி என்று சிறப்பிக்கப்படுகின்றது.

மஹாபாரதப் போரில், அர்ஜூனன் தொடுத்த கணைகளால் , அம்புப் படுக்கையில் வீழ்த்தப்பட்ட பீஷ்மப் பிதாமஹர், பாண்டவர்கள் போரில் வென்றதையும், ஹஸ்தினாபுர அரியணை, பாதுகாப்பாக இருப்பதையும் அறிந்த பின், பீஷ்மாஷ்டமியன்று, தியானத்தில் மூழ்கி, ஏகாதசியன்று முக்தியடைந்தார்.. அவ்வாறு முக்தியடைவதற்கு முன்பாக,  பாண்டவர்களுக்கு, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களைப் போற்றும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளினார்....

வேத, வேதந்த, உபநிஷதங்களின் சாரமாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், வைராக்கிய சீலரான பீஷ்மாச்சாரியாரால் அருளப்பட்ட தினம், 'பீஷ்ம ஏகாதசி'. அதனால், அன்று ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகின்றது. 

அன்றைய தினம் முறையாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதோடு, 'ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்' பாராயணம் செய்தலும் மிகச் சிறந்தது.. அகண்ட தீப பூஜை முறையிலும்(பெரிய அகலில், நிறைய எண்ணை அல்லது நெய் ஊற்றி, இருபத்தோரு திரிகள் இட்டு ஏற்றி வைக்க வேண்டும்..தீபத்தில் ஸ்ரீவிஷ்ணுவை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து கொண்டு, தீபத்தின் முன் தொடர்ச்சியாக, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்..)பாராயணம் செய்தல் சிறப்பு.

பீஷ்மர் முக்தியடைந்த தினமான 'பீஷ்ம ஏகாதசி, 'ஜெய ஏகாதசி, பைமி ஏகாதசி'  என்றும் சிறப்பிக்கப்படுகின்றது..  

('ஜெய ஏகாதசி' விரதம் குறித்த புராணக் கதையினை அறிய இங்கு சொடுக்கவும்...)

பீஷ்ம ஏகாதசி தினத்தன்று மட்டும் விரதமிருக்க விரும்புபவர்கள், அன்றைய தினம் மட்டும் உபவாசம் இருக்கலாம்..

பீஷ்ம ஏகாதசியன்று துவங்கி பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது..இது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்திலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விரதம் இருப்பவர்கள், ஏகாதசியன்று துவங்கி, பௌர்ணமி வரை உபவாசமிருக்க வேண்டும்.

பீஷ்ம பஞ்சக விரதம், விஷ்ணு பஞ்சக விரதம் என்றும் அழைக்கப்படுகின்றது.  இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், ஆன்மீகத்தில், உயர் உணர்வு நிலைகளை எளிதாக அடையலாம் என்பது நம்பிக்கை.

மிகக் கடுமையாக விரதம் அனுஷ்டிப்பவர்கள், ஏகாதசியன்று துவங்கி, பௌர்ணமி வரை, பாலும் நீரும் மட்டுமே அருந்துவர்.. இயலாதவர்கள், ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வார்கள். அதுவும் மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பின்னரே உணவு உட்கொள்வார்கள்.

ஏகாதசியன்று துவங்கி, பஞ்சகவ்யம் மட்டுமே உட்கொண்டு, பௌர்ணமி வரை உபவாசமிருப்பதே, இந்த விரதம் அனுஷ்டிப்பதில் மிகச் சிறந்த முறையாகக் கருதப்படுகின்றது..இதை, பெரும்பாலும் யோகிகளே செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக, பால், நீர், அல்லது காய் கனிகள் உட்கொண்டு உபவாசமிருக்கலாம். தானியங்கள், பயறு வகைகள் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஏகாதசியன்று முழு உபவாசம் இருந்து, மற்ற நாட்களில் மேற்கூறியவாறு உபவாசம் இருப்பது சிறப்பு..

விரத தினங்களில், பகவந் நாம ஸ்மரணையிலேயே, மனமும் உணர்வும் ஒன்றியிருத்தல் அவசியம்.. அதிகம் பேசாமல், விரதத்திற்குண்டான நியமங்களை வழுவாது கடைபிடிப்பது சிறந்தது..

விரதத்தை, பௌர்ணமியன்று சந்திரோதயம் ஆனதும் பூர்த்தி செய்யலாம்..பௌர்ணமியன்று மாலையில், ஸ்ரீவிஷ்ணுவிற்கு இயன்ற அளவில் பூஜை செய்து, நிவேதனங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சந்திரனைத் தரிசித்து வணங்கி, பிரசாதத்தை உட்கொண்டு, விரதம் பூர்த்தி செய்யலாம்.

பீஷ்ம பஞ்சக விரதம் இருப்பதால் ஏற்படும் நற்பலன், புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனை விரதங்கள் சொல்லப்பட்டுள்ளனவோ, அத்தனை விரதங்களையும் அனுஷ்டிப்பதால் பெறப்படும் நற்பலனுக்கு இணையானதாகும்.

பீஷ்ம பஞ்சக விரதத்தை, விஷ்ணு பக்தர்கள் மட்டுமின்றி, சிவபிரானை வழிபடுவோரும், ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய வேண்டி அனுஷ்டிக்கிறார்கள்.

பீஷ்ம ஏகாதசிக்கு அடுத்த தினம் 'பீஷ்ம துவாதசி'  என்று சிறப்பிக்கப்படுகின்றது..பீஷ்ம ஏகாதசியன்று மட்டும் விரதமிருப்போர், தங்களது விரதத்தை, பீஷ்ம துவாதசியன்று பூர்த்தி செய்கின்றனர். அன்றைய தினம் தான், பீஷ்மருக்கான இறுதிக்கடன்களை, பாண்டவர்கள் நிறைவேற்றினர்.

பீஷ்ம துவாதசி, பூரி ஜெகந்நாதர் திருக்கோயில், பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரது ஆலயம், மற்றும் அனைத்து இஸ்கான் திருக்கோயில்களிலும் மிக விமரிசையான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

பீஷ்மர் ஒரு காரணப் பிறவியே. ஆயினும், தேவர்களின் பகல் பொழுது துவங்கும் உத்தராயணப் புண்ய காலத்தில், பூமியில் பெரும் சிறப்போடு வாழ்ந்து மறைந்த ஒரு மானிடனைச் சிறப்பிக்கும் வகையில் இத்தனை தினங்கள் (பீஷ்மாஷ்டமி, பீஷ்ம ஏகாதசி, பீஷ்ம துவாதசி, பீஷ்ம பஞ்சக விரதம்)அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு,  அவர் பெயரால் விரதங்கள் அனுஷ்டிப்பதும், பூஜைகள் செய்வதும் ஒரு ஈடில்லா உண்மையையே சுட்டுகிறது..

வையகத்தில் முறையாக, உயர் குணங்களோடு ஒருவர் வாழ்ந்தாரெனில், அத்தகைய மனிதனை, தேவர்களும் வணங்கி, தம் நிலைக்கு உயர்த்துவர் என்பதே அது. ஸ்ரீமத் பகவத் கீதையை, ஸ்ரீகிருஷ்ணர், யாருக்கு அருளினாரோ அந்த அர்ஜூனன், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உரைக்கவில்லை.. மஹாத்மாவான பீஷ்மருக்கே, மோக்ஷத் திறவுகோலான, போற்றத்தகுந்த ஆயிரம் திருநாமங்களை  நமக்கருளும்  நற்பேறு கிட்டியது.. அதன் பலனாக, பரமபதமும் அடைந்தார் அவர்.

இறைவனின் திருநாம மகிமையைப் போற்றுவோம்.!!!!!!!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

RATHA SAPTHAMI...ரத சப்தமி!....(6/2/2014).


உலகுக்கு ஒளி தந்து உயிர்க்கெல்லாம் நலம் தரும்  சூரியபகவான் தோன்றிய நன்னாளே  'ரத சப்தமி'.. 

தை அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சப்தமி திதியே ரத சப்தமி திதியாக அனுசரிக்கப்படுகின்றது..இது,ஆரோக்கிய சப்தமி, சூர்ய ஜெயந்தி, அசலா சப்தமி,மஹா சப்தமி, ஜெய சப்தமி, ஜெயந்தி சப்தமி  என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது.

ரத சப்தமி தினத்தன்று, சூரிய பகவான், தன் ஏக சக்கர ரதத்தை, வடக்காகத் திருப்பி, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.  தை முதல் நாளிலிருந்தே உத்தராயாணப் புண்யகாலம் துவங்கி விட்டாலும்,  தேவர்களின் பகல் பொழுது துவங்கும் நாள் இதுவே.

ரத சப்தமி தினத்திலிருந்தே சூரிய பகவான் தன் வெப்பம் நிறைந்த கதிர்களின் அளவை சிறிது சிறிதாகக் கூட்டுகிறார்.

ரத சப்தமி தினத்தன்று செய்யப்படும் ஸ்நானம், அர்க்கியம், விரதம், பூஜைகள், தானம் இவற்றுக்கு மகத்தான நற்பலன்கள் உண்டு.. குறிப்பாக, அன்றைய தினம் செய்யப்படும் தானங்களின் பலன்கள், கிரகண புண்ய காலத்தில் செய்யப்படும் தானங்களால் பெறப்படும் நற்பலன்களுக்கு இணையாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.. 

ரத சப்தமி, பித்ரு வழிபாடுகள் செய்வதற்கும் ஏற்ற தினம். அன்றைய தினம் தர்ப்பணம் செய்து பித்ருக்களின் ஆசியைப் பெறுவது வழக்கம்.. ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி, பீஷ்மர் முக்தியடைந்த நாளாகக் கருதப்படுகின்றது.. அன்றைய தினம் பீஷ்மருக்கும் தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருக்கிறது.

ரத சப்தமி தினத்தன்று அதிகாலை அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.. ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவது சிறப்பு. தலையில் ஏழு எருக்கம் இலைகளை வைத்து, அதன் மேல் அக்ஷதை மற்றும் விபூதியை வைத்து ஆண்களும், விபூதிக்குப் பதிலாக மஞ்சள் பொடியை வைத்து பெண்களும் நீராடுவார்கள்.. எருக்கம் இலைக்கு அர்க்க பத்ரம் என்றே பெயர். அர்க்கன் என்பது சூரிய பகவானின் மற்றொரு பெயராகும். எருக்கம் இலைக்கு, சூரிய பகவானின் ஒளிக்கதிர்களிலிருந்து நன்மை தரும் கதிர்வீச்சுக்களை ஈர்த்து உடலுக்குத் தரும் சக்தி உண்டு. இது உடல்நலத்தை வலுப்படுத்த வல்லது.. கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கும் சக்தி இந்த வழிபாட்டுக்கு இருப்பதாக ஐதீகம். ஆகவே ஸ்நானத்திற்கு எருக்கம் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன் பின், சூரியோதய காலத்தில் அர்க்கியம் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு மிகப் பிடித்தமான வழிபாடு இது... இதை நீர் நிலைகளில் செய்தால் மிகவும் நல்லது..த்வாதச(பன்னிரண்டு) ஆதித்யர்களை நினைவு கூர்ந்து வணங்குதல் சிறப்பு..

யோகாசனப் பயிற்சி பெற்றவர்கள், பன்னிரண்டு முறை சூரிய நமஸ்காரம் செய்து  வழிபாடு செய்வது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

இல்லங்களின் வாயில்களிலும், பூஜை அறைகளிலும் அன்றைய தினம் ஏக சக்ர தேர்க்கோலம் வரைவார்கள்...   சூரிய பகவானுக்குப் பூஜை செய்ய, பிரதிமையோ அல்லது படமோ இல்லாதிருப்பின், ஒரு மரப்பலகையில் இந்தக் கோலம் வரைந்து, நடுவில் சூரியனின் படம் வரைந்து பூஜை செய்யலாம்.

ரத சப்தமி விரதம் இருப்பவர்கள், சூரியோதய காலத்திலிருந்து, சூரியாஸ்தமன காலம் வரை உபவாசம் இருப்பார்கள். இவ்வாறு உபவாசம் இருந்து வழிபாடு செய்வதால் பித்ரு தோஷம் அகன்று, உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்..

இவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் நற்பலன்களை விளக்கும் புராணக் கதை:

யசோவர்மன் என்ற அரசன் காம்போஜ நாட்டை ஆண்டு வந்தான். குடிமக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நன்முறையில் அரசாட்சி செய்து வந்த அவனது  ஆட்சியில், மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்..

எத்தனையோ செல்வங்கள் இருந்தும், அரசன் யசோவர்மனுக்கு  குழந்தைப் பேறில்லை.. இதற்காக, இறைவனைத் துதித்து, மனமுருகி, பிரார்த்தனைகள் பல செய்தான் யசோவர்மன். அதன் பலனாக, ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் அவன் மனைவி. ஆனால் அந்த மகவு உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையில் பிறந்தது.

 ஆண்டுகள் பல சென்றன. இளவரசனின் உடல் ஆரோக்கியம் சீராகவே இல்லை.. எப்போதும் நோயுற்றிருந்தான். இதனால் மனம் நொந்து வருந்திய நிலையில் யசோவர்மன் இருந்த போது, அவனது நாட்டுக்கு முனிவர் ஒருவர் வருகை புரிந்தார். அவரை வணங்கி, தக்க முறையில் உபசரித்த மன்னன், தனது குறையைச் சொல்லி, அதற்கான பரிகாரம் என்ன என்பதை உரைக்குமாறு, முனிவரை வேண்டினான். 

முனிவர் தமது ஞானதிருஷ்டியால், இளவரசனது முற்பிறவியை அறிந்தார். அதன் பின் அரசனிடம், அவன் மகன் முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் இம்மாதிரியான ஆரோக்கியமற்ற உடலமைப்பைப் பெற்றிருக்கிறான் என்றும், அது குணமடைய, இளவரசன், ரத சப்தமி தினத்தில், முறையாக, சங்கல்பம் செய்து, உபவாசம் இருந்து, சூரியபகவானைப் பூஜித்து, தானங்கள் செய்து வழிபாடு செய்தால் உடல் ஆரோக்கியம் பெற்று நலமடைவான் என்றும் கூறினார்.

இளவரசன், முனிவர் கூறியவாறே செய்து, உடல் நலம் பெற்று, அரசு பொறுப்பை ஏற்று நல்லாட்சி புரிந்தான்.

ரத சப்தமி பூஜை முறைகள்:

சூரிய பகவானுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்வதே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

பூஜை செய்யும் இடத்தை தூய்மை செய்து, அலங்கரித்து, சூரிய பகவானின் படத்திலோ, விக்ரகம் இருந்தால் விக்ரகத்திலோ, சூரியனுக்குரிய ஸ்படிக உருவிலோ பூஜை செய்யலாம். இல்லையெனில், முன் சொன்னது போல், கோலம் வரைந்தும் பூஜிக்கலாம்.

முதலில் விநாயகருக்குப் பூஜை செய்து, அதன் பின், குலதெய்வத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. சூரிய பகவான் ஆத்ம காரகர் மற்றும் பித்ருகாரகர். குல முன்னோர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் பின், தியானம், ஆவாஹனம் முதலான பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.. சூரியபகவானுக்கு உகந்த நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் கருதப்படுகின்றது.. இயன்ற மற்ற நிவேதனங்களும் சமர்ப்பிக்கலாம்.

பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.. பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.

சூரிய பகவானை, பூஜை நிறைவடைந்த உடனேயே யதாஸ்தானம் செய்து விடலாம். உபவாசம் இருப்பவர்கள், மறு நாள் புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்யலாம்.

விரதங்களுள் ரத சப்தமி விரதம் மிகச் சிறப்பானதாகும். இந்த விரதத்தை அனுசரிக்க, உடல் நலத்தோடு வேண்டிய வரங்கள் அனைத்தும் பெறலாம்.

ஞாயிறு போற்றுதும்!.. ஞாயிறு போற்றுதும்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

VASANTHA PANCHAMI....வசந்த பஞ்சமி(4/2/2014).


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்...

ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் நான்கு நவராத்திரிகளில், 'சியாமளா நவராத்திரி', தை அமாவாசை மறு நாள் துவங்கிக் கொண்டாடப்படுகின்றது..(சியாமளா நவராத்திரி பற்றிய சென்ற வருடப் பதிவுக்கு இங்குசொடுக்கவும்..). சாரதா நவராத்திரியின் பஞ்சமி திதி , ஸ்ரீலலிதா தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுவது போல், சியாமளா நவராத்திரியின் பஞ்சமி திதி (சுக்ல பஞ்சமி திதி), ஞானாம்பிகையான ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருஅவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது..

இன்று, (4/2/2013), வசந்த பஞ்சமி தினம். இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீபஞ்சமி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது...மானிடர்கள் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானமே... அதை அருளும் சரஸ்வதி தேவி அவதரித்த தினமாதலால் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் வழங்கப்படுகின்றது..வங்காளத்தில் இது சரஸ்வதி பூஜை தினமாகவே கொண்டாடப்படுகின்றது..

ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால், லௌகீக உலகில் அறிவு சார்  கலைகளில் முன்னேற்றம் கிடைப்பது மட்டுமல்லாது, ஆன்மீகத்தில் உயர்நிலைகளை அடைதலும் கிட்டும் என்பது நம்பிக்கை..

வாக் தேவியான அம்பிகையே ஸ்ரீராகவேந்திரருக்கு, அவர் சன்யாச ஸ்வீகாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்தியவள்.. ஞானாபீஷ்டம் அம்பிகையின் அருளாலேயே சித்தியாகும்...ஸ்ரீவேத வியாசர், பிருஹஸ்பதி, யாக்ஞவல்கியர், வசிஷ்டர், பராசரர், பரத்வாஜர் முதலான எண்ணற்ற ரிஷிகள், சரஸ்வதி தேவியை வழிபட்டே ஞான ஒளி பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஜோதிடத்தில், ஒரு ஜாதகரின் ஐந்தாவது இடம் நுண்ணறிவுக்கான இடமாகக் குறிக்கப்படுகின்றது. பஞ்சமி திதியன்று செய்யப்படும் இறைவழிபாடுகள், நுண்ணறிவை சரியான பாதையில் செலுத்த வல்லவை.

இது தென்னிந்தியாவில் சரஸ்வதி தேவி குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில், இல்லங்களில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்படுகின்றது..வசந்த பஞ்சமி, 'வசந்த ருது'வின் ஆரம்ப தினமாகவே கருதப்படுகின்றது.. தென்னிந்தியாவின் பல சிவன் கோயில்களில் இந்த தினத்தில், ஸ்வாமி புறப்பாடு நடைபெறுகிறது..இந்தியாவின் தென்கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில், வசந்த பஞ்சமி தினம், புது வருடத் துவக்கமாகவே கொண்டாடப்படுகின்றது.

வசந்த பஞ்சமி தின வழிபாடுகள்:

வசந்த பஞ்சமி தினத்தில், விரதம் இருந்து பூஜைகள் செய்வது மிகச் சிறப்பு... அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது..எந்த வகையான செயலாக இருந்தாலும் வெற்றிகரமாக முடிய இன்று துவங்கலாம்..ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான்.

பூஜை முறைகள்:

பூஜை முறைகள் கொஞ்சம் விஸ்தாரமானவை..பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 முதல் 11 வரை. இது பூர்வாஹன காலம் என்று அழைக்கப்படுகின்றது.

முதலில், தூய்மையான இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு கிழக்குப் பார்த்து பூஜை மேடையை அமைக்க வேண்டும்.. கோலங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கவும்.. பூஜை துவங்கும் முன்பாக, தூபங்கள் கமழச் செய்யவும். தீபங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏற்றி வைத்தல் சிறப்பு.

பரிபூர்ணத்தைக் குறிக்கும் கலச ஸ்தாபனம், விநாயகர் பூஜை முதலியவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன் பின், ஸ்ரீவிஷ்ணுவையும் சிவனாரையும் விக்ரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும்.

அம்பிகை சத்வ குண ஸ்வரூபிணி... அம்பிகையின் வெண்பட்டு வஸ்திரம், ஸ்படிக மாலை முதலியன சத்வ குணத்தையும் தூய்மையையும் குறிக்கின்றன.. ஆகவே சத்வகுண ஸ்வரூபனான  திருமால் பூஜை செய்யப்படுகின்றார்.. சில புராணங்களின்படி, சரஸ்வதி தேவி, சிவனாரின் சகோதரியாகக் கருதப்படுகின்றாள். ஆகவே சிவனாரும் பூஜையில் இடம் பெறுகின்றார்.

 சிவ, விஷ்ணு பூஜைகளுக்குப் பின், சரஸ்வதி தேவியின் பிரதிமைக்கு/படத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. வெண்ணிற பட்டு வஸ்திரம் அல்லது மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லிகை மலர்களால் மாலைகள் சூட்டி, (இயன்றோர் முத்து மாலைகள், ஸ்படிக மாலைகளும் சாற்றலாம்) அலங்கரித்து, மல்லிகை, தாமரை, செண்பக மலர்களால் அஷ்டோத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும்.அம்பிகையின் பன்னிரு திருநாமங்களை(த்வாதச நாமங்கள்)கூறி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.

வெண்மை தூய்மைக்கும், மஞ்சள் ஞானத்திற்கும் குறியீடாகக் கருதப்படுகின்றது.. குரு பகவானுக்கும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கும் மஞ்சள் வஸ்திரங்கள் சாற்றி வழிபாடு செய்வது மரபு. ஆகவே அம்பிகைக்கு வெண்ணிற‌ அல்லது மஞ்சள் நிற வஸ்திரங்களைச் சாற்றுகிறோம்.

நிவேதனங்களில் முக்கியமானவை, குங்குமப்பூ ஹல்வா மற்றும் குங்குமப்பூ கலந்த கல்கண்டு, வெல்லப் பொங்கல்.. வடமாநிலங்களில் மஞ்சள் நிற இனிப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன..

குங்குமப்பூ, ஆயுர்வேத மூலிகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.. மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, கண் பார்வைக் கோளாறுகளை நீக்க வல்ல மருந்தாகவும் செயல்படுகின்றது.. அறிவு வளர்ச்சிக்கு மிக அவசியமான இவற்றைப் பெறும் நோக்கத்துடனேயே குங்குமப்பூ நிவேதனங்களில் பிரதானப்படுத்தப்படுகின்றது.. இவை தவிர உலர்பழங்கள் உள்ளிட்ட எதையும் நிவேதனமாக வைக்கலாம்.. பாயசம்,  மற்ற இனிப்புகள் போன்றவையும் நிவேதிக்கலாம்..

வாசனைப் பொருட்கள் சேர்த்த தாம்பூலம் நிவேதித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, தீப ஆரத்தி எடுக்கவும்.. பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகள் நீங்க, மன்னிப்புக் கோரி வணங்கவும்..பூஜை நிறைவில் மஞ்சள் நீரில் இரு தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்யலாம்.

பூஜை தினத்தன்று மாலையிலோ அல்லது மறு நாள் காலையிலோ, இயன்றதை நிவேதனமாகச் செய்து  புனர் பூஜை செய்து, அம்பிகையையும், மற்ற தேவதைகளையும் யதாஸ்தானம் செய்யவும்.

விருப்பமிருப்பவர்கள் மேற்கூறிய பூஜை முறைகளின்படி பூஜை செய்யலாம். சரஸ்வதி பூஜைக்கென சாரதா நவராத்திரியில் செய்யும் பூஜை முறைகளையும் பின்பற்றலாம்.

விஸ்தாரமான பூஜைகள் செய்ய இயலாதோரும், ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது பிரதிமையை அலங்கரித்து வைத்து, தெரிந்த சரஸ்வதி துதிகளைப் பாராயணம் செய்து, இயன்ற நிவேதனங்கள் படைத்து வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீசரஸ்வதி தேவியைப் போற்றும் 'ஸ்ரீசரஸ்வதி அந்தாதி' துதிக்கு இங்கு சொடுக்கவும்.

அம்பிகையின் அவதாரம் குறித்த புராணக் கதை:

ஆதியில், பிரம்ம தேவர் அனைத்து உலகங்களையும், உயிரினங்களையும் படைத்த பின்னரும், அவருக்கு ஏதோ குறை இருப்பது போலவே தோன்றியது. அனைத்துப் படைப்புகளும் அமைதியாக, மௌனமாக‌ இருந்தன. இது குறித்து சிந்தித்தவாறே பிரம்ம தேவர் தம் கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதிலிருந்து சில துளிகள் கீழே சிந்தின. அவை ஒருங்கிணைந்து, ஒரு பெரும் சக்தியாக, மிகுந்த பிரகாசத்துடன் உருவெடுத்தன. ஒரு அழகிய பெண், நான்கு திருக்கரங்களுடன் கூடிய உருவில் பிரம்ம தேவர் முன் தோன்றினாள்.. சுவடிகள், ஸ்படிக மாலை, வீணை முதலியவற்றைத் தாங்கியவளாகத் தோன்றிய அந்த மஹாசக்தி, தன் வீணையை மீட்டி, தேவகானம் இசைக்கத் தொடங்கினாள்.. 

ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை  நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த  ஓசையுடனும்,  முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது.. மானிடர்கள் மொழியறிவு பெற்றனர்.

பிரம்மதேவர் மகிழ்ந்தார்..வாக்வாதினி, வாகீசுவரி, பகவதி  என்றெல்லாம் அம்பிகையைப் போற்றித் துதித்தார்.

இவ்வாறு ஸ்ரீசரஸ்வதி அவதரித்த தினமே 'வசந்த பஞ்சமி'.

வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும் நாம சங்கீர்த்தனம், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பு..

பெரும்பாலான வடமாநிலங்களில், இன்று பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுகின்றது.. வண்ணமயமான பட்டங்கள் செய்து பறக்க விட்டு, வசந்த காலத்தை வரவேற்கின்றனர். இது ஒரு போட்டியாகவும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

நம் உள்ளங்களில் ஞான தீபமேற்ற வேண்டி அம்பிகையைத் தொழுது வணங்குவோம்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

MUKUNDA CHATHURTHI....(3.2.2014)....முகுந்த சதுர்த்தி!!!!


அன்பர்களுக்கு வணக்கம்!

இன்றைய தினம் (3/2.2014, தை அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி) 'முகுந்த சதுர்த்தி' யாக அனுசரிக்கப்படுகின்றது..

துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான இன்று 'ஸ்ரீசித்தி விநாயகரு'க்கு பூஜைகள் செய்து வழிபடுவது சிறப்பானதாகக் குறிக்கப்படுகின்றது..

சியமந்தக மணியை அபகரித்ததாக, ஸ்ரீகிருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க, இன்றைய தினம் ஸ்ரீவிநாயகரை வழிபட்டு அருள் பெற்றார். 

ஆகவே இது 'முகுந்த சதுர்த்தி' என்று சிறப்பிக்கப்படுகின்றது..

காஷ்மீரி பண்டிட்டுகள், துவாபர யுகத்தில், ஸ்ரீவிநாயகர் அவதரித்த தினமான  இன்றைய தினத்தை 'வரத சதுர்த்தி' யாகக் கொண்டாடுகின்றனர்..'சிவ சதுர்த்தி' என்ற பெயரிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர்.

இது தென்னிந்தியாவில் 'மாக சதுர்த்தி விரத' தினமாகக் கொண்டாடப்படுகின்றது.. இன்றைய தினம் முழுவதும் ஸ்ரீவிநாயகருக்கு உபவாசமிருந்து, மாலையில்,  மல்லிகை மாலைகள் சார்த்தி, எள் மோதகம் நிவேதித்து பூஜிப்பது விசேஷம்.. பூஜை முறைகள், விநாயக சதுர்த்தி பூஜை முறைகள் போலவே தான்.

ஸ்ரீவிநாயக சதுர்த்தி பூஜை முறைகளுக்கு இங்கு சொடுக்கவும்.

பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, நமது பண்டிகைகளின் நிவேதனங்கள் அமைந்திருப்பது நம் தர்மத்தின் சிறப்பு.. அதையொட்டியே, தரையைத் துளைக்கும் தை பனிக் காலமான இப்போது,  ந‌ம் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரித்து, குளிரைத் தாக்குப் பிடிக்க உதவும் எள்ளால் ஆன பதார்த்தங்கள், இன்றைய தினத்தில் சிறப்பான நிவேதனப் பொருட்களாகின்றன.

மராட்டிய மாநிலத்தில் 'தில்(எள்) குண்ட்ட்' சதுர்த்தி என்று இது சிறப்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம், எள்ளை ஊற வைத்து அரைத்த சாந்தைப் பூசி ஸ்நானம் செய்து விட்டு, பிறகு விரத பூஜைகளைச் செய்வது சிறப்பானதாகக் கருதப்பட்டு, கடைபிடிக்கப்படுகின்றது...'காணபத்ய மதத்தை'ப் பின்பற்றுவோர் (காணபதர்கள்.)கட்டாயம் இம்முறையில் வழிபடுகின்றனர்.

விரதக் கதை:

முன்னொரு காலத்தில், பெரும் செல்வாக்குடனான அரசன் ஒருவன் இருந்தான்.. அவனது  பட்டத்து ராணி ரத்னாவளி.

திடீரென்று ஒரு நாள், அவனது அரசு எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு, சூறையாடப்பட்டது.. அரசனும் அவனது மனைவியும் காட்டிற்குத் தப்பியோடினர்...

காட்டில், தமது துன்பச் சூழலை விலக்குமாறு இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தாள் ராணி ரத்னாவளி. இயல்பாகவே பக்தி மிகுந்தவள் அவள். 

இறையருளால் மார்க்கண்டேய மஹாமுனியைத் தரிசித்தனர் தம்பதியர். தமது குறையைக் கூறி, அருள்புரிய வேண்டினர்.

முனிவர், தமது ஞான திருஷ்டியால், அரசன் முற்பிறவியில் ஒரு வேடனாகப் பிறந்து, மாக சதுர்த்தி விரதத்தையும், சங்கடஹர சதுர்த்தி விரதத்தையும் விடாது அனுசரித்து வந்தததையும், பின்னாளில் அவற்றைக் கைவிட்டதையும் உணர்ந்தார். அந்தப் பிறவியின் விரதப் பலனால் இப்பிறவியில் அரச போகம் கிட்டியது என்பதையும், பிறகு அவற்றைக் கைவிட்டதனால்,  அரச போகம் பறி போனது என்பதையும் அரச தம்பதிகளுக்கு எடுத்துரைத்தார்.

முனிவரின் அருளாணைப்படி, தம்பதிகள் இவ்விரு விரதங்களையும் மீண்டும் கடைபிடித்தனர்..

விநாயகப் பெருமானின் அருளால், இழந்த அனைத்து செல்வங்களையும் மீண்டும் பெற்றனர் அரச தம்பதியர்.

ஸ்ரீவிநாயகப் பெருமான், நமக்கு எல்லா நலமும் வழங்கி அருள்புரியப் பிரார்த்திக்கிறேன்!..

வெற்றி பெறுவோம்!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.