நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

RATHA SAPTHAMI...ரத சப்தமி!....(6/2/2014).


உலகுக்கு ஒளி தந்து உயிர்க்கெல்லாம் நலம் தரும்  சூரியபகவான் தோன்றிய நன்னாளே  'ரத சப்தமி'.. 

தை அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சப்தமி திதியே ரத சப்தமி திதியாக அனுசரிக்கப்படுகின்றது..இது,ஆரோக்கிய சப்தமி, சூர்ய ஜெயந்தி, அசலா சப்தமி,மஹா சப்தமி, ஜெய சப்தமி, ஜெயந்தி சப்தமி  என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றது.

ரத சப்தமி தினத்தன்று, சூரிய பகவான், தன் ஏக சக்கர ரதத்தை, வடக்காகத் திருப்பி, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.  தை முதல் நாளிலிருந்தே உத்தராயாணப் புண்யகாலம் துவங்கி விட்டாலும்,  தேவர்களின் பகல் பொழுது துவங்கும் நாள் இதுவே.

ரத சப்தமி தினத்திலிருந்தே சூரிய பகவான் தன் வெப்பம் நிறைந்த கதிர்களின் அளவை சிறிது சிறிதாகக் கூட்டுகிறார்.

ரத சப்தமி தினத்தன்று செய்யப்படும் ஸ்நானம், அர்க்கியம், விரதம், பூஜைகள், தானம் இவற்றுக்கு மகத்தான நற்பலன்கள் உண்டு.. குறிப்பாக, அன்றைய தினம் செய்யப்படும் தானங்களின் பலன்கள், கிரகண புண்ய காலத்தில் செய்யப்படும் தானங்களால் பெறப்படும் நற்பலன்களுக்கு இணையாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.. 

ரத சப்தமி, பித்ரு வழிபாடுகள் செய்வதற்கும் ஏற்ற தினம். அன்றைய தினம் தர்ப்பணம் செய்து பித்ருக்களின் ஆசியைப் பெறுவது வழக்கம்.. ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஷ்டமி, பீஷ்மர் முக்தியடைந்த நாளாகக் கருதப்படுகின்றது.. அன்றைய தினம் பீஷ்மருக்கும் தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருக்கிறது.

ரத சப்தமி தினத்தன்று அதிகாலை அருணோதய காலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.. ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவது சிறப்பு. தலையில் ஏழு எருக்கம் இலைகளை வைத்து, அதன் மேல் அக்ஷதை மற்றும் விபூதியை வைத்து ஆண்களும், விபூதிக்குப் பதிலாக மஞ்சள் பொடியை வைத்து பெண்களும் நீராடுவார்கள்.. எருக்கம் இலைக்கு அர்க்க பத்ரம் என்றே பெயர். அர்க்கன் என்பது சூரிய பகவானின் மற்றொரு பெயராகும். எருக்கம் இலைக்கு, சூரிய பகவானின் ஒளிக்கதிர்களிலிருந்து நன்மை தரும் கதிர்வீச்சுக்களை ஈர்த்து உடலுக்குத் தரும் சக்தி உண்டு. இது உடல்நலத்தை வலுப்படுத்த வல்லது.. கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கும் சக்தி இந்த வழிபாட்டுக்கு இருப்பதாக ஐதீகம். ஆகவே ஸ்நானத்திற்கு எருக்கம் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன் பின், சூரியோதய காலத்தில் அர்க்கியம் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு மிகப் பிடித்தமான வழிபாடு இது... இதை நீர் நிலைகளில் செய்தால் மிகவும் நல்லது..த்வாதச(பன்னிரண்டு) ஆதித்யர்களை நினைவு கூர்ந்து வணங்குதல் சிறப்பு..

யோகாசனப் பயிற்சி பெற்றவர்கள், பன்னிரண்டு முறை சூரிய நமஸ்காரம் செய்து  வழிபாடு செய்வது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

இல்லங்களின் வாயில்களிலும், பூஜை அறைகளிலும் அன்றைய தினம் ஏக சக்ர தேர்க்கோலம் வரைவார்கள்...   சூரிய பகவானுக்குப் பூஜை செய்ய, பிரதிமையோ அல்லது படமோ இல்லாதிருப்பின், ஒரு மரப்பலகையில் இந்தக் கோலம் வரைந்து, நடுவில் சூரியனின் படம் வரைந்து பூஜை செய்யலாம்.

ரத சப்தமி விரதம் இருப்பவர்கள், சூரியோதய காலத்திலிருந்து, சூரியாஸ்தமன காலம் வரை உபவாசம் இருப்பார்கள். இவ்வாறு உபவாசம் இருந்து வழிபாடு செய்வதால் பித்ரு தோஷம் அகன்று, உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்..

இவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் நற்பலன்களை விளக்கும் புராணக் கதை:

யசோவர்மன் என்ற அரசன் காம்போஜ நாட்டை ஆண்டு வந்தான். குடிமக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நன்முறையில் அரசாட்சி செய்து வந்த அவனது  ஆட்சியில், மக்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்..

எத்தனையோ செல்வங்கள் இருந்தும், அரசன் யசோவர்மனுக்கு  குழந்தைப் பேறில்லை.. இதற்காக, இறைவனைத் துதித்து, மனமுருகி, பிரார்த்தனைகள் பல செய்தான் யசோவர்மன். அதன் பலனாக, ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் அவன் மனைவி. ஆனால் அந்த மகவு உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையில் பிறந்தது.

 ஆண்டுகள் பல சென்றன. இளவரசனின் உடல் ஆரோக்கியம் சீராகவே இல்லை.. எப்போதும் நோயுற்றிருந்தான். இதனால் மனம் நொந்து வருந்திய நிலையில் யசோவர்மன் இருந்த போது, அவனது நாட்டுக்கு முனிவர் ஒருவர் வருகை புரிந்தார். அவரை வணங்கி, தக்க முறையில் உபசரித்த மன்னன், தனது குறையைச் சொல்லி, அதற்கான பரிகாரம் என்ன என்பதை உரைக்குமாறு, முனிவரை வேண்டினான். 

முனிவர் தமது ஞானதிருஷ்டியால், இளவரசனது முற்பிறவியை அறிந்தார். அதன் பின் அரசனிடம், அவன் மகன் முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் இம்மாதிரியான ஆரோக்கியமற்ற உடலமைப்பைப் பெற்றிருக்கிறான் என்றும், அது குணமடைய, இளவரசன், ரத சப்தமி தினத்தில், முறையாக, சங்கல்பம் செய்து, உபவாசம் இருந்து, சூரியபகவானைப் பூஜித்து, தானங்கள் செய்து வழிபாடு செய்தால் உடல் ஆரோக்கியம் பெற்று நலமடைவான் என்றும் கூறினார்.

இளவரசன், முனிவர் கூறியவாறே செய்து, உடல் நலம் பெற்று, அரசு பொறுப்பை ஏற்று நல்லாட்சி புரிந்தான்.

ரத சப்தமி பூஜை முறைகள்:

சூரிய பகவானுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்வதே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது..

பூஜை செய்யும் இடத்தை தூய்மை செய்து, அலங்கரித்து, சூரிய பகவானின் படத்திலோ, விக்ரகம் இருந்தால் விக்ரகத்திலோ, சூரியனுக்குரிய ஸ்படிக உருவிலோ பூஜை செய்யலாம். இல்லையெனில், முன் சொன்னது போல், கோலம் வரைந்தும் பூஜிக்கலாம்.

முதலில் விநாயகருக்குப் பூஜை செய்து, அதன் பின், குலதெய்வத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.. சூரிய பகவான் ஆத்ம காரகர் மற்றும் பித்ருகாரகர். குல முன்னோர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் பின், தியானம், ஆவாஹனம் முதலான பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.. சூரியபகவானுக்கு உகந்த நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் கருதப்படுகின்றது.. இயன்ற மற்ற நிவேதனங்களும் சமர்ப்பிக்கலாம்.

பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.. பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.

சூரிய பகவானை, பூஜை நிறைவடைந்த உடனேயே யதாஸ்தானம் செய்து விடலாம். உபவாசம் இருப்பவர்கள், மறு நாள் புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்யலாம்.

விரதங்களுள் ரத சப்தமி விரதம் மிகச் சிறப்பானதாகும். இந்த விரதத்தை அனுசரிக்க, உடல் நலத்தோடு வேண்டிய வரங்கள் அனைத்தும் பெறலாம்.

ஞாயிறு போற்றுதும்!.. ஞாயிறு போற்றுதும்!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..