நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 1 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 4.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 4

பதிகம் # 4
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொருள்

இரக்கம், பரிவுடைய சுடர் போன்றவனே!..  பக்குவ நிலையை அடைந்த கனி போன்றவனே!..பெரும் ஆற்றலை உடைய, அருமையான தவத்தினை உடையவர்க்கு அரசனே!..உண்மைப் பொருளை விளக்கும் நூலாக இருப்பவனே, புகழ்ச்சிக்கு அடங்காத, இன்பமாக இருப்பவனே!..யோகத்தின் மூலம் அடையத் தக்க பொலிவானவனே!... தெளிவினை உடைய அடியார்களது சிந்தையில் புகுந்து உறையும் செல்வமானவனே!.. சிவபெருமானே!..இருள் நிறைந்த இந்த உலகத்தில், உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளுவது?!!

சற்று விரிவாகப் பார்க்கலாம்..

அருளுடைச் சுடரே ---ஒளி தரும் சுடர் வெம்மையையும் தருவது, தீண்டுவோரைச் சுடுவது.. ஆனால் இறைவன் தாயினும் சாலப் பரிந்து அடியாரைப் பேணுதலால், 'இரக்கம் நிறைந்த சுடர்' என்னும் பொருள் வருமாறு, அருள் நிறைந்த சுடர் என்றார்..இதற்கு மற்றொரு பொருளும் கூறலாம்.. இறைவன் பேரொளி வடிவானவன், ஆயினும் அவனிடமிருந்து வெளிப்படும் ஒளியானது அடியார்களைச் சுடுவதில்லை.. தண்மையே தருகிறது.. ஆகையினாலும் இறைவன் அருளுடைச் சுடர்.

அளிந்ததோர் கனியே--நன்கு கனிந்து பக்குவமடைந்த கனி போன்றவன் இறைவன்..காயானது நன்கு பழுத்து கனிந்த பின்னரே சுவை தருவது நாம் காயினை உண்ணுவதை விடவும் கனியினை உண்ணுதலையே விரும்புவோம். இறைவன் அவ்வாறான சுவை மிகுந்த கனி போன்றவன்.. .  

இதற்கு வேறொரு பொருளும் கூறலாம்.. அடியார்கள் பரிபக்குவ நிலையை அடைந்த பின்னரே இறைவன் அவர்களுக்கு அருள் சுரப்பான்.. பரிபக்குவ நிலையை அடைந்த அடியார்களை இறைவன் மிக உயர்ந்த பரிபக்குவ‌(தன் ) நிலைக்கு உயர்த்துதல் எளிது ஆகையால், இறைவனைப் பக்குவமடைந்த, கனிந்த, கனி என்றார்..

பெருந்திறல் அருந்தவர்க் கரசே--தவநெறியின் மேன்மை இங்கு விளக்கப்படுகின்றது.. பேராற்றல் தவத்தினால் கிட்டும்..முனிவர்களது தவ ஆற்றலின் மேன்மை நாம் அறிந்ததே!.. இறைவனை அடையும் பொருட்டு, உயர்வான தவநெறியில் சென்று, மிகக் கடுமையான 'பஞ்ச தவம்' முதலானவைகளைச் செய்யும் அடியார்களுக்கு அருள் மழை பொழிபவன் இறைவன்..   ஆகையால், பெரும் திறன் படைத்த, அருமையான(அரிய, கடினமான) தவ நெறியில் செல்வோரின் அரசரே! என்றார்.

இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்... பேராற்றலாவது உள் மனதின் ஆற்றலே ஆகும்.. கடினமான தவநெறியில் செல்வது, மிகுந்த மனோபலமுள்ளவர்களாலேயே இயலும்..அவர்கள் மேற்கொள்ளும் நெறிகள், மேலும் மேலும் அவர்களது உள் ஆற்றலைப் பெருக்கி, தவநெறியின் குறிக்கோளான இறைவனை அடைவிக்கும்..அத்தகைய பேராற்றல் வாய்ந்த தவசீலர்களின் அரசர் என்று இறைவனைப் போற்றுகின்றார் வாதவூரார்.

அருந்தவ மாமுனி வர்க்கரு 
ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் 
பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர 
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு 
நாகேச் சரத்தானே(சுந்தரர் பெருமான்)

\பொருளுடைக் கலையே---இங்கு பொருள் என்பது மெய்ப்பொருளையே குறிக்கும்.. வெளிப்படையாகப் பார்க்கும் போது, மெய்ப்பொருளை விளக்கும் நூலாக இருப்பவன் இறைவன் என்று பொருள்படுகிறது இது..அதாவது, உயிர்கள் அடைய வேண்டிய, அடையத் தகுந்த மெய்ப்பொருள் இறைவன் ஒருவனே!.. அவனை அடையத் தகுந்த வழியும் அவனருளாலேயே கிட்டும்!.. இன்னும் விரிவாகப் பார்ப்போமானால், அவனே அந்த வழியாகவும் இருக்கிறான்...இதை நுட்பமாக விளக்குவது கடினம்..

வீணான, மற்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, மெய்ப்பொருளான இறைவனையே சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக இவ்வரி உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே----இறைவனது மகிமையை, புகழை, ஓதி முடித்தல் என்பது இயலாது.. அவனது மகிமைக்கு அளவில்லை.. ஆதலால், 'புகழ்ச்சியைக் கடந்த' என்றார்.. சிற்றின்பமாகிய உலகியல் இன்பங்கள் யாவும் உண்மையில் போகமல்ல. இறைவனோடு கலந்திருத்தலாகிய பேரின்பமே 'போகம்' என்று கொள்ளத் தக்கது.. அதுவே உயிர்களுக்கு எந்நாளும் நன்மை செய்யக் கூடியது.. ஆகவே 'போகமே' என்றார்.

யோக நெறியில் நிற்போர், தங்கள் யோக சாதனைகளின் மூலம் எம்பெருமானை  மகிழ்வித்து, அவரோடு ஒன்றி நிற்றலாகிய முத்தி நிலையைப் பெறுகின்றனர்.. யோகியருக்கே அவர்களது சாதனைகளின் பலன் அனுபவ ரீதியாகப் புலப்படும்...அந்த அனுபவத்தின் வாயிலாக, அகக்காட்சியில் மட்டுமே காணக் கிடைப்பவன் ஆதலால், ' பொலிவே' என்றார். யோகியருக்கு உள்ளூரப் பொலிபவனாக விளங்குபவன் இறைவன்.

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே---அவ்வாறு யோக நெறியில் நிற்பவரது சித்தம் தெளிவுடையது.. அடைய வேண்டிய பொருள், அதற்குச் செல்ல வேண்டிய மார்க்கம் என அனைத்திலும் தெளிந்த சிந்தனை உடையவர்களாக, தம் சாதனைகளில் ஈடுபடுபவர்கள் யோகிகள்.. ஆகவே, தெளிந்த சிந்தனையுள்ள அவர்களது சிந்தையில் புகுந்து அருளும் செல்வமே என்றார்..

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. ---இருள் இடம் என்று இங்கு சொல்லப்படுவது, இவ்வுலகமே...  மாயையாகிய இருள் படர்ந்து விளங்குவதால் இவ்வுலகம் இருளின் இடமாக இருக்கிறது.. இருளை அகற்றும் மெய்ஞ்ஞானச் சுடர் இறைவனே!..

 வல்வினையேன் றன்னை. மறைந்திட மூடிய மாய இருளை.
 (சிவபுராணம்)..

தம் அகத்தே மூடிய மாய இருள் நீங்கும் பொருட்டு, தாம் இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததால், பெருங்கருணைப் பேராறாகிய இறைவன், முத்தி நிலையை அருளி விட்டான்.. தாம் சிவத்தோடு கலந்து விட்டதால், இனி, எம்பிரான், தனித்து வேறெங்கும் எழுந்தருள இயலாது என்று உரைக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..