நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 16 ஆகஸ்ட், 2014

SRI KRISHNA VAIBHAVAM..ஸ்ரீ கிருஷ்ண வைபவம்.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

இன்று (17/8/2014)  கோகுலாஷ்டமி திருநாள்..கோகுலாஷ்டமி குறித்தும், அதைக் கொண்டாடும் விதம் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

சின்னக் கண்ணன் லீலைகள் சொல்லச் சொல்ல இன்பமல்லவா!.. 

பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்?. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக அவதரித்தது.


கோகுலம் அன்றைய தினம் கண்விழித்த போது, பிறவிப்பயனே ஒரு குழந்தை வடிவாகி வந்திருப்பதை அறியவில்லை. உலகெலாம் விடிந்தது.  நந்தகோபருக்கு   ஆண்குழந்தை ஜனனமாகியிருக்கும் செய்தி கேட்ட கோபர்களும் கோபியரும், பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தம் வாழ்விலோர் திருநாள் வந்து விட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். அனைவரும் போட்டது போட்டபடி, நந்தகோபரின் செல்வத் திருக்குழந்தையைப் பார்க்க வந்துவிட்டனர். பிறந்த குழந்தையின் அழகு பற்றிப் பேசாத வாயில்லை.

அழகெல்லாம் ஓர் திருவடிவாகி வந்த குழந்தை, தன்னை நாடி வந்த கோகுல வாசிகளை நோக்கி மனதுள் நகைத்தது. எத்தனை எத்தனை பிறவிகளாக, தன்னைக் குறித்துத் தவம் செய்து, இந்த கிடைத்தற்கரிய பெரும்பேறை அடைந்திருக்கிறார்கள் இவர்கள்!!!.

பெரும் புண்ணியம் செய்த யசோதை , மகிழ்ச்சியால் பூரித்திருக்கின்றாள்.

பிறந்த குழந்தைக்குத் தான் எத்தனை எதிரிகள்?. பூதனை, சகடாசுரன்,  திருணாவர்த்தன், என்று தொடர்ந்து அசுர வதம். ஏதும் அறியா யசோதை 'என் குழந்தைக்கு மட்டும்  ஏன் இப்படி?' என்று தினம் வருந்தினாள். 'ஹ்ருஷீகேசா, மாதவா, கோவிந்தா' என்று கண்ணனின் திருநாமங்களைச் சொல்லியே அவனுக்கு அங்க ரக்ஷணை செய்தாள்.

சின்னக் கண்ணன் மெல்லத் தவழுகிறான். ஓங்கி உயர்ந்த நந்தகோபன் திருமாளிகையில் காற்சலங்கை குலுங்க, தவழ்ந்தோடுகின்றான். ஆளுயர நிலைக்கண்ணாடியில் தன் அழகு முகம் பார்த்து, 'தன்னைப் போல் ஒரு குழந்தை' என்று எண்ணி, தாவிப்பிடிக்க எத்தனிக்கிறான்.

சற்றே பெரிய கிருஷ்ணன்,  பலராமனுடன் விளையாடுகின்றான். முகத்தில் முன்னுச்சி முடி கலைந்து விழ, ஒதுக்க மனமின்றி ஓட்டமாய் ஓடுகின்றான்.

லீலைகளின் மன்னனல்லவா?!..நீராடப் படுத்துகிறான் அழகிய நம்பி. கெஞ்சி, கொஞ்சுகிறாள் அன்னை... நீராட வாவென அழைக்கும் போதே, செய்யும் குறும்புகளையும் வரிசைப்படுத்துகிறாள் யசோதை!...

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.(பெரியாழ்வார் திருமொழி)

இத்தனை கெஞ்சியும் நீராட மறுக்கிறான் சின்னக் கண்ணன்!.. அன்று அவன் அவதரித்த திருநாளாம்..யசோதை சொல்கிறாள்..

கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய். (பெரியாழ்வார் திருமொழி)

அதன் பின்னும் மாயக் கண்ணன் செய்யும் குறும்புகள் தான் எத்தனை எத்தனை?!

'மஹாபலியிடம் தானம் கேட்டு நின்றது போல் இவர்களிடன் தானம் கேட்கலாகாது' என நினைத்து, கோபியரின் உள்ளமாகிய வெண்ணையைத் திருடிக் கொள்கிறான். மண்ணளந்து விண்ணளந்தவன், மண்ணை உண்டு,  கோபமடைந்த தாயிடம் இவ்வுலகனைத்தையும் தன் திருவாயில் காண்பிக்கின்றான்.

'வாயில் வையங் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரனல்ல னருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பால கன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே (ஸ்ரீபெரியாழ்வார்)

தன் நிலை மறந்து, ஆன்மஞான உணர்வில் ஆழ்ந்திருந்த யசோதையை, புத்ர பாசத்தால் மோகிக்கச் செய்து, பால் கேட்கின்றான்.

ஒரு முறை கண்ணன் பாலருந்தும் போது, அடுப்பில் பொங்கி வழியும் பாலை கவனிக்கச் சென்ற யசோதையிடம் கோபமுற்று,  மத்தால், தயிர் பானையை உடைத்துவிட்டு ஓடுகின்றான். ததிபாண்டனின் பானைக்குள் ஒளிந்து, பானைக்கும் ததிபாண்டனுக்கும் மோக்ஷமளிக்கின்றான்.

கிருஷ்ணனின் செயலால் கோபமடைந்தவள் போல், கண்ணனைத் தேடிய யசோதை, வீட்டில் பின்புறத்தில், உரல் குழியில் வெண்ணையை வைத்துக் கொண்டு பூனைக்கு வெண்ணை கொடுக்கும் குழந்தையைப் பார்க்கின்றாள். அவனை உரலில் கட்ட நினைக்கும் போது அவள் எடுக்கும் அத்தனை கயிறும் சிறியதாகிறது. பரம்பொருளே ஒரு குழந்தையாக அவள் திருக்கரங்களில் விளையாடும் போது கயிறு எம்மாத்திரம்!!

தாமோதரன் தானே கட்டுப்படுகின்றான். உரலைக் கட்டி இழுத்துச் சென்று குபேர குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கின்றான்.

கோகுலத்தில் மட்டுமல்லாது பிருந்தாவனத்திலும் மாயக் கண்ணன் லீலைகள் தொடருகின்றன.

காளிங்க நர்த்தனம் செய்து, காளிந்தியாகிய யமுனையை பரிசுத்தப்படுத்துகின்றான்.. கோவர்த்தன கிரிதாரியாகி, கோபர்களையும் கோபியர்களையும் காக்கின்றான். ராஸலீலைகள் புரிந்து ஆனந்த நடனமாடுகின்றான். அந்த லீலையை ஸ்மரிப்போருக்கு, காமத்தை வெல்லும் திறனளிக்கின்றான்.. ராதையின் கண்ணனாகவும், கோபியர் கொஞ்சும் கோபாலனாகவும் ஆயர்களையும் ஆநிரைகளையும் ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றான்..

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நடக்கும் கிருஷ்ண லீலைகளால் கோபர்களும் கோபியரும் ஆனந்தத்தின் எல்லைகே சென்றிருந்த போது, அவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவது போல், அக்ரூரர் கிருஷ்ணரைத் தரிசிக்க வந்தார்.

கம்சனைச் சந்திக்க கண்ணன் செல்ல முடிவெடுத்தது தெரிந்ததும் பிருந்தாவனமே கலங்கியது. யசோதை!! அவளை என்ன சொல்லித் தேற்ற இயலும்?. கண்ணின் மணி போல் கண்ணனைக் காத்தவள், தன்னை விட்டுப் பிரிகின்றான் கண்ணன் என்று தெரிந்ததும் இடி விழுந்த மரம் போலானாள். ஆனால், யாரையும் கலங்கச் செய்கின்றவன் அல்லவே கண்ணன்!!!. அன்னைக்கு ஓர் வரம் தந்தான். பார்க்குமிடந்தோறும் நீக்கமற தன் தோற்றமே நிலைக்குமென்று உறுதி கொடுத்தான். அவள் உறங்கும் போது அவள் உள்ளத்துள் புகுந்து நிலைபெற்றான்.

கோபியரின் பிரிவாற்றாமை, பின்னாளில் உத்தவர் மூலமே நீங்கும் என்பது தெரிந்ததால், 'விரைவில் வருவேன்' எனச் சொல்லி விடைபெற்றான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால்..

இனி மதுரா லீலை தொடர  வேண்டுமல்லவா....

ஸ்ரீ கிருஷ்ண வைபவம் வையம் உள்ளளவும் நித்தம் நித்தம் புத்தம் புதிதாகத் தோன்றுவது. சொல்லச் சொல்ல இன்பம் பொங்கும். 

சொல்லி முடிக்கவியலாத மதுரம் அது!..

யோகீந்தாராணாம் த்வதங் கேஷ்வதிக ஸூமதுரம்
முக்திபாஜாம் நிவாஸோ
பக்தானாம் காமவர்ஷ- த்யுதரு கிஸலயம்
நாத தே பாத மூலம் |
நித்யம் சித்தஸ்த்திதம் மே பவன புரபதே
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நி: சேஷ தாபான் ப்ரதிசது
பரமானந்த ஸ்ந்தோஹ லக்ஷ்மீம் || (ஸ்ரீமந் நாராயணீயம்)

"ஹே குருவாயூரப்பா, கருணைக் கடலே!, யோகியருக்கு இனியதும், முக்தியடைபவர்கள் உறைவதும், பக்தர்கள் விரும்பியதை பொழிவதும், கற்பகத்தளிர் போன்றதுமான, உன் பாத மூலம், என் சித்தத்தில் எப்போதும் இருந்து கொண்டு, அனைத்துத் துன்பங்களையும் போக்கி, பரமானந்த மோக்ஷச் செல்வத்தை அளிக்கட்டும்!".

கண்ணன் கழலடி தொழுது,

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..