நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 அக்டோபர், 2014

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 2....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி..

விரதக் கதை:

பல்வேறு விரதக் கதைகள் கர்வா சௌத் குறித்துச் சொல்லப்படுகின்றன. சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

கர்வா என்ற பெண்ணின் கதை:

கர்வா என்ற பெண் ஒரு பதிவிரதை.. கணவனின் மேல் வைத்த ஆழமான அன்பு மற்றும் பக்தியின் காரணமாக, இவளுக்கு அற்புதக் சக்திகள் கிடைத்தன..ஒரு நாள், நீராடச் சென்ற இவள் கணவன், முதலை வாயில் அகப்பட்டான்.. அந்த முதலையை, கர்வா தன் பதிவிரதா சக்தியின் காரணமாக, ஒரு பருத்தி நூலால் கட்டிப் போட்டதோடு, யமதர்மராஜனை அழைத்து, அந்த முதலையை நரகத்துக்கு அனுப்பும்படி கட்டளையிட்டாள். யமதர்மராஜன் மறுக்கவே, தான் அவனுக்கு சாபமிடப்போவதாகச் சொன்னாள்.. யமதர்மராஜனும் பதிவிரதையின் சாபத்துக்கு பயந்து, அவள் கணவனை உயிர்ப்பித்து நீண்ட ஆயுளை வழங்கியதோடு, முதலையையும் நரகிற்கு அனுப்பினான்.

கணவன் மேல் மிக்க அன்போடு இருக்கும் பெண்களின் சக்திக்கு அளவேதும் இல்லை என்பதற்காகச் சொல்லப்படும் கதை இது!..

வீரவதியின் கதை:

இந்தக் கதையே பிரபலமாக வழங்கப்படுகின்றது..

வீரவதி என்ற பெண், ஏழு தமையன்மார்களுடன் பிறந்தவள்.. செல்வந்தர் வீட்டுப் பெண். மிகுந்த அன்போடு வளர்க்கப்பட்ட அவளுக்கு, அக்கால வழக்கப்படி பன்னிரண்டு வயதில் திருமணமானது. புகுந்த வீட்டுக்குச் சென்று வாழ்ந்து வந்த அந்தப் பெண், தன் முதல் கர்வா சௌத் விரதத்துக்கென பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

பிறந்தது முதல் விரதமிருந்து பழக்கமில்லாத வீரவதி, அன்று முழுவதும் கடும் உபவாசமிருந்தாள்.. ஆனால் விரைவிலேயே சோர்வடைந்து, பசியினால் மயக்கமானாள்..

அவளது தமையன்மார்கள், தங்கையின் மேல் கொண்ட அன்பினால் அவள் விரதத்தை முறிக்கத் துணிந்தனர்.. ஒரு மலையின் மேல் பெரும் குவியலாக, காட்டுச் சுள்ளிகளை அடுக்கி, தீ மூட்டினர். அதன் பிரகாசத்தை, தங்கைக்கு காண்பித்து, சந்திரோதயம் ஆகி விட்டதென நம்ப வைத்து, உணவருந்தச் செய்தனர்.. ஆனால், சிறிது நேரத்திலேயே, வீரவதியின் கணவன் போரில் மாண்டான் என்ற செய்தி கிட்டியது!.

துன்பத்தால் துடித்து அழுதபடி, கணவனைக் காணச் சென்றாள் வீரவதி..

போகும் வழியில், சிவபிரானையும் பார்வதி தேவியையும் பூர்வ புண்ணியத்தால் தரிசிக்கும் பேறு பெற்றாள் வீரவதி.. அவளது கண்ணீரைக் கண்ட பார்வதி தேவி, அவள் விரதத்தை முழுமையாக அனுஷ்டிக்காததாலேயே இது நேர்ந்தது என்றும், இனி, இந்த விரதத்தை பங்கமில்லாமல் அனுஷ்டிக்குமாறும் கூறி, அவள் கணவனை உயிர்ப்பித்ததோடு, அவன் உயிரோடு இருந்தாலும் நோயுற்றிருப்பான் என்றும், அவள் விரத பலனே அவளது நல்வாழ்வை மீட்கும் என்றும் கூறியருளினாள்..

கணவன் இடம் சென்ற வீரவதி, கணவனின் உடலில் எண்ணற்ற ஊசிகள் குத்தப்பட்டிருப்பதைக் கண்டாள். அவன் உடலில் உயிர் இருந்ததே தவிர உணர்வில்லை. 

நம்பிக்கை இழக்காத வீரவதி, கணவனை பத்திரமாகப் பாதுகாத்ததோடு, கர்வா சௌத் விரதத்தை கடுமையாக அனுஷ்டித்தாள். விரத பலனால், ஒவ்வொரு வருடமும் அவள் கணவன் உடலில் இருந்த ஊசிகளை ஒவ்வொன்றாக அவளால் அகற்ற முடிந்தது.

கடைசி ஊசியை அகற்ற வேண்டிய வருடத்தில், நாள் முழுவதும் விரதமிருந்த வீரவதி, விரதப் பொருட்களை வாங்கச் சென்ற போது, அவளது வேலைக்காரப் பெண், அவள் கணவன் உடலில் இருந்த ஊசியை அகற்றினாள்.. உணர்வு வரப் பெற்ற அவனை, உருவத்தில் பெரிதும் வீரவதியை ஒத்திருந்த அந்த‌  வேலைக்காரப் பெண்,  ' தானே அவன் மனைவி' என்று நம்ப வைத்தாள்.

வீடு திரும்பிய வீரவதி திகைத்தாள்.. அவளை வேலைக்காரியாக்கினாள் அவளது பழைய வேலைக்காரி.. முற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாததால் அவள் பிறந்த வீட்டுக்கும் தகவல் தெரியவில்லை..  புகுந்த வீட்டினர், இருவரது உருவ ஒற்றுமையினால் நடந்ததை அறிய இயலவில்லை.முற்காலத்தில், வீட்டு வேலைக்காரப் பெண்கள், எஜமானரிடம் நேரிடையாகப் பேசுவது இயலாததால், நடந்த விவரங்களை வீரவதியால் அவள் கணவனிடம் கூறவும் இயலவில்லை.

காப்பாற்ற யாருமில்லாத துன்பத்தில் சிக்கிய போதும் வீரவதி நம்பிக்கையை இழந்தாளில்லை.. சிவனையும் பார்வதியையும் மனதில் இருத்தி, விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தாள்.. ஒரு நாள், வெளியூர் செல்லவிருந்த வீரவதியின் கணவன், வீட்டிலுள்ளோர் அனைவரிடமும் அவர்கள் தேவையைக் கேட்டறிந்து, அதை வாங்கி வருவதாக வாக்களித்தான். வீரவதி, ஒரே மாதிரியான இரு பொம்மைகளைக் கேட்டதாக அவனுக்குச் சொல்லப்பட்டது.

அம்மாதிரி வாங்கி வந்ததும், அதை வைத்துக் கொண்டு, 'வேலைக்காரி வீட்டுக்காரியானாள், வீட்டுக்காரி வேலைக்காரி ஆனாள்..' என்று தொடர்ந்து பாடி வந்தாள் வீரவதி.. அடிக்கடி இதைக் கேட்ட வீரவதியின் கணவன், அவளை அழைத்து விசாரித்த போது, நடந்தவற்றைக் கூறினாள் வீரவதி.. தகுந்த விசாரிப்புகள் மூலம் உண்மையை உணர்ந்த அவள் கணவன், வீரவதியை மீண்டும் அவளது பழைய உயர்ந்த நிலையில் வைத்து வாழத் துவங்கினான்.

இவ்விதம் விரதத்தை அனுஷ்டித்து, சிவ பார்வதியின் அருளால், நல்வாழ்வு பெற்றாள் வீரவதி.

இதன் காரணமாகவே, சில பகுதிகளில், இந்த விரதத்தின் போது, வீட்டுப் பெண்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவது வழக்கத்தில் இருக்கிறது..பரிசுகள் வழங்கச் செல்லும் போது, தங்கையின் நல்வாழ்வு குறித்தும் அறிய இயலும் என்பதால் இந்த வழக்கம் பின்பற்றப்படுகின்றது.

மஹாபாரதக் கதை:

பாண்டவர்கள் வனவாசம் செய்த சமயத்தில், அர்ஜூனன் தவமிருக்கச் சென்ற போது, பாண்டவர்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகினர்.  திரௌபதி, ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, துன்பங்களிலிருந்து விடுவிக்கக் கோரியபோது, அவளுக்கு வீரவதியின் கதையை எடுத்துரைத்து, இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். இந்த விரதப் பலனால், திரௌபதியின் கணவன்மார்கள் துன்பத்திலிருந்து காக்கப்பட்டனர்.

இதை, அர்ஜூனன், தீர்த்தயாத்திரை சென்ற சமயத்தில் நிகழ்ந்ததாகவும் சொல்வதுண்டு.

கதைகள் பலவான போதும் அவை வலியுறுத்துவது கணவன் மனைவி ஒற்றுமையையே!.. இந்தக் காலத்தில், இந்தக் கதைகளை குறித்த மாறுபட்ட கருத்துக்கள் தோன்றுவது இயல்பு. எனினும் இம்மாதிரி விரதங்கள் , கணவன் மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமையையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை..

விரதமிருக்கும் வழக்கமில்லாதவர்கள், இன்றைய தினம் இறைவழிபாடு செய்து, இறையருளைப் பெற்று,

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. கந்தர் சஷ்டி பதிவுகள் அரங்கேறுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா!.. ஒரு வருத்தம் மிகுந்த சூழல். விரைவில் மீண்டு வந்து எழுத முயற்சி செய்கிறேன்.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..