நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!... PART 14....கண்ணனை நினை மனமே!.. பகுதி 14....விராட்புருஷ உருவம்!..

 

ஒன்றான பரம்பொருள், பலவாகி விரிந்ததோடு, எல்லாமும் தானாகி நின்றதொரு திறம் போற்றிப் பாடுகின்றார் பட்டத்திரி!.. காருண்ய ரூபனான பரமாத்மா, பரந்த இப்பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்து, சகல லோக ஸ்வரூபனாக அருளும் அற்புதத்தை நாமும் தியானிக்கலாம்!...

​பரமாத்மாவின் விராட்ஸ்வரூபத்தினை விவரிக்கும் போது, "ஈச" என்றழைத்து, தொடங்குகிறார் பட்டத்திரி!.. "ஆள்பவன், இறைவன், குரு.." என்றெல்லாம் பல அர்த்தங்கள் இந்தப் பதத்திற்கு உண்டென்பதோடு, அனைத்துமே இங்கு பொருந்துவதால் இவ்விதம் போற்றினார் எனலாம்!..

எல்லா உலகமும் தானாகி நின்ற விராட்ஸ்வரூபம், கீழ் ஏழு உல‌கங்களில், பாதாள உல‌கத்தை தன் உள்ளங்கால்களாகவும்,  ரஸாதல  உல‌கத்தை, கால்களின் மேற்புறமாகவும்,  மஹாதலத்தை தன் கணுக்கால்களாகவும் கொண்டதாக முனிவர்கள் கூறுகின்றனர்.

முழங்கால்கள் தலாதலம்,  தொடைகள் ஸூதலம், தொடைகளின் கீழ், மேல் பாகங்கள் விதலம் மற்றும் அதலம் (கீழ் ஏழு உலகங்கள்)..இடுப்பு பூலோகம், நாபி ஆகாயம், மார்பு ஸ்வர்க்கலோகம்...

கழுத்து மஹர்லோகம், முகம் ஜனலோகம், நெற்றி தபோலோகம், தலை சத்யலோகமாகிய பிரம்மலோகம் (மேல் ஏழு உலகங்கள்) ..இவ்விதம் பதினான்கு உலகங்களையும் தம் திருமேனியாகக் கொண்டு, உலகப்பொருட்களனைத்தையும் தம் சரீர அமைப்பில் உடையவராகத் திகழும் பகவானை பக்திபூர்வமாக நமஸ்கரிக்கிறார் பட்டத்திரி!..

​மேலும் பட்டத்திரி கூறுகின்றார்!..

"ஸ்ரீஅப்பனே!.. உமது தலையுச்சி வேதங்கள், கேசவா, உமது கேசம் மேகம், புருவங்கள் பிரம்மனின் திருமாளிகை,  இமைகளின் முடி, இரவு, பகல்... விழிகள் சூரியன்".

"இவ்வுலக சிருஷ்டியாவது, உமது திருவிழிகளின் கடாட்சப் பார்வையே..திருச்செவிகள் திசைகள், நாசித்வாரங்கள் அச்வினீ தேவதைகள்... கீழுதடு மற்றும் மேலுதடுகள் லோபமும் வெட்கமும்..பற்கள் நட்சத்திரக் கூட்டம், தெற்றிப்பல் யமன் ".​

"உமது புன்சிரிப்பு மாயை, மூச்சு வாயு, நாக்கு நீர் (ஜலம்),  வாக்கானது பறவைகளின் கூட்டம், ஸ்வரங்களாவது சித்தர்கள் கூட்டம், வாயானது அக்னி, திருக்கரங்கள்  தேவர்கள், ஸ்தனங்கள் இரண்டும் தர்ம தேவன்."

"தேவ தேவா!..உமது இவ்வுருவின் பிருஷ்ட பாகம் அதர்மம், மனம் சந்திரன், இருதயம் அவ்யக்தம் (பிரக்ருதி),  வயிறு சமுத்திரங்கள், அணிந்துள்ள ஆடை சந்தியா காலம், ஆண்குறி பிரஜாபதி, அண்டகோசங்கள் மித்ர தேவதை..".

"உமது இடுப்பை ஒட்டிய பிரதேசம் மிருகங்களின் கூட்டம்,  கால் நகங்கள், யானை, ஒட்டகம், குதிரை முதலியன..உமது கம்பீரமான நடையே காலம், முகம், கரங்கள், தொடைகள், கால்கள் ஆகியவை, நான்கு விதமான தொழில்களை செய்யும் மானிடர்கள் பிறப்பெடுக்க்கும் இடங்களாக அமைந்திருக்கின்றன‌.".

"சக்கரத்தை திருக்கரத்தில் ஏந்தியவரே!. உமது செயல்களே சம்சார சாகரத்தின் சுழற்சி.."உமது வீரியம் அசுரர்கள் கூட்டம், எலும்புகள் மலைகள், நாடிகள் நதிகளின் கூட்டம், உரோமங்கள் மரங்கள்.. இப்படியாக, வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக விளங்கும் இந்த விராட்சரீரம், வெற்றியுடன் விளங்குவதாக!..".

ஈத்³ருʼக்³ஜக³ன்மயவபுஸ்தவ கர்மபா⁴ஜாம்ʼ
கர்மாவஸானஸமயே ஸ்மரணீயமாஹு​:| 
தஸ்யாந்தராத்மவபுஷே விமலாத்மனே தே
வாதாலயாதி⁴ப நமோ(அ)ஸ்து நிருந்தி⁴ ரோகா³ன் ||

("உம்முடைய, உலக வடிவமான இந்த சரீரம், தங்கள் கர்மங்களை சரியாக நிறைவேற்றுபவர்கள் (கர்மயோகிகள்), தங்கள் கர்மங்கள் நிறைவுறும் நேரத்தில் (அந்திய காலம்) தியானிக்கத் தக்கதென்று சொல்கிறார்கள்...அதன் (அந்த விராட்ஸ்வரூபத்தின்) அந்தராத்ம ஸ்வரூபியாக இருக்கும் சுத்த சத்வ மூர்த்தியே!.. உமக்கு என் நமஸ்காரம்!.. என் நோய்களைப் போக்கி அருள்வீராக!..).

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று. (பேயாழ்வார்).

இப்படி பட்டத்திரி நமஸ்கரித்ததும், குருவாயூரப்பன் தம் தலையை அசைத்து சரி என்பதாக தம் சம்மதத்தைத் தெரிவித்தாராம்!..பெரும் புண்ணியம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே அந்திம காலத்தில் இறைவனை நினைத்தல் கைகூடும்.. அதிலும் பற்றற்று செயல் புரியும் கர்மயோகிகளுக்கே, அவர்கள் உடலை விடும் நேரத்தில் விராட்ஸ்வரூபத்தை தியானிக்கும் நினைவும் பேறும் கிட்டும் என்று கூறுகின்றார்கள்..இது பரமாத்ம ஐக்கியத்தை அவர்களுக்கு பெற்றுத் தந்து, பேரின்ப வாழ்வளிக்கும் என்பது பெரியோர்களின் உறுதியான நம்பிக்கை..

​(இறையருளால் தொடர்ந்து தியானிக்கலாம்!).​

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..