நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 16 மார்ச், 2015

KANNANAI NINAI MANAME..PART 20... கண்ணனை நினை மனமே!..பகுதி 20...


எம்பெருமானது திவ்ய தரிசனம் பெற்ற பின்னர், பிரம்ம தேவர், தம் உள்ளிருந்து இயக்குமாறு பகவானை வேண்டியதும், அவரது வேண்டுதலுக்கிணங்க, எம்பருமான் அனுக்கிரகம் செய்தததும், பிரம்ம தேவர் சிருஷ்டியைத் துவங்கியதும் இந்த தசகத்தில் விவரிக்கப்படுகின்றது..


தம் உள்நோக்கில் இறை தரிசனம் பெற்று மகிழ்ந்தார் பிரம்ம தேவர்!!!..

"கிரீடம் (தலையில் முன்புறம் அணிவது), முகுடம் (தலையின் பின்புறம் அணிவது) , தோள் வளைகள், முத்தாரங்கள் இவற்றால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் பதித்த மேகலையுடன் கூடியதும், பீதாம்பரமணிந்ததும், காயாம்பூ வண்ணமுடையதும், பிரகாசமுடைய கௌஸ்துப மணியுடையதும்,  பிரம்மதேவனுக்கு தரிசனமளிக்கப்பட்டதுமான, அந்தத் திருமேனியை தியானிக்கிறேன்" என்று பிரம்ம தேவர், தம் உள்நோக்கில் கண்ட திருமேனியைப் போற்றுகின்றார் பட்டத்திரி!.

பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. (நம்மாழ்வார்).

இறைவனை தியானிக்க தியானிக்க,  உள்ளொளி பெருகும்.. 'எதுவும் தமதல்ல, எல்லாம் அவனே!' என்னும் நல்லறிவு வாய்க்கும்.. அதன் விளைவாக, செய்யும் செயலெல்லாம், நாரணன் விருப்பினால் செய்யப்படும் தன்மை கைவரப் பெறும். பிரம்ம தேவருக்கு இவையெல்லாம்  கிடைத்ததோடல்லாமல், நாராயணன் தரிசனமும் கிடைத்தது!..!.. அவர் பேறு பெற்றவரானார்.

தாம்  சிருஷ்டி செய்ய வேண்டும் என்ற,  பகவானது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் சக்தியையும் த‌ம் உள்ளத்தில் தோன்றியருளிய தேவாதி தேவனிடமே கேட்டு நின்றார். எம்பெருமான் விருப்பை நிறைவேற்றி வைக்கும் கருவியாக தாம் மாற வேண்டினார்.

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி. (நம்மாழ்வார்)

"அளவற்ற மகிமையுடையவரும், துன்பங்களை நீக்குபவரும், ஸ்ரீபதியுமான பிரபுவே!, தாங்கள், என் உள்நோக்கில் தோன்றியது என் பேறே!..உலகங்களை சிருஷ்டிக்கும் திறனை தந்தருள வேண்டுகின்றேன்!" என்று பிரம்ம தேவர் வேண்டி நிற்க,

"பிரம்ம தேவரே!, மூவுலகங்களையும் எவ்விதக் குறைபாடுமின்றி சிருஷ்டிக்கும் திறன் அடைவாய்!..தவம் செய்வாய்!.. அனைத்தையும் பெற்றுத் தரும் தீவிரமான பக்தி என்னிடம் நிலைத்திருக்கட்டும்!. என் அருளைப் பெறுவாய்!" என்று பகவானும் வரமருளினார்.

பகவானின் ஆணைப்படி, பிரம்ம தேவர், மேலும் ஒரு நூறாண்டுகள் தவம் செய்தார்.. அதன் விளைவாக, அதிகமான மனோபலத்தையும் தபோ பலத்தையும் அடைந்தார். பகவானின் சக்தியால் நிரப்பப்பட்ட அவர், பிரளய வெள்ளத்தில், தாம் அமர்ந்திருந்த தாமரைப் பூ, காற்றினால் ஆடுவதைக் கண்டு, பிரளய நீரையும் காற்றையும் பருகி விட்டார்...

பிரம்ம தேவர், தாம் அமர்ந்திருந்த தாமரைப் பூவைக் கொண்டே மூவுலகங்களையும் சிருஷ்டிக்கத் துவங்கினார். அதைக் கீழ்வருமாறு பட்டத்திரி வர்ணிக்கிறார்.

தவைவ க்ருʼபயா புன​: ஸரஸிஜேன தேனைவ ஸ​:
ப்ரகல்ப்ய பு⁴வனத்ரயீம்ʼ ப்ரவவ்ருʼதே ப்ரஜானிர்மிதௌ | 
ததா²வித⁴க்ருʼபாப⁴ரோ கு³ருமருத்புராதீ⁴ஸ்²வர
த்வமாஸு² பரிபாஹி மாம்ʼ கு³ருத³யோக்ஷிதைரீக்ஷிதை​: ||

"பிரம்ம தேவர்,  தாம் அமர்ந்திருந்த தாமரைப் பூவைக் கொண்டே, உமது கிருபையின் காரணமாக, மூவுலகங்களையும் சிருஷ்டிக்கத் துவங்கினார். ஸ்ரீ குருவாயூரப்பனே!.!.. அப்பேர்ப்பட்ட  மகிமையுடன் கூடிய நீர்,  கருணை மிக்க உமது கடைக்கண் பார்வையால், என்னை விரைவிலேயே காப்பாற்றுங்கள்".

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..