நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME...PART 27...கண்ணனை நினை மனமே!.. பகுதி 27..கபில கீதை...



கபில மாமுனிவரின் தாயாகிய தேவஹூதிக்கும், கபிலருக்கும் நடந்த சம்வாதமாக, ஸ்ரீமந் நாராயணீயம்  கூறும்  ஸாங்கிய யோகத்தின் முதல் பகுதியை இப்போது பார்க்கலாம். 
கபிலமாமுனிவரின் அமுத மொழிகளே,  ஸாங்க்ய காரிகை என்னும் நூலாக உருப்பெற்றது. ஸ்ரீ க்ருஷ்ணரும், கீதையில், ஸாங்க்ய யோகத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். ஆனால் இது கபிலரின்  ஸாங்க்ய யோகத்திலிருந்து   சிறிது வேறுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 'ஸங்கியை' என்றால் 'கணக்கெடுப்பது' என்று ஒரு பொருள் உண்டு. அது போல், பிரபஞ்சம் சம்பந்தமான தத்துவங்களை கணக்கெடுத்துச் சொல்வதால் 'ஸாங்கியம்' என்ற பெயர் ஏற்பட்டது என்றொரு கூற்றிருக்கிறது. நமது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளின் போது செய்ய வேண்டிய மத ரீதியான சடங்குகளின் தொகுப்பை 'சாங்கியம்' என்று சொல்வதும் இவ்வாறு ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான உரையாசிரியர்கள், ' பிரகிருதி, புருஷன் என்று பகுத்து அறியப்படுவது 'ஸாங்கியம்' எனப்படும்' என்று சொல்கிறார்கள் ("ஸாங்கியத்தில் எதிலேயும் பட்டுக் கொள்ளாததான - ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான - ஆத்மாவைப் 'புருஷன்' என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை 'ப்ரக்ருதி' என்றும் சொல்லியிருக்கிறது"....'தெய்வத்தின் குரல்')

.
ஸ்ரீ நாராயண பட்டத்திரி, மொத்தம் எட்டு ஸ்லோகங்களில், சுருக்கமாக, கபில கீதையை விவரித்திருக்கிறார். ஓரளவு, அதை நானறிந்த விதத்தில் விவரித்திருக்கிறேன். பிழையிருப்பின், பெரியோர்கள், சுட்டி வழிநடத்தக் கோருகின்றேன். அது என் புரிதலை மேலும் செம்மைப்படுத்தும்!.. 

இனி, தேவஹூதி, கபிலர் சம்வாதத்தைப் (உரையாடலை) பார்க்கலாம்.

ஸ்ரீமத் பாகவதத்தில், தேவஹூதி, பகவானிடம் பிரார்த்தித்தது, கீழ்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.. இது குறித்து, ஸ்ரீமந் நாராயணீயத்தில் சொல்லப்படவில்லையெனினும், புரிதலுக்காக, இங்கு தருகின்றேன்.

தேவஹூதி கபிலராக திருஅவதாரம் செய்துள்ள பகவானைப் பார்த்து, "தாங்களே ஆதிபுருஷன். ஜீவர்களுக்கு ஈஸ்வரனாக விளங்குபவர். அஞ்ஞான இருளில் பார்வையிழந்திருக்கும் உலகுக்கு பார்வையளிக்கும் சூரியன் நீரே. ஆகையால், அடியார்களின் ஸம்ஸார விருக்ஷத்திற்குக் கோடாரி போன்றவரும், ஞானமார்க்கத்தை அறிந்தவர்களின் தலைவராக விளங்குபவரும், சரணடைதற்குரியவரும் ஆன உம்மைப் ப்ரக்ருதி, புருஷ விவேகத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு நான் சரணடைகிறேன்' என்று கூறினாள்.

இனி, பட்டத்திரியின் திருவாக்கிலிருந்து...

" முக்குணங்களின் பற்றுள்ள புத்தியே, பந்தத்தைத் தோற்றுவிக்கிறது. அக்குணங்களில் பற்று நீங்கிய புத்தி, மிக உயர்ந்ததான, அமுதமாகிய மோட்சத்தைத் தருகின்றது. பற்றில்லாத புத்தியை உண்டாக்குவது பக்தி யோகமே!.. அந்த பக்தி யோகமானது, மிக உயர்ந்த மஹான்களைப் பின்பற்றுவதால் எளிதில் கைகூடும்!. அது இவ்வுலகில் மட்டுமே கிட்டக் கூடியது. ஆகவே, பக்தி ஒன்றே, சாதனமாகக் கொள்ள வேண்டியது ஆகும்.

ப்ரகிருதியே முதல் தத்துவம். பஞ்ச பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் (மெய்,வாய், கண், மூக்கு, காது ஆகியன) ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் (தொடு உணர்ச்சி, சுவை, ரூபம், வாசனை, சப்தம் அதாவது, ஞானேந்திரியங்களின் செயல்பாடுகள் சார்ந்திருப்பவை) ஐந்தும், ப்ரகிருதி, ப்ரகிருதியின் புத்தியான மஹத், அகங்காரம், ஜீவனின் மனம் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து,மொத்தம் 24 தத்துவங்கள்.  இந்த இருபத்து நாலு தத்துவங்களுடன், இருபத்தைந்தாவதாக புருஷன் என்று பிரித்து அறிந்த ஜீவன்,  பிரகிருதியின் பந்தத்திலிருந்து விடுபடுகின்றான். 

(இதை இன்னும் சற்று தெளிவாக்க வேண்டி ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைத் தருகின்றேன்.."இவ்வுலகு முழுவதும், வியாபித்துள்ளவன் எவனோ, யார் நிர்க்குணனாக, பிரகிருதிக்கு அப்பாலுள்ளவனோ, யார் ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் உறைபவனோ,ஸ்வயம் பிரகாசனாக,(தானே பிரகாசிப்பவனாக) விளங்குபவன் எவனோ,  யாருக்கு ஆதியில்லையோ, அவனே "புருஷன்" எனப்படுபவன்". மாயையே ப்ரக்ருதி என்று குறிப்பிடப்படுகிறது. பிரபஞ்சம், ப்ரகிருதியைச் சேர்த்து 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது. காரிய காரண முதலானவற்றிற்கு, பிரகிருதியைக் காரணமாகவும், இன்ப துன்ப நுகர்ச்சிக்கு 'புருஷன்' காரணமென்றும் கூறப்படுகிறது).

ப்ரகிருதியின் குணங்களால், சாட்சியாக இருக்கும் புருஷனுக்கு எவ்வித பாதிப்புமில்லை.. ஆனால், ப்ரகிருதியுடன் சேர்ந்து கொண்டால்,  அதனுடைய குணங்கள் புருஷனைப் பற்றிக் கொள்ளும்(அதாவது, உடல் முதலானவற்றின் குணங்கள், ஆத்மாவைப் பற்றிக் கொள்ளும்). ஆயினும் பகவானைப் பூஜிப்பதாலும், தத்துவ விசாரணைகளாலும் அது அகன்று போகும்..

(தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா| 
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||7-14|| ....ஸ்ரீமத் பகவத் கீதை..முக்குணங்களின் வடிவான என் மாயை  கடத்தற்கரியது.. ஆனால் யார் என்னை சரணடைகின்றார்களோ, அவர்க‌ள் இந்த மாயையைத்  கடக்கின்றார்கள்).

பகவானை எவ்வாறு தியானிக்க வேண்டுமென, பட்டத்திரி நமக்குச் சொல்கிறார்!!..

விமலமதிருபாத்தைராஸனாத்³யைர்மத³ங்க³ம்ʼ
க³ருட³ஸமதி⁴ரூட⁴ம்ʼ தி³வ்யபூ⁴ஷாயுதா⁴ங்கம் | 
ருசிதுலிததமாலம்ʼ ஸீ²லயேதானுவேலம்ʼ
கபிலதனுரிதி த்வம்ʼ தே³வஹூத்யை ந்யகா³தீ³​: ||

"(யமம், நியமம் முதலியவற்றைக் கைக்கொள்ளுதலின் காரணமாக), மனதின் மாசுகள் நீங்கப் பெற்றவன், ஆசனம்  முதலான  யோக சாதனங்களால் ((பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை முதலானவை) , என்னுடைய திருமேனியை, கருடன் மேல் எழுந்தருளியிருப்பதாகவும், திவ்யாபரணங்களாலும், ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தமாலம் போன்ற நீல வண்ணத்துடன் பிரகாசிப்பதாகவும் எவ்வேளையிலும் தியானிக்க வேண்டும்" என்று கபில மூர்த்தியாகிய நீர் தேவஹூதிக்கு உபதேசித்தீர்!".

(மனஸ் தத்துவத்தையே இந்திரியங்களை ஆள்பவரான அநிருத்தன் என்றும் அவரையே மனதை அடக்குவதற்கு, நீலோத்பலம் போன்ற சியாமள வண்ணன் ரூபத்தில், யோகிகள் தியானிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது (ஸ்ரீமத் பாகவதம்)).


பகவானுடைய தியானம், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து..

"மிக பிரகாசமான தாமரை போன்ற முகம், தாமரையிதழின் உட்புறம் போன்ற சிவந்த கண்கள், நீலமேக சியாமள வண்ண திருமேனி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள், மஞ்சள் வண்ணப் பட்டாடை, திருமார்பில் துலங்கும் ஸ்ரீவத்ஸம், திருக்கழுத்தில் தொங்கும் கௌஸ்துப மணியின் ஒளி, வனமாலை, முத்துமாலை, கிரீடம், தோள்வளை, கங்கணம், நூபுரம், இடுப்பில் தங்க அரைநாண் ஆகியவற்றுடன், அடியாருக்கு இனியவரும், கண்ணுக்கு மிக அழகிய தோற்றம் கொண்டவருமாக, பகவானை தியானிக்க வேண்டும்.

பக்தியுடன் கூடிய மனதால், நிற்பவராகவோ, நடப்பவராகவோ, அமர்ந்திருப்பவராகவோ, சயனித்திருப்பவராகவோ, அவருடைய திருவடிவை தியானிக்க வேண்டும்...மனதை, பகவானின் ஒவ்வொரு அங்கத்திலும், சித்தத்தை லயிக்கச் செய்து தியானிக்க வேண்டும்.

பின், பகவானின் திருவடித்தாமரைகளைத் தியானிக்க வேண்டும். திருவடிகளை, வஜ்ரம், அங்குசம்,கொடி, தாமரை முதலிய அடையாளங்களுடன் இருப்பதாகவும், சிவந்த ஒளி பொருந்திய நகங்களுடன் உடையதாகவும் தியானிக்க வேண்டும்.

பிறகு, மனக்கண்ணால், படிப்படியாக, பகவானின் ஒவ்வொரு அங்கத்தையும், கணுக்கால், முழங்கால் இப்படியாக உற்று நோக்க வேண்டும். பகவானின் அழகிய மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்கள் விளங்கும் புன்முறுவலைத் தியானிக்க வேண்டும் ( இவ்வாறு புன்முறுவலைத் தியானித்தல் தியானத்தில் எல்லை என்று சொல்லப்படுகிறது). இந்த தியானத்தினால், பக்தி மேலிட்டு, மனம் மெதுவாக அடக்கப்படுகிறது". 

வாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே!

என்னும் நம்மாழ்வார் வாக்கே நம் பிரார்த்தனையாகட்டும்...

(தொடர்ந்து தியானிக்கலாம்),​.

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..