நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 5 அக்டோபர், 2015

KANNANAI NINAI MANAME.....PART 43....கண்ணனை நினை மனமே!...பகுதி 43... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..(தொடர்ச்சி...).


இளாவ்ருதத்திற்கு மேற்கிலிருப்பது, கேதுமாலம்.இங்கு தம் லீலைகளாலும், புன்முறுவலாலும் சோபிக்கிற அங்கங்களை உடையவரும், ஸ்ரீலக்ஷ்மியாலும், பிரஜாபதி புத்திரர்களாலும் சேவிக்கப்படுகிறவரும், ஸ்ரீலக்ஷ்மியின் மகிழ்வுக்காக மன்மதரூபம் கொண்டவருமான பகவானை தியானிக்கிறார் பட்டத்திரி..
(வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலாவிஸே²ஷலலிதஸ்மிதஸோ²ப⁴னாங்க³ம் | 
லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதைஸ்²ச நிஷேவ்யமாணம்ʼ
தஸ்யா​: ப்ரியாய த்⁴ருʼதகாமதனும்ʼ ப⁴ஜே த்வாம் ||   (ஸ்ரீமத் நாராயணீயம். பலன்: ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்)).

அடுத்து, இளாவ்ருதத்தின் வடக்கில் உள்ளது ரம்யகம். பெயருக்கேற்றாற் போல், மிகவும் ரம்யமாக உள்ள இந்த இடத்தில், எம்பெருமான் மச்சாவதார மூர்த்தியாக விளங்குகிறார். இந்த வர்ஷத்தின் அதிபதியான வைவஸ்வத மனுவால் வணங்கப்படுகிறார். பக்தர்களிடத்து நிலையான அன்புள்ளவரும், பொறாமையற்ற யோகிகளில் உள்ளத்தில் பிரகாசிப்பவருமான பகவானை, மச்ச (மீன்) ரூபத்தில் தியானிக்கிறார் பட்டத்திரி.

அடுத்ததாக, இளாவ்ருதத்தின் வடக்கிலுள்ள ஹிரண்மய வர்ஷத்தில், பித்ருக்களில் தலைசிறந்தவரான அர்யமாவால் ஆராதிக்கப்படுபவரும், அங்குள்ள மந்தர மலையைத் தாங்குபவரும் கூர்மாவதார மூர்த்தியின் திருவுருவில் உள்ளவருமான எம்பெருமானை தியானிக்கிறார் பட்டத்திரி.

(வர்ஷம்ʼ ஹிரண்மயஸமாஹ்வயமௌத்தராஹ
மாஸீனமத்³ரித்⁴ருʼதிகர்மட²காமடா²ங்க³ம் | 
ஸம்ʼஸேவதே பித்ருʼக³ணப்ரவரோ(அ)ர்யமாயம்ʼ
தம்ʼ த்வாம்ʼ ப⁴ஜாமி ப⁴க³வன் பரசின்மயாத்மன் || (ஸ்ரீமத் நாராயணீயம். பலன்: இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து பாராயணம் செய்ய, தேவேந்திரன் இழந்த செல்வங்களை மீட்டது போல், இழந்ததனைத்தும் திரும்பப் பெறலாம்)).


( செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே. (திருமங்கையாழ்வார்)).

உயர்ந்த ஞானிகளால் துதிக்கப்படும் யக்ஞவராஹ மூர்த்தியாக விளங்குபவரான எம்பெருமான், உத்தரகுரு வர்ஷத்தில்,தமது ப்ரியமான மனைவியாகிய பூதேவியால், மஹாமந்திரங்களாலும் துதிகளாலும் ஆராதிக்கப்படுகிறார். மேகங்களின் அடிப்பகுதியை, தம் தெற்றிப் பற்களின் நுனியானது தொடும் அளவிற்கு, பெருத்த உடல் படைத்தவரான வராஹ மூர்த்தி, தம்மை காத்தருள வேண்டுகிறார் பட்டத்திரி.

அடுத்ததாக, இளாவ்ருதத்திற்கு தெற்கில் உள்ள கிம்புருஷ வர்ஷத்தில், திடமான பக்தி உடையவரான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியால் சேவிக்கப்படுகிறவரும், ஸ்ரீசீதாதேவிக்கு பிரியமான, அற்புத வடிவு கொண்ட ஸ்ரீராமராக விளங்கும் பகவான், தம்மை காத்தருள வேண்டி, பிரார்த்திக்கிறார் பட்டத்திரி.

​(தொடர்ந்து தியானிக்கலாம்).​

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..