நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 30 ஜனவரி, 2017

KANNANAI NINAI MANAME... IRANDAM BAGAM.. PART 6...கண்ணனை நினை மனமே!!!.. பாகம் 2... பகுதி...6. கஜேந்திர மோட்சம்..

Image result for paramapada nathan

​ஸ்ரீமத் பாகவதம்,  'கஜேந்திரன், பகவானின் அனுக்கிரகத்தால், மஞ்சள் பட்டு அணிந்து, நான்கு புஜங்களை உடையவனாக, அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கிய  சாரூப்ய (பகவானின் திருவுருவடைதல்) நிலையை அடைந்தான்' என்கிறது 


 ஸ்ரீ நாராயண பட்டத்திரி, 'இந்த சரிதத்தையும், உன்னையும், என்னையும் யாரொருவர் விடியற்காலையில் பாடுகிறாரோ, அவர் மிக உயர்ந்த நன்மையை அடைவார்' என்று பகவான் திருவாய் மலர்ந்தருளினார். பின்னர், கஜேந்திரனையும் அழைத்துக் கொண்டு வைகுண்டத்திற்கு எழுந்தருளினார்' என்று கூறி தசகத்தை நிறைவு செய்யும் வேளையில், 'எங்கும் நிறைந்தவரே!!.. எம்மைக் காத்தருளும்' என்றும் பிரார்த்திக்கிறார். .

( ஏதத்வ்ருʼத்தம்ʼ த்வாம்ʼ ச மாம்ʼ ச ப்ரகே³ யோ 
கா³யேத்ஸோ(அ)யம்ʼ பூயஸே ஸ்ரேயஸே ஸ்யாத் | 
இத்யுக்த்வைனம்ʼ தேன  ஸார்த்தம்ʼ க³தஸ்த்வம்ʼ 
திஷ்ண்யம்ʼ விஷ்ணோ பாஹி வாதாலயேஸ² ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).

இங்கு 'மிக உயர்ந்த நன்மை' என்று பட்டத்திரி குறிப்பால் உணர்த்துவதை, ஸ்ரீமத் பாகவதம்,     
" இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தை பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, கேட்கிறார்களோ விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராணப் பிரயாண சமயத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அருளுகிறேன்" என்று விளக்கமாகவே தருகிறது...
'மனித வாழ்வு' என்னும் யாத்திரை நிறைவடையும் நேரத்தில், எம்பெருமானின் ஸ்மரணை ஒருவருக்கு வருமாயின், அவர், பகவானை அடைந்து, மானிட வாழ்வின் ஒரே குறிக்கோளை எளிதில் எய்துகிறார்.ஏனெனில்,

​यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ 

யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் | 
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்பாவபாவித: || 

(ஒருவன் எந்தத் தன்மையை நினைத்து உடலைத் துறக்கிறானோ, அதனையே எய்துகிறான்).

 என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை.  மரணம் நெருங்கும் நேரத்தில், பகவானை நினைப்போர் கட்டாயம் அவனை அடைகிறார்கள்!!.. 

( अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ 

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் | 
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: ||  (ஸ்ரீமத் பகவத் கீதை).

(இறுதிக் காலத்தில்  என்  நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை!!) ).

ஆனால், கற்ற கல்வியோ,  செல்வமோ, உற்றாரோ உதவிட இயலாத அந்த நேரத்தில், புலன்களும் செயலிழக்கும் போது திடீரென பகவானின் நினைவு ஒருவருக்கு எப்படி ஏற்படும்?!.
​​
கஜேந்திரனின் துன்பத்தை, எம்பெருமான் நீக்கியருளிய இந்த திவ்ய சரிதத்தை, விடியலில் எழுந்திருக்கும் போது தியானிக்கும் பழக்கத்தை முயற்சி செய்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..உடலுக்கும் உயிருக்குமான உறவு நீங்கும் நேரம் யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல இயலாதல்லவா?!..நித்தம் கொள்ளும் இந்தப் பழக்கம், அந்நேரத்தில், பகவானின் நினைவைத் தரும்..

மேலும், வாழ்வை உத்தமமான முறையில் நடத்திடவும் இது உதவும்!.தன் துன்பங்களை, இறை நம்பிக்கையால் வென்ற கஜேந்திரனின் சரிதத்தை விடியலில் ஸ்மரித்தால், அது, அன்றைய தினம் முழுவதும் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும். அன்றைய தினம்   ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்படுமாயின், அதன் தாக்கம் நம் மனதைப் பாதிக்காதவாறு, 'கொடும் துன்பங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் சர்வ வல்லமை படைத்த பகவான் நம் கூட இருக்கிறான்' என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தி, சரியான வழியில் நாம், நம் சிந்தனையை   செலுத்தி, வருவதை எதிர்கொள்ள  உதவும்.

 ( மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,

கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,

தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே ( நம்மாழ்வார்) )

(அடுத்த தசகத்தில், அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைதலும், ஜகன்மாதாவான ஸ்ரீலக்ஷ்மி அவதார வைபவமும்..).

தொடர்ந்து தியானிக்கலாம்!!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. பகவத் க்ருபையால் ஏற்பட்ட கஜேந்திர மோக்ஷத்தை தினமும் விடியற்காலை வேளையில் நினைத்துக்கொண்டால், அன்றைய பொழுதும் ஆபத்தில்லாமல் முடியும் என்றும், தொடர்ந்து இப்படிச் செய்து வருவதால், நம் உயிர் நம் உடலை விட்டுப்பிரியும் வேளையில் பகவானை நினைக்கத்தோன்றும் என்றும் மிக அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். மனதுக்கு ஆறுதலாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..