நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 9 ஆகஸ்ட், 2017

KANNANAI NINAI MANAME..BAGAM 2. PART 17..கண்ணனை நினை மனமே.. பகுதி 17. உத்தம கதியை அடைந்தான் மஹாபலி!...(வாமனாவதாரம்!). !!.

Related image
மஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன் அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்!!..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்!. . 'இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை' என்று பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
பகவான் மஹாபலியை, மன மகிழ்வுடன் ஆசீர்வதித்தார். 'உன் ஆணவத்தைப் போக்கவே இவையெல்லாம் செய்யப்பட்டன.  இந்தப் புண்ணியச் செய்கையால், நீ சித்தனாக ஆகி விட்டாய். ஸ்வர்க்கத்துக்கும் மேலான உலகம், உனக்கு உரியதானது. நீ (சிறிது காலத்திற்கு) பிறகு, இந்திரப் பதவியையும், பின் என்னிடம் சாயுஜ்ய முக்தியையும் அடைவாயாக!' என்று வரமருளினார். பின், பலியின் யாகத்தை, அங்கிருந்த வேதோத்தமர்களைக் கொண்டு பூர்த்தி செய்வித்தருளினார். இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீகுருவாயூரப்பன், தம் நோய்களை நீக்கியருளக் கோருகிறார் பட்டத்திரி.​

த³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம்ʼ தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம்ʼ ச பஸ்²சாத் | 
மத்ஸாயுஜ்யம்ʼ ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருʼஹ்ணா ப³லிம்ʼ தம்ʼ
விப்ரைஸ்ஸந்தானிதமக²வர​: பாஹி வாதாலயேஸ² || ( ஸ்ரீமந் நாராயணீயம்).

​அசுரனான மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்தான்.  ஸ்ரீமத் பாகவதம், மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்ததற்குப் பின் வந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது...தேவலோகம், இந்திரனுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறாக, அதிதி தேவியின் வேண்டுதல் பூர்த்தி செய்யப்பட்டது. பகவான், தேவலோகத்தில் உபேந்திரனாக அருள் செய்தார். ​

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பின் வரும் கதை கூறப்படுவதுண்டு. மஹாபலியிடம்  தானம் பெற்றார் என்பதால்,   பகவான்   தன்னை அவனுக்குக் கடமைப்பட்டவனாக எண்ணிக் கொண்டு, பலியே அறியாமல், அவனது அரண்மனை வாயிலில் காவல் பணி செய்தாராம்!!.. வைகுண்டத்தில், அவதார காரியம் முடிந்தும், இன்னும் பகவான் எழுந்தருளாதது கண்டு, ஸ்ரீலக்ஷ்மி தேவி கவலையடைந்த போது, நாரதர் அங்கு தோன்றி, பகவான், பலியின் அரண்மனை வாயிலில் காவல் பணி செய்வதை எடுத்துரைக்க, தேவி, ஒரு சாதாரண பெண்ணின் வடிவெடுத்து, பலியின் அரண்மனை வாயிலை அடைந்து, தான் பலியின் சகோதரி என்றும், ஒரு காரியமாக அவனை நாடி வந்ததாகவும் அறிவித்தாளாம்!.

செய்தியறிந்த பலி, ஆச்சரியம் கொண்டு, 'அது யார் நானே அறியாத என் சகோதரி?!.. அவளை உடன் என் முன் கொண்டு வாருங்கள்!!' என்று உத்தரவிட்டானாம். தேவியை பணிவுடன் வரவேற்று உபசரித்து, 'அம்மா, நீ என் சகோதரி என்று சொன்னாயாம்.. அப்படியே ஆகட்டும்.. என்னால் உனக்கு ஆக வேண்டியது என்ன?' என்று வினயமுடன் கேட்க, தேவியும், தான் யார் என்பதைக் கூறி, தன் பதியை தன்னோடு அனுப்ப வேண்டினாளாம்.... பகவான் தன் அரண்மனை வாயிலில் இருப்பதை அறிந்த பலி ஓடோடியும் வந்து, அவரை வணங்கி, ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவரை வைகுண்டம் எழுந்தருளப் பிரார்த்தித்தானாம்!..

பலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து, தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும், பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும்,   தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், 'பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி'  என்றும் கொண்டாடப்படுகின்றன‌. குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).

(தொடர்ந்து தியானிப்போம்).

( அடுத்து.. மச்சாவதாரம்).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: (கூகுள் படங்கள்).

இது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..